Skip to main content

ஒரு பந்தலின் கீழ்: சிறுகதை

 2019 பிப்ரவரி சொல்வனம் இதழில் வெளியான சிறுகதை

ஒரு பந்தலின் கீழ்

கோடையின் ஈரம் கழுத்திலும் நெற்றியிலும் தன்இருப்பை உணர்த்த, பால்காரரின் ஷாரன் ஒலி கேட்டு கோகிலா பாயிலிருந்து கண்விழித்தாள்.மெல்லிய ஔி எழுந்திருந்த வானம் ஒருசித்திரம் என கண்முன்னே விரிந்தது.மொட்டைமாடியில் மென்மையான தண்மையைத் தவிர காற்றில்லை.வீடுகளை அடுத்த வயல்களில் தென்னைமரங்கள் மட்டும் வானத்தை நோக்கி பூமி நீட்டிய காம்புநீண்ட ஒற்றை பூவென ஆங்காங்கே நின்றிருந்தன.அதற்குள் ஔி மேலும் தெளிந்திருந்தது.

தெருவின் தெற்குமுனையிலிருந்து ஒருசிறு பெண் அவளின் அம்மாவை ஒத்தவருடன் தோளுரச நடந்து வந்துகொண்டிருந்தாள்.வயது பதினைந்திற்குள் இருக்கலாம்.யார்? யார்? என்று மனம் தேடியலைந்தது.ராசுதாத்தாவின் வீட்டைத் தாண்டி வந்துகொண்டிருந்தாள்.

அமுதா ...என்று இதயத்தினுள் படபடக்க கைப்பிடி சுவர் அருகே நின்று தன்வீட்டின் முன் நடந்துசெல்லும் அவளைப் பார்த்தாள்.இவ்வளவுபக்கத்தில் அவள் யாரோ என்றிருந்தாள்.மீண்டும் கண்ணெட்டும் தொலைவில் அமுதாவானாள்.பால்யத்தின் கோடைவிடுமுறை நாட்களில் மனதிற்குள் புதைந்த அவள், கண்முன்னே சாயலாக தெரியும் இந்நேரம் , கண்ணாமூச்சி விளையாட்டில் ஔிந்துகொண்டவள் தன்பின்னாலிருந்து  எட்டிப்பார்த்ததைப் போல கோகிலா விதிர்த்து நின்றாள்.

வகுப்பறையில் அமர்ந்திருந்த பெஞ்சிலிருந்து பார்க்க அவசரஅவசரமாக வகுப்பிற்குள் நுழையும் அமுதா,  அழுந்தியகுரல் அமுதா,நீண்ட இரட்டை சடை அமுதா என மனதிற்குள்  வேறுவேறாக எழுந்து ஒன்றாகி நின்றாள்.இத்தனை ஆண்டுகளாக மனதினுள் எங்கிருந்தாள்!

அந்தவயதில் சாவுஎன்பதன் வழிகள்,பொருள் தெரியவில்லை.அதான் பரீட்சை முடிந்து பத்துநாளுக்கு முன்னால் சர்பத் குடுத்து பாட்டுப்பாடி  பிரிவுவிழா நடந்து முடிஞ்சாச்சே என்பதால் அதன்பின் தெருப்பிள்ளைகள் தவிர மற்றவர்கள் தொலைவாகிப் போனார்கள்.பதின்மூன்று வயதில் தற்கொலை செய்துகொள்ள தோன்றுமா? தெரியுமா? என்று இன்று கோகிலாவிற்குள் கேள்வி எழுந்தது.

 பாயை சுருட்டிக்கொண்டிருக்கும் போது கிழக்கே பச்சைமலை குன்றுகளின் உச்சியில் இளம்சிவப்பில் சூரியன் ஒரு ஔிரும்வட்டமணியென பிரிந்து எழுந்தான்.மலையிலிருந்து உதித்தவன் மலையன் என்று நினைத்தபடி கண்களை சுருக்கினாள்.

