சிறுகதை: சொல் பேச்சுக் கேட்காத கரங்கள்

 2018 ஜீலை பதாகை இதழில் வெளியான சிறுகதை.

சொல்பேச்சுக் கேட்காத கரங்கள்

பேருந்திலிருந்து இறங்குகையில் சுரபியின் மனம் முழுக்க சங்கடமாக இருந்தது.அதிகாலையில் திருமணத்திற்கு உற்சாகமாக கிளம்பிய அனைத்தும் அவிந்திருந்தது.கிருஷ்ணாபுரத்தின் நிறுத்தத்தில் ஒரு நடுவயதுக்காரர் ஏறமுடியாமல் பேருந்தில் ஏறினார்.பேருந்தில் நல்ல கூட்டம்.அவள் படிகளுக்கு எதிரேயிருந்த இருக்கையிலிருந்து அவரைப் பார்த்தாள்.வேட்டியை மடித்துக்கட்டியிருந்த அவரின் கால்முட்டி வீங்கி பளபளப்பாக இருந்தது.

சுற்றும் முற்றும் பார்த்தப்பின் தயங்கி எழுந்த சுரபியை, “கூட்டத்தில் சேலயகட்டிக்கிட்டு நிக்க முடியாது…வேணாம்,”என்ற குரல் தடுக்கையிலேயே எழுந்து கம்பியில் சாய்ந்திருந்த அவரின் தோளை நுனிவிரலால் தொட்டு அமர சொன்னதும் அமர்ந்து கொண்டார்.பக்கத்தில் அமர்ந்திருந்தஅம்மா நிமிர்ந்து பார்த்து புருவம் சுருக்கினார்.இவர் கொஞ்சம் தள்ளி நாசூக்காக அமர்ந்து கொண்டார்.

பக்கத்தில் அவளைவிட இளையவன் நின்றிருந்தான்.கூட்டம் என்றாலும் தவறான தொடுகையை உடல் அறிய கற்றிருக்கிறது.அனிச்சையாய் திரும்பி, “தள்ளி நில்லுங்க தம்பி,”என்றாள்.நல்லவனாக இருக்கக்கூடும். இல்லையென்றால் “ தனியாக காருல வரலாமில்ல,” என்று பொய்யாய் எகத்தாளம் பண்ணியிருப்பான்.இத்தகைய எகத்தாளமான எத்தனையோ குரல்களை சிறுவயதிலிருந்து பெண்கள் கேட்டபடிதானிருக்கிறார்கள்.

இறங்கியதும் அம்மா பூவாங்க சென்றார். முட்டிவலிக்காரர் அருகில்வந்து,“ரொம்ப நன்றிகண்ணு..கால்ல இன்னதுதான்னு சொல்லமுடியாத வலி,”என்றார். “அதனாலஎன்னங்க? மருந்து தடவுறீங்களா?”என்றாள். “அதுக்குதான் வந்ததே.போயிட்டுவர்றேன் பாப்பா,” என்று ஆட்டோவில் ஏறினார். மனதில் நெருடலாகவே இருந்தது.                                                      

தைகுளிர் இந்தகாலையில் மெல்லியபடலமாய் உடலைத் தொட்டு கணம்தோரும் ஊடுருவிக்கொண்டிருந்தது.பாலக்கரையில் இறங்கி அம்மாவுடன் நடக்கையில் உறவுகளும் அங்கங்கே இணைந்து கொண்டனர்.தெப்பகுளத்தை சுற்றிக்கடக்கையில் குளத்தின் உள்வெட்டுசெதுக்குகள் தெரிந்தன.முன்னால் சென்ற ஜீன்ஸ்குழந்தை குளத்தினுள் சுற்றிவெட்டப்பட்டிருந்த கிணறுகளை எண்ணிக்கொண்டிருந்தது.சிறுசந்தைக் கடக்கையில் நேர்கோட்டில் அடுத்தத்தெருவில் தெரிந்த சிவனாலயத்தைப் பார்க்கையில் “இமைப்பொழுதும் என்நெஞ்சை நீங்காதான் தாள்வாழ்க” என்ற ஒலிப்பெருக்கிக் குரல் அவள் காதுகளைத் தொட்டு மனதில் படர்ந்தது.

