சிறுகதை:ஒரு நாள் கழிந்தது
ஆசிரியர்:புதுமைப்பித்தன்
ஒரு நாள் கழிந்தது என்ற புதுமைப்பித்தனின் கதை அதிகமான வாசகர்களால் வாசிக்கப்பட்ட கதையாக இருக்க வாய்ப்புண்டு. எனினும் அதைப்பற்றி சொல்ல அவரவர்களுக்கு வேவ்வேறு வாசகபகிர்தல்கள் இருக்கும் தானே?
ஒரு எழுத்தாளரின் ஒருநாள், அதுவும் ஒரு சாயுங்காலம் இந்தக்கதை. கதையை எத்தனை முறை வாசித்திருந்தாலும், கதையை எடுத்துவிட்டால் புதுமைப்பித்தன் சொல்வது போல மீண்டும் வாசிக்கவைக்கும் ‘சாகாவரம் பெற்ற கதை’. புதுமைப்பித்தனுக்கு அதிகதுயரத்தை எழுதுகையில், துயரைவிட அதிக எள்ளல்தன்மை மிக்க நடை கைகூடிவிடும் என இன்று புரிகிறது. அந்த முதல் வாசிப்பில், முதல் புதுமைப்பித்தனில் அந்த நகைச்சுவை எனக்கு மிகப்பிடித்ததாக இருந்தது.
புதுமைப்பித்தனின் பெண்குழந்தைகள் மீதான வாஞ்சையானது கடவுளும்கந்தசாமிப்பிள்ளை மற்றும் ஒரு நாள் கழிந்தது ஆகிய இருகதைகளிலும் அழகான ஒன்று. ஏறத்தாழ இரண்டும் ஒன்றுதான். இரண்டிலும் கதைநாயகர் கூட அவரேதான் என்று தோன்றும்.
“கமலம்! அந்தக்கூஜாவில தண்ணீர் எடுத்து வா” என்று தொடங்கும் இந்தக்கதை. அவர் குடியிருக்கும் வினோதமான இல்லம் பற்றிய வர்ணனையாலேயே உள்ளிழுத்துக் கொள்ளும். அவர் வசிப்பறையிலிருந்து அடுப்படிக்கு பிரயாணம் கிளம்பினார் என்று எழுதுகிறார். எத்தனை கூர்மை.
குழந்தை இருக்கும் வீட்டிற்கு வெறும் கையுடன் வரும் நண்பர்கள் மூலம் கதை இரண்டாம், மூன்றாம் வாசிப்பில் அன்றே தன் முகத்தைக் காட்டிவிட்டது. இந்தக்கதையில் அலமு கேட்கும் கேள்விகள் ,கடவுளும் கந்தசாமிப்பிள்ளையில் வரும் கடவுள் கேட்கும் கேள்விகளே தான். இருவரும் ஒன்று தானே.
“அப்பா பங்கஜத்தெ மாத்ரம் கூட்டிகிட்டுப் போரானே….”என்று ரிக்க்ஷாகாரன் தன்னை ஏற்றிக்கொள்ளாததைப் பற்றி கேட்பாள்.
“மாமா ! நீ என்ன கொண்டாந்தே..” என்று வீட்டிற்கு வரும் அப்பாவின் நண்பரிடம் அலமு கேட்பாள்.
தன்மீது படரும் கரிக்களிம்பை மீறி ,பிரபஞ்ச வெளிச்சத்தின் ஒருதுளி அனலை தன்னில் ஏந்திநிற்கும் சிறுவிளக்கைப் போல என்னில் எழு என்ற மலையாளப்பாடல் ஒன்றுண்டு. மோகன்லால் நடித்தது. அதைப்போல புதுமைப்பித்தன் தன்துயரங்களை கதைகளென்னும் மணிகளாகமாற்றி காலத்தின் பெட்டகத்தில் வைத்துள்ளார். திறந்துப் பார்க்க முடிந்தவர் பெரும் செல்வத்தைப் பெறுகிறார்.
நூலகத்திலிருந்து புதுமைப்பித்தனின் முழுத்தொகுப்பை வாசிக்க எடுத்துவந்தேன். திரும்பத்திரும்ப எடுத்துக்கொண்டேயிருந்தேன்.நூலகர் நாசுக்காக, “அப்படியே கிடந்துதான் போகும். நீ திருப்பிக்குடுக்க மலைக்கற. டேமஜ் பீசில் சேரப்போகறதுதான். நீயே வச்சுக்க,” என்றார்.