நேற்று உடல்நிலை மோசமாகி சாவுகிடப்பில் விழுந்த பெத்தாஅவ்வாவை பார்க்க சென்ற பொழுது ,கோகிலாவுக்கு அந்தமுச்சந்தியை அடுத்த அமுதாவின் வீடு நினைவிற்கு வந்தது.அப்போதிருந்துதான் அமுதா மனதிற்குள் எழுந்திருக்கிறாள் என்ற எண்ணியபடி பாயுடன் கீழிறங்கினாள்.இரவு பெரியமாமியாருடன்  இருந்த அவளின்அம்மா தெருவில் லட்சுமிஅம்மாவுடன் பேசிக்கொண்டிருந்தாள்.

வாசல்தெளிக்க தண்ணீர் எடுத்துவைத்து, நைட்டியை காணுக்காலில் சுருட்டிபிடித்து கொண்டு சாணியை எடுத்த கோகிலாவிடம், “ராத்திரியே அவ்வா முடிஞ்சிட்டாங்க…வெறும்தண்ணிய தெளிச்சுவிடு...கோலம் போடாத..புத்தகத்த எல்லாம் எடுத்து ஓரஒதுங்க வையி..ராத்தங்கறவங்க இங்க வருவாங்க,”என்றபடி வீட்டினுள் சென்றாள்.

தண்ணீர் தெளிக்கும்போது, “இனிமே எந்திரிக்கனுன்னு ஆசப்படுற வயசில்ல…”என்று நினைத்த கோகிலா  உள்ளேசென்று  பீரோவில் தேடித்தேடி பழைய பச்சைசுடிதார் ஒன்றை எடுத்து உடுத்திக்கொண்டு  தெருவில் இறங்கி நடந்தாள்.



பந்தல் போட்டுக்கொண்டிருந்தார்கள்.தாழ இருந்த மூங்கில், கீற்றுகளின் அடியில் குனிந்து சென்ற அவளிடம், “பெரியவரு மவதானே பாப்பா…பிள்ளங்கள விட பேரப்பிள்ளங்க கண்ணுதண்ணிக்கு தானே பெரியகட்டைங்க ஏங்கிக்கெடக்கும்,” என்ற வெள்ளைதலைப்பாக்காரர் ,காய்ந்ததென்னங்கீற்றை தூக்கி உயரே வீசினார்.கரியஉடலில் அந்தகாலையில் வியர்வை வழிய, எண்ணெய்தடவிய உளுந்தின் மினுமினுப்புடன், வயதிற்கு மீறிய சுறுசுறுப்புடன் தாவிக்கொண்டிருந்தார்.

பறையை திண்ணையின் ஒருபுறம் வைத்துவிட்டு விறகில் தீப்பற்ற வைத்து கொண்டிருந்த வேலு, கோகிலாவைப்பார்த்ததும் பீடியைஅணைத்து காதில் செருகிவிட்டு நின்றான்.

கண்களை உள்ளே சாடை காட்டியபடி, “யாரு..?”என்றான்.

“அப்பாயிக்கு மூத்தவங்க..”

“போய்ப்பாரு…”என்று சொல்லிவிட்டு வீட்டிற்கு பின்னால் சென்றான்.

 குளிக்கவைக்கப்பட்டு புதுசேலையில் பொதிந்துவைக்கப்பட்ட தேகத்தைப் பார்த்தாள்.கைப்பிடி தசையில்லாது சுக்கான செப்புஉடல்.

நடையிலும் தாழ்வாரத்திலும் ஆட்கள் நின்றிருந்தார்கள்.அங்கிருந்த பக்கத்துவீட்டம்மா, “ஒரு மவளைப்பெத்திருந்தா இன்னேரம் ஒத்தசத்தமாச்சும் கேட்டிருக்கும்…அழுவக்கூட ஆளில்லாம போயிட்டியே,”என்றது. 

எதிர்வீட்டம்மா,“தொண்ணூறு வயசுக்கு மூணுதலமுற பாத்து அனுப்பின கட்ட..வடக்கிக்காட்டுல சேத்தாப்போதும்..சும்மா கெட...மவனெல்லாம் சக்கர, ரத்தக்கொதிப்புல தடுமாறிக்கெடக்குறானுங்க,”என்றாள்.

கோகிலா உள்முற்றத்தில் விழுந்த பதவெயிலில் நின்று பார்த்துக்கொண்டிருந்தாள்.செப்புஉடல் என்பது மட்டும் மனதில் நெளிய, அமுதாவுக்கும் செப்புஉடல்தான் என்று நினைத்ததும் கண்களை கண்ணீர் மறைத்தது.துப்பட்டாவை எடுத்து துடைத்துக்கொண்டாள்.