மேளச்சத்தம் கேட்டதும் சுரபி, “தாலி கட்டியாச்சோ?”என்றாள். “இல்லை அரசக்கால் ஊண்றாங்க” என்றார் சின்னமாமா.செம்மஞ்சளில் ஔிப்பழமாய் ஆதவன் எதிரே தென்னங்கீற்றுகளின் பின் எழுந்துகொண்டிருந்தான்.பேசிக்கொண்டும் ,குளிர்ந்தசந்தனத்தைத் தொட்டுக்கொண்டும் மண்டபத்தினுள் நுழைந்தார்கள்.சுரபி நெஞ்சிற்கு சொல்லிக்கொண்டாள்.அது அவளை கைகளிடம் சொல்லும்படி திருப்பிவிட்டது.கைகளோ முன்செல்லும் ஆடுதான் காரணம் என மனதைக்காட்டிவிட்டு குளிருக்கு தேய்த்துக்கொண்டது. 



மனதினுள்ளே வளைந்து நெளிந்து கொண்டிருந்து சட்டென்று வெளியே தலைநீட்டியது. யாரையும் தெரியாமக் கூட தொடக்கூடாது. கல்லூரி முடித்து வந்து கற்றுக்கொண்ட முதல் சமூகப் பாடம். தொடுகைய தவறா நினைக்கற, பார்க்கிற, பயன்படுத்தற ஊர்லதான் எங்கப் பாத்தாலும் கூட்டம் என்று நினைத்துக் கொண்டாள். 

காலை ஆறுமணியென்பதால் நெருங்கிய சொந்தங்களாக கூடியிருந்தார்கள். மெதுவாக சடங்குகள் நடந்துகொண்டிருந்தன.அம்மாவின் சொந்தங்கள். பள்ளிவிடுமுறை நாட்களின் முகங்கள் என்பதால் கூடுதல் நெருக்கம்.பால்யத்தின் வண்ணங்கள்.சிரித்துப் பேசி அமர்ந்திருந்தார்கள்.சிவப்புசேலையில் மணப்பெண் வணங்கி அமர்ந்தாள்.மீண்டும் சடங்குகள்.வந்தவரிடம் அம்மா பேசிகொண்டிருக்க அவர் என்பக்கம் திரும்பி புன்னகைத்துகொண்டிருக்கையில் மனம் கைகளிடம் சேதிசொல்லிவிட்டிருந்தது.அதைநினைத்து மேலும் புன்னகைத்ததை நீலவண்ணசட்டை போட்டவர் தனக்கெனநினைத்து தலையாட்டினார்.

தோளில் குழந்தையுடன் வந்த அண்ணன் அவளின் கைப்பற்றி, “எப்ப வந்த,”என்றது.தாம்பூளத் தட்டிலிருந்த மாங்கல்யத்தை வணங்கி மஞ்சலரிசி எடுக்கையில் குழந்தையும் எடுத்து வாயில்போட்டது.

“வாயில போடக்கூடாதுடா..மூக்கருத்துருவேன்”என்ற என்சைகையை புரிந்துகொண்டு அடிக்க வந்தான்.கன்னங்களை உப்பி, உதடுகளை குவித்து சேட்டை காண்பித்தான்.இடதுகையால் அண்ணனின் சட்டையை முதுகுபுறத்தில் பற்றியிருந்தான்.அண்ணின்  தோளில் கைவைத்து சுரபி, “சட்டை நல்லாயிருக்கு,”என்றதும் அண்ணன் மலர்ந்து ஏதோசொல்லவந்து மாமாஅழைக்க எழுந்து சென்றது.

எழுந்து மஞ்சலரிசிதூவி மேலிருந்த அரிசியை தட்டியபடி அமர்கையில் சுற்றம் கலைந்துகொண்டிருந்தது.மண்டபத்திலுள்ள அனைவருமே அரிசியை தட்டிவிட்டுக் கொண்டிருப்பதைப் பார்க்கையில் அவளுக்கு ஏதோ ஒருகரம் அனைவரயும் வாழ்த்தியது போலிருந்தது. திருமகள்தீபத்தை ஏந்திய சகோதரி முன்செல்ல மணமகளின் சகோதரன் கைபற்றி மணமானவர்கள் அக்னி வலம்வந்தனர்.

