அமுது
காரைக்கால் துறைமுகம் அந்திக்கு முந்தைய பரபரப்பில் இருந்தது. கடல்புறத்து அங்காடிகளையும், கடலையும் பார்த்தபடி புனிதவதி கடல்திசை நோக்கி திறந்திருந்த பூக்கண் சாளரத்தின் அருகில் நின்றாள். விரல்கள் சாரளங்களின் இடைவெளிகளை பற்றியிருந்தன. காரைக்கால் துறைமுகத்திலிருந்து பரமதத்தன் கடலேறி சென்று ஒரு திங்கள் ஆகியிருந்தது. கண் முன்னே கடல் தழும்பிக்கொண்டிருந்தது. பரதவர்கள் கட்டுமரங்களை கரையில் இழுத்துவிட்டுக்கொண்டிருந்தனர். பரமதத்தனை நினைக்கும் போதே அவளுக்கு தொண்டையில் விண்னென்று ஒரு வலி வந்து போனது. வரும் திங்களோடு அவளுக்கு பதினாறு அகவை திகைகிறது. கடல் அலைகளை பார்த்துக்கொண்டு வரையப்பட்ட ஓவியம் போல நெடுநேரம் நின்று கொண்டிருந்தாள். ஒரு சில கணங்கள் புறாவென தத்தும் விழிமணிகள் பின் கடலில் நிலைகொண்டன. மென்னிளம் மாங்கொழுந்தின் நிறம் அவளுக்கு. எதிரே மேற்கு சாளரத்தின் வழி வந்த ஔிப்பட்டு அவளின் மஞ்சள் பூசிய முகம் வியர்வையில் மினுங்கியது. “இப்படியே நாள் பொழுது இல்லாமல் உப்புக்காற்றில் வெயில்பட நின்றால் உடல் வெம்பிப்போய் விடும் புனிதா,” என்று சொல்லியபடி பூங்கொடி உணவுத்தட்டை மனைபலகைக்கு க...