‘சமகாலத்தை எழுதுவது என்பது புதிய காயத்தை கையாள்வது போல’ என்று அண்மையில் நேர்காணல் ஒன்றில் சொல்லியிருக்கும் எழுத்தாளர் வாசுமுருகவேல் தன்னுடைய மணிப்பல்லவம் நாவலை அவ்விதமே நிதானமான பார்வை மற்றும் உணர்வுடன் எழுதியிருக்கிறார்.
அன்றாடத்திலிருந்து போர்சூழலை, வன்முறையை சொல்வதினால் வன்முறை துல்லியமாக வேறுபட்டு தெரிகிறது. பரந்த பச்சை வயல் பரப்புக்கு நடுவே வாய்க்கால் போல.கண்முன்னே அழகான கடல் ஆனால் கூடவே ராணுவமுகாம். எங்கோ எப்போதோ விழுந்த விஷவிதை விருட்சமாகி நிற்கும் போது அதை நம்பி அதன் கிளைகளில் வசிக்கும் பறவைகள்.
போர்இலக்கியம் எங்கேயோ எப்படியோ ஃபாசில் [fossil] தன்மையுடன் இருக்க வேண்டியிருக்கிறது அல்லது குளிர்ப்பதன பெட்டியில் இருக்கும் தாய் நுண்ணூயிரி கலம் போல இருக்க வேண்டியிருக்கிறது. ஒரு உயிருள்ள நினைவாக…அதன் உயிர் தன்மையை இழக்காமலும் அதே சமயம் பரவிவிடாமலும். தன்னுடைய செறிந்த நாவலில் அன்றாடத்தை எழுதும் போது சற்று கூடுதலாத சொல்லிவிடும் எழுத்தாளர், வன்முறையை மிகக்கவனமாக தொட்டு நகர்ந்துவிடுகிறார்.
இந்த உணர்வுநிலையில் இருந்து நாவலின் அத்தியாயங்கள் ஒவ்வொன்றிலும் ஒரு காட்சி விரிக்கப்படுகிறது. உயிரியல் ஆய்வுகூடத்தில் அடுக்கப்பட்டுள்ள ஃபாசில் [fossil] உவமை இங்கு சரியாக வருகிறது. நயினா தீவின் அன்றாட வாழ்க்கை, போர்சூழல், மக்களின் எண்ணவோட்டம்,போர் சூழலின் பதட்டம், வன்முறை, காதல், திருவிழா,தொன்மம் என்று மாதிரிகளை வரிசையாக அடுக்குவதைப்போல அத்தியாயங்களை வைத்திருக்கிறார். மாதிரிகள் என்பது தொட்டுக்காட்டப்படுதல் போல. அதிலிருந்து வாசகர் தான் அறிந்த விஷயங்களை சேர்த்து ஊகிக்க முடிகிறது. வாசுமுருகவேல் சொல்வதைப்போல் இது சமகால காயம் என்பதால் அனைவருக்கும் குறைந்தபட்ச அடிப்படையாவது தெரியும் என்ற நம்பிக்கையில் எழுதப்பட்ட நாவல். அப்படி இல்லை என்றாலும் கூட நாவல் சொல்ல எத்தினிப்பதை புரிந்து கொள்ள முடியும். வாசிக்கும் போது சில ஆண்டுகளுக்கு முன்பு அன்றாடம் செய்திகளில் கேட்ட விஷயங்கள் மனதில் விரியும் வாசிப்பனுபவம் கிடைக்கிறது. இது போன்ற நாவல்களில் ஒரு பெயர் மட்டுமே கூட எவ்வளவு பெரிதாக விரிகிறது என்பதை வாசிக்கும் போது உணர முடியும்.
கடற்கரையில் உள்ள வீட்டை விவரிக்கும் போது காகிதப்பூக்களும் கற்றாழையும் மட்டும் குறிப்பிட்டு சொல்கிறார். மற்ற செடிகளும் அங்கிருப்பது நமக்குத்தெரிகிறது. அவற்றை நாவலில் கூறுவதில்லை. சொல்லாமல் விட்ட செடிகளும் ஆளற்ற கடற்கரை மணல் வெளியும் ஒரு பாலை நில உணர்வை நமக்கு அளிக்கின்றன. போர் இக்கட்டில் இருக்கும் நிலம் ஒருவகையில் பாலை. காகிதப்பூவும் கூட அதன் ஈரமற்ற தன்மை மற்றும் இயல்பால் ஒரு வெறுமையை உணரவைக்கிறது. காவல் கோபுரமும் காகிதப்பூவும் நமக்கு அந்த நாவல் கடத்த விழையும் உணர்வை தந்துவிடுகிறது. அம்மாள் கோவில் கோபுரமும் அந்த காட்சிசட்டகத்தில் இருந்தாலும் சொல்லப்படாமலிருக்கிறது. பாறைக்கு அடியில் உள்ள விதை முளைப்பது போல இக்கட்டான சூழலும் மனிதர்களின் வாழும் இயல்புமாக, காவல் கோபுரமும் கடலிற்குள் சற்று நீட்டிக்கொண்டிருக்கும் பாலமும் இயல்பாகவே வலுவான படிமங்களாகி விடுகின்றன.