அவளையே தலையிலிருந்து கால்வரை  பார்த்துக்கொண்டிருந்த நெலாப்பொட்டுக்காரம்மா, “இந்தகாலத்துப்பிள்ளைகளுக்கு பதச்சி அழுவக்கூட சத்தில்ல...வூட்டுக்கு போயிட்டு வயித்து போட்டுட்டு ஏறுபொழுதில வா கோகி..”என்றதும், இவள் தலையாட்டிவிட்டு முற்றத்திலிருந்து, தாழ்வாரத்தில் கிடத்தப்பட்டிருந்த அவ்வாவைப் பார்த்தபடி வெளியே வந்தாள்.மேற்கே திரும்பிப்பார்த்தாள்.குனிந்தபடி தெருவிலிறங்கி கிழக்கு பார்த்துநடந்தாள்.

எட்டாம்வகுப்பிலேயே அமுதாவுக்கு வீட்டுவேலைகள் எல்லாம் தெரியும்.கைவேலை வகுப்பில் வாத்தியார் வராததால் பயல்கள் பின்புறம் ஓடிய வாய்காலில் நீரெடுத்து மரங்களுக்கு ஊற்றிக்கொண்டிருந்தார்கள்.பிள்ளைகள் அங்கங்கே உட்கார்ந்து பாண்டி விளையாடிக்கொண்டிருந்தார்கள்.


அமுதா கோகிலாவிடம், “ பூக்கட்டத்தெரியுமா? என்றாள்.தெரியாது என்றவளிடம் , “இலயப்பாறிச்சுட்டு வா,”என்றாள்.தன் பையிலிருந்த நூலைஎடுத்து அந்த இலையை வைத்து கட்டிகாண்பித்து இவளிடம் தந்து கட்டச்சொன்னாள்.வேலு பக்கத்தில் அமர்ந்து, “எனக்கும் சொல்லித்தா..”என்றான்.

இன்னொருநாள் சிலேட்டில் கோலம் வரையச் சொல்லித்தந்தாள்.தினமும் முந்தினநாள் பழகிய கோலத்தை வரையச்சொல்வாள் .அப்படியே பிள்ளைகள் பூக்கட்டுவதற்கு,கோலம் போட என்று சேர்ந்துகொண்டார்கள்.பையன்களில் சிலரும்.

“கூடிக்கூடி கோலம்போடவும் ,பூக்கட்டவும் இந்தப்பிள்ளைங்கள பாருங்க சார்..அமுதா தான் டீச்சரம்மா,”என்று சிரித்த தமிழய்யாவிடம்,ஜெயராஜ் வாத்தியார், “பதிமூணு வயசாகுதுல்ல கத்துக்கட்டும் சார்,”என்றபடி அமுதாவைப் பார்த்துப் பெருமூச்சுவிட்டார்.

அவர் வரலாறுபாடம் நடத்தும் போது பெண்களின் திருமணவயது பதினெட்டு என்ற குண்டை வகுப்பறையில் போட்டுவிட்டு சென்றார்.மெதுவாக கோகிலா அமுதாவிடம் , “அய்யய்யோ இன்னும் ஐஞ்சுவருஷம் தான் பாக்கியிருக்கு…”என்றாள்.அமுதா, “அதுக்கு மொதல்ல வயசுக்கு வரனும்புள்ள…”என்றாள்.

“அய்யே..எனக்கு அத நெனச்சவ பயம்மா இருக்கு.இந்த தாவணியெல்லாம் கட்டனுன்னாலே கருமம்..எங்கஅவ்வா வேற கையில குச்சிய வச்சிக்கிட்டு, காலங்காத்தால எந்திருச்சு வாய்கழுவுனதும் என்னிய ஒருசொம்பு நீராகாரத்தண்ணியக்குடிக்க வச்சுட்டுதான் மாடு ஓட்டிட்டு போவுது ,”என்றாள்.

“ஏனாம்..”

“வெறும்வயத்துல வயசுக்கு வரக்கூடாதாம்…ஒங்கவீட்ல குடுக்கமாட்டாங்களா..” அமுதா இல்லையென்று தலையாட்டினாள்.

