Skip to main content

கடத்தல் அரிது:சிறுகதை

 ஜனவரி புரவி இதழில் வெளியான இந்த ஆண்டின் முதல் சிறுகதை.



                          கடத்தல் அரிது

பதினாறு ஆண்டுகளுக்குப்பின் துறையூரின் பெரியஏரி கடைபோன அன்று நான் துறையூருக்குள் நுழைந்தேன். காவாத்தா எல்லைக்கு முன்பே பேருந்து நின்றுவிட்டது. முதன் முறையாக இந்த இடத்தில் வாகன நெரிசல். இரவிலிருந்து மனம் சரிந்துகொண்டிருந்தது.

பேருந்து ஜன்னலுக்கு வெளியே பார்வையை திருப்பினேன். கிழக்கு புறம் பள்ளிசாலையை நிறைத்து வெள்ளம் வருகிறது. ஆர்ப்பரித்து பாய்ந்து சாலையை கடந்து அதன் வழியில் பாய்ந்தது. 

இருநூற்று எண்பது ஏக்கருக்கு மேல் பரப்பு கொண்ட ஏரி நிரம்பியதை நம்பமுடியாது ஆட்கள் வருவதும் போவதுமாக இருந்தார்கள். நான் பேருந்திலிருந்து இறங்குவதைக் கண்ட நடத்துனர், “இந்த எடத்துல எங்க போறீங்க…துறையூருக்குள்ள போறதுனாலும் கால்மணியாவும்…பஸ்ஸில ஒக்காருங்க,”என்றான்.

“பெரியஏரியப் பாக்கனும்…பஸ் போனாலும் அப்படியே தெப்பகுளத்தை சுத்தி பாலக்கரை வந்திருவேன்…”

“நீங்க வேற…தெப்பக்குளமும் பெரியஏரியும் லிங்க்கு…வழிஞ்சு சிவன் கோவில் அக்ரஹாரமே தத்தளிக்குது. தெப்பக்குளத்துல உள்ள பதினாலு கிணறும் நிரம்பி உள்ள இருக்க ஜந்தெல்லாம் தண்ணில மெதந்து வருதாம்…ஏரியப்பாத்துட்டு வந்து சேருங்க. எங்கேயும் மாட்டிக்காதீங்க…” என்ற போதே இன்னும் பத்துஆட்களுக்கு மேல் இறங்கி ஏரியின் கடைமடையை நோக்கி நடந்தார்கள்.

“கிராமத்தாளுகள ஒக்கார வைக்க இந்த காவாத்தாவாலக்கூட முடியாது,”என்று நடத்துநர் சலித்துக்கொள்ளும் குரல் கேட்டது. நான் துப்பட்டாவை சரிசெய்தபடி போகலாமா வேண்டாமா என்று சற்று தயங்கி இங்கேயே இருந்தால் மனம்பதட்டமாகும் என்று நடந்தேன்.





கிழக்குப் பக்கத்தில்  மெல்லமெல்ல களிமண்சாலை மேலேறியது. கால்களை சவுக் சவுகன்று பசையிலிருந்து எடுத்து வைப்பதை போல எடுத்து வைத்தேன். அங்கிருந்த புளியமரம் ஒன்றின் மேட்டில் நின்றால் கண்ணெட்டும் தொலைவுவரை தண்ணீர் திமிறிக்கொண்டிருப்பது தெரிகிறது. இத்தனை நாள் இருப்பது தெரியாது சாலையோரமாக யாருக்கோ காத்துக்கிடப்பதைப்போல, பேருந்திலிருந்து பார்ப்பதற்கு உயர்ந்த கரைகளை மட்டும் காட்டி நின்ற பெரியஏரி. கடைபோகும் நீரின் இரைச்சல் காதுகளை அடைத்தது.

ஏரிநடுவே நாயக்கர் பாணியிலான ஜமீந்தார் காலத்து அரண்மனை வெள்ளையாய் நின்றிருந்தது. ஏரியின் கடைமடையில் நான்குபுறமும் வாயில்கள் உள்ள மண்டபத்தில் புகுந்த நீரானது மண்பத்திற்கு முன்னால் குத்தப்பட்டிருந்த வேல்களின் விளிம்புவரை வழிந்து சென்றது. பச்சை மலை குன்றுகளில் வழிந்த மலைநீர் எல்லாம் சேரும் இடம் இது. மனிதர்கள் கட்டிய கரைகளுக்கு இத்தனை வலுவா?