இளமஞ்சள் தழல்…பார்த்துக்கொண்டேயிருக்கலாம்.காற்றுதொட்டெழுப்பி தழலாடும் நடனம்.மேலெழுந்து தாவி விரிந்து நின்றுநெளிந்தது.இப்படியொரு தழலில்லா மனதுண்டா?...எத்தனை தடுத்தும் பின் நோக்கிய பயணத்தை நிறுத்தவில்லை அவள் மனம். பின்பு சுரபியின் புறம்நடந்தவை கனவே.

உணவைக்கையிலெடுக்கையிலேயே வயிற்றில் குமட்டும்போது சுரபியின்வயது ஆறு இருக்கலாம்.எந்தநேரமும் கோழை நிறைந்தநாசி.துடைத்தநேரம் தவிர மற்றநேரங்களில் மற்றவரை விலகவைத்திருக்கலாம்.அவள் வயதுப்பிள்ளைகளின் வேகத்திற்கு இவள் எப்போதும் பின்தங்கியேயிருந்ததாய் சுரபிக்கு நினைவிருந்தது.இருமலை நிறுத்த இயலாமல் நிறைந்தகண்களுடன் ஊதாநிறசீருடை பாவாடையில் முகம்பொத்தியிருந்த வகுப்பறை நாட்களில் அவள் ஓரமாய் எங்கோ இருந்தாள்.


மருத்துவரிடம் சித்தப்பா பேசியது என்னவென்று அவளுக்கு நினைவில்லை.அவள் கண்களைமூடி எக்ஸ்ரே மேசையில் படுக்கையில் உள்ளே விரியும்  இருள்உலகம் அவளை நடுங்கச்செய்யும்.அவள் உறங்கும் கட்டிலின்கீழே எப்போதும் ஒருபெரியவலை அல்லது தேன்கூடு இருப்பாதாக உணர்ந்து கொண்டேயிருந்தாள்.அதில் விழுந்துவிடுவோமோ என்றபயத்தால் எப்போதும் கட்டில்சட்டத்தை பற்றிக்கொண்டிருக்கும் அவளின் கை.வகுப்பறைப்பாடங்கள் நிச்சயம் கனவுகாட்சிகளே.தினமும் மாத்திரை விழுங்குகையில் அவள் மட்டும் ஏன் தினமும் மாத்திரை விழுங்க வேண்டும் என்று அவளின் மனதில் ஏதோஒன்று சிக்கிக்கொள்ளும்.மூச்சுவிடுகையில் ஏற்படும் வலியைப்போலவே பயம் எப்போதும் அவள் உடனிருந்தது.உலகத்தின் வேகத்திற்கு ஈடுகொடுக்க இயலாமல் அதன் கரையிலமர்ந்து வேடிக்கைப் பார்த்தபடியிருந்தாள்.

வீட்டில்முன்பிருந்த கிணற்றைச்சுற்றி நீர் தேங்கியிருந்தபள்ளத்தில் நொடிக்கொருமுறை மூழ்கியெழும் சிட்டுகளாக பிறந்திருக்கலாம் இல்லை ஜஸ்காரர்வீட்டில் பிறந்திருக்கலாம் என்பது அவளின் அந்நாள் ஏக்கம்.

தொண்டையிலிருந்து அடிவரைஇழுத்துபிடித்து இருமல்வரும் காலைவேளைகளில், “பள்ளிகூடத்துக்கு லேட்டாகுது….சீக்கிரம் வா குளிக்க,”என்றால்,“நானே குளிச்சிக்கிறேன்…”என்பாள்.

சாப்பாடு ஊட்டும்போது “ஒவ்வொருபருக்கையா தின்னா…இப்படிதானிருக்கும் ஒடம்பு …இந்த பிள்ளைகள பாரு…”என்றால்,“நானே சாப்பிட்டுகிறேன்…”என்பாள்.

“…..சரி வா…”

“வேணாம்…நானேதான் சாப்பிடுவேன்,”என்று தள்ளிச் சென்றுவிடுவாள்.

“இவ்வளவு புடிவாதம் பொம்பளபிள்ளக்கி ஆவாது…”என்பார் அம்மா.

