பேரலமரத்தின் விழுதுகள்
நூல்:சுதந்திரத்தின் நிறம்
ஆசிரியர்:லாராகோப்பா
மொழிபெயர்ப்பாளர்:பி.ஆர்.மகாலிங்கம்
வெளியீடு: தன்னறம் நூல்வெளி
பேட்டிவடிவில் எழுதப்பட்டுள்ள கிருஷ்ணம்மாள், ஜெகநாதனின் வாழ்க்கையின் முக்கிய பகுதிகள் அடங்கிய நூல். முதலில் இந்தமாதிரியான நூல்கள் ஏற்படுத்தும் நல்லவற்றின் மீதான நம்பிக்கை முக்கியமானது. ஏனெனில் நடைமுறை அந்தநம்பிக்கையை அழித்துக்கொண்டேயிருப்பதால் இந்தநூல்களை கொண்டு மீட்டெடுக்க முடிகிறது.
லாரா கோப்பா இத்தாலியை சேர்ந்த காந்திய ஆராய்ச்சியாளர். அவர் மதுரையில் உள்ள காந்திகிராமத்திற்கு வந்து தங்கியிருந்து கிருஷ்ணம்மாள் மற்றும் ஜெகநாதனுடன் நேரடியாக உரையாடி வாழ்க்கைவரலாற்றை பதிவு செய்து எழுதுகிறார்.
கிருஷ்ணம்மாள் தனிபெற்றோரான தன் தாயிடமிருந்து," வறுமையிலும் பகிர்ந்துண்ணும் பழக்கம்,எதற்கும் கலங்காத உறுதி,கடவுள் பக்தி ஆகியவற்றை பெற்றுக்கொண்டதாகவும், அது தன்வாழ்வு முழுவதும் உடனிருந்தது,"என்று கூறுகிறார்.
ஜெகநாதன் கல்லூரிக்காலத்தில் காந்தியப்பற்று கொண்டு காந்திக்கு கடிதம் எழுதுகிறார். பின்னர் மதுவிலக்கு போராட்டத்திலிருந்து தன் சமூகப்பணியை இளம் வயதிலேயே தொடங்குகிறார்.
காந்தி தமிழகத்திற்கு வந்திருக்கும் பொழுது ஜெகநாதன் அவரை சந்திக்கிறார். ராமர் கிருஷ்ணர் புத்தர் யேசு பற்றிய தன் கேள்விகளுக்கான விளக்கம் பெறுகிறார். எவ்வளவு உடல்சோர்விலும் மக்களை சந்திப்பதை அவர்களுடன் உரையாடுவதை காந்தி விடாப்பிடியாக செய்பவராக இருந்தது ஜெகநாதனை ஆட்கொள்கிறது.
காந்தி,விவேகானந்தர்,பரமஹம்சர் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட ஜெகநாதன் பொதுவாழ்வில் நுழைகிறார். வினோபாபாவின் தலைமையில் நடந்த ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுக்கிறார். அதில் சட்டத்தை மீறி நடந்த ஊர்வலத்தில் கைதாகி பதினைந்து மாதங்கள் சிறை செல்கிறார். மிகமோசமான சிறைவாசம் அது. சென்னைகடற்கரையில் மாநிலஅளவிலான சத்தியாகிரக கூட்டத்தை நடத்தி தப்பிக்கிறார்.
கிருஷ்ணம்மாள் தன் கிராமத்தில் படித்தப்பின் மதுரையில் பள்ளியின் தலைமையாசிரியரான ஆலிஸ்மகராஜாவுடன் தங்கிப்படிக்கிறார். பின்னர் டாக்டர் சௌந்தரம் நடத்திய பெண்கள் விடுதியில் சேர்கிறார். அவருடன் இணைந்து சமூகப்பணிகளில் ஈடுபடுகிறார்.
கிருஷ்ணம்மாளுக்கு சித்தர்கள் மீதும் சிலப்பதிகாரத்தின் மணிமேகலை மீதும் பெரிய ஈடுபாடு இருந்திருக்கிறது. கல்லூரி படிப்பையும் தொடர்கிறார். கல்லூரியில் படிக்கும் போது காந்தி தமிழகத்திற்கு வருகிறார். தமிழகபயணத்தில் காந்தியுடன் உடன்செல்லும் மருத்துவரான சௌந்தரத்துடன், கிருஷ்ணம்மாளும் ஒருவாரம் காந்தியுடன் இருக்கிறார். காந்தி இவரை பாடச்சொல்லி கேட்டதை மறக்கமுடியாத முதல்சந்திப்பு என்கிறார்.