கதைசொல்லிகளின் கைப்பிடியிலிருந்து நூலத்திற்கு நழுவியநாட்களில் எழுத்தாளர் என்பவரை ,ஒருநாயகனாகவோ அல்லது எங்கோ இருக்கும் தேவனாகவோ மனம் நினைத்திருந்தது. சிறுவயதில் தந்தையை நினைப்பதை போன்ற அதே தான். பதின் வயதில் இந்தக்கதை கொடுத்த அடியில்தான் அந்த மாயக்கனவு கலைந்து எதார்த்தத்திற்கு எழுந்தேன். அவர்களே பின்பு மீண்டும் நன்கு தெளிந்த மனத்திரையில் நாயகனாகும் பெரிய உண்மையும் அடுத்துவரும் நாட்களில் நிகழ்கிறது.
எத்தனை பேரால், எத்தனை முறை, எந்தகாலத்தில் சொல்லப்பட்டாலும் எழுதுபவரின் ஜீவிதம் என்பது சுமைதானா? இன்றும் எழுத வேண்டும் என்ற ஆசையுடன் தோழிகள் இருவர் சொல்லிக்கொண்டே மட்டும் இருக்கிறார்கள். அதனால் தானா? என்று தெரியவில்லை. புத்தகக்கண்காட்சிகள் உள்ள காலம் இப்படி என்றால் புதுமைப்பித்தன் காலத்தில் இந்தக்கதை கொஞ்சமும் மிகையில்லாத எதார்த்தக்கதை.
வாசிப்பனுபவம் எழுதுவதற்கு முன் இந்தக் கதையை வாசித்தேன். முருகதாசர் என்னும் கதைநாயகர் வானையளக்கும் கதைகள் எழுதுவதில் சமர்த்தர். ஆனால் ஒரு விளம்பர நிறுவனம் மாதம் முப்பது ரூபாய்க்கு அவரை குத்தகைக்கு எடுத்துக்கொண்டது என்று கதையில் வரும் இடத்தில், அண்மையில் மனுஷ்யபுத்திரன் எழுதிய கவிதை நினைவில் வந்து சுருக்கென்று தைத்தது.
வரும்போது
சூரியனின் முதல்கிரணங்களில் ஒன்றாக
இந்த பூமிக்கு வந்தேன்
இப்போது என்னை
சிகரெட் லைட்டரில் எரியும்
சிறுநெருப்பாக பயன்படுத்துகிறீர்கள்.
இதைச்சொல்லும் போது
கண்ணீர் சிந்தவேண்டாம்
என்றுதான் நினைக்கிறேன்
ஆனாலும்
கண்ணீர் சிந்துகிறேன்.
அன்றும் இன்றும் அதே சிக்கல். எழுத்துபவராக மட்டும் வாழ்வதில் உள்ளசிக்கலை ஆணி அடித்தமாதிரி கூறும் இந்தக்கதை சாகாவரம் பெற்ற கதை. இந்தக்கதைத்தரும் அழுத்தத்திற்கு பின்னால் ,எனக்கு இந்தக்கதை மூலம் சுவாரசியமான நிகழ்வுண்டு.
தேர்வில் ஒருநாள் கழிந்தது கதை சுருக்கி எழுதுக என்ற கேள்வி வந்திருந்தது. தமிழய்யா விடைத்தாள்களை மேசையில் வைத்தபடி “பெரியவனே முன்னாடி வா,” என்றார். அவனை அவர் அப்படித்தான் அழைப்பார். “நீ எழுதியிருக்கற ஒருநாள் கழிந்தது கதையை எல்லாருக்கும் படிச்சுகாட்டு எஞ்செல்லக்குட்டியே,” என்றார். அவன் மிகப்பெருமையாக நிமிர்ந்து ஆஜானுபாகுவாக நின்று வாசித்தான்.
காலையில் எழுந்தேன். ட்ராக்ட்டரை கழுவினேன். அப்பாவுக்கு தெரியாம ஒரு ரவுண்டு அடிச்சிட்டு அதே எடத்துல நிறுத்தினேன். பள்ளிக்கூடம் வரப் பிடிக்கல. வாசல்ல ட்ராக்ட்டர் நிக்கிது. அதவிட்டுட்டு பள்ளிக்கூடம் போகனும்ன்னு நெனச்சா நெஞ்சக் குத்தது. தமிழ் பரிச்சை ன்னு வந்தேன். எல்லாம் சுவத்தை முட்டிக்கிட்டு இருந்ததுங்க. மதியானம் சத்துணவு தின்னுட்டு இப்ப எழுதறேன். வயலுக்கு போயி ட்ராக்கட்டரில ஒரு சுத்து வரனும். இவ்வாறு என் ஒரு நாள் கழிந்தது,” என்று அவன் முடிக்கும் போது வகுப்பறை குமுறி வெடித்துக் கொண்டிருந்தது.
அய்யா , “அவன் காதை பிடித்தபடி இன்னிக்கு பள்ளிக்கூடம் விடறதுக்குள்ள கதைய படிச்சு சொல்லல..காதிருக்காது,” என்றார்.
