Skip to main content

மைதானத்துமரங்கள்

                                             சாய்ந்துகொள்ள வசதியான பாதங்கள்

                                                         

                                                               எழுத்தாளர் கந்தர்வன்

சிறுகதை:மைதானத்துமரங்கள்

பொங்கலுக்கு அடுக்கும்போது மட்டும் எடுக்கப்படும் புத்தகங்களில் மனதிற்கு இனியவை. என் மேல்நிலை வகுப்புகளின் ‘ சிறுகதைசெல்வங்கள்’ என்று பெயரிடப்பட்ட இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் அவ்வாறானவை.

அந்தக்கதைகளை எத்தனையோ முறைகள் வாசித்தாயிற்று என்றாலும் அந்தப்புத்தகங்களை யாரிடமும் கொடுக்க மனம் துணிவதில்லை. அட்டையில்  தாமரை போன்ற மலர் வரைந்த அந்தப்புத்தகங்கள், பள்ளி துவங்கிய முதல்வாரத்தில் தலைமையாசிரியரால் கொடுக்கப்படும் பொழுதே கதைப்புத்தகம் என்று தனித்த மகிழ்ச்சியை தந்தவை. அன்று அவை என் முன்னோடிகளின் முதல்அறிமுகம் என்ற புரிதலின்றி கைகளுக்கு வந்தவை. விடுதியின் வேம்புகளில் ஒன்றின் அடிமரத்தில் ஆனமட்டும் சாய்ந்தபடி புத்தகங்களுக்கு அட்டைப்போட்ட பிறகு, நம்மால் ஆசிரியரின்றி வாசிக்கமுடியும் என்று முதலில் கையிலெடுக்கப்பட்ட பாடபுத்தகங்கள் அவை.

புதுமைப்பித்தன்,அசோகமித்திரன்,நாஞ்சில்நாடன்,கு.அழகிரிசாமி,பிரபஞ்சன்,சுந்தரராமசாமி,ஜெயகாந்தன்,நீல.பத்மநாபன்,சுஜாதா,தோப்பில் முஹம்மது மீரான்,வண்ணதாசன்,வண்ணநிலவன் என்று இன்று அன்றாடம் நினைக்கும் பெயர்களை அன்று கவனித்ததே இல்லை. பின்னாளில் நூலகத்தில் புத்தகங்கள் தேடுகையில் இவர்களின்  புத்தகங்களுக்கு  முகவரிகளாக இருந்தவை அந்தக்கதைகள்.

கதையின் தலைப்புக்கூட அடுத்தது தான். நேராகக்கதை. அப்படி வாசித்தக்கதைகளில் ஏனென்ற காரணம் தெரியாது இன்று வாசிக்கும் வரை இனிய ஏக்கநினைவாக எஞ்சும் கதை ‘மைதானத்து மரங்கள்’. 

இவன் வீட்டைவிட்டுத் திரும்பி நடந்தால் நூறடி தூரத்திலிருக்கிறது அந்த மைதானம் என்று அவனின் தொடக்கப்பள்ளி நாட்களில் தொடங்கும் கதை அவன் நடுவயதில் முடிகிறது. அவன் வீட்டின் அடையாளமாக இருக்கிறது அந்த மைதானம். மைதானத்து ஓரத்துவீடு.

இந்தக்கதையில் மைதானத்துமரங்களின் கடைசிஓரத்து மரத்தின் விவரிப்பு அழகானது.  இன்றைய வாசிப்பில் கந்தர்வனின் அரசியல் நிலைப்பாடாக மனம் எடுத்துக்கொள்கிறது.

ஆனால் அவரைப்பற்றி எதுவுமே தெரியாத அன்று, அது அவர்கள் மகிழ்ச்சியாக இருந்த இடம் என்று மட்டும் தோன்றிய சிறுபிள்ளைத்தனமான இனியவாசிப்பு. பதின்வயதில் உலகத்தைப் பார்க்கும் விதம்,புரிந்து கொள்ளும் விதத்தை கொஞ்சம் காப்பாற்றி வைத்தபடியே வாழ்வது வாழ்வை அழகாக்கும்.