ரேங்க்கார்டு கொடுக்கும் நாளன்று உடன்பிறந்தவர்கள் அப்பாவிடம் கையெழுத்து வாங்குகையில்,”எந்த கணக்கில் இந்த மார்க்கை விட்ட….எந்தகேள்விக்கு நேரம் பத்தல…”என்று அவர்களின் விசாரணைகள் முடிந்தபின் ,சிவப்பு அடிக்கோடுகளிட்ட தன் அட்டையோடும்,குனிந்த தலையோடும் தனியே வந்து நிற்கும் சுரபியிடம்,”நல்லா படிக்கனும்,”என்பார்.


“இனிமேல் ஹாஸ்பிட்டலுக்கு வரவேண்டாம்.அதவிட ஊசி வேணாம்,உவ்வே..மாத்திரை வேணாம்.ஆனா பொட்டுகடலையும் வெல்லமும் டெய்லி சாப்பிடனும்,”என்று கன்னத்தைத்தட்டி டாக்டர் சொன்னபோது ஐந்தாம் வகுப்பிலிருந்தாள்.

அம்மாவை தம்பி, தங்கை கட்டிபிடித்திருக்கையில் தள்ளிநிற்கும் சுரபியை அம்மா, “உன்னபோல பிள்ள பெத்துட்டா குறச்சலில்ல…எல்லாத்துக்கும் பிடிவாதம்..மனுசற கண்டா என்னமா இருக்குமோ….தொடவிடுதா பாரு.சனஞ்சேராதது..”என்று பேசிக்கொண்டே செல்வார்.

திருமணமேடையில் தழல் இறங்கியமைந்து கங்குகளானது. “சாப்பிட போகலயா ?”என்றபடிவந்த அண்ணன் சுரபியின் இடதுகையைபிடித்துக் கொண்டு நின்றிருந்தவர்களிடம் பேசத்தொடங்கியது.சூட்சுமம் தூலமானது.

கிணறுகள் வற்றிப்போன கடுங்கோடைவிடுமுறையில் தாத்தா, “கிணதுத்துல தெக்குமூலையில் ஒருஊத்துகண்ணு திறந்திருக்கறதால தான்…குடிக்கதண்ணீ இருக்கு,”என்று வெத்தலபெட்டி தாத்தாக்கிட்ட சொல்லிக்காண்டிருந்தார்.வெத்தலப்பெட்டி தாத்தா, “ஒத்தஊத்தும் அத்து போன கேணிய பாத்ததில்ல.எங்கியாச்சும் கண்ணுக்கு அகப்படாமயாச்சும் இருக்கும்.உள்ளுக்குள்ளவே ஊறி காயற ஊத்தாவது இல்லாத கேணி பின்னால எந்தமழைக்கும் சுரக்காதும்பாங்க,”என்றார்.

 கமலையில் போய் நின்றாள் சுரபி.இருகருங்கற்கள் கிணற்றின் உள்வரை நீண்டிருந்தது. அதில் கால்வைக்கையில் சுரபிக்கு தொடை நடுங்கியது.கவுனை தூக்கிக்கொண்டு அடுத்தஅடிவைக்கையில் பெரியம்மாவின், “டேய் ...சுரபிய பிடி,”என்ற குரல்கேட்டபோது நுனிவரை நடந்திருந்தாள்.கால்களை எந்தப்பக்கம் வைத்தாலும் தடுமாறும்நேரம் அண்ணன் கை அவளை இறுகப்பற்றியிருந்தது.

“ஊத்து பாக்கனும்..விடு…”

“சரி பாரு….”அண்ணன் கையை விடவில்லை.

காய்ந்து பாசிகருகியிருந்த பாறையில் ஒருநேர்கோடாய் நீர்க்கசிந்தபடியிருந்தது. தேங்கியிருந்த நீரை மேலும் எட்டிநோக்கி “நீ பாக்கறியா?நான் புடிச்சுக்கறேன்,”என்று பின்னால்வந்து பிடித்துக்கொண்டாள்.

மழைகால விடுமுறைகளில்  இலவம்ஓட்டில் உனிப்பூ நிறைத்து வாய்காலில் படகுவிடுகையில் சுரபியின் வலதுகை, அண்ணனின் இடதுகையிலிருக்கும்.