இந்திய சுதந்திரத்தற்கு பின், அரசியலில் ஈடுபடுவோர் மற்றும் சமூகப்பணிகளில் தொடர்பவர்கள் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அவரவர் வழிகளில் செல்கிறார்கள். ஜெகநாதன் மக்களுடனிருந்து மக்கள் பணி செய்ய முடிவெடுக்கிறார்.
மிகஎளியமுறையில் ஜெகந்நாதன் கிருஷ்ணம்மாளை விருப்பத்திருமணம் செய்துகொள்கிறார். உடனே வினோபாபாவுடன் இணைந்து பூமிதான இயக்கத்திற்கான பாதயாத்திரைக்கு செல்கிறார். பின் தமிழகத்தில் பூதான இயக்கத்தை இருவரும் தொடங்குகிறார்கள்.
நிலமிருப்பவர்களிடமிருந்து இல்லாதவர்களுக்கு நிலங்களை வாங்கித்தருவது. முதலில் வினோபாபாவுக்கு ‘ தனி ஒருத்தருக்கு நிலம் எப்படி சொந்தமாக முடியும்’ என்ற கேள்வி இருந்துகொண்டேயிருக்கிறது.
பூமிதான இயக்கத்தின் செயல்பாடுகள் பல்வேறு வகையில் தொடர்கின்றன. அகிம்சை மீதான தளரா நம்பிக்கை கொண்ட வாழ்க்கை அவர்களுடையது. செய் அல்லது செத்துமடி என்ற மகாத்மாவின் வார்த்தைகள் அவர்களின் மனதை இயக்கிய விசையாக இருக்கலாம்.
இன்று இதுபோன்ற அமைதியாத்திரைகள் இன்று அசட்டு லட்சியவாதமாகப் பார்க்கக்கூடும். ஆனால் அவர்கள் அதை ஆத்மார்த்தமாக நம்பினார்கள். செயலை நோன்பாக கருதும் பொது வாழ்க்கையே ஆன்மீகதளத்திற்கு நகர்ந்துவிடுகிறது. அதன் பலன்கள் பற்றிய பதற்றம் அதில் இல்லை. இந்த வழிமுறை காந்தியத்தின் அரும்கொடை.
யார் வெற்றி பெற்றாலும் போரில் தோற்பது மானுடம் தான். இந்த இனிய உலகில் சண்டை சச்சரவின்றி பரஸ்பரம் உதவி செய்து கொண்டு புரிந்துகொண்டு மரியாதை செலுத்திக்கொண்டு இன்பமாக வாழ முடியும். இதை மனிதன் எப்போது புரிந்து கொள்வான்.
நாம் வாழும் காலத்தில் பிள்ளைகளுக்கு வழிகாட்டியாக சொல்லக்கூடிய சமகாலத்து ஆளுமை கிருஷணம்மாள் அவர்கள். அவர் காலத்து சிக்கல்கள் வேறு, லட்சியங்கள் வேறு, அன்றைய மனஅமைப்பு வேறு. என்றாலும் எக்காலத்திற்கும் அடிப்படை ஒன்றுதான். அதுதான் மனிதனை இதுவரை வளர செய்த சக்தி. சமூகமாக வாழும் நம்மை ஒருங்குபடுத்திக்கொண்டிருக்க வேண்டிய தேவை என்றும் இருக்கிறது. அது நம் மனசாட்சியை கேள்வி கேட்கவிடுவது. அதை செய்துவிட்டால் மற்றவை தானே நடக்கும். இந்த சமூகஊடக யுகத்தில் அந்த சவாலை செய்வதற்கு இவர்களின் வாழ்க்கை துணையாக இருக்கும்.
நம்பிக்கை இழப்பு இன்று மட்டும் தான் என்று நினைக்க வேண்டியதில்லை. அது என்றும் உள்ளது. அதைப்போலவே சத்தியம் அகிம்சை செயல்வேகம் என்பவைக் கூட என்றும் இருப்பவை தான். இந்த நூலை வாசித்து முடிக்கும் போது நம் மனம் நாம் செய்யும் செயல்களை கவனிக்கத்தொடங்கும். லட்சயவாதிகளின் வாழ்க்கை நம்மை தொந்தரவு செய்யும். அதுவே அத்தகைய வாழ்வின் பெருமதிப்பு. அதன் தொடர்ச்சியாகவே அரும்செயல்கள் முளை கொள்கின்றன. அந்தவகையில் அரும்விதைகள் கீழே காலுன்றி மேழெல நீர்வார்க்கும் மேகம் போல ஒரு வாழ்க்கையை இந்தநூல் நமக்கு பரிசளிக்கிறது.
Comments
Post a Comment