என்வரையில் கல்லூரிகாலத்தில் கூட மேல்நிலைப்பள்ளி நாட்களையே கொண்டாட்டம் என்று பேசித்திரிந்தவர்கள்தான் அதிகம். அது ஏன் அப்படி? என்ற கேள்விக்குப் பதில் அந்தவயது என்பது மட்டுமே. உடலை, சிந்தனையை ,வாழ்வை, இருப்பை, இயற்கையை, மனிதரை,வானத்தை,மரத்தை என்று அனைத்தையும் எந்தக்காரணமும் இன்றி மகிழ்வோடும் துயரோடும் அணுகச்செய்யும் பதின்மைக்கு காரணமான ஹார்மோன்கள்.

ஏதோ இனம் தெரியாத ஒன்று என்று சொல்வதில் இருக்கும் சுவை, அந்த ஏதோ ஒன்று என்பது…. நம் சூழலுக்கும், மனநிலைக்கும் நம் உடல்புரியும் எதிர்வினை என்று உணர்ந்து புன்னகைக்கவோ, கண்ணீர் சிந்தவோ செய்தால் என்ன?

அந்தவயதில் வாசிக்க நேர்ந்த இவர்களின் கதைகள் ஆழத்தில் இன்றும் சுவையாக ஒரு வெதுவெதுப்பானநீர்சுனை போல மனத்தின் பள்ளத்தில் தேங்கித்தித் தித்திகின்றன.

வாழ்க்கைக்கு துணையாக ஒருமரம் போதும் என்று அடிக்கடித் தோன்றும். முதுகை சாய்த்துக்கொள்ள, அப்படியே கால்நீட்டி கிட்டத்தட்டபடுத்துக்கொள்ள, இலைகளில் சலசலப்பு சத்தத்தில் அப்படியே உறங்கிப்போக, வெயிலில் நடக்கையில் பின்புறமிருந்து தலைக்கு மேல் விரியும் அம்மாச்சியின் முந்தானையைப்போல நிழல் கவிய நின்றிருக்கும் ஒற்றை மரம் போதும் என்ற ஆசுவாசத்தை ,ஒருவரை இன்னொருவரில் கண்டுகொள்ள, பதின்வயதின் புரிந்து கொள்ளமுடியாத பாழ்தனிமையில் விடுதிவாழ்வில் எனக்கு இத்தகைய வெளிச்சத்தை இலக்கியமன்றி எதுவும் தந்திருக்க முடியாது என்று நினைக்கிறேன். 

ஏனெனில் அப்படியே அடித்துக்காலுன்றி தனித்து நிற்கும் சக்தி கொண்ட திடம் அனைவருக்கும் வாய்ப்பதில்லை. இலக்கியமோ அதன்மூலம் ஒருமரமோ தேவையாக இருப்பது ஒன்றும் பலமற்றதன்மை என்பதில்லை. அது ஒரு நிலை அவ்வளவே.

கதையில் முக்கியகதாபாத்திரம் வாழ்வின் முதல் அவமானத்தை எதிர்கொண்ட நாளில், அவன் தந்தைதாயை அணுகமுடியாத மதியநேரத்தில், மரத்தடியில் சாய்ந்தமர்கிறான். மைதானத்திலேயே ஆடிக்களித்திருந்த சிறுவன் அவ்வப்போது மரப்பாதங்களில் சரணடைகிறான். அந்தஇடத்தில் ‘மரப்பாதங்கள்’ என்ற சொல்லால் வாசிப்பவர்கள் மனதால் எட்டித்தொடும் பாதங்கள் அவரவர்களுக்குரியது.

கந்தர்வன் மைதானத்துமரங்களை விவரிக்கும் விவரிப்பிலேயே அந்த ஊரின் வயசாளிகள்,வெள்ளைச்சட்டைக்காரர்கள்,இரண்டு தலைமுறை இளைஞர்களின் வாழ்வு,அவர்களின் மனநிலைகள், மைதானத்துநடுவே ஆடிக்களிக்கும் சிறுவர்கள் என எழுதி ஊரின் மொத்த ஆண்கள் பற்றிய புறவடிவை தருகிறார். குடும்பஅமைப்பில் எந்த அதிகாரமும் இல்லாத அவனின் அம்மா,மனைவி என்று இரண்டு பெண்கள் அந்த ஊரின் பெண்களின் பிரதிநிதிகளாக வருகிறார்கள்.

