அரபிக்கடலின் கோடியில்
மொழிபெயர்ப்பு:தி.ப.சித்தலிங்கையா
அரபிக்கடற்கரையில் உள்ள கோடி என்ற கிராமத்தில் வாழும் மனிதர்களின் ,மண்ணின் கதை. அரபிக்கடற்கரையும் அதன்கழிமுகப்பகுதிகளும், அதையொட்டிய தென்னை மற்றும் புன்னை தோப்புகளும், மணற்மேடுகளும், ஏரியும், ஆங்காங்கு தள்ளி அமைந்த வீடுகளும், கோடிகிராமத்தை சுற்றியுள்ள ஐரோடி, மங்களூர், மந்தர்த்தி, ஹெங்காரகட்டே,படுமுன்னூர், உடுப்பி, குந்தாபுரம், மங்களூர்,பெங்களூரு,பம்பாய் மற்றும் மதராஸ் என்று கதைக்களம் விரிகிறது.
பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் கதை துவங்குகிறது. பார்வதி மற்றும் ராமஐதாளர் திருமணம் பெருமழைகாலத்தில் நடப்பதிலிருந்து கதை துவங்குகிறது. ஐதாளரின் விதவைதங்கை சரஸ்வதி. பார்வதி சரஸ்வதி இருவரின் உறவானது அன்பும், உழைப்பும்,புரிதலும் இணைந்த தோழமைஉணர்வுடன் பிணைக்கப்பட்டுள்ளது.
மழை ,பனி, கோடை காலங்களுக்கு ஏற்ப வாழ்க்கை நடத்த தேவையானவைகளை உழைத்து ஈட்டிக்கொள்ளும் எளிமையான வாழ்வு அவர்களுடையது. அவர்களுக்கு விவசாயத்தில் உதவும் செம்படவர்களுடனான அவர்களின் உறவு கடைசி வரை பிரிக்கமுடியாததாக உள்ளது. கடும் உழைப்பக்கோரும் வேலைகளை ஈடுபாட்டுடன் செய்கிறார்கள்.
ராமஐதாளர் பக்கத்துஊர்களுக்கு நடந்து சென்று புரோகித வேலைகளை செய்கிறார். போக்குவரத்து வசதிகள் இல்லாத காலம் என்பதால் மக்கள் எங்கும் நடந்தோ படகிலோ செல்கிறார்கள். நடக்கும் தூரம் வரை உள்ள இடங்களே அவர்களுக்கு பரிச்சயமாக இருக்கின்றன.
ஆண்டிற்கு ஒருமுறை வரும் கோடியின் கோடீஸ்வரர் திருவிழாவிற்கு செல்வது அவர்களுடைய எதிர்பார்ப்பு மிகுந்த நிகழ்வாக இருக்கிறது. சொல்லப்போனால் நிதானமான வாழ்க்கை. நெல், உருளைக்கிழங்கு, கீரைகள், தேங்காய், உளுந்து போன்றவை அவர்களின் முக்கியமான உற்பத்தி பொருட்கள்.
இந்த நாவலில் மூன்றுதிருமணங்கள் விரிவாக சொல்லப்படுகின்றன. வீட்டு முற்றத்தை சீராக்கி, கடலோரத்தில் குறைந்தது ஆயிரம்ஆட்களாவது கலந்து கொள்ளும் திருமணங்கள். அந்தப்பகுதியின் உணவுப்பழக்கங்கள்,சடங்குகள்,பழக்கவழக்கங்கள் மற்றும் நம்பிக்கைகள் நாவலில் அவர்கள் வாழ்வுடன் பிணைந்து வருகின்றன.
குழந்தை பிறக்காததால் ராமஐதாளர் சத்தியபாமையை இரண்டாம் திருமணம் செய்கிறார். அவர்களுக்கு லட்சுமிநாராயணன் என்கிற லச்சு,சுப்பம்மாள் என இரு குழந்தைகள். ஐதாளரின் வீட்டிலிருந்து நடந்து செல்லும் தொலைவில் சீனமய்யரின் வீடு இருக்கிறது. இருநண்பர்களும் கடனால் பிரிகிறார்கள். காலம் முழுதும் இருவரும் ஒருவருக்கு எதிராக ஒருவர் சொத்துக்களை வாங்குகிறார்கள்.
பெங்களூரில் சீனமய்யரின் பிள்ளைகள் சாப்பாட்டுக்கடை நடத்தி மிகுந்த வருமானம் ஈட்டுகிறார்கள். ஐதாளர் தன் பிள்ளையை ஆங்கிலவழிகல்விக்கு அனுப்புகிறார். ஆனால் அவன் கொஞ்சம் கொஞ்சமாக தீய பழக்கவழக்கங்களுக்கு ஆளாகி பணத்தை விரயமாக்குகிறான். வீட்டிலும் யாருடனும் ஒட்டுதலின்றி இருக்கிறான்.