இன்னும் கொஞ்சநேரத்தில் அத்தையை பார்த்து பேச வேண்டும் என்ற நினைப்பு அனைத்து எண்ணங்களுக்கும் மேல் இருந்து கொண்டு மனதை அழுத்தியது. திடீர் என்று நேற்று என்ன நடந்திருக்கும் என்று புரியவில்லை.

அத்தையிடம் அலைபேசியில் பேசும் போது யாரிடமோ பேசுவதைப்போல இருந்தது. இன்று சித்திவீட்டிலிருக்கும் அவளிடம் சென்று என்ன பேசுவது?

“செல்வி…”என்று அத்தையின் குரல் கேட்ட அடுத்த நொடி, “அத்த வந்துடேன்,” என்று குரல் முன்னால் ஓடிநிற்கும். அம்மா,சித்திகளை விட அதிகமான பணிவும், பயமும் அத்தையிடம் இருக்கும். அவளின் நிமிர்வும், குரலும், குடும்பத்தை பிடித்து நிறுத்தும் தைரியமும் அப்படியானது. யாரும் அவளின் கண்டிப்பை அசட்டை செய்யமுடியாது.  பேரப்பிள்ளைகளின் வழி தான் அவள் கனிந்து கொண்டிருக்கிறாள். அப்பாவின் முன்னால் மட்டும் அத்தை அத்தனை சாந்தமாய் இருப்பாள்.

ஒரிரு ஆண்டுகளுக்கு முன்பு வீட்டிற்கு வந்த சித்தி சித்தப்பாக்கள், வீட்டிலிருந்த அனைவரும் சேர்ந்து ஆற்றுக்கு குளிக்க சென்றார்கள். மதிய உணவுக்கான வேலையில் அத்தையுடன் நானும் இருந்தேன்.

“கும்பலோட கும்பலா நீயும் போயிட்டு வா…”

“போனாலும் கரையிலதான் ஒக்காந்திருப்பேன்…நீங்க மட்டும் இத்தன பேருக்கு சமைக்கனுமே,”

“அதெல்லாம் நான் பாத்துக்குறேன்…போய் சிரிச்சு இருந்துட்டு வா. வருஷம் முழுசும் ஆத்துல தண்ணி ஓடற ஊர் இது. இங்க பெறந்துட்டு ஆத்துல எறங்கமாட்டிக்கிற…நீ மட்டுந்தான் அதிசயமா பொம்பளப்பிள்ளைன்னு உன்னைய கண்டுக்குவாங்களா…என்னப்பிள்ளையோ,”என்று சிரித்தாள்.

நான் பேச்சை மாற்றுவதற்காக,“அத்த..இன்னிக்கி நீங்க கத்தரிக்கா சாம்பார் வைங்க. அந்த ருசி எனக்கு வரமாட்டிக்குது…”என்றேன்.

அத்தை சிரித்தபடி, “அதுக்கென்ன வைக்கிறேன். உன்ன மாதிரிதான் உங்கமாமா சமைக்கறதெல்லாம் நல்லாருக்குன்னு சொல்லுவாரு. அதுக்கப்புறம் வீட்ல யாரும் சொல்றதில்ல,”என்றாள்.

“ம்…”

“இப்பிடி சமைச்சுக்கிட்டு இருந்தா உங்கமாமா பின்னாடியே வந்து நிப்பாரு…லீவுன்னா சுத்தி சுத்தி நானிருக்கற பக்கமே வருவாரு,”

நான் காய்களை கழுவினேன். அத்தை மாமாவை எப்பொழுதும் அதிகாரம் செய்வாள். அங்கபோய் உக்காருங்க. குளிக்கறதுக்கு இந்த சூடு பத்தாதா. எதுக்கு நூத்து தொண்ணூறு தடவை கூப்பிடுவீங்க என்று அதட்டும் சித்திரம்தான் மனதில் இருக்கிறது. கூடவே தேமே என்று விழித்தபடி நிற்கும் அழகான சிவந்த சர்க்கரைவள்ளிக்கிழங்கு மாதிரியான சிரிக்கும் மாமா நினைவின் ஓரத்தில் நிற்கிறார்.

