Skip to main content

பொன்னியென்றும் காவரியென்றும் சூழ்ந்த மகள்

 காவிரியை முதன்முதலாக பார்த்த அனுபவத்தை நினைத்துப் பார்க்கிறேன். ஏழு வயது. அதிகாலையில் அய்யா தோளில் தட்டி எழுப்புகிறார். நானும் தங்கையும் தம்பியும் ஒரே கட்டிலில் படுத்துறங்குவோம். நல்ல அகலமான பெரிய மெத்தை கட்டில். பக்கத்துஊரில் சொல்லி இலவம்பஞ்சு அடைத்து வாங்கிய முரட்டு மெத்தை. எங்களுடைய வெள்ளை பூனாச்சி எங்களின் கால்களுக்கு கீழே சுருண்டு கிடக்கும் போர்வைக்குள் சுகமாக படுத்திருக்கிறது.

"குட்டித்தம்பியை பார்க்க போகனுல்ல சாமிகளா...எழுந்திருங்க. காவிரி ஆறு காட்றேன்னு சொன்னேல்ல"

என்ற அய்யாவின் குரல் கேட்டதும் துள்ளி எழுகிறேன். திடுக்கிட்டு விழித்த பூனாச்சி மெல்ல நடந்து என்னை உரசிவிட்டு தம்பிக்கு அருகில் படுக்கிறது. அய்யா அதைத்தூக்கி கீழே விடுகிறார்.

அய்யா ஆற்றில் குளித்துவிட்டு வந்திருந்தார். வெள்ளை பனியனும், ஊதாநிற கைலியுடனும் தலைமுடியை தட்டிக்கொள்கிறார். முகத்தில் எப்போதும் உள்ள மலர்ச்சி. அப்போதுதான் ஆற்றில் குளித்துவிட்டு வரும் பவித்ரமான ஒரு அழகு. நினைவில் தங்கியிருக்கும் அய்யா இவர் தான். அறுபத்து மூன்று வயது வரை காலையில் ஆற்றில் குளித்துவிட்டு உற்சாகத்துடன் எங்களை எழுப்பும் அய்யாதான் காலையில் மனதில் பதியும் முதல் பிம்பம்.

நான் கைநீட்டுகிறேன். அவர் தோள் உயரத்தை எட்டிப்பிடிக்க இருக்கும் என்னை சிரித்தபடி மெத்தையில் இருந்து தூக்கி கீழே விடுகிறார். அவரின் கைகளில் தோள்களில் உள்ள மெல்லிய சில்லிப்பை என் உடலில் உணர்கிறேன். அந்த மெல்லிய தண்மையாக தான் அய்யாவை மனதில் இன்றும் உணர்கிறேன். ஒரு மெல்லிய இளம் காற்று போன்ற மனிதர்.

அம்மா புதுச்சேலையுடன் அடுப்பில் பால் ஏற்றிக்கொண்டிருந்தார். எங்களூரில் இருந்து நேராக திருச்சி செல்லும் காலை பேருந்தில் உற்சாகமாக அமர்ந்திருக்கிறோம். கிழக்கே வெளிச்சம் மஞ்சள் பழமாக எழுந்து கொண்டிருக்கிறது. ஊரை அடுத்துள்ள நெல்லங்காடுகளை கடந்து அஹ்கிரகாரத்தின் பாலம் வந்ததும் அய்யா ,"இந்த ஆறு நம்ம ஊர் அய்யாரு..இப்படியே போய் நிறைய ஊர்தாண்டி முசிறிக்கு போகும். முசிறியில காவிரி இருக்கு. அங்க போய் காவிரிஆறோட சேந்திரும்..அந்த காவிரி ஆறை தான் இன்னைக்கு பாக்கப்போறோம்,"என்றார்.