வரப்பில், வயலில், நாய்வருகையில், மழையில், தூங்குகையில், தொட்டியில் முழுகிக்குளிக்கையில், உடல்நலமில்லாநேரங்களில், கோவில்பிரகாரத்தில், தாத்தாவின் மோசமான உடல்நிலைத்தருணங்களில், அக்காவிற்குகுழந்தை பிறக்கையில், வாழ்வின் முக்கியதீர்மானத்தை தீர்க்கமாக சொன்னவேளையில் என்று அனைத்து நேரங்களிலும் அந்தக்கரமிருந்தது. பெரும்பாலும் தூலமாக சிலபோது சூட்சுமமாக.

மண்டபத்தில் கூட்டம் குறைந்திருந்தது.உணவிற்காக கைகழுவிவிட்டு வந்த சுரபி ,மாமாவின் கரங்களைப்பற்றி “சாப்டீங்களா?”என்றாள்.  “இல்லம்மா…கைகழுவிட்டு வர்றேன்,”என்றவரின் கரங்களின் வயோதிக நடுக்கத்தை தன் கையில் உணர்ந்தாள்.

உணவுண்ண அமர்ந்ததும் பக்கத்திலிருந்த மோனிகா, “ சித்தி சாப்பிட கைகழுவிட்டா எதையும் தொடக்கூடாது,”என்று வாயில் கை வைத்து சிரித்தாள்.

“இல்ல…இப்பவிட்டா சான்ஸ் கிடைக்காம போயிட்டா,”என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள்.

உள்ளங்கைகளை நீட்டிப் பார்த்தாள் சுரபி…பால்யத்தின் செப்புமுகங்கள்,பள்ளிநாட்களின் எண்ணெய் படர்ந்து ஔிரும் முகங்கள்,கல்லூரிநாட்களின் இனியமுகங்கள். எத்தனைக்கரங்கள்….மெல்லிய, குளிர்ந்த ,வெதுவெதுப்பான ,சொரசொரப்பான ,வலிமையான ,தொடுகையேதெரியாத கரங்கள் என எத்தனை.

கரங்களைப்பற்றுகையில் புன்னகை, விதிர்ப்பு, சுள்ளென்று வியப்பு, கனிவு ,ஆர்வம், வசதி, ஆசுவாசம், நடுக்கம், விடுவிக்ககாத்திருக்கும்நெருடல், அடுத்தமுறை பிடிக்கலாகாது என மனம் நினைக்கும் சில…எத்தனை…ஒருவழியாக பழகிவிட்டது.

மோனி தன்னைவிட உயரமான மேசைக்காக எம்பி கைகளை ஆட்டிக்கொண்டிருந்தாள்.அவளின் மெல்லிய இடதுகரத்தைப் பிடித்து அருகிலிருந்த பிடிமானத்தில் வைத்தாள்.ஏதோ பூனையின் முதுகைத் தடவியது போலிருந்தது.

மண்டபத்திலிருந்து வெளியேறி தெப்பகுளத்தைச் சுற்றிநடக்கையில் ஓடிவந்து கையைபிடித்து நடந்த மோனிகா, “ அவன்சொல்றான்….இங்க பத்துகேணியிருக்குன்னு…குளத்துக்குள்ள கேணியாம்….”என்று சிரித்தாள்.

இருகேணிகள் அவன்கணக்கில் சேரவில்லை என்று நினைத்தபடி சுரபி, “கேணி இருக்கே,”என்று சொன்னாள்.

உலர்ந்து ஏடுவிரிந்த குளத்தைக்காட்டி, “ தண்ணிகூட உள்ள இருக்கும்.ஊத்துப்பாத்து வெட்டியிருப்பாங்க,”என்றார் ராசுபெரியப்பா.

“சரி…மழைபெய்யும்போதுதெரியுமா?”என்றாள் மோனி.

“அப்ப முழுகிடும் தெரியாது…”

“அப்ப அது பொய்…”

“இப்பபோய் பக்கத்திலநின்னு எட்டிபாத்தா தெரியுமே…வரியா?” என்றாள் சுரபி.