மதிய உணவுநேரத்தில் அவன் என்னிடம்,“ஏத்தா கமலு… அந்தக்கதைய சொல்லித்தாயேன்,”என்றான்.
“போடா முடியாது…”
“கொடுக்காப்புளி வேணுமா.. வேணாமா..?”
“ம்”
“ஒனக்குப்புடிச்ச செங்காபதத்துல…”
“ம்”
“அப்ப கதைய சொல்லுத்தா…”
“அப்படினா எனக்கு கீழ அந்தப்படியில உக்காரு..”
“என்னாது,”
“உன்னிய நிமிந்துப்பாத்து கழுத்துவலிக்குது…”
“ம்ம்ம்…எல்லாரும் சிரிக்கிறீங்க. யாருக்காச்சும் ட்ராக்ட்டரை சாவி போட்டு எடுக்கத் தெரியுமா? உன்னோட சைக்கிளில ஒரே ஒருநாள் டபுள்ஸ் அடிச்சிருக்கியா நீ…தத்தக்கா பித்தக்கான்னு யாருமேல இடிக்கப்போறியோன்னு சைக்கிள் ஓட்ற நீயெல்லாம் பெரியாளு…ம்..”என்று சலித்துக்கொண்டே கீழிறங்கி அமர்ந்தான்.
சில நாட்களுக்குமுன் பெரிய நெல்அறுவடை இயந்திரம் தெருவை அடைத்து நகர்ந்தது. பெரிய யானைகள் இரண்டை அடுக்கிய ராஜனின்வாகனம் போல. கூலத்தின் பிசிறுகள் கடைவாயில் தொங்கத் தொங்க வந்து கொண்டிருந்தது. மாடியில் நின்றுபார்த்துக்கொண்டிருந்தேன். அருகில் வருகையில் தெரிந்தது. பெரியவனே தான். பார்த்து ஆண்டுகள் கடந்திருந்தன.
வண்டி மிக மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது. எங்கள் வீட்டின் அருகில் என்னை கண்டுகொண்ட அவன் காலரை தூக்கிவிட்டபடி “கழுத்து… வலிக்கிலயாத்தா?” என்று கடந்து சென்றான். நான் புன்னகைத்துக்கொண்டேன். மாடியில் நின்றாலும் அன்றும் அன்னாந்துதான் அவனை பார்க்கமுடிந்தது.
சிலருக்கு அவர்கள் யார் என்பது ஆணித்தனமாக தெரிந்துவிடுவதும் அவர்கள் அந்தத்தன்னம்பிக்கையோடு இருப்பதும் வியப்புதான். படிப்பை,பணத்தை,அதிகாரத்தை இன்னபிற இத்தியாதிகளை முதல்தகுதியாக பார்க்கும் சூழல் இருக்கும் நிலையில், தன்னறத்தின் படி வாழ்பவர்களை முதலிடத்தில் வைத்து புரிந்து கொள்ள உதவியாக இருப்பவை இதுபோன்ற கதைகள்தான்.
வாழ்க்கையின் அடிகளால் மனம் விழும் போது, எங்கோ ஒரு மனமும் கையும் சேர்ந்து எழுதிய இலக்கியங்கள், தோளில் தட்டி தலையில் கைவைத்து என்னன்னாலும் 'இந்த ஜீவிதம் இனிது' என்று தூக்கிவிடுகிறது. படைப்பாளன் என்ற சொல் எத்தனை பொருத்தமான சொல்.
எத்தனை மனிதர்கள், எத்தனை குணங்கள், எத்தனை இடங்கள், எத்தனை மானுட நிகழ்வுகள் அலைகளென சீறிக்கொண்டிருந்தாலும் ,தான் பிறந்த சமூகத்திற்கும் ஊருக்கும் கூட சரியாக அறிமுகமாத பெண், வாழ்வென்பதை இலக்கியத்திலன்றி எதிலிருந்து புரிந்துகொள்ள வாய்ப்புண்டு.
இந்தக்கதையை வாசிக்கும் போது புதுமைப்பித்தன் தன்குடும்பத்துடன் கற்பனையில், சென்னையில் வாழ்ந்து பார்த்தக்கதை என்று தோன்றும். கமலா…என்று கதைநாயகர் முருகதாசர் மனைவியை அழைக்கும் இடம் அதை அப்பட்டமாகக் காட்டுகிறது. புதுமைப்பித்தனின் மனைவி பெயர் கமலா.
அனைத்தையும் தாண்டி ஒருநாள் என்பது கைப்பொருளில்லாதவருக்கு எத்தனை சுமை. பொழுதை தள்ளி நகர்த்த வேண்டிய நெம்புக்கோல் வாழ்க்கை.