ஜன்னல் அருகே இருந்த நான் திரும்பித்திரும்பி தினமும் பார்க்கும் அய்யாற்றை பார்த்தேன். பெரும்பாலும் தண்ணீர் வற்றாத ஆறு. வயல்களில் இருந்து பேருந்தில் நுழையும் குளிர் காற்றில் உடல் சிலிர்த்துக்கொண்டே இருந்தது. தம்பி முன்இருக்கையில் அம்மா மடியில் உறங்கியிருந்தான். தங்கை எனக்கும் அய்யாவுக்கும் நடுவில் அமர்ந்து முன் இருக்கை கம்பியை பிடித்தபடி அம்மாவை எக்கிஎக்கி பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் யூ.கே. ஜி சேர்ந்து பத்துநாட்கள் இருக்கும். அம்மாவின் சடையை இழுத்து, "ம்மா..ஸ்கூல் போறப்ப இங்க வருவோம்," என்று காட்டினாள். நாங்கள் அஹ்கிரஹாரத்தை அடுத்துள்ள கோட்டப்பாளையம் புனித எட்வர்ட் தொடக்கப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்தோம். பள்ளி கண்ணில்பட்டதும் அவள் பரபரவென்று அம்மாவிடம் கைநீட்டி 'ஸ்கூல்... ஸ்கூல்' என்று சொன்னாள். அம்மா எங்களின் பள்ளிகளுக்கு வந்ததில்லை. அய்யாவும் சின்னய்யாவும்[சித்தப்பா] தான் வருவார்கள்.

அய்யா வழிநெடுக ஒவ்வொரு ஊர் பேரையும்,ஆற்றின் பெயரையும் சொல்லியபடி வந்தார். அவர் எங்களுடன் எப்போதும் சலிக்காமல் பேசிக்கொண்டே இருப்பார்.  எங்களுக்கு ஊரை விட்டு முதல் 'நீண்ட' பயணம். எங்கேயோ போய்க்கொண்டே இருப்பது போல இருந்தது. 

அய்யா என் தோளைத்தட்டி,"கமல் பாப்பா.."என்று என்னை உசுப்பினார்."காவிரி ஆறு வரப்போவுதுப்பா...அங்க பாரு ரங்கனார் கோபுரம்," என்று உற்சாகமாக ஸ்ரீரங்கம் கோபுரத்தைக் காட்டினார். கொஞ்ச நேரத்தில் ஓட்டுனருக்கு எதிரே கண்ணாடியில் மலைக்கோட்டையை காட்டினார். பள்ளிக்கூடத்தில் பாடம் நடத்தும் தொனியில் எப்போதும் சற்று உரக்கத்தான் பேசுவார். அம்மா திரும்பி அய்யாவை முறைத்து, "பஸ்ஸீல எல்லாம் பாதி தூக்கத்துல இருக்காங்க..மெதுவா பேசுங்க," என்றாள். அய்யா கண்டுகொள்ளவில்லை. நான் அய்யாவின் முகத்தையே பார்க்கிறேன். மலர்ந்த விழிகள். சிரித்த முகம். அடர்ந்த தலை கேசம் காற்றில் கலைந்திருந்தது. எப்போதும் உள்ள உற்சாகம்.

"அங்க பாருப்பா.." என்று என்னை திருப்புகிறார். அவ்வளவு பெரிய ஆறு. மணலும் நீரும் நாணலுமாக. கூடவே வந்து கொண்டிருக்கிறது. காலை வெயிலில் ஓடும் நீரில் அத்தனை மினுக்கங்கள். விண்மீன்களை கொட்டி வைத்ததைப்போல. தங்கை என் தோளை பிடித்து கொண்டு இருக்கையில் நின்று ஜன்னலுக்கு வெளியே பார்க்கிறாள். எங்களில் வலதுபுறம் காவிரி நகர்ந்து கொண்டே இருக்கிறாள். 