குழந்தையின் சடலம் படகில் உருண்டது என்ற ஒரு வரியுடன் எழுத்தாளர் நின்று கொள்ளும் போது வாசிப்பவர் மனதில் என்னென்னவோ எண்ண மோதல்கள் நிகழ்கின்றன.
தவறி விழும் ராணுவக்காரன் ஒருவனை அனிச்சையாக ஓடிச்சென்று ஷோபா தூக்குகிறாள். அதற்கு பிறகே எப்படி ஓடினோம் தூக்கினோம் என்று சிந்திக்கிறாள். தவறி விழுபவனை அனிச்சையாக தூக்கும் இயல்புடைய மனிதன் ஒரு பச்சிளம் குழந்தையை எந்த தயக்கமும் இன்றி கொன்று போடுவது வரை அவனை செலுத்துவது எது? என்று வாசிப்பவரை சிந்திக்க தூண்டும் நாவல் மணிபல்லவம். இதில் தொன்மம், தெய்வங்கள், மண் என்று விரித்தெடுக்க வலுவான விஷயங்கள் உள்ளன. அவை எப்படியோ இந்த நாவலில் தெய்வத்தின் உப கரங்கள் போல ஆகிவிடுகின்றன. போர்பூமியில் தெய்வங்கள் கூட என்ன செய்துவிட முடிகிறது.
தவிர்க்க முடியாமல் ஒரு சினிமா காட்சி இங்கு வந்து மனதிற்குள் நிற்கிறது. மக்கள் வெளியேறி குண்டுவெடிப்பால் அலங்கோலமான ஊரின் கோவிலில் பெரியவர் ஒருவர் கோவில் மணியை விடாமல் அடித்துக்கொண்டே இருக்கும் காட்சி. நினைக்கும் போதெல்லாம் தொந்தரவு செய்யும் காட்சி. அது போன்ற ஒன்றை தான் எழுத்தாளர்கள் வாசுமுருகவேல், அகரமுதல்வன் போன்றவர்கள் இலக்கியத்தில் செய்கிறார்கள். அது பிரார்த்தனையா, வேதனையா, கேள்வியா, ஆங்காரமா, கையறுநிலை தரும் வலியின் தீராத முனகலா இல்லை இவை அனைத்தும் சேர்ந்ததா என்று தெரியவில்லை.அந்த மணி இலக்கியத்தில் ஆராய்ச்சி மணி.
அற்றை திங்கள் அந்நிலவில்…
என்று பாரிமகளிர் சொல்வதைப்போல அழகிய தீவு ஒன்று இருந்தது. அதற்கென்று சில தெய்வங்களும் விழாக்களும் இருந்தன. மனிதர்களும் மகிழ்ச்சியாகவும் தங்களுக்குள் மனித இயல்புகளுடன் இருந்தார்கள். அங்கு அழகிய கடற்கரையும் தென்னந்தோப்புகளும் சுவையான மீன் உணவுகளும் விடலிகளும் வளர்ந்திருந்தன. ஊரை நிறைத்து காதல் இருந்தது. அதற்குரிய எதிர்ப்பும் ரகசியங்களும் சூட்டிகைத்தனங்களும் இருந்தன என்று சொல்லும் நாவல் அவையெல்லாம் படிப்படியாக ஒடுங்குவதை காட்டுவதன் மூலம் உலகிற்கு சொல்லவென்று உள்ள செய்தி மகாபாரத காலத்திலிருந்தே சொல்லப்பட்ட செய்தி தான். ஆனாலும் சொல்லப்பட வேண்டிய தேவையும் இன்று வரை இருந்து கொண்டே இருக்கிறது.
போர் என்பது மனிதகுலத்திற்கு என்றில்லை உயிர் குலம் முழுமைக்கும் வாழ்வின் அடிப்படைகளில் ஒன்று. அது எதற்காக என்பது தான் கேள்வி. காட்டில் உணவிற்காக நடக்கும் போது தர்மம் ஆகிறது. உணவிற்காக அன்றி வேறு எதற்காக நடந்தாலும் அதில் ஏதோ ஒரு அதர்மம் மிகச்சிறியதவேனும் சூல் கொண்டிருக்கக்கூடும் என்று தொன்றுகிறது. அதை தொட்டெடுப்பதை காலகாலமாக இலக்கியம் செய்கிறது.
தர்மயுத்தம் என்று கீதை போருக்கான அறசந்தர்பங்கள் பற்றி கூறுகிறது. அதில் தீமையை அழிக்க போரிடலாம் என்கிறார் கிருஷ்ணர். எது தீமை என்பது காலத்தால் சமூகநியதிகளால் மாறிக்கொண்டே இருக்கிறது.
ஆனால் போர் என்பது இறுதி ஆயுதமாக வேண்டும் எப்போதும் இருக்க வேண்டும் என்று கிருஷ்ணர் சொல்கிறார். போர் இலக்கியங்கள் ஏன் போர் கடைசி ஆயுதமாக இருக்க வேண்டும் என்ற கிருஷ்ணவாக்கிற்காக விளக்கங்கள்.
அந்த வகையில் எழுத்தாளர் வாசுமுருவேலின் நாவல்கள் முக்கியமானவை.


Comments
Post a Comment