சில சமயம் கவிதை வரிகள் மனதின் அகால த்திலிருந்து சட்டென்று நினைவிற்கு வருவதை நினைத்தால் வியப்பாக இருக்கிறது.
நாம் அதற்கான சரியான காரணங்களைக் கூடசொல்லிவிட முடியும். நம் சூழல் மற்றும் உடல்நலம் அல்லது மனநிலை தூண்டலால் அப்படி நினைவிற்கு வருகிறது என்று சொல்லலாம் தான். ஆனால் பதினோரு வயதில் பள்ளிப் படமாக வந்த கவிதை எப்படி மின்சாரம் இல்லாத அமாவாசை இரவில் வானத்தை நிறைத்திருக்கும் விண்மீன்வெளியிலிருந்து குதித்து வருகிறது ஒரு மழை துளியை போல. விண்வெளி என்பது நம் மனம் தானா? மண்ணை விட வானம் நமக்கு ஏன் இத்தனை அணுக்கமாக இருக்கிறது?
தமிழ் வழி கல்வியில் அரசு பள்ளியில் மனப்பாடம் செய்ய சிரமப்பட்ட ஆங்கிலகவிதை வரிகள் இன்று வானத்தை பார்க்கும் போது சட்டென்று மனதில் ஓடியது. நம் அனைவருக்குமே தெரிந்த வரிகள்.
கவி ராபர்ட் ப்ராஸ்ட்டின் வரிகள்.
The woods are lovely dark and deep
But I have promises to keep
I have miles to go before I sleep
I have miles to go before I sleep
6 ம் வகுப்பில் பாடப் பகுதியாக வந்த கவிதை. இப்போதெல்லாம் சில நேரங்களில் பள்ளிப் படங்களிலிருந்து இத்தகைய வரிகள் மனதில் ஒளிர்கின்றன. பள்ளிப்பாடங்களில் தமிழ் பாடத்தை விட ஆங்கில பாடம் தான் நினைவிற்கு வருகிறது. காரணம் என்ன? பாடம் நடத்திய ஆசிரியர்களா? பாடங்களா? தெரியவில்லை.
பல ஆண்டுகள் கழித்து மனதில் சட்டென்று வந்த இந்த வரிகளும், விண்மீன்கள் நிறைந்த வானமும் இதை எழுத செய்கிறன.
இந்தக்கவிதைக்கு குரலுண்டு. அந்தக்குரலில் தான் மனதில் இந்த வரிகள் ஓடுகின்றன. அய்யாவின் குரல் அது. அப்போது அவர் நடுநிலை பள்ளி ஆசிரியர் என்பதால் தமிழ் ஆங்கிலம் கணிதம் அறிவியில் சமூக அறிவியல் என்று ஐந்து பாடங்களும் நடத்தக்கூடியவர்.
என்னுடைய ஆறு ஏழு எட்டு வகுப்புகளில் கணிசமாக ஆண்டிற்கு இரண்டு பாடங்களுக்கு ஆசிரியராக வந்துவிடுவார். ஆறாம் வகுப்பில் ஆங்கிலத்திற்கும், சமூக அறிவியலிற்கும் ஆசிரியர்.
நெட்டிலிங்க மரத்தடியில் கரும்பலகை வைக்கப்பட்டிருக்கும் மரத்தடி தான் வகுப்பறை. ஆறாம் வகுப்பு கட்டிடம் உதிர்ந்து கொண்டிருந்தது. அய்யா மாணவராக படிக்கும் போது இருந்த கட்டடம் அது. வரிசையாக மூன்று பெரிய உயரமான நெட்டிலிங்க மரங்கள். வெயில் தெரியாது. அய்யா வெள்ளை முழுக்கை சட்டை கருப்பு பேண்ட் டக் செய்திருந்தார். ப்ரவுன் நிற பாட்டா வார்செருப்பு. அவருக்கு சட்டைப்பையில் பேனா வைக்கும் வழக்கம் இல்லை. எப்போதும் சட்டையின் இரண்டாவது பட்டனிற்கு கீழே ஊதா, ரோஸ் இங்க் பேனாக்களை பக்கவாட்டில் செருகியிப்பார். அவர் சிவப்பு இங்க் பயன்படுத்தமாட்டார். அன்று இளஞ்சிவப்பு இங்க் அவர் சட்டையில் மிகச்சிறிய பொட்டாக ஊறியிருந்தது.
கரும்பலகையில் இந்தக் கவிதை வரிகளை எழுதிவிட்டு எங்களைப் பார்த்து திரும்பி உற்சாகமாக வாசிக்கிறார். விளக்கம் சொல்லி நடத்துகிறார். வரிகளை அவர் சொல்லச்சொல்ல மறுபடி மறுபடி நாங்கள் சொல்கிறோம்.
நடத்தி முடித்தபின் நாற்காலியில் அமர்ந்து , " ஜவகர்லால் நேருக்கு கடைசி நான்கு வரிகள் ரோம்ப பிடிக்குமாம்.. அவர் டைரியில மேசையில எழுதி வச்சிருந்தாராம்... நாளைக்கு எல்லாரும் இந்த போயத்தை தனித்தனியா எழுந்து நின்று படிச்சுக்காட்டனும்," என்றார்.
மண்டையை ஆட்டி ஆட்டி நெட்டிலிங்க மரத்தை பார்த்துக் கொண்டிருந்த என் தலையில் மூங்கில குச்சியால் ஒரு தட்டு தட்டி, " அங்க என்ன மோட்டுவலையில எலி ஓடுதா.. " என்று கேட்டார். பசங்களும், பிள்ளைகளும் வாயில் கை வைத்து சிரித்தார்கள். என் அருகில் அமர்ந்திருந்த பாஸ்கர்," சார் சொல்றத கேக்காம மரத்தை பாத்துக்கிட்டிருந்தியா.. குச்சியாலேயே வெளுக்க போறாரு பாரு, " என்று மெதுவாக சொன்னான்.
நான் ஆக மெதுவாக எழுந்து கைகளை கட்டிக்கொண்டு, "சார்.. டார்க் அண்ட் டீப்னா.. மேல நெட்டிலிங்க மரத்துக்குள்ள போற மாதிரியா, " என்று கேட்டேன். உடனே அனைவரும் அன்னாந்து மேலே பார்த்துக்கொண்டிருந்தோம் அய்யா உட்பட.
"ம்.. இதுவும் டார்க் அண்ட் டீப் ன்னு வச்சுக்கலாம், " என்றார்.
அடுத்த நாள் சாயங்காலம் கொல்லி மலையின் மாசிக்குன்றடியில் நின்று , " இப்ப பாருப்பா, " என்று கொல்லிமலை அடிவாரக்காட்டை காட்டினார். ஜூன் மாதம் என்பதால் காடும் மலையும் அடர்ந்திருந்தது.
அதையே இன்று வானத்தில் பார்த்தேன். இருண்ட வானில் நெறிந்த விண்மீன்கள். அமாவாசை வானமும் நட்சத்திரங்களும்.
ஒரு வயதில் மண்ணில் நிகழ்வது இன்னொரு வயதில் விண்ணில் நிகழ்கிறது.
மழைதுளிபோல,ஒரு வைரம் போல,ஒரு விண்மீன் போல,...ஒரு கவிதை.


Comments
Post a Comment