அன்று ஸ்ரீரங்கத்து மருத்துவமனையில் சின்னய்யாவின் குட்டித்தம்பியை பார்க்கிறோம். ரோஜாவண்ணத்தில் சின்னஞ்சிறு கைகால்கள். அய்யா சிரிப்புடன் சின்னய்யாவிடம் பேசிக்கொண்டிருக்கிறார். வழக்கம் போல சின்னய்யா வாய்த்திறக்காத சிரிப்புடன்  கைகளை கட்டிக்கொண்டு தணிந்த குரலில் அய்யாவிடன், "ஸ்ரீரங்கத்துல பெறந்திருக்கான்..மதுசூதனன்னு பேர் வைக்கலாங்களா," என்று கேட்டுக் கொண்டிருந்தார். அய்யாவை விட பத்தாண்டுகள் இளையவர். அய்யா தலையாட்டி," நல்லபேரு,"என்று சிரித்தார். கொஞ்ச நேரம் சென்று சின்னய்யா தரையில் அமர்ந்து புதுக்குழந்தையை கைகளில் வைத்திருப்பதை பார்த்து கொண்டே இருந்தேன். அவர் என்னையும் அழைத்து மடியில் அமர்த்தி, "இன்னும் கொஞ்ச நாள் கழிச்சி இவனும் நம்ம வீட்டுக்கு வந்துருவான்,"என்றார்.

மறுபடி திரும்பும்போது காவிரி. என்னுடைய மேல்நிலை பள்ளி காலத்தில் முசிறி விடுதியில் இருந்து வாரவாரம் ஞாயிற்று கிழமைகளில் காவிரியில் துணிதுவைக்க, குளிக்க செல்வோம். ஜூலி சிஸ்ட்டர் காவிப்புடவையில் கரையில் அமர்ந்திருப்பார். அவரும் மிக உற்சாகமானவர். இப்போது நினைக்கும் போது நாள்முழுவதும் உற்சாகமாக இருந்த ஆசிரியர்கள் மனதில் அப்படியே இருப்பதை உணரமுடிகிறது. 

அம்மாச்சிக்கு திதி கொடுக்கும்போது அம்மாமண்டபத்தின் எதிரே மலைக்கோட்டை எழுந்து நிற்க அங்கங்கே தேங்கியிருந்த காவிரி. முதுநிலை கல்லூரி காலத்தில் திருச்சியில் தங்கியிருந்த போது  வெள்ளத்தில் ஆக்ரோஷமாக பெருகியோடிய காவிரி. கழுத்துவலிப் பிரச்சனைக்காக தொடர்ந்து திருச்சி சென்று கொண்டிருந்த பாேது கானல் அடித்து, பெருகி, காய்ந்து, நகர்ந்த காவிரி. விஷ்ணுபுரம் இலக்கியவிழாவிற்கு விருந்தினராக கோவை செல்லும் போது கணுக்கால்வரையான நீருடன் நகர்ந்த காவிரி என்று எத்தனை காவிரிகள் மனதில். 

என்ன மனநிலையில் சென்றாலும் 'இந்தா..காவிரி வரப்போகுது' என்று மனம் திசைமாறும். கண்ணீருடன், புன்னகையுடன், விரக்தியுடன்,வெறுமையுடன், சலிப்புடன், பயத்துடன், பதட்டத்துடன், உற்சாகத்துடன், சிரிப்புடன் எத்தனை காவிரிகள் மனதில். அவள் வரண்டு மணலாகிக் கிடக்கிறாள். அங்கங்கே ஈரமாக ஓடிக்கொண்டிருக்கிறாள். நிதானமாக நகர்கிறாள். பதறி கரைகளை அழிக்கிறாள். வெள்ளமாகி காதடைக்கும் ஆக்ரோசத்துடன் பாய்கிறாள். கானலாகி மிதக்கிறாள். 

அந்தியில் மேற்கில் சூரியன் மஞ்சளாய், சிவப்பாய் மறைகையில் இவளும் மஞ்சளாய் சிவப்பாய் மினுமினுக்கிறாள். பின் ஏதோ ஒரு பொழுதில் ஔி குன்றி கருநீலமாய் நகர்கிறாள். தன்னை காட்டாமல் வெறும் சத்தமாக மட்டும் நகரும் காவிரி ஒன்று உண்டு. அகாலத்தில் இருப்பவள் அவள். அவளுக்குள் இருப்பது என்ன? 