மோனி,“தண்ணியில்லாதப்ப தெரியுமா?” என்று கேட்டுவிட்டு,அவ்வளவுதூரம் நடக்கனுமா?”என்றாள்.

இங்கு வந்ததிலிருந்து மோனி குளத்திலிருக்கும் கேணிகளையே கேட்டுக் கொண்டிப்பதை உணர்ந்த சுரபி,“பாக்கனுன்னா போகத்தான் வேணும்.பாக்கனுன்னு ஆசையா இருந்தா என்கைய பிடிச்சுக்கிட்டே நீ வந்தா பாத்துட்டு வரலாம்,”என்றாள்.மோனி சிரித்துக் கொண்டே தலையசைத்தாள்.

“இதென்ன ஒருபைசாக்கு பொறாத வேல…பஸ்ஸ பாத்து போகாம.அதா பஸ் வந்திடுச்சு”என்ற குரலால் தயங்கி பேருந்திற்கு விரைந்தார்கள்.

பேருந்தில் படிவரை ஆட்கள் நின்றிருந்தார்கள். “அடுத்த பஸ்ஸில போகலாம்,”என்ற சுரபியை பொருட்படுத்தாமல்அனைவரும் ஏறத்தொடங்கியிருந்தார்கள்.மோனி ஒரேஓட்டமாக சந்தில் புகுந்துவிட்டாள்.

பேருந்து நகரத்தொடங்குகையில் சுரபி இரண்டாவது படியில் நின்றிருந்தாள். “உள்ள வாம்மா…படியில நிக்காத,”என்ற நடத்துநரின் குரல் மேலும் கோபத்தைத் தூண்டியது.வழிவிடக்கூட இடமில்லை.உள்ளே நடத்துநர், “நெருங்கி நில்லுங்கம்மா படியில ஆளுக நிக்கறாங்க,”என்றார்.

“அடுத்த வண்டியில ஏறவேண்டியதுதானே,”என்ற குரல் கேட்டது.

“அவங்க ஊருவண்டிக்கு இன்னும் ஒருமணியாவும்,”யாரோ தெரிந்தவராக யிருப்பார்.

சிவன் கோவில் முடக்கு வரப்போகிறது.சுரபிக்கு அடிவயிற்றில் கலக்கம்.சரியான சாய்வான முடக்கு,முன்னால் வேகத்தடை வேறு.அவளால் ஒன்றுமே செய்யமுடியவில்லை.அவளுக்கு வியர்வையால் கைபிடிமானம்  குறைவது நன்றாகத் தெரிந்தது.உடலை முன்னால் உந்தி பின்னால் சாயாமலிருக்க முயன்று பயனில்லை.பேருந்து முடக்கில் சாய்ந்து ஊர்கையில் அவளின் கைப்பிடி தளர்ந்தது.அவ்வளவுதான் என்று நினைத்தநொடியில் முதுகில் பலமாக ஒருகை உந்தி மேலே அவளைத் தள்ளியது.

“வழி விடுங்க,”என்ற பலமான குரல்.

அந்தக் கையின் விசையில் உள்ளே வந்துவிட்டிருந்தாள்.மாயகணம்.இன்னும் அவளுக்கு கால்கள் நடுங்கிக் கொண்டிருந்தன.வியர்த்து வழிந்தது.திரும்பிப் பார்த்தாள்.யாரென்று தெரியவில்லை.பக்கத்திலருந்த ஒருஅக்கா, “பயந்துட்டியா?” என்று கம்பியைப்பிடித்திருந்த அவளின் கையைப்பிடித்தாள்.மங்கலான கண்களை சிமிட்டியபடி சுரபி  தலையாட்டினாள்.ஜன்னல்வழி வந்த காற்று தொட்டு கடந்து சென்றது.சுரபிமுதுகில் அந்தத் தொடுகை இன்னும் எஞ்சியிருந்தது.மனம் கைகளிடம் இதற்குதான் மனிதர்களின் கரங்கள் சொல்வதையெல்லாம் நான் கேட்பதில்லையாக்கும் என்றது.



Comments

Popular posts from this blog

பசியற்ற வேட்டை

பெண் கல்வி,விடுதலை மற்றும் தன்னறம்

எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் நேர்காணல்