இதில் முக்கியகதாப்பாத்திரத்தின் பெயர் கதையின் நடுவில் வருகிறது. அவன் பள்ளிக்கு பணம் செலுத்தாதற்காக வகுப்பில் “முத்து முத்து…” என்று அழைக்கப்படுகிறான். இரண்டு இடங்களில் மனிதனின் பெயர் மிகமுக்கியத்துவம் பெறுகிறது. ஒன்று புகழில் இன்னொன்று அவனின் அவமானத்தில். அந்த இடத்தில் அவன் பெயர் சொல்லி அழைக்கப்படுகையில், பதின்வயதிலிருந்த நானும் அவ்வாறே வகுப்பில் நிற்பதாய் உணர்ந்து கதைவாசிப்பதை நிறுத்தியிருக்கிறேன்.


அந்தபுளியமரங்கள் பற்றிய வர்ணனையில் கந்தர்வன், ஒவ்வொன்றும் ஒரு விருட்சம். தூர்கட்டி வீடுகள் போல நிற்கும் என்கிறார். பெருமரங்கள் எதுவாயினும் அப்படித்தானே?அவற்றைக்காண்பதே பேரின்பம். ஒருஅடிமரத்தின் மடிப்புகளின் இடையில் நடிகர் விஜய்சேதுபதி கைகட்டி உறங்கும் காட்சி தொண்ணூற்றாறு திரைப்படத்தில் வரும். அது மிகப்பெரிய ஆசுவாசம். விடுமுறை நாட்களின் பகல்பொழுதுகளில் விடுதியின் பெருவேம்பின் மடிப்புகளில் அவ்வாறு குறுகி அமர்ந்து உறங்கியிருக்கிறோம். . . .

 மழைமுடிந்த காலைமாலைகளில், விடுமுறைநாட்களில், முன்னிரவுகளில் காற்றுவந்து அசைக்க மரத்தினடியில் தோழிகளுடன் நின்று நாங்கள் சிரித்தைதை போல, இந்தக்கதையில் எங்கள் வயதை ஒத்த முத்துவும் தன் வாழ்வின் இனிய, துயரத்தருணங்களில் மரத்தடிக்கே வருகிறான். மரங்களை உணர்ந்தவர்களுக்கு மரம் என்றும் தேவைப்படுகிறது. இந்தக்கதை இன்றைக்கு மேலும் முக்கியத்தும் வாய்ந்ததாக இருக்கிறது.

பசபசவென்று பச்சைவிரிக்கும் வேம்புதான் வெயில் குடித்து குளுமைத்தரும் கோடைகாலத்திற்கும் இனிமை உண்டு என்று சொல்லித்தந்தது.

கதைகள் நம்வாழ்வில் ஒரு அனுபவமாகவோ, உடன்வரும் தோழமையாகவோ, நம்மைவிடமுதிர்ந்த ஒரு துணையாகவோ உடன்வருகின்றன. இந்தக்கதை பதின்வயதை பாதித்தது என்பதாலேயே ஆழத்தில் கிடந்தாலும் மரங்களை ஆழ்ந்து பார்க்கும் நேரங்களில் சட்டென்று மேலே வந்துவிடுகிறது. அந்தவயதில் இந்தக்கதை ஒரு நல்வாய்ப்பு. கதை மைதானத்துமரங்களை சொல்வதன் வழியே பசுமையை, இயற்கையை, பிரபஞ்சத்தை ஏதோ ஒருவகையில் அன்று எங்கள் உணர்வுக்குள் கொண்டுவந்தது.