எந்த சத்தமும் இன்றி மினுமினுக்கும் கரிய நகர்வான காவிரியில் அன்றொரு நாள் அத்தனை தீபங்கள் மிதந்தன. அவள் அணைவதில்லை. அவள் காய்வதில்லை. அவள் நிற்பதில்லை. அவள் ஒரு  காலாதீதம். அவள் காவிரி மட்டுமல்ல. கங்கையும் கோதாவரியும் மட்டுமல்ல. தான் சேரும் பெருங்கடலும் அவளே.

அவளின் காலடியில் அவள் கருணையில் செழிக்கிறோம். அவளின் குதியாடலில் மகிழ்கிறோம். அவள் கோபத்தில் அழிகிறோம்.  அவள் கருக்கொண்டு மீண்டும் பிறக்கிறோம். 

முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் போது முன்னோர் பெயர் தெரியவில்லை என்றால் காவேரியம்மா... ரங்கசாமின்னு சொல்லுங்கோ...அவக்காலடியில பிறந்த பிள்ளைங்க நாம என்பார்கள். அவள் காலடியில் யாருமற்றவர்கள் என்று யாருமில்லை.


மலையில் இருந்து இறங்கிப் பாயும் வழிநெடுக அங்கங்கே மண்ணாகி அரங்கனை சூழ்ந்தவள். அவள் மண்ணுக்கு இடைவெளிவிட்ட இடங்களெல்லாம் அவன் பள்ளிகொள்ளும் அரங்கங்கள். அவள் மலையிறங்கி வந்தததும், சூழ்ந்ததும், கலப்பதும் அவனில் தான்.

அவன் அவளை அரங்கமாக்கி என்றும் பள்ளிக்கொள்பவன். அவன் மிதக்கும் ஆழி அவள். அவனை கருவாக்கி சூழ்ந்த நீர்மம் அவள். யுகயுகங்களாக கருவாய், பயிராய், உயிராய் அவன் முளைக்கும் ஈரம் அவள்.






Comments

Popular posts from this blog

அகத்தின் ஆரக்கால்கள்

 [ எழுத்தாளர் மயிலன் ஜி.சின்னப்பனின் முப்போகம் [குறுநாவல்], நூறு ரூபிள்கள் மற்றும் சிருங்காரம் சிறுகதை தொகுப்புகளை முன்வைத்து...] எழுத்தாளர் மயிலன் தண்டவாளத்தின் இருபக்க தண்டுகள் அதை இணைக்கும் குறுக்குப்பட்டைகள், ஜல்லிக்கற்கள் என்று அனைத்தும் சரியாயிருக்க ஓடும் ரயிலில் எங்கோ ஒரு சின்னஞ்சிறு விலகல் அனைத்தையும் குழப்பி தடம் புறளச்செய்கின்றது. புரண்டு கிடக்கும் ரயில் அந்த சின்னஞ்சிறு விலகலின் உண்மையான ரூபம். மறுபடி சரி செய்யப்பட்டு ஓடும் ரயில் பின் எங்கோ அதே போல தக்கி நிற்கும். அதை போன்ற ஒரு உணர்வு சித்திரத்தை மயிலனின் கதைகளை தொகுப்பாக வாசிக்கும் போது உண்டாகிறது. மனதின் அகஅடுக்குகளை கீறிப்பார்க்கும் சவரக்கத்தி என்றும் இவரின் எழுத்துகளை சொல்லலாம். அதில் ஒரு அடுக்கு காயத்தால் அழுகி புறையோடி சீல் கொள்கிறது. அது மற்ற அடுக்குகள் மீது கொள்ளும் செல்வாக்கின் கதைகள் இவை. அந்த வலி நிறைந்த அழுகிய அடுக்கை உருவாக்கும் விசைகளை நோக்கி செல்லும் கதைகள் இவை. மனித இயல்புகள் அல்லது  இயல்புகளை பாதிக்கும் சூழல்கள் என்று இவை இரண்டும் ,அந்த சவரக்கத்தியை தீட்டும் மணலின் நெறுநெறுப்பாகவும் தீட்டிய கத்தியை ...

