ஒருபறவையின் இருசிறகுகள்கதையை கதையாய் மட்டும் வாசிக்க விடாமல் செய்வது எது? கதைக்காக கண்ணீர் விடவோ, புன்னகைக்கவோ, எரிச்சலடையவோ வைப்பது எது?
கதைகள் கொஞ்சமேனும் மனிதவாழ்விலிருந்து எழுகிறது என்பதால்.
மனிதர்கள் தங்களின் சாயல்களை கண்டுகொள்வதால்.
சொல்பவரின் எழுதுபவரின் மனதோடு இணைந்து செல்ல முடிவதால்.
இதிகாசங்கள் நூற்றாண்டுகள் கடந்தும் புதியவாசகர்களுக்கு நல்லவாசிப்பனுபவத்தை அளிப்பது எதனால்?
அது சொல்லும் வாழ்க்கை சிக்கல்கள்,உறவுசிக்கல்கள்,அரசியல் சார்ந்த கேள்விகள் ,தத்துவசிக்கல்கள் போன்றவை அந்தந்த தளங்களில் இன்னும் இருந்து கொண்டே இருப்பதால்.
ஆகமொத்தத்தில் வாழ்க்கை போல ஒன்றை கதையோடு வாழ்ந்து, தெரிந்து, உணர்ந்து கொள்வதால்தான் குழந்தைக்கதைகள் முதல் இதிகாசங்கள் வரை மனிதருடன் இணைந்து இருக்கின்றன.தான் உணர்ந்தை மற்றவர்களுடன் உரையாட நினைத்ததுதான் கலைகளின் ஆதாரமாக இருக்கக்கூடும்.
எழுத்தும் அவ்வகையான காலம் கடந்த உரையாடல் தானே..
எழுத்தாளர் தி.ஜானகிராமனின் எழுத்தை மனதிற்கு நெருக்கமானதாக ஆக்குவது எது?
அவர் எழுத்தின் ஆதாரமான…
மனிதனுக்கு இயற்கையுடனான உணர்வுபூர்வமான பந்தம்.
மனிதருக்கு கலைகள், இசையுடனான உணர்வுபூர்வமான பந்தம்.
மனிதருக்கும் சகமனிதருக்குமான உணர்வுபூர்வமான பந்தம்.
மனிதருக்கும் தெய்வத்திற்குமான உணர்வுபூர்வமான பந்தம்.
ஆணுக்கும் பெண்ணிற்குமான உணர்வுபூர்வமான பந்தம்.
இதற்கு கணவன் மனைவி, காதலன் காதலி என்ற ஒற்றை பார்வையுடன் மட்டுமல்லாது அம்மா மகன், பதின்பையன் வீதியில் கீரை விற்கும் பெண், மனிதஆண், தேவி என்ற தெய்வீக உருவகப்பெண் மற்றும் சகவயதுதோழி என்ற பலதளங்களின் நின்று மனிதமனதின் உணர்வுகளை உண்மையாக பேசுகிறதால் அவரின் எழுத்து மனதிற்கு நெருக்கமானதாக இருக்கிறது.
இந்த உணர்வை கொண்டு வருவதில் அவரின் மொழிக்கு தீவிர பங்குண்டு.
இந்த நெருக்கங்களை தன் எழுத்தில் கொண்டு வந்து அதை வாசகர்களின் மனதிற்கு கடத்திய அவரின் குறிப்பிடத்தக்க இரண்டு ஆக்கங்கள் அம்மாவந்தாள் மற்றும் மோகமுள்.
அம்மாவந்தாளின் அலங்காரத்தம்மாளின் கம்பீரமும் ஆளுமையும் இருபதுகளின் துவக்கத்தில் வாசிக்கும் கல்லூரி பெண்ணிற்கு மிகவும் ஈர்ப்புடையது.அவள் எந்த இடத்திலும் தாழக்கூடாது என்றே மனம் நினைக்கும்.சமூகம் விதித்த விதிகளை மீறியதற்காக மன்னிப்பு, அதுவும் ஆமாம் செஞ்சுட்டேன் மன்னிச்சிருங்கோ, அதுக்கு என்ன சொல்லிருக்கோ அந்த நிவர்த்தியை செஞ்சுடறேன் என்று நிமிர்ந்து சொல்வதைத்தான் ஏற்கும்.