“ஜாலி..உங்கவீட்ல பெறந்திருக்கலாம்,”

மாலையிட்டு தாவணிகட்டி சடையில்பூசுற்றிய அக்காக்கள் அவளின் நினைவில் வந்தார்கள்.புதுச்சேலைக்கட்டி அழுதபடி பெரியமீசை மாமாவுடன் முந்தாநாள் சென்ற தனம்அக்கா நினைவில் வந்ததும் அவளுக்கு கண்ணீர் வந்துவிடும் போலிருந்தது.

“கோகிலாவுக்கு என்னாச்சு?”என்ற தமிழய்யாவின் குரலால் கலைந்தவள் திருதிருவென்று விழிக்கவும் வகுப்பில் அனைவரும் சிரித்தார்கள். பாஸ்கர்,“அந்தப்புள்ள தூங்கிருச்சுங்கய்யா… “என்றபடி குச்சிய எடுத்து அவரிடம் நீட்டினான்.

“நீ சும்மா இருடா..அதுக்கிட்ட கேட்கறனில்ல..”என்றவர் அவன் தலையில் ஒன்று போட்டார்.

கண்களை மழங்கமழங்க விழித்தபடி ஊதாப்பாவாடையை கசக்கி இறுக்கிப்பிடித்துக்கொண்டு  நின்று, “அய்யா…”என்று வெறும் தொண்டையை விழுங்கினாள்.

அவள் நின்றிருந்த வரிசைக்கு அருகில் வந்தவர் உடலைவளைத்து எட்டிநின்று, “ஏம்மா..ஒடம்புக்கு என்ன?” என்று நெற்றியில் கைவைத்து பார்த்துவிட்டு பின்னால் நகர்ந்தார். 

அவள் திடத்தை வரவழைத்துக்கொண்ட குரலுடன் படபடவென்று,“அய்யா…பதினெட்டு வயசானா கல்யாணம் பண்ணியே ஆகனுமா?”என்றதும் பயல்கள் சத்தமாக சிரித்தார்கள்.பிள்ளைகள் குனிந்தபடி சிரிக்க டீ.வி.சுதா, “அய்யய்யோ..நல்லா அடிவாங்கப்போவுது..”என்றாள்.

அய்யா தொண்டையை செருமியபடி, “இன்னிக்கி டீ.வி யில மதியானம் படம் போடலியா.. பள்ளிக்கூடத்த எட்டிபாத்திருக்கியே..”என்று அவளை குச்சியால் ஒரு தட்டுதட்டிவிட்டு, “குடிக்க தண்ணி எடுத்துட்டு வாடா பாஸ்கர்..”என்று திரும்பி , “யாரு சொன்னா..”என்று கோகிலாவை அருகில் அழைத்துக் கொண்டு நாற்காலியில் அமர்ந்தார்.

“ஜெயராஜ் சார்…குடிமியல் பாடத்தில இருக்குங்கய்யா..”

“ம்..பதினெட்டுலயே பண்ணிக்கனுன்னு இல்ல.அது மேல பண்ணிக்கலாம்…எடத்துக்கு ஓடு..”என்று தலையில் தட்டினார்.

“இல்லங்கய்யா…கல்யாணம் பண்ணியே ஆவனுமா..”என்றாள்.

தமிழய்யா எம்பி அவளின் குட்டிஜடையை பிடித்து ஆட்டியபடி,“பிச்சுப்புட்டேங்கழுத..வரவர ஒனக்கு வாய்நீளுது..”என்னும்போதே, “அய்யா…அய்யா...விடுங்கய்யா…இனிமே கேக்க மாட்டேங்கய்யா ,”என்றபடிஓடிவந்து இடத்தில் அமர்ந்துகொண்டாள்.

பள்ளிமுடிந்து வீடுதிரும்பும் வழியில் அமுதா இவளிடம்,

 “கல்யாணம் பண்ணிக்கிட்டா நல்லதுதானே...நமக்குன்னு ஒருவீடு இருக்கும்,”என்றாள்.

“இப்ப இருக்கறது உங்க வீடுதானே..வாடவ வீடா,”

“அது எங்கசித்தியோட வீடு..ஏய் இன்னிக்கி எங்கவீட்டுக்கு வரியா…உங்க பெரியதாத்தா வீட்டோட உங்கவீட்டுக்கு போயிரலாம்...”