கர்ணனின் கவசகுண்டலங்கள்

இந்த ஆண்டு நித்யவனத்தில் நடத்தப்படும் முழுமைஅறிவு [Unified wisdom] வகுப்புகளில் மரபிலக்கிய வகுப்பிற்கு செல்ல வேண்டுமென்று தோன்றிக்கொண்டிருந்தது. மரபின் மைந்தன் முத்தய்யா அவர்கள் நடத்தும் மரபிலக்கிய அறிவிப்பு வந்ததும்  வழக்கம் போல நிறைய யோசனைகள். பொங்கல் விடுமுறை நாட்களில் வருகிறது என்பது வேறு. இருந்தாலும் செல்ல வேண்டும் என்று ஒரு பிடிவாதம். பதினாறாம் தேதி ரம்யா மனோகருடன் ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்திலிருந்து வெள்ளிமலை சென்றேன். சாயுங்காலம் ஐந்து மணி்க்கெல்லாம் மலையேறிவிட்டோம். அங்கு ஈரோடு கிருஷ்ணன் அவர்களை முதலில் பார்த்தோம். அவருடன் எங்கள் வகுப்பு சகாவான ஆனந்த் குமார் அறிமுகமானார். பின்பு அறைக்கு சென்று வந்து மலைச்சூழலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அங்கிருந்த திறந்தவெளி இருக்கைகளில் ரம்யாவும் நானும் கொஞ்சம் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நல்ல நட்பிற்கான அடித்தளம். மேடம்,கமலதேவி,கமலா...கடந்து...ரம்யாவை அக்காவிற்கு வர வைத்ததும் வேலை முடிந்தது. இனி இயல்பாக எல்லாம் நடக்கும். ரம்யாவின் இனிய முகம் மூன்றாவது நாள் ஈரோடு பேருந்து நிலையத்தில் விடைபெறும் வரை உடன் இருந்தது. அதே ப...

பெருகும் காவிரி

 காவிரியை பார்ப்பது எப்போதுமே எனக்கு பரவசமான பொழுது. பள்ளி வயதில் முசிறி காவிரி. கல்லூரி வயதில் திருச்சி காவிரி. கடைசியாக முசிறிக்கு சென்று நான்கு ஆண்டுகளாகிறது. முசிறியிலிருந்து திருச்சிக்கு செல்லும் பேருந்து வழியில் காவிரி உடன் வரும். கொல்லிமலையில் உருவாகி எங்கள் ஊரில் பாயும் அய்யாறு முசிறி காவிரியில் கலக்கிறது. அண்மையில் எழுத்தாளர் சுரேஸ்குமார இந்திரஜித் கருத்தரங்கிற்காக திருச்சி செல்லும் போது இரண்டுஆண்டுகள் கழித்து  அந்தியில் காவிரியை பார்த்தேன். கொள்ளிடம் பாலத்தில் நல்ல காற்று. கொள்ளிடத்தில் ஓரளவு நீர் இருந்தது. கொள்ளிடம் பாலத்தில் பேருந்து செல்லும் போது வலது பக்கம் மலைக்கோட்டை ,திருவரங்க ராஜகோபுரம் இரண்டும் நீருக்கு அப்பால் இணையாக காட்சிக்கு வரும். அதற்கும் அப்பால் மேற்கு வானில் சரியும் ஆரஞ்சு வண்ண சூரியன்.    மங்கம்மாளை, தாயுமானவரை,ஆண்டாளை,வெள்ளையம்மாளை,ஆண்டாளை போலவே அரங்கனை தேடி வந்த முகலாய இளவரசி சுரதானியை மனம் சென்று தொடுகிறது. அன்னிய படையெடுப்பின் போது கோயில் உற்சவரை காப்பதற்காக கிழக்கு கோபுரத்தில் இருந்து உயிர் விட்டாள் தாசி குலத்து வெள்ளையம்மாள். வெள்ளை ...