இளைஞனாக, வேலையில்லாதவனாக, சிறுவேலையின் அழுத்தம் காரணமாக, குடும்பபாரம் காரணமாக, மனைவி காரணமாக முத்து ஒவ்வொரு முறையும் மரத்தின் பாதங்களில் தன்முதுகை சாய்த்துக்கொள்கிறான். ஒருநாள் அந்தமரங்கள் வெட்டிச்சாய்க்கப்படுகின்றன.அதோடு கதை முடிந்திருக்கலாம். கந்தர்வன் அவர் வாழ்வு முழுதும் நம்பிய, அவர் வாழ்க்கைப்பார்வையின் அடிப்படையில் சிலவிவரணைகள் கதையில் உள்ளன. மரங்கள் வெட்டப்பட்டதும் அவன் மனைவி, “இனிமேலாச்சும் ஊரில என்னன்னதுக்கு போராடுறாங்க போய் பாருங்க…”என்பாள். இறுதியில் அவன் மரங்களில்லாத மைதானத்தைக்கடந்து தன்னை போன்ற மனிதர்களை காண ஊருக்குள் செல்கிறான் என்று முடியும் கதையிலிருந்து மீண்டும் கதையின் முதல் வரிக்குச் சென்றால் ஓரமாய் ஒதுங்கியிருக்கும் வீடும்,ஓரத்துமரங்களும்,அதிலும் ஓரத்துமரத்தின் மாடுமேய்ப்பர்களும்,சமூகத்தை அஞ்சியோ விலக்கப்பட்டோ ஒதுங்கியிருக்கும் முத்து போன்றவர்களும், வளர்ப்பால் சமூகத்தை விலகியே பார்க்கும் பெண்களையும் நாம்அடையாளம் கண்டு இந்தக்கதையை விரித்துக்கொள்ளலாம். படைப்புகள் ஒருவாசிப்பில் என்றுமே தன்னை காட்டிவிடுவதில்லை.

கதைகள் கதைகள் மட்டுமல்ல. அவை காலையை துலங்க வைக்கும் ஆதவனின் கீற்றுகளில் ஒன்றைப்போல வாழ்வின் உதயகாலத்தில் சிறுவெளிச்சமாக மனதில் விழுந்து, நம் வாழ்வில் புதுஔியையோ அல்லது வழியையோ காட்டுகின்றன. அந்தவகையில் கந்தர்வனின் கையைப்பிடித்தபடி மைதானத்துமரங்களில் திரிந்தநாட்கள் மிகஇனியவை.காலத்தில் கரைந்து போனாலும் அவருக்கு என் ப்ரியங்கள்.


நன்றி: சொல்வனம். 2019 மார்ச் இதழில் பிரசுரமான கட்டுரை

                                                                                   

   


Comments

Post a Comment

Popular posts from this blog

அகத்தின் ஆரக்கால்கள்

 [ எழுத்தாளர் மயிலன் ஜி.சின்னப்பனின் முப்போகம் [குறுநாவல்], நூறு ரூபிள்கள் மற்றும் சிருங்காரம் சிறுகதை தொகுப்புகளை முன்வைத்து...] எழுத்தாளர் மயிலன் தண்டவாளத்தின் இருபக்க தண்டுகள் அதை இணைக்கும் குறுக்குப்பட்டைகள், ஜல்லிக்கற்கள் என்று அனைத்தும் சரியாயிருக்க ஓடும் ரயிலில் எங்கோ ஒரு சின்னஞ்சிறு விலகல் அனைத்தையும் குழப்பி தடம் புறளச்செய்கின்றது. புரண்டு கிடக்கும் ரயில் அந்த சின்னஞ்சிறு விலகலின் உண்மையான ரூபம். மறுபடி சரி செய்யப்பட்டு ஓடும் ரயில் பின் எங்கோ அதே போல தக்கி நிற்கும். அதை போன்ற ஒரு உணர்வு சித்திரத்தை மயிலனின் கதைகளை தொகுப்பாக வாசிக்கும் போது உண்டாகிறது. மனதின் அகஅடுக்குகளை கீறிப்பார்க்கும் சவரக்கத்தி என்றும் இவரின் எழுத்துகளை சொல்லலாம். அதில் ஒரு அடுக்கு காயத்தால் அழுகி புறையோடி சீல் கொள்கிறது. அது மற்ற அடுக்குகள் மீது கொள்ளும் செல்வாக்கின் கதைகள் இவை. அந்த வலி நிறைந்த அழுகிய அடுக்கை உருவாக்கும் விசைகளை நோக்கி செல்லும் கதைகள் இவை. மனித இயல்புகள் அல்லது  இயல்புகளை பாதிக்கும் சூழல்கள் என்று இவை இரண்டும் ,அந்த சவரக்கத்தியை தீட்டும் மணலின் நெறுநெறுப்பாகவும் தீட்டிய கத்தியை ...