நீலவேணியை திருமணம் செய்த பிறகும் அவன் மாறுவதாக இல்லை. தீயசகவாசங்கள் வழி அவனுக்கு ஏற்படும் நோயால் நம்பிக்கை இழக்கும் ஐதாளர் மருமகளுக்கு தன் சொத்துக்கள் அனைத்தையும் எழுதி வைக்கிறார். பார்வதியும் ஐதாளரும் மறைகிறார்கள். இது முதல்தலைமுறை.
இரண்டாம் தலைமுறையில் லச்சன் மனைவியை ஏமாற்றி சொத்துக்களை எழுதி வாங்கி அழிக்கிறான். அவன் மனைவியான நாகவேணிக்கு மூன்றாவதாக பிறக்கும் குழந்தை மட்டும் நிலைக்கிறது. அதற்கு ராமஐதாளரின் பெயரை இடுகிறார்கள். குடும்பத்தை வறுமை சூழ்கிறது. இரண்டாம் தலைமுறை பெரியவர்களின் காலம் முடிகிறது.
தன் தந்தை வீட்டிலிருந்து நாகவேணி மகனை வளர்க்கிறார். மீண்டும் பதினைந்து ஆண்டுகள் சென்று கோடிக்கு வருகிறார். இடையில் வயலின் இசை கற்பது அவருக்கு மனநிம்மதியை தருகிறது.
ராமன் மதராஸில் பி.ஏ படிக்க வருகிறான். சுதந்திரபோராட்டதில் ஈடுபட்டு பலமாதங்கள் சிறை செல்கிறான். மீண்டும் ஒருஆண்டு கோடியில் இருந்தபடி சுதந்திரம் சார்ந்த விஷயங்களில் ஈடுபடுகிறான். பின்னர் மீண்டும் படிப்பை தொடர்கிறான். வீட்டில் வயிற்றுக்கும்,துணிக்கும் இல்லாத வறுமை தாண்டவமாடுகிறது.
படித்தப்பின் வேலை கிடைப்பது பெரிய சவாலாக இருக்கிறது. ராமன் இயந்திரத்தனமான வேலையின் மீது பிடிப்பில்லாமல் இருக்கிறான். அதை எதிர்கொண்டு வாழ்வில் தன்குடும்பம் இழந்த சொத்துக்களை, மரியாதையை திரும்பப்பெறுகிறானா என்பது மூன்றாம் தலைமுறைக்கதை.
நாவலில் நிறைய மனிதர்கள் வருகிறார்கள். லட்சுவின் நண்பரான ஒரட்டய்யர். இருவரும் தந்தையர் சொத்துக்களை தீயவழிகளில் அழிக்கப்பிறந்தவர்கள். நாகவேணியின் சிறியதந்தை,செம்படவர்களான சூரன்,அவர் மகன் காளன் அவர் மனைவி சுப்பி,சுப்பராய உபாத்தியாயர்,நரசிம்மய்யர்,நாகவேணியின் குடும்பத்தார்,மதராஸ்குடும்பம்,ராமன் பம்பாயில் ஓவியம் கற்கும் நோவா என்று நாவல் முழுக்க மனிதர்களும் அவர்களின் வாழ்க்கையும் நிரம்பி இருக்கிறது.
கதை நேர்க்கோட்டில் சொல்லப்பட்டிருந்தாலும் கூட அறுநூற்று ஐம்பது பக்கங்கள் உள்ள இந்தநாவல் எந்த இடத்திலும் சோர்வு தட்டுவதில்லை. மனித வாழ்வின், செல்வத்தின் நிலையாமையை நாவல் தன்னுள் நிரப்பி வைத்திருக்கிறது.
நாவலில் வரும் காலநிலை,இட விவரணைகள் மனிதர்களின் வாழ்வுடன் இணைந்துள்ளது. முக்கியமாக கோடியின் ஆளரவம் அற்ற கடற்கரை. தாழை புதர்களும் ,பனைமரங்களும், புன்னைமரங்களும் வளர்ந்திருக்கும் மணல்வெளி. மணல்மேடுகள் ,கடலின் பின் மறையும் சூரியன் போன்றவை நாவலுக்கு உயிர்ப்பை அளிக்கின்றன.
விடுமுறையில் ராமனும் அம்மா நீலவேணியும் இரவெல்லாம் மணற்குன்றுகளில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள் அல்லது வயலின் இசைக்கிறார்கள். அத்தனை வறுமையான வாழ்வில் இயற்கையுடனான இந்த பந்தம் அவர்களுக்கு மாபெரும் ஆசுவாசத்தை அளிக்கும் இடங்கள் அலாதியானவை. நிலவொளியில் கடற்கரை மணல்குன்றில் தாயும் மகனும் அமர்ந்திருக்கும் சித்திரம் நம் மனதில் பதிந்துவிடுகிறது.