“ம்..அதுக்கும் முன்னாடி பாஸ்கர் பயல ஒருஅடி வச்சிறனும்,”என்றபடி முன்னால் ஓடினாள்.

இருவரும் தகரம் வேய்ந்த தாழ்வாரத்தில் நுழைந்தனர்.அமுதா தாழ்வாரத்தின் வலதுஓரத்து திண்ணையில் பையை வைத்து, இவளையும் வைக்கச்சொன்னாள்.முன்னால் பெரியவாசலை அடுத்து ஓட்டுவீடு.ஓட்டுக்கூரையில் அவரைக்கொடி ஏறியிருந்தது.வாசலின் இடதுபுறம் கல்குந்தானியில் நீர் நிறைந்திருந்தது.

அமுதா பாவாடையை சுருட்டி அமர்ந்து கீழே கிடந்த சட்டிப்பானைகளை  சாம்பல்வைத்து தேங்காய் நாரால் தேய்க்கத்தொடங்கினாள்.பக்கத்தில் அமர்ந்த கோகிலா அவற்றை கழுவினாள்.

பாவாடையில் கையைத்துடைத்தபடி எழும்பொழுது , “இது யாரு…”என்றபடி ஒருஅம்மா வந்தாள்.

“எங்கூட்டாளி சித்தி…”என்ற அமுதாவைப் பார்த்தபடி அவள் வீட்டினுள்  சென்றாள்.அமுதா கோகிலாவின் தோளில் கைப்போட்டுக்கொண்டாள்.இருவரும் திண்ணையில் அமர்ந்தார்கள்.சித்தி அழைக்க அமுதா ஓட்டுவீட்டிற்குள் சென்று ஒருதட்டில் சோறும் குழம்புமாக வந்தாள்.இருவரும் சிரித்தபடி எதிரே அமர்ந்து சாப்பிட்டார்கள்.

“இங்கதான் உக்காந்து வீட்டுப்பாடம் எழுதுவேன்,”

தட்டக்கழுவி கவிழ்த்துவிட்டு திண்ணையில் அமர்ந்து காலாட்டியபடி இருவரும் வீதியை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

அமுதா, “நீ வீட்டுக்குப்போறியா..”என்றாள்.

“ம்…”என்றெழுந்த கோகிலாவின் கையைப்பிடித்தபடி முடக்குவரை வந்த அமுதா காட்டிய இடத்திலிருந்து, கோகிலாவின் வீட்டிற்கு வழி தெரிந்தது.முடக்குதாண்டும் வரை தன்னைப் பார்த்துக்கொண்டிருந்த அமுதாவின் முகம், கோகிலாவின் மனதில் இன்று எழுந்து பார்த்துக்கொண்டிருந்தது.

கோகிலா தட்டிலிருந்த காகிதக்கோப்பை தேநீரை பந்தலின் கீழிருந்தவர்களுக்கு கொடுத்தாள்.குளுசநேரம் என்பதால் ஆட்கள் வரவில்லை.வந்தவர்களும் கிளம்பியிருந்தார்கள்.பறைகளை ஓரமாக வைத்து திண்ணைக்கு கீழே அமர்ந்தவர்களுக்கு தேநீரை நீட்டினாள்.தானும் ஒருகோப்பையை எடுத்துக்கொண்டு திண்ணைக்கு கீழிருந்த வாசல்படியில் அமர்ந்தாள். 

வேலுவிடம், “என்ன..நெறய வெத்தலப்பாக்கு போடறியா..”என்றாள்.

ஒன்றும் சொல்லாமல் குனிந்துகொண்டான்.

“அப்பா ரொம்ப தளந்துட்டாரே…”

“ம்..”

“இவனுக்கே ஒருபிள்ள பெறந்திடுச்சு..இன்னும் போக்கத்தவனாவே இருக்கான்,”என்று குத்துக்காலில் வேட்டியை சுருட்டி அமர்ந்திருந்த வேலின் அப்பா எங்கோபார்த்துக்கொண்டு சொன்னார்.

“வேலு கூட படிச்சியோ,”என்ற சின்னய்யா, அவள் தலையாட்டுவதை பார்த்தபடி உள்ளே சென்றார்.