கர்ணனின் கவசகுண்டலங்கள்

இந்த ஆண்டு நித்யவனத்தில் நடத்தப்படும் முழுமைஅறிவு [Unified wisdom] வகுப்புகளில் மரபிலக்கிய வகுப்பிற்கு செல்ல வேண்டுமென்று தோன்றிக்கொண்டிருந்தது. மரபின் மைந்தன் முத்தய்யா அவர்கள் நடத்தும் மரபிலக்கிய அறிவிப்பு வந்ததும்  வழக்கம் போல நிறைய யோசனைகள். பொங்கல் விடுமுறை நாட்களில் வருகிறது என்பது வேறு. இருந்தாலும் செல்ல வேண்டும் என்று ஒரு பிடிவாதம். பதினாறாம் தேதி ரம்யா மனோகருடன் ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்திலிருந்து வெள்ளிமலை சென்றேன். சாயுங்காலம் ஐந்து மணி்க்கெல்லாம் மலையேறிவிட்டோம். அங்கு ஈரோடு கிருஷ்ணன் அவர்களை முதலில் பார்த்தோம். அவருடன் எங்கள் வகுப்பு சகாவான ஆனந்த் குமார் அறிமுகமானார். பின்பு அறைக்கு சென்று வந்து மலைச்சூழலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அங்கிருந்த திறந்தவெளி இருக்கைகளில் ரம்யாவும் நானும் கொஞ்சம் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நல்ல நட்பிற்கான அடித்தளம். மேடம்,கமலதேவி,கமலா...கடந்து...ரம்யாவை அக்காவிற்கு வர வைத்ததும் வேலை முடிந்தது. இனி இயல்பாக எல்லாம் நடக்கும். ரம்யாவின் இனிய முகம் மூன்றாவது நாள் ஈரோடு பேருந்து நிலையத்தில் விடைபெறும் வரை உடன் இருந்தது. அதே ப...

பெருகும் காவிரி

 காவிரியை பார்ப்பது எப்போதுமே எனக்கு பரவசமான பொழுது. பள்ளி வயதில் முசிறி காவிரி. கல்லூரி வயதில் திருச்சி காவிரி. கடைசியாக முசிறிக்கு சென்று நான்கு ஆண்டுகளாகிறது. முசிறியிலிருந்து திருச்சிக்கு செல்லும் பேருந்து வழியில் காவிரி உடன் வரும். கொல்லிமலையில் உருவாகி எங்கள் ஊரில் பாயும் அய்யாறு முசிறி காவிரியில் கலக்கிறது. அண்மையில் எழுத்தாளர் சுரேஸ்குமார இந்திரஜித் கருத்தரங்கிற்காக திருச்சி செல்லும் போது இரண்டுஆண்டுகள் கழித்து  அந்தியில் காவிரியை பார்த்தேன். கொள்ளிடம் பாலத்தில் நல்ல காற்று. கொள்ளிடத்தில் ஓரளவு நீர் இருந்தது. கொள்ளிடம் பாலத்தில் பேருந்து செல்லும் போது வலது பக்கம் மலைக்கோட்டை ,திருவரங்க ராஜகோபுரம் இரண்டும் நீருக்கு அப்பால் இணையாக காட்சிக்கு வரும். அதற்கும் அப்பால் மேற்கு வானில் சரியும் ஆரஞ்சு வண்ண சூரியன்.    மங்கம்மாளை, தாயுமானவரை,ஆண்டாளை,வெள்ளையம்மாளை,ஆண்டாளை போலவே அரங்கனை தேடி வந்த முகலாய இளவரசி சுரதானியை மனம் சென்று தொடுகிறது. அன்னிய படையெடுப்பின் போது கோயில் உற்சவரை காப்பதற்காக கிழக்கு கோபுரத்தில் இருந்து உயிர் விட்டாள் தாசி குலத்து வெள்ளையம்மாள். வெள்ளை ...