கதையின் மொழிநடை மிகஅலாதியான அழகுடையது. புதுமைப்பித்தனின் அனைத்துக்கதைகளுமே அவ்வாறுதான் என்று வாசிப்பவர்கள் அனைவருக்கும் தெரியும். சென்னையை புதுமைப்பித்தன் கதைகளின் வழி பார்ப்பது ஒரு பேரனுபவம்.
‘சிவபிரானின் ஒற்றைக் கண் போன்ற அந்த அறையின் ஜன்னல்’
‘விறகு கொட்டிலுக்கு …பிராட்வே’
‘கடன்காரரை….. பாசுபதாஸ்திரம்’ என்று புதுமைப்பித்தனை வாசிக்கும் அனுபவத்தை அவர் மொழியில் சொல்லவேண்டும் என்றால் ரசமான அனுபவம் என்று சொல்லலாம்.
இதை எழுதும் போது அண்ணனின் முகம் நினைவில் குறுக்கே வந்து அழைத்துக்கொண்டேயிருந்தது. நேற்று சென்னை கிளம்பும் முன் பார்த்துவிட்டு வந்த முகம்தான். சென்னை என்பது எங்களைப் போன்ற எத்தனையோ ஆட்களுக்கு தாங்கள் நேசிக்கும் ஒருமுகம் மட்டுமே.
அழைப்பு சென்று கொண்டேயிருந்தது, என் மனம் என்ன காரணம் சொல்வது என்று தேடித் தொடங்கிய வெறுமையான அந்த உரையாடல் முடிந்து அலைபேசியை வைக்கும்போது எத்தனைப் பக்கக்கடிதங்கள் எழுதிய உறவு?! என்று ஆயாசமாக இருந்தது. பேசுவதற்கு காரணம் தேட வேண்டியிருப்பதே நெருங்கிய அன்பில் விழும் பலத்தஅடி.
பொருள் தேடும் வாழ்வில், பொருள் தேடும் மனஅழுத்தத்தினால் எத்தனை உறவுகளை சிதைக்கவேண்டியிருக்கிறது. இன்றும் சென்னை புதுமைப்பித்தனின் சென்னைதானோ?! மிகஅதிக ஊதியம். மற்றபடி வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்களில்லையோ? என்று தோன்றுகிறது. வீடு, ஊரின் ஏக்கங்கள், உறவுகளை தள்ளிவைக்கும் அளவிற்கு வாழ்வின் வேகம், நேரமின்மை போன்ற சிக்கல்களில் மனிதரை அள்ளிப்பற்றியிருக்கும் பெருங்கரங்கள்தான் பெருநகரங்களா?
என்றும் பொருள் இல்லாதான் வாழ்வும், பொருளே தேடும் வாழ்விலும், ஒருநாள் கழிவது புதுமைப்பித்தன் ,இந்தக்கதையில் சொல்வது போல, “திங்கட்கிழமை பார்த்துக்கொள்கிறது!”என்றேதான் கடந்து போகும். ஆனால் அவர்களுக்கான கிழமைகள் வருவதே இல்லை.
புதுமைப்பித்தனை வாசிக்கையில் கிடைக்கும் பேரின்பம் ,அவர் வாழ்வை நினைக்கையில் பெருந்துன்பமாகும். அப்படி வாசிக்கக்கூடாது என்றாலும்,என்னவோ அவரின் தனிவாழ்வின் தருணங்கள் அவர் எழுத்தை வாசிக்கும் போதும் கூடவே வந்து தொந்தரவுசெய்வதை தவிர்க்கமுடியவில்லை. அதன்காரணம் அவரின் சென்னைவாழ்வை அவர் நிறைய எழுதியிருக்கிறார். அதனாலேயே அத்தனை கரிப்பு. வங்கக்கடலின் துளிகளால் நனைந்த வாழ்வும் ,எழுத்தும். கண்ணீரின் சுவையும் அதுவே தானே.
நாராய் நாராய் செங்கால் நாராய் என்று மனைவிக்கு நாரையை தூதுவிட்ட பொருளில்லா கவிஞனின் மனத்தின் இருள், பராசக்தியிடம் விண்ணப்பம் வைத்த கவிமனதின் ஏக்கம், திங்கட்கிழமைக்கு? என்று இந்தக்கதையில் பதறும் எழுத்தாளரின் நெஞ்சம் என ஒவ்வொரு அலையாக எழுந்து வந்து கொண்டேயிருக்கிறது. இந்தக்கதையின் காலத்துக்கு முன்பிருந்தும் ,காலத்திற்கு பின்னாலிருந்தும் முடிவிலியாய் அலைகள். அந்த அலைகளின் கரிப்பில் ஈரமாகும் மங்கிய கண்களில், வீட்டிலிருக்கும் முன்னவர்களின் படம் என அவர்கள் தெளிவாகத் தெரிகிறார்கள்.
நன்றி:சொல்வனம்
Comments
Post a Comment