அருகில் இருந்த சின்னய்யனிடம்,“சின்னபிள்ளயில வேலுக்கூட வூட்டுக்கு வரும்..எப்பப்பாத்தாலும் நெலக்குச்சியில இடிச்சுக்கும்..வேலுதான் குனிகுனின்னு தலயபிடிச்சு அமுக்குவான்,”என்று வேலுவின் அப்பா புன்னகைத்தார்.

“ஒடம்புக்கு ஏதாச்சுன்னா கள்ளுகட மொடக்குல புதுசா வந்திருக்கற ஹாஸ்பிட்டலுக்கு போலாம்ப்பா,”என்றாள்.

“அங்கதான்சாமி போறேன்..”

“நேரத்துக்கு வயித்துக்கு போடனும்…முடியலன்னா  அலயாதீங்க..”

“அலஞ்சுஆவனுமே..”என்று சலித்தபடி எழுந்து சென்றார்.

கோகிலா வேலுவை முறைத்தாள்.

அவன் மெதுவான குரலில், “உன்னமாறி சொகவாசியா…அங்க சுடுகாட்லவந்து ஒக்காந்து பாரு தெரியும்…”என்றவன், “அய்யோ…வாய்தவறுது..மவராசியா ஆயுசோட இரு.நம்ம விமலா போனவருஷம் செத்துபோனுச்சே..என்னால எரியறதபாத்துக்கிட்டு ஒக்கார முடியல.எளந்தேகம் குப்புற போட்டு எரிச்சம்..என்னடா பொழப்புன்னு இருந்துச்சு..”என்றான்.

“சொகவாசின்னு யாருமில்ல…”என்றபடி எழுந்து கீழேகிடந்த காகித கோப்பைகளை பொருக்கினாள்.

சடங்குகள் முடிந்து ரதத்தில் அவளின் அவ்வாவை ஏற்றி ஆண்கள் முன் செல்ல பின்னால் பெண்கள் நடந்தார்கள்.அனைவரும் நடந்து முச்சந்தியில் நின்றார்கள். 

“இந்தா..”என்று பொறியை நீட்டிய வேலுவை, சித்தி பார்த்தபார்வையில் அவன், “அங்க போடுங்க…”என்றான்.இவள் புரியாமல் பார்க்க அவன்மெதுவாக, “அங்க போடு..”என்றபடி அனைவருக்கும் கொடுத்துமுடித்தப்பின் இவளருகில் வந்து நின்றான்.முன்னால் பாதையை கட்டும் சடங்குகள் நடந்துகொண்டிருந்தன.

“இதெல்லாம் செஞ்சு பழகிக்கலாமில்ல..”

“ஊருக்குள்ள நாந்தான் செய்யறது…ஒங்கப்பழக்கம் கொஞ்சம் மாறினது.எப்பவாச்சும் செய்யறதால தவறுமோன்னு தயக்கம்..அப்பாவுக்கு நல்லா தெரியும்…”

“ம்….அதுதான் அமுதா வீடு,”என்றாள்.

அவன் புரியாமல் நெற்றியை சுருக்கினான். “நம்ம கூட படிச்சுது..ரெண்டாவது பெஞ்சில..”என்றவளை மறித்து, “ஆமா… நம்ம ஸெட்டுல முதல்ல போனது….ஒவ்வொரு எழவு விழறப்பவும் நம்ம பிள்ளங்க.. பசங்க யாரையாச்சும் நாந்தான் பாத்துட்டே இருக்கேன்…நம்மபிள்ளங்க ரெண்டு மூண நானே நின்னு எரிச்சப்ப ஒருவாரமா சரிவர தூக்கமே இல்ல.அப்பா சொல்லும் வயசுதாண்டுனா மனசுக்கு சலிச்சு போயிரும்ன்னு..”என்றபடி நகர்ந்தான்.

 பார்த்துக்கொண்டேயிருந்த சித்தியை நேராகப் பார்த்து, “ஃப்ரண்டு சித்தி..”என்றாள். “தைரியம் பிடிச்சக்கழுத…”என்ற சித்தி திட்டுகிறாளா? கொஞ்சுகிறாளா? என்றறிய அவள் முகத்தைபார்க்க எத்தனித்த கோகிலாவை கும்பல் ஓரமாகத் தள்ளியது. 