அம்மாவந்தாள் வாசித்தப்பின் அதிர்ச்சியா இருந்துச்சா? என்று எங்கள் தமிழ் விரிவுரையாளரும், சீனியரும் கேட்ட பொழுது இல்லையே என்றேன்.அவர்கள் இருவரும் சிறுநகரவாசிகள்.முந்தைய தலைமுறையின் மண்ணை, வாழ்வை, பொருளியலை அறியாதவர்கள்.குழந்தையிலிருந்து ஊருக்குள்ளே உழல்பவர்களுக்கே( விடுமுறைக்கு ஊருக்கு வந்துபோகிறவர்கள் அல்ல)தன் மண்ணை, மனிதரை, வாழ்வை தெரிந்துகொள்ள முடியும்.
இலவசக்கல்வி கற்று எண்பதுகளில் அரசுவேலைக்கு சென்று திருமணம் ,பிள்ளைகள் என்று செட்டிலான வாழ்க்கைக்குள் நுழைந்த கீழ்மத்தியத்தர தலைமுறையின் பிள்ளைகள் நாங்கள் மூவரும்.பெரும்பாலும் இந்தத் தலைமுறை தந்தையர்கள் இருதாரங்கள், சீட்டாட்டம்,குடி பழக்கங்கள் என இன்னபிற பழக்கங்களை மிகத்தீவிரமாக எதிர்ப்பவர்கள்.இந்தத் தீவிர மனப்பான்மையின் அடிப்படை என்ன?
தாத்தாக்களின் தலைமுறை வாழ்க்கை முற்றிலும் வேறு.என் பத்துவயது வரை இரண்டு மனைவியுடன் வாழும் சில தாத்தாக்களையும்,இரண்டு தாத்தாக்களுடன் வாழும் ஒருசில பாட்டிகளுடனும் இருந்திருக்கிறேன்.என் இருபதாவது வயதில் மிகப்பழுத்த தாத்தாக்கள்,பாட்டிகள் தன் இணையின் இருவர்களுக்கும் நல்லநண்பர்களாக பேச்சுத்துணைவர்களாக இருந்து இறந்திருக்கிறார்கள்.
இந்த இரு உறவுநிலைகளை பெரும்பாலும் பொருளியல் தீர்மானித்தது.இவர்களின் வயோதிகத்தில் உறவுகளால் வெறுக்கப்பட்டவர்கள் பாட்டிகள் தான்.தாத்தாக்களிடம் பெருந்தன்மையாகவே இருந்தார்கள்.
இந்த நடைமுறை அடுத்தத்தலைமுறையின் பள்ளிக்கு ,கல்லூரிக்கு சென்று படித்த ஆண்மனநிலையை, வாழ்வை,மனைவி மற்றும் தன்பிள்ளைகளுக்கான வளர்ப்பு கட்டுப்பாட்டை, பெண்குழந்தைகளுக்கான சுதந்திரம் எந்தஇடம் வரை என அனைத்தையும் தீர்மானித்தது.
எப்படி தி.ஜா புதிதாக அதிர்ச்சி அளிக்கமுடியும். ஊரில் ராமாயணம் கேட்டவர்கள் அதிகம்.ராமாயண கூத்துகள்தான் அதிகம் நடந்திருக்கின்றன.அன்று அது தேவையானது என அதை நடத்துபவர்களுக்கு தெரிந்திருக்கிறது.ராமர் ஏகபத்தினி விரதன் என்பது இவ்வளவு கொண்டடாப்படுவதன் பின்னுள்ள உளவியல் என்ன?
மாப்பிள்ளை பார்க்கும் போது எப்பிடி? என்று கேட்டால் ராமசந்திரமூர்த்தியாக்கும் என்று அழுத்தி சொல்வார்கள்.அதே அளவுக்கு சீதையும்.இந்த மனநிலை பதியவைக்கப்படுகிறது.திருமணம் சார்ந்த உறவுசிக்கல்களுக்கு பொருளியல் மட்டும்தான் காரணம் என்று நினைத்த என் தர்க்கமனதின் மேல் ஒருஅடியை போட்டு ,வேறு வேறு அடிப்படைகளை பேசுகிறது என்பதால் அம்மா வந்தாள் எனக்கு முக்கியமான நாவலாக இருக்கிறது.
மனித மனங்களின் உளவியலை நாடிப்பிடித்து உணர முயற்சிக்கிறது. இந்த வாசிப்பனுபவத்தை எழுதுவதற்காக நான்காவது முறையாக வாசிக்கும் பொழுதும் புதிய கதவொன்றை திறக்கிறது.அலைபேசி விளையாட்டில் முடிவிலா கதவுகள் திறப்பதைப்போல.