“என்ன வாய்க்குள்ளவே சிரிக்கிற. கல்யாண வயசுக்கு மேல நிக்கிற பிள்ளைக்கிட்ட எல்லாம் சொல்லலாம்…”

கத்திரிக்காய்களை குனிந்ததலை நிமிராமல் அரிந்து கொண்டிருந்தேன்.

“மாமா எந்தநேரமும் என்கிட்ட பேசிக்கிட்டே இருப்பாரு…”

“சரியாதான் பேரு வச்சிருக்காங்க…”என்று நாக்கை கடித்துக்கொண்டேன்.

“என்னது…”என்ற அத்தையின் அதட்டும் தொனியால் வாயை மூடிக்கொண்டேன். பின் மெதுவாக குரலை கனிவாக்கினாள்.

“சீதாராமன்னு சரியாதான் பேரு வச்சிருக்காங்க…”

அத்தை அடுப்பின் பக்கம் திரும்பி கரண்டியால் கிண்டினாள்.

“மாமா செத்து ரெண்டுமாசமிருக்கும். வீட்ல தனியா இருந்தப்ப டீ.விய தூக்கிப்போட்டு ஒடைக்கனுன்னு தோணுச்சு. கொஞ்ச நேரங்கழிச்சு அங்க இருந்த கயிறை எடுத்து ஃபேன்ல போட்டுட்டேன். ஒரே ஒரு நிமிசந்தான் எல்லாம் முடிஞ்சிருக்கும். எங்கண்ணன் கூப்பிடறாப்ல இருந்துச்சு. சேர்லருந்து எறங்கி பீரோலருந்த பணத்தை எடுத்துக்கிட்டு துறையூர் டாக்டரை பாக்க வந்துட்டேன்…ஒரு வருஷம் மனசுக்குன்னு மாத்திரை சாப்டேன்…மாமாவுக்கு பிறகு எதுவுமே பிடிக்காம ஆயிருச்சு…”

“மாமா செத்தப்ப உங்க வயசு என்னத்த…”

“நாப்பத்தி மூணு…மாமாவுக்கு ஆக்ஸிடெண்ட் ஆகி தலையில அடிபட்டப்ப எனக்கு வயசு முப்பதுகூட இல்ல. உங்க மாம்ஸ்,சித்தியெல்லாம் சின்னப்பிள்ளைங்க. அதுவரைக்கும் பஸ்ஸீல டிக்கெட் கூட கேட்டு வாங்கி பழக்கமில்ல. அன்னிக்கு திருச்சி ரோட்டுல மகாத்மா ஹாஸ்பிடலுக்கு நடக்கும் போது, ரெண்டு காலும் எடுத்து நடக்க முடியல. அத்தன நடுக்கம்…எங்கண்ணன் கூட இருந்த தைரியத்துல மட்டுந்தான் வாழமுடியுன்னு நெனச்சேன்,”

“அதுக்கு பிறகுதான் மாமா ட்ரஷரி வேலை செய்ய முடியாம டீ ப்ரமோட் ஆயிட்டாரா?”

“ஆமா. சம்பளமும் குறஞ்சு போச்சு...எங்கண்ணன் காலேஜ் படிக்கறப்ப நல்ல துணிக்கே கஸ்ட்டம். இங்க வருஷா வருஷம் தீபாவளிக்கு வருவோம். தீபாவளிசீர் வச்சுக்குடுக்கற தாம்பாளத்தில இருக்கிற சேலைய மட்டும் மாமா எடுத்துக்கிட்டு, பேண்ட் சட்டை துணியை திருப்பி குடுத்துருவாரு. நீங்க தைச்சு போட்டுக்குங்க மச்சான்… இந்தக் கலர் உங்களுக்கு எடுப்பா இருக்கும்ன்னு சிரிச்சுக்கிட்டே சொல்வாரு. இப்பிடி எத்தனையோ …அவருக்கு போய் ஏன் அப்படியாச்சுன்னு தெரியல…”

கொஞ்சநேர மௌனத்தில் ரசத்தை இறக்கிவிட்டு பொறியலுக்கான இரும்புஉருளியை அடுப்பில் ஏற்றினாள்.

