கங்காளனின் பாதங்கள்

 கடல் புத்தகத்தின் எழுத்தாளர்களுக்கான பிரதிகள் வந்து சேர்ந்ததும் ஆண்டாள் நினைவிற்கு வந்தாள். திருவெள்ளறை ஆண்டாள். எப்போது திருவெள்ளறைக்கு சென்றாலும் வெளிசுற்றில் ஆண்டாளை வணங்கிவிட்டு அருகில் உள்ள தூண்வரிசைகள் நீளும் மதிலோர பிரகாரத்தில் அமரும் போது எழுத்தெல்லாம் சுடராகி எரியவேண்டும் என்ற பாரதியின் சொற்கள் நினைவிற்கு வரும்.

சொற்கள் வேண்டும் என்று ஆண்டாளிடம் அன்றி யாரிடம் கேட்பது.

கடல் புத்தகத்தை அவள் பாதங்களில் வைக்க எண்ணியிருந்தேன். இதுவரை எழுதும் பெண்கவிஞர்களின்  ஒன்றிணைத்த வடிவமாக எனக்கு ஆண்டாள் இருக்கிறாள். அங்கு செல்ல அமையவில்லை.

நேற்று ஜம்பேரி என்ற பெரிய ஏரியை கோடையில் பார்க்கச்சென்றிருந்தேன். கொல்லிமலைத் தண்ணீரை சேமிக்கும் மிகப்பெரிய ஏரி அது.



 வைரிசெட்டிப்பாளையம் என்ற ஊரின் மேற்குபுற எல்லையில் உள்ளது. கொல்லிமலைத்தொடரும் பச்சைமலைத்தொடரும் இணைவதை உயர்ந்த ஏரிக்கரையிலிருந்து கண்டேன் . பெயர் வைத்து நாம் தான் மலைத்தொடர்களை பிரித்து விட்டோம். 

ஏரிக்கரை ஊரின் நாயகர் சப்தரீஸ்வரர். நாயகி குங்குமாம்பாள். மிகப்பழைய கோவில். காலையில் இறைவனுக்கு மாணிய நெல் அளந்து குவித்திருந்தார்கள் போல. சாயுங்காலமும் நெல்மூட்டைகள் இறக்கிவிட்டு சென்றார்கள். 






கோவிலின் உள்ளே ஒருவரும் இல்லை. சாளர வெளிச்சம் தவிர சுற்று பிரகாரத்தில் தண்இருள் கவிந்திருந்தது.

மனதில் எந்த எண்ணமும் இல்லை. மந்தித்திருந்தது. அர்ச்சகர் கடல் புத்தகத்தை சிவலிங்கத்தின் ஆவுடை மீது வைத்து தீபாராதனை காட்டினார். இருளுக்குள்ளிலிருந்து ஒரு குட்டிப்பூனை வெளிவந்து மியாவ் என்று என்னையும் தம்பியையும் பார்த்துவிட்டு மீண்டும் சிவலிங்கத்தின் மீது தாவி ஏறி ஆவுடைமீது அமர்ந்து கொண்டது.

தாத்தா கல்லூரி படிக்கும் வரை என்னை பூனைக்குட்டி என்றுதான் அழைப்பார். எப்படியோ மனம் தாத்தாவை எங்காவது தொடர்பு படுத்துவது புதிதில்லை.

பிரகாரத்திற்கு வந்து நெல் அளக்கும் இடத்தில் புத்தகத்தை வைத்தேன்.



 அர்ச்சகர் புத்தகத்தை கேட்டார். கருவறையின் வெளிப்படிகளில் அமர்ந்து பக்கங்களை திருப்பினார்.

என் ஆயுளுக்கு புத்தகம் எழுதினவா வந்து புத்தகத்தை ஈஸ்வரன் பாதத்தில் வைத்து கேட்பது இதான் முதல்முறை என்று பேச ஆரம்பித்தார். 

வயோதிகர். அவர் மிகஇளமையில் பாடலாசிரியர் கண்ணதாசனை திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சந்நினிதியில் சந்தித்த நிகழ்வை பகிர்ந்து கொண்டார்.



அன்று அர்த்தமுள்ள இந்துமதம் பற்றி பேச்சு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கண்ணதாசனின் அந்திம காலம் அது. 

கண்ணதாசன் சொன்னதாக அர்ச்சகர் சொன்னது.

"அப்ப மேன்சன்ல தங்கியிருந்தேன் காலயில பதினோரு மணிக்கு எழுந்திருப்பேன். ஏண்டா எந்திருக்கிறேன்னு இருக்கும். ஒரு பக்கம் இப்பவே செத்து போகலான்னு தோணும். உடனே இன்னொரு மனசு டீ க் குடிக்கலான்னு சொல்லும்...செத்த நேரம் போராட்டத்துக்கு பின்ன டீ தான் ஜெயிக்கும். இப்ப எல்லாம் இருக்கு. ஆனா என்னோட சாப்பாடு கோதுமையை வடிச்ச சாதம். புடலங்காயை உப்புப்போட்டு வேகவச்சு வடிச்சுட்டு அத மோர்ல போட்டு வெந்த கோதுமையோட சேத்து சாப்பிடனும்...ஒடம்ப பாத்துக்கோங்க...ஒழுங்கான நேரத்துக்கு தூங்கப்போங்க...தகாததை சாப்பிடாதீங்கன்னு," சொன்னார் என்று அர்ச்சகர் ஒரு நீண்ட கதையை சொன்னார்.

ஏரியின் உயர்ந்த கரையில் நிற்கிறேன். கண்முன்னே முடிவின்றி ஏரியின் பரப்பு விரிந்து கிடக்கிறது. சிறுஉருவங்களாக மரங்களும்..மாடு மேய்ப்பவர்களும் தெரிகிறார்கள். 



ஏரியின் வலதுபுறம் நெல்லங்காடுகளுக்கு நடுவிலிருக்கும் மாமரங்களில் கிளிகள் கிச் கிச் என்கின்றன. 



இடதுபுறம் ஏரிக்குள் ஒட்டத்தீத்திக்குருவிகள் ஓயாமல் சத்தமிடுகின்றன. 

எங்கிருந்தோ கோடையின் கருங்குயிலின் அழைப்புக்குரல் ஒரு  வேண்டுதல் போல விடாப்பிடியாக கேட்கிறது. 

கங்காளனின் பாதங்களுக்கு கீழே உயிர் கொண்டு அதன் கருணையை நம்பியே வாழ்கிறது... இத்தனை உயிர்களும், நானும் நாமும்.







Comments

Popular posts from this blog

பசியற்ற வேட்டை

எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் நேர்காணல்

முதல் கனி