மழைகாலத்திலும், காற்றுகாலத்திலும் மணல்மேடிடும் இடங்களை தொடர்ந்து சீர்செய்து விவசாயம் செய்கிறார்கள். காய்கறி கீரை என்று தங்களுக்கான உணவை தாங்களே உற்பத்தி செய்கிறார்கள். மேலும் பால்வற்றிய கறவைகளுக்கு கடைசிவரை உணவும், நீரும், இடமும், அன்பும் அளித்துக்காக்கிறார்கள்.
ஒருநீண்ட வாழ்வை வாழ்ந்த அனுபவத்தை இந்தநாவலை வாசிப்பதனூடாக அடையலாம். வாழ்வை அதன் போக்கில் சொல்லும் நாவல். மனிதர்கள் பிறந்து வாழ்ந்து மறைகிறார்கள். ராமனுடைய வாழ்வில் இவற்றுக்கப்பால் அவனுடைய ஒவியமும் இசையும் எஞ்சுகிறது.
ஒருநாள் அவன் கடல் கொந்தளிப்பான காற்றுகாலத்தில் அரபிக்கடலை வரைகிறான். அதே கொந்தளிப்பை பம்பாயில் தன் நண்பர்கள் முன் இசையில் கொண்டு வர அவனால் முடிகிறது. அதே கொந்தளிப்பை நாட்டு விடுதலைக்காக பேசும் கூட்டங்களில் தன் பேச்சில் கொண்டுவர முடிகிறது.
அதே சமயம் ராமனிடம் இருக்கும் நகைச்சுவை உணர்வு அவனையும் சுற்றியுள்ளவர்களையும் சிறிது நேரம் வாழ்க்கைப்பாடுகளில் இருந்து விடுவிக்கிறது. ஏழ்மையான வாழ்விலிருந்து எழும் வைராக்கியம், நேர்மை, தீவிரம் கொண்ட இளைஞனாக அவன் இருக்கிறான். ராமஐதாளரும் சரஸ்வதியும் கூட உழைப்பில் அவ்வாறு இருந்தவர்கள். எதோஒரு தீவிரம் இல்லாத வாழ்வு லச்சனுடைய வாழ்வைப் போல வெறும் அலைகழிப்பாக மாறிவிட வாய்ப்புள்ளது.
ராமன் தாயிடம் வளர்ந்த பிள்ளையாதலால் பெண்கள்மேல் வாஞ்சையுடையவனாக, அவர்களுக்கான இன்முகம் கொண்டவனாக ,அவர்கள் பேசுவதற்கு காது கொடுப்பவனாக இருக்கிறான். அம்மா,அத்தை,சுப்பி,பாட்டி,சித்தி என்று அவனுடனிருக்கும் பெண்கள் மேல் அதிகாரம் செலுத்தாதவனாக இருக்கிறான்.
ஒவ்வொரு மண்ணிற்கும் ஒரு இயல்புண்டு மனிதர்களுக்கும் அவ்வாறே. காலநிலைக்கேற்ப மண் மாற்றம் பெறுகிறது. மனிதர்களும் கூட அவ்வாறே. மாறாத நிலம் பாலை. தனிமனிதனோ மானுடமோ கூட அவ்வாறுதானே.
மண்ணின் இயல்பை மனிதர்கள் பெறுகிறார்கள் என்ற வாக்கியத்தை சிறுவயதில் கேட்கும் பொழுது புரியாது. ஆனால் வளர வளர தெரியும். வளமான மண்ணில் பிறந்தவர்களில் முக்கால்வாசி ஆட்கள் சுகவாசிகளாக, சாதுவாக இருப்பார்கள். வளமில்லாத மண்ணில் பிறந்தவர்கள் போராட்டகுணமும்,வலிய உடலும் உள்ளவர்களாக இருப்பார்கள். மண்ணுடன் கொண்ட உறவால் விளையும் பண்புகள் எனக்கொள்ளலாம்.
ராமஐதாளரின் விவசாய வாழ்க்கை காலகட்டதிலிருந்து ராமனின் தொழில்மையமான காலகட்டம் வரையான அந்தமக்களின் வாழ்வை ,அலைகழிப்பை, கொண்டாட்டங்களை, வறுமையை,இழப்புகளை, கேள்விகளை, பொருளாதாரத்தை, மக்களுக்கிடையேயான உறவைப் பற்றி விரிவான வாழ்பனுபவத்தை இந்த நாவல் நமக்கு தருகிறது.
இந்த வாழ்வும் கலைகளும் எப்பொழுதுமே மண்ணிற்கும் மனிதர்களுக்குமானது தானே. அதை மீண்டும் உணரும் அனுபவமாக ‘மண்ணும் மனிதரும்’ நாவல் வாசிப்பனுபவம் உள்ளது.
நன்றி:பதாகை
Comments
Post a Comment