சரி தவறுகள், மீறல் புனிதங்களுக்கு அப்பால் மனிதமனதின் ஓயாத அலைபாய்தல்கள் மற்றும் அதனால் ஏற்படும் ஆறாத காயங்களை சொல்கிறது.உடல் நலம்,கொஞ்சம் செல்வம் இருக்கும் போது ஏன் இத்தனை துயரங்கள்...கொஞ்சம் நிம்மதியா இருக்கக்கூடாதா? என்ற கேள்விக்கு பதிலாக இந்த நாவல் இருக்கிறது.
மனிதரை மனிதராக ஆக்கிய ஒன்றின் விசை.எந்திரன் திரைப்படத்தில் சிட்டி என்ற இயந்திரத்திற்கு உணர்வுமையம் செயல்பட தொடங்கியதும்தான் எல்லாப்பிரச்சனைகளும் தொடங்கும்.
இந்த நாவலில் அலங்காரத்தம்மாவிற்கு தன் மனதின் மரியாதைக்குரிய மனிதருக்கு நேர்மையாக நடக்கமுடியாததன் காரணம் என்ன?அவர் எந்தவகையில் ஒவ்வாதவராக தெரிகிறார் என்பதை புரிந்து கொள்ள முடிவதால் எனக்கு பாட்டிகளை புரிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது.
நாவல் வாசிப்பில் என்னை நெருடும் இடம் நாவலின் முடிவில் ‘ நீயும் அம்மா பிள்ளையாயிட்ட’என்று அப்புவை அலங்காரத்தம்மாள் சொல்வது தான்.அப்புவுக்கும் கணவனை இழந்த இந்துவுக்குமான அன்பும்,அலங்காரத்தம்மாவிற்கும் சிவசுக்குமான உறவிற்கும் வேறுபாடில்லையா?! என்ற நெருடல்.முன்பிருந்ததை விட தூயமனநிலைக்கு அப்பு செல்கிற போது எப்படி அலங்காரத்தம்மாவும் அப்புவும் ஒன்றாக முடியும்?
அம்மாவந்தாள் என்றுமிருக்கிற சிக்கலை பேசுகிறது.பேசித்தீராத புரிந்துகொள்ளமுடியாத விடைகாணமுடியாத சிக்கல் அது.பேசுபாருள் சார்ந்த நித்யம் நாவலுக்கு என்றும் உண்டு.ஒருபக்கம் மீறல் அதற்குரிய அறத்துடன் இருக்கிறது. மறுபக்கம் வெறும் உணர்வுகள் சார்ந்த மீறலாக மட்டுமே நின்றுவிடக்கூடிய ஒன்றை இணையாக பேசுவதன் மூலம் மீறலின் நியாயங்கள் வலுப்படுத்தப்படுகின்றன.எந்த இடத்திலும் வாதங்களே இல்லை என்பது எழுதியவரின் கைத்திறனிற்கு சான்று.
மனித உணர்வுகள் மீது அறத்தின் ஔி படியும் போது மீறல் புனிதமாகவும்,இல்லாதபோது பாவமாகவும் மாறுவதை, மீறும்மனங்கள் தாங்களே உணர்வதை காட்டும் அம்மாவந்தாள் என்றும் வாசிக்கப்படும் நாவலாக இருக்கும் என நம்புகிறேன்.
பதின்வயதின் முடிவிலிருக்கும் பாபுவுக்குள் தொடங்கும் அகம் புறம் சார்ந்த சிக்கல்களின் ஒவ்வொரு இழையாக பேசப்பட்ட நாவல் மோகமுள்.எப்பொழுதும் தன்னுள் ஒடுங்கிய அகமுகனாக பாபுவும்,எப்பொழுதும் கலகலப்பான ராஜமும் தோழர்கள்.இந்தத் தோழமை நாவலில் அழகாக திரண்டு வந்திருக்கிறது.காவிரிமணலில் ராஜத்தின் வீட்டில்,கல்லூரியில்,படகுபயணத்தில்,கோவிலில் என இவர்கள் உரையாடல்களும் கும்பகாணத்தின் அந்த இடங்களும் நினைவில் அழியாமல் இருக்கிறது.சட்டென்று வாழ்க்கை சுழற்றலில் கல்லூரி முடிந்தப்பின் ராஜம் வேலையின் நிமித்தம் பிரியும் பொழுது வாசிக்கும் நமக்கும் ஒரு வெறுமை வருவதை தவிர்க்க முடியாது.