அவள் ரதம் நகர்வதைப்பார்த்தபடி நின்றாள்.ரதம் நகர்ந்ததும்  தெருவில் வண்ணாரப்பிள்ளை வெள்ளைவேட்டியை பாதையில் விரித்து, “வுளுந்து கும்பிட்டுட்டு வூட்டுக்கு போலாம்…மச மசன்னு நிக்காம..” என்றாள்.உறவுக்கார பொம்பிளையாட்கள் முட்டிமடக்கி விழுந்து கும்பிட்டு அவரவர்  எழுந்து திரும்பிப்பார்க்காமல்  சென்றார்கள்.

கோகிலா விழுந்து எழுந்த போது ரதம் கண்ணிலிருந்து மறைவதைக்கண்டு இனிமே பாக்க முடியாது என்று நினைத்ததும் என்னவென்று அறியாத ஒரு ஏக்கத்தைஉணர்ந்து மேற்கே திரும்பினாள்.அமுதாவின் வீடு இருந்த இடத்தில் புதிய வீடு இருந்தது.மனம் சலிக்க திரும்பியவளின் கையை பற்றிய அந்த அம்மாள், “நீ அமுதா கூட்டாளி தானே..”என்றாள்.நரையோடிய தலையும் முதுமை படர்ந்துகொண்டிருந்த உடலுமாக இருந்தாலும்,அவள் மனம் அமுதாவின் சித்தியை கண்டுகொண்டதும் தலையை ஆட்டினாள்.

அந்தஅம்மா இவளின் கன்னங்களையும், கையையும், முதுகையும் தடவிக்கொண்டேயிருந்தாள்.

“இப்பதான் எழவுவீட்லருந்து வர்றேன்..உன்னயப்பாக்கலயே..”

“உள்ள இருந்தேம்மா..” என்றவளின் கன்னங்களை  அந்தஅம்மாள் மீண்டும் ஒருமுறை தடவி, “திரும்பிப்பாக்காம போ..”என்றாள்.

திரும்பி நடந்த கோகிலா அங்கிருந்த அடிகுழாயை சின்னபையன் அடித்துக்கொடுக்க முகத்தைக்கழுவினாள்.தண்ணீரை இருகைகளிலும் ஏந்திக் குடிக்கும் போது புரையேறி இருமலாக வந்தது.கண்ணீர் வழிய இருமியவளின் தலையில் தட்டிய அவளின் அத்தை, “கைய எறக்கிக்குடி.. செங்குத்தா தொண்டையில எறக்குனா…”என்றாள்.

துப்பட்டாவால் முகத்தைத்துடைத்த கோகிலா ,அமுதா வழி சொல்லிய தெருவில் நடந்தாள்.



Comments

Popular posts from this blog

அகத்தின் ஆரக்கால்கள்

 [ எழுத்தாளர் மயிலன் ஜி.சின்னப்பனின் முப்போகம் [குறுநாவல்], நூறு ரூபிள்கள் மற்றும் சிருங்காரம் சிறுகதை தொகுப்புகளை முன்வைத்து...] எழுத்தாளர் மயிலன் தண்டவாளத்தின் இருபக்க தண்டுகள் அதை இணைக்கும் குறுக்குப்பட்டைகள், ஜல்லிக்கற்கள் என்று அனைத்தும் சரியாயிருக்க ஓடும் ரயிலில் எங்கோ ஒரு சின்னஞ்சிறு விலகல் அனைத்தையும் குழப்பி தடம் புறளச்செய்கின்றது. புரண்டு கிடக்கும் ரயில் அந்த சின்னஞ்சிறு விலகலின் உண்மையான ரூபம். மறுபடி சரி செய்யப்பட்டு ஓடும் ரயில் பின் எங்கோ அதே போல தக்கி நிற்கும். அதை போன்ற ஒரு உணர்வு சித்திரத்தை மயிலனின் கதைகளை தொகுப்பாக வாசிக்கும் போது உண்டாகிறது. மனதின் அகஅடுக்குகளை கீறிப்பார்க்கும் சவரக்கத்தி என்றும் இவரின் எழுத்துகளை சொல்லலாம். அதில் ஒரு அடுக்கு காயத்தால் அழுகி புறையோடி சீல் கொள்கிறது. அது மற்ற அடுக்குகள் மீது கொள்ளும் செல்வாக்கின் கதைகள் இவை. அந்த வலி நிறைந்த அழுகிய அடுக்கை உருவாக்கும் விசைகளை நோக்கி செல்லும் கதைகள் இவை. மனித இயல்புகள் அல்லது  இயல்புகளை பாதிக்கும் சூழல்கள் என்று இவை இரண்டும் ,அந்த சவரக்கத்தியை தீட்டும் மணலின் நெறுநெறுப்பாகவும் தீட்டிய கத்தியை ...