“ஒருத்தரு காட்ற பாசத்து ஈடா என்ன செஞ்சுர முடியும்? சும்மா தாலிய அறுத்து போட்டுட்டா ஆச்சா…அவரை மாதிரியே என்னைய மாத்திக்கிட்டேன்…எனக்கு அத்தனை நல்ல குணமில்ல. பொறாமை, ஆத்தாமை, கோவம்ன்னு எல்லாம் ஜாஸ்தி. உங்க மாமா அப்படியில்ல…”

பின்னாலிருந்து நடத்துனர், “எல்லாரும் வாங்க…”என்று குரல் கொடுத்தார். கரைகளுக்குள் நிற்க முடியாது பெருகும் நீரை மறுமுறை பார்த்துவிட்டு திரும்பி நடந்தேன்.

“வெள்ளத்தோட போயி கரையேறுற ஆளுக நிறைய இருக்காங்க…பஸ்ஸில இவங்களுக்கெல்லாம் டிக்கெட் காசுக்கூட கிடையாது…ஜாலியா துறையூர் வெள்ளத்தை பாக்கக்கூட வந்திருப்பாங்க,”என்று சொல்லியபடி நடத்துநர் புன்னகைத்தான். பேருந்து மெல்ல கிளம்பியது.

பாலக்கரை கீழிருந்த கிளையாற்றில் இதுவரை காணாத வெள்ளம் பாலத்தை தொட்டுக்கொண்டு ஓடுகிறது. இத்தனை நீரை பார்ப்பதற்கு மனதிற்கு கொஞ்சம் திசையழிவாகத்தான் இருக்கிறது.

பேருந்துநிறுத்ததில் இறங்கி திருச்சி பேருந்துகளும், மினிவண்டிகளும் நிற்கும் இடத்தில் நின்றேன். எந்தப்பேருந்தில் ஏறினாலும் முசிறி பிரிவுசாலை நிறுத்ததில் இறங்கலாம். வலதுபுறமாகத் திரும்பி திருச்சி பெருஞ்சாலை வழியில் நடக்கத்தொடங்கினேன்.

ஈரம் நசநசக்கும் சாலை. நீதிமன்ற வளாகத்தின் முன்பு நின்று அலைபேசியில் பேசிக் கொண்டிருந்த மாமா கையாட்டியபடி அருகில் வந்தது.

“நைட் இருந்ததுக்கு அத்த இப்ப எப்படி இருக்காங்க மாம்ஸ்…”

“அதே மாதிரிதான் பேசுது…நீ போய் பாரு. ட்ரஷரியில கொஞ்சம் வேல இருக்கு. கொஞ்ச நேரத்துல வந்துருவேன்,”என்றபடி அடுத்த வளாகத்தினுள் நடந்தது.

நான் நின்று சரியான இடமா என்று அடையாளத்தைத் தேடிவிட்டு நடந்தேன். சித்தி வீட்டை மாற்றியிருந்தாள். அந்த அடுக்குமாடி குடியிருப்பில் நுழையும் போது அத்தையை பார்த்ததும் என்ன பேசுவது? என்று மீண்டும் தேடித்தேடி மனம் பிடி கிடைக்காமல் திகைத்தது. என்ன பேசுவது? என்பதே தான் இன்று விடிந்ததிலிருந்து இருக்கும் ஒரே நினைப்பு.

வேணிசித்தி கதவைத் திறந்தாள். அனிச்சையாக அவள் தோள்களை பிடித்துக்கொண்டேன். கண்ணீரை கட்டுப்படுத்திக்கொண்டு என் கையைபிடித்தபடி உள்ளே சென்றாள். அவளுக்கு குரல் எழவில்லை. வரவேற்பறையில் தரையில் விரிக்கப்பட்ட மெத்தையில் அத்தை திரும்பிப்படுத்திருந்தாள்.

“அத்த…”

என்று இருமுறை அழைத்ததும் படுக்கையில் இருந்து எழுந்து குனிந்து அமர்ந்து கொண்டாள். வெந்தையநிற கைத்தறி புடவையை இழுத்துவிட்டுக்கொண்டு கால்களை நீட்டினாள். நீண்ட தலைமுடியின் பின்னல் கலைந்து கிடந்தது.