பாபு,இசை குரு ரங்கண்ணாவிற்குமான உறவு அதைக்கடந்து தந்தை மகன் இடத்தை எய்துகிறது.பாபு ஒருநாள் இசைவகுப்பிற்கு வராததற்காக ரங்கண்ணா தவிக்கும் தவிப்பும் எதிர்பார்ப்பும் மனதை தொடுபவை.தன்னை இன்னொருவனில் கண்டு கொள்ளும் பரவசம் நிறைந்த உறவு.
பாபுவுக்கும் தந்தைக்குமான பந்தம் அதைக்கடந்து இசையில் ஆசிரியமாணவருக்கான நிலை வரை செல்கிறது.பனிஇரவில் பிள்ளையை இசைக்கச்சேரிகளுக்கு அழைத்து செல்லும் தந்தை.
பாபு தன் மனிதர்களுடன் கொண்டுள்ள உறவில் இழையோடும் நெருக்கமும் வாத்சல்யமும் அவன் இயல்பால் விழைவது.அது அவனுள் இழையும் இசையால் வந்திருக்கலாம்.இத்தனை மென்மையான மனுசர்கள் உண்டா என்று தோன்றும்.அந்த வாத்சல்யமே அவனை தங்கம்மாளிடம் கொண்டு விடுகிறது.
அந்த வாத்சல்யமே யாமுனா மீதான அன்பிற்கு காரணமாகிறது.தன்அக்கா வயதை (பத்துஆண்டுகள் மூத்த) ஒத்த யமுனாவை நெஞ்சில் சுமந்தலைய சொல்கிறது.யமுனாவின் அழகை ஆராதிப்பதும்,அன்பாயிருப்பதும்,அவளை தேவியின் ரூபமாக மனதில் வரிப்பது என்று ஒரு கலைஞனுக்குரிய அகஉலகு நமக்கு முன் விரிகிறது.ஆனால் அவளை காதலிப்பதும் திருமணபந்தத்தில் இணைப்பதும் என்பதான நாவல் போக்கு வாசித்த முதல் வாசிப்பிலிருந்து இன்றைய வாசிப்பு வரை ஒவ்வாமையை அளிப்பதாகவே உள்ளது.காரணம் தி.ஜா வின் எழுத்தின் மீதுள்ள நெருக்கம் தான் கதையை கதையாய் ஏற்கவிடாமல் செய்கிறது.தி.ஜா மனிதரின் உளவியலின் அடிப்படையில் எழுதியவர் என்பதாலேயே வாசிப்பில் இந்தசிக்கல் ஏற்படுகிறது.வெறொரு கற்பனாவாத எழுத்து என்றால் தோன்றாது. யமுனாபாபு உறவு நாவலின் திசையில் செல்லாமல் வேறெங்கோ சென்று முட்டிநின்றுவிட்டது.
அம்மாவந்தாள் போல பறக்காமல், மோகமுள் தரையில் கனப்பதன் காரணம் பாபு யமுனாவின் அழகிய அன்பை அப்படியே விடாமல் ,வலிந்து மாற்றியதுதான் காரணமாக இருக்கலாம்.தன் இடையில் அமர்ந்து களித்தவன், சறுக்கி இறங்கியவன்,பிள்ளையென மடியில் துயின்றவன் ஒருபோதும் அந்தப்பெண்ணிற்கு காதல்துணைவனாக முடியாதவன்.
மோகமுள் அதன் இசைசார்ந்த நுணுக்கங்களுக்காக,ஒரு கலைஞனின் லட்சியத்திற்காக,இசைக்கலைஞனின் மனத்தடுமாற்றங்களுக்காக,அவன் மனதின் மெல்லிய உணர்வுகளுக்காக,தொட்டால் சுருங்கும் மென்மைக்காக,அவனின் பிடிவாத மனநிலை மற்றும் மனஅலைகழிப்புகளுக்காக வாசிக்கப்பட வேண்டிய நூல்.
தி.ஜானகிராமனை பற்றி எழுதுவது என்பதை அவர் பாஷையில் சொல்வதானால் அமுதமாயிருக்கிறது.ஒரு வாசகியாக அவர் எழுத்து இவ்வாறே தொடர்ந்து வாசிக்கப்படும் என்று அவரின் நூற்றாண்டில் நினைத்துக்கொள்கிறேன்.
நன்றி:வாசகசாலை இணையஇதழில் வெளியான கட்டுரை.
Comments
Post a Comment