Skip to main content

லில்லி மலர் பூக்கும் நிலம்

 (முனைவர் யோ.ஞான சந்திர ஜாண்சன் அவர்களின் கிறித்தவக்காப்பியங்கள் நூலை முன