கர்ணனின் கவசகுண்டலங்கள்

இந்த ஆண்டு நித்யவனத்தில் நடத்தப்படும் முழுமைஅறிவு [Unified wisdom] வகுப்புகளில் மரபிலக்கிய வகுப்பிற்கு செல்ல வேண்டுமென்று தோன்றிக்கொண்டிருந்தது. மரபின் மைந்தன் முத்தய்யா அவர்கள் நடத்தும் மரபிலக்கிய அறிவிப்பு வந்ததும்  வழக்கம் போல நிறைய யோசனைகள். பொங்கல் விடுமுறை நாட்களில் வருகிறது என்பது வேறு. இருந்தாலும் செல்ல வேண்டும் என்று ஒரு பிடிவாதம். பதினாறாம் தேதி ரம்யா மனோகருடன் ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்திலிருந்து வெள்ளிமலை சென்றேன். சாயுங்காலம் ஐந்து மணி்க்கெல்லாம் மலையேறிவிட்டோம். அங்கு ஈரோடு கிருஷ்ணன் அவர்களை முதலில் பார்த்தோம். அவருடன் எங்கள் வகுப்பு சகாவான ஆனந்த் குமார் அறிமுகமானார். பின்பு அறைக்கு சென்று வந்து மலைச்சூழலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அங்கிருந்த திறந்தவெளி இருக்கைகளில் ரம்யாவும் நானும் கொஞ்சம் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நல்ல நட்பிற்கான அடித்தளம். மேடம்,கமலதேவி,கமலா...கடந்து...ரம்யாவை அக்காவிற்கு வர வைத்ததும் வேலை முடிந்தது. இனி இயல்பாக எல்லாம் நடக்கும். ரம்யாவின் இனிய முகம் மூன்றாவது நாள் ஈரோடு பேருந்து நிலையத்தில் விடைபெறும் வரை உடன் இருந்தது. அதே ப...

பெருகும் காவிரி

 காவிரியை பார்ப்பது எப்போதுமே எனக்கு பரவசமான பொழுது. பள்ளி வயதில் முசிறி காவிரி. கல்லூரி வயதில் திருச்சி காவிரி. கடைசியாக முசிறிக்கு சென்று நான்கு ஆண்டுகளாகிறது. முசிறியிலிருந்து திருச்சிக்கு செல்லும் பேருந்து வழியில் காவிரி உடன் வரும். கொல்லிமலையில் உருவாகி எங்கள் ஊரில் பாயும் அய்யாறு முசிறி காவிரியில் கலக்கிறது. அண்மையில் எழுத்தாளர் சுரேஸ்குமார இந்திரஜித் கருத்தரங்கிற்காக திருச்சி செல்லும் போது இரண்டுஆண்டுகள் கழித்து  அந்தியில் காவிரியை பார்த்தேன். கொள்ளிடம் பாலத்தில் நல்ல காற்று. கொள்ளிடத்தில் ஓரளவு நீர் இருந்தது. கொள்ளிடம் பாலத்தில் பேருந்து செல்லும் போது வலது பக்கம் மலைக்கோட்டை ,திருவரங்க ராஜகோபுரம் இரண்டும் நீருக்கு அப்பால் இணையாக காட்சிக்கு வரும். அதற்கும் அப்பால் மேற்கு வானில் சரியும் ஆரஞ்சு வண்ண சூரியன்.    மங்கம்மாளை, தாயுமானவரை,ஆண்டாளை,வெள்ளையம்மாளை,ஆண்டாளை போலவே அரங்கனை தேடி வந்த முகலாய இளவரசி சுரதானியை மனம் சென்று தொடுகிறது. அன்னிய படையெடுப்பின் போது கோயில் உற்சவரை காப்பதற்காக கிழக்கு கோபுரத்தில் இருந்து உயிர் விட்டாள் தாசி குலத்து வெள்ளையம்மாள். வெள்ளை ...