“பாப்பா  வந்திருக்கு…பாக்கமாட்டிக்கிற…பேசமாட்டிக்கற…”என்றபடி சித்தி அத்தையின் அருகில் அமர்ந்தாள். அத்தை அவளாகவே தலையாட்டினாள். 

“நிமிந்து பாரும்மா…”

“என்னத்த பண்ணுது…உங்களுக்கு வந்தது சாதாரண நெஞ்சு வலி தான்னு டாக்டரே சொல்லிட்டாரே,”

“எனக்கு சரியாயிருல்ல?”

அத்தை சடக் கென்று கேட்டாள்.

“ம்…சரியாயிரும்…”

அத்தை நிமிரவேயில்லை. பின் மெதுவாக, “எனக்கு பயமாயிருக்கு…”என்றாள். சித்தி எழுந்து உள்ளே சென்றாள்.

“என்ன பயம்…இத்தனை பேரு கூட இருக்கோம்ல்ல…”

“எனக்கு அண்ணன்னா உயிரு…அதுக்கு ஒடம்பு சரியில்ல…”

“அதுக்கென்னத்த இப்ப…”

“அதான் எனக்கும் ஒடம்பு சரியில்லாம போயிருச்சே…எப்பிடி நான் அண்ணன பாத்துக்கறது…”

“வயசானா எதாச்சும் வரத்தானே செய்யும்…அப்பாவ நாங்க பாத்துக்கறோம்,”

அத்தை மௌனமானாள். கண்களை மீறி கண்ணீர் வழிந்தது. தண்ணீர் குடிப்பதற்காக சமையலறைக்கு சென்றேன். சித்தி பாத்திரங்களை கழுவிக்கொண்டிருந்தாள்.

“அம்மா இப்படிதான் ரெண்டு நாளா கண்டதையும் பேசுது…ஒரு வாரமா தூங்கவே இல்ல…மாமாவுக்கு எவ்வளவு நாளா உடம்பு சரியில்ல. இப்ப புதுசா நேத்துதான் உடம்பு சரியில்லாத மாதிரி அதையே சொல்லுது,”

“நேத்து நைட் திடீர்ன்னு ஹாஸ்ப்பிட்லருந்து பத்துமணிக்கு  மேல நீ கால் பண்ணவும் பயந்துட்டோம் சித்தி…”

“நான் நேத்து சாயங்காலமா கேஸ் பாத்துட்டு திரும்பி வரப்ப அம்மா ஷோபாவுல ஒக்காந்து நாடகம் பாத்துக்கிட்டிருந்துச்சு. ஸ்ரீஜாக்கிட்ட தோசை ஊத்திக் குடுத்தேன்.  ஸ்ரீயைப் பாத்து அம்மா பக்கத்துல வராத உன்னப் பாத்தா பயமா இருக்குன்னு சொல்லிருக்கு. அவ ஓடி வந்து என்னாம்மா அம்மாச்சி என்னையப் பாத்து பயமா இருக்குன்னு சொல்லுதுன்னா…”

“ம்…”

“என்னம்மான்னு கேட்டா…எனக்கு உங்களை எல்லாம் பிடிக்கல. பயமா இருக்கு. யாரோடவும் நான் பேசமாட்டேன்னு திரும்ப திரும்ப சொல்லுது,”

“ஹாஸ்ப்பிடல் போய் ஊசி போட்டுட்டு வந்தப் பிறகும் சரியா தூங்கல. ஸ்ரீக்கிட்ட தனியா பேசுச்சாம். எல்லா மாத்திரையும் எடுத்து சாப்பிட்டுட்டு செத்து போலான்னு தோணுச்சுன்னு சொல்லியிருக்கு…”

சித்தி மேலும் பேசுவதற்காக காத்திருந்தேன். அவள் அழுதுகொண்டிப்பதை முதுகின் விசும்பல் காட்டியது. இவள் ஆடு, மாடுகளுக்கு வைத்தியம் பார்த்துவிட்டு வந்தே மனசாகாமல் புலம்புவாள். இந்த ஜனங்களுக்கு பொறுப்பே இல்ல. தடுப்பூசிக்கு முகாம் போட்டாலும் ஓட்டிக்கிட்டு வர மாட்டேங்குதுங்க. கடைசி நேரத்துல நம்மள படுத்தி எடுக்குதுங்க. வாயில்லா ஜீவனுக்கு சொல்லவா தெரியும் என்று தினமும் திட்டிக்கொண்டிருப்பவள்.

“நம்மளும் மனச போட்டு வதைக்கக்கூடாது சித்தி,”என்று அவளின் முதுகில் தட்டிவிட்டு வெளியே வந்தேன்.



சித்தப்பா இரவுவேலை முடித்தக் களைப்பில் முன்னாலிருந்த படுக்க அறையில் உறங்கிக்கொண்டிருந்தார். மற்றொரு படுக்கை அறை காலியாகக் கிடந்தது. அத்தை இங்கு எப்படி இருக்கிறாள் என்று தோன்றியது. அவளுக்கான வீட்டில் கோலமிட வாசலும்,நீர் ஊற்ற நான்கு செடிகளும் இருக்க வேண்டும்.

மீண்டும் அத்தை அருகில் வந்து அமர்ந்தேன்.

“த்த…நம்ம ஊருக்கு போலாமா…”

“வேணாம் பாப்பா…”

“சரி…வேப்பூர் போலாமா…”

“இங்க இருந்தாதான் ஈசியா டாக்டரை பாக்கலாம். எல்லாருக்கும் வேல இருக்கு. சித்தி லீவு போட்டுருக்கு. பிள்ளைங்க ஸ்கூல் போவுது. உங்க மாம்ஸ் ஆஃபீஸ் போனும். என்னால எல்லாரோட வேலையும் நிக்கிது…”

“மருந்து மாத்திரையெல்லாம் வாங்கிட்டு வேப்பூர்ல போய் இருந்தா இந்த பயமெல்லாம் போயிரும்…”

அத்தை ஒன்றும் பேசாமல் குனிந்திருந்தாள். மீண்டும் படுத்துக்கொண்டாள். 

“அப்பா நல்லாருக்காங்களா…இன்னேரம் சாப்பிடுவாங்க…”

“ஆமாங்கத்த…”

சித்தி இருவருக்கும் பழச்சாறு கொண்டுவந்தாள். அத்தை டம்ளரை கைகளிலேயே வைத்திருந்தாள். சித்தி தரையில் படுத்தாள். 

ஒருநாள் மாடியில் வடகம் பிழிந்து கொண்டிருந்த இளம்காலை வெயிலில் அத்தை அப்பாவை பற்றி பேசத்தொடங்கினாள்.

“எனக்கு பிள்ளைங்க பிறந்தப்ப எங்கண்ணன் எனக்கு எல்லா சேவகமும் பாத்துச்சு. தண்ணியில கைவைக்க விடாது. தீட்டுத்துணியக்கூட விடாது.  எடுத்துட்டு போய் ஆத்துல அலசிட்டு வந்துரும். குளிக்க சுடுதண்ணி வச்சித்தரும். பிள்ளைங்கள குளிக்க வைக்கறதுக்கு கூடவே இருக்கும். அப்ப அது கல்யாணமாகாத பையன்…”என்று வெயில் ஏறும்வரை விடாமல் பேசிக்கொண்டிருந்தாள். 

அத்தை வீட்டிற்கு வந்து இருக்கும் நாட்களில் வீட்டு வேலைகளை அவளே செய்வாள். அனைவரின் துணிகளையும் அவளே துவைப்பாள். அம்மா வேண்டாங்க என்றாலும் விடமாட்டாள். 

“இந்தவீட்ல அவங்கவங்க துணிகள தனித்தனியா துவச்சி பழகியிருக்கீங்க. அது என்ன பழக்கம்?” என்று திட்டிக்கொண்டே துவைப்பாள்.

இத்தனை வயசாகியும் என் உள்ளாடைகளை தனியாக துவைத்து வைத்தாலும் எடுத்து மறுபடியும் துவைத்து போடுவாள். வீடு முழுக்க அவள் குரலே கேட்டுக்கொண்டிருக்கும். இன்று யாருடனும் பேசப்பிடிக்காமல் படுத்திருக்கும் அத்தையை பார்க்க என்னவோ போல இருக்கிறது.

சித்தப்பா எழுந்ததும் சித்தியும் நானும் வெளியே வண்டிகள் நிறுத்துமிடத்திற்கு வந்தோம்.

“என்னப் பாப்பா... அம்மா இப்படி பேசுது…நேத்து அந்த டாக்டர் டிப்ரஷன். தனியா விடக்கூடாதுன்னு சொன்னார். மறுபடியும் பழைய மாதிரி இருக்குமோ? இத்தன வருஷமா நல்லா தானே இருந்துச்சு…”

சரியாக கையில் பையுடன் மாமா வந்து நின்றது.“அழுதுக்கிட்டே இருக்காத வேணி…பயப்பட ஒன்னுமில்ல செல்வி… டிப்ரஷன்தான். அப்பா செத்தபிறகு இருந்துச்சே அந்த மாதிரி… எங்களை யாரையும் பிடிக்கலன்னு சொல்லுது. நல்லா தூங்கனுமாம். பத்து நாளுக்கு மாத்திரை குடுத்திருக்காங்க. சரியாயிடும்…தீடீர்ன்னு வராது. நாள்ப்பட்ட மனசு கஸ்ட்டன்னு டாக்டர் சொல்றார்...ஒரு வருஷமாச்சும் ட்ரிட்மெண்ட் எடுக்கனும்…” என்றது.

நான் கிளம்பும் போதும் அத்தை நிமிர்ந்து பார்க்கவில்லை. அதுவரை தொடத்தயங்கிய அத்தையின் தோள்களின் கைவைத்து, “அப்பாவைப் பாக்கறதுக்கு நீங்க வரனும். அவரால வரமுடியாதுல்ல. நீங்க ஊருக்கு வந்து ஒருமாசத்து மேல ஆகுது. அப்பா உங்கள பாக்கனுன்னு நெனப்பாரு,”என்றேன்.

 “ஆமா…அண்ணன பாக்கனும்…”

“பாக்கனுன்னா நீங்கதான் வரனும்…”

அத்தை சரியென்று தலையாட்டினாள்.

நான் நடக்கும் சாலையெங்கும் நீர்.  ஓரிரு நாளில் வடியக்கூடும். நீரில் பதமாகி குழைவதும், வெயிலில் இறுகி வெடிப்பதும் ஒரே மண்தானே. 







Comments

Popular posts from this blog

அகத்தின் ஆரக்கால்கள்

 [ எழுத்தாளர் மயிலன் ஜி.சின்னப்பனின் முப்போகம் [குறுநாவல்], நூறு ரூபிள்கள் மற்றும் சிருங்காரம் சிறுகதை தொகுப்புகளை முன்வைத்து...] எழுத்தாளர் மயிலன் தண்டவாளத்தின் இருபக்க தண்டுகள் அதை இணைக்கும் குறுக்குப்பட்டைகள், ஜல்லிக்கற்கள் என்று அனைத்தும் சரியாயிருக்க ஓடும் ரயிலில் எங்கோ ஒரு சின்னஞ்சிறு விலகல் அனைத்தையும் குழப்பி தடம் புறளச்செய்கின்றது. புரண்டு கிடக்கும் ரயில் அந்த சின்னஞ்சிறு விலகலின் உண்மையான ரூபம். மறுபடி சரி செய்யப்பட்டு ஓடும் ரயில் பின் எங்கோ அதே போல தக்கி நிற்கும். அதை போன்ற ஒரு உணர்வு சித்திரத்தை மயிலனின் கதைகளை தொகுப்பாக வாசிக்கும் போது உண்டாகிறது. மனதின் அகஅடுக்குகளை கீறிப்பார்க்கும் சவரக்கத்தி என்றும் இவரின் எழுத்துகளை சொல்லலாம். அதில் ஒரு அடுக்கு காயத்தால் அழுகி புறையோடி சீல் கொள்கிறது. அது மற்ற அடுக்குகள் மீது கொள்ளும் செல்வாக்கின் கதைகள் இவை. அந்த வலி நிறைந்த அழுகிய அடுக்கை உருவாக்கும் விசைகளை நோக்கி செல்லும் கதைகள் இவை. மனித இயல்புகள் அல்லது  இயல்புகளை பாதிக்கும் சூழல்கள் என்று இவை இரண்டும் ,அந்த சவரக்கத்தியை தீட்டும் மணலின் நெறுநெறுப்பாகவும் தீட்டிய கத்தியை ...

கர்ணனின் கவசகுண்டலங்கள்

இந்த ஆண்டு நித்யவனத்தில் நடத்தப்படும் முழுமைஅறிவு [Unified wisdom] வகுப்புகளில் மரபிலக்கிய வகுப்பிற்கு செல்ல வேண்டுமென்று தோன்றிக்கொண்டிருந்தது. மரபின் மைந்தன் முத்தய்யா அவர்கள் நடத்தும் மரபிலக்கிய அறிவிப்பு வந்ததும்  வழக்கம் போல நிறைய யோசனைகள். பொங்கல் விடுமுறை நாட்களில் வருகிறது என்பது வேறு. இருந்தாலும் செல்ல வேண்டும் என்று ஒரு பிடிவாதம். பதினாறாம் தேதி ரம்யா மனோகருடன் ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்திலிருந்து வெள்ளிமலை சென்றேன். சாயுங்காலம் ஐந்து மணி்க்கெல்லாம் மலையேறிவிட்டோம். அங்கு ஈரோடு கிருஷ்ணன் அவர்களை முதலில் பார்த்தோம். அவருடன் எங்கள் வகுப்பு சகாவான ஆனந்த் குமார் அறிமுகமானார். பின்பு அறைக்கு சென்று வந்து மலைச்சூழலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அங்கிருந்த திறந்தவெளி இருக்கைகளில் ரம்யாவும் நானும் கொஞ்சம் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நல்ல நட்பிற்கான அடித்தளம். மேடம்,கமலதேவி,கமலா...கடந்து...ரம்யாவை அக்காவிற்கு வர வைத்ததும் வேலை முடிந்தது. இனி இயல்பாக எல்லாம் நடக்கும். ரம்யாவின் இனிய முகம் மூன்றாவது நாள் ஈரோடு பேருந்து நிலையத்தில் விடைபெறும் வரை உடன் இருந்தது. அதே ப...

பெருகும் காவிரி

 காவிரியை பார்ப்பது எப்போதுமே எனக்கு பரவசமான பொழுது. பள்ளி வயதில் முசிறி காவிரி. கல்லூரி வயதில் திருச்சி காவிரி. கடைசியாக முசிறிக்கு சென்று நான்கு ஆண்டுகளாகிறது. முசிறியிலிருந்து திருச்சிக்கு செல்லும் பேருந்து வழியில் காவிரி உடன் வரும். கொல்லிமலையில் உருவாகி எங்கள் ஊரில் பாயும் அய்யாறு முசிறி காவிரியில் கலக்கிறது. அண்மையில் எழுத்தாளர் சுரேஸ்குமார இந்திரஜித் கருத்தரங்கிற்காக திருச்சி செல்லும் போது இரண்டுஆண்டுகள் கழித்து  அந்தியில் காவிரியை பார்த்தேன். கொள்ளிடம் பாலத்தில் நல்ல காற்று. கொள்ளிடத்தில் ஓரளவு நீர் இருந்தது. கொள்ளிடம் பாலத்தில் பேருந்து செல்லும் போது வலது பக்கம் மலைக்கோட்டை ,திருவரங்க ராஜகோபுரம் இரண்டும் நீருக்கு அப்பால் இணையாக காட்சிக்கு வரும். அதற்கும் அப்பால் மேற்கு வானில் சரியும் ஆரஞ்சு வண்ண சூரியன்.    மங்கம்மாளை, தாயுமானவரை,ஆண்டாளை,வெள்ளையம்மாளை,ஆண்டாளை போலவே அரங்கனை தேடி வந்த முகலாய இளவரசி சுரதானியை மனம் சென்று தொடுகிறது. அன்னிய படையெடுப்பின் போது கோயில் உற்சவரை காப்பதற்காக கிழக்கு கோபுரத்தில் இருந்து உயிர் விட்டாள் தாசி குலத்து வெள்ளையம்மாள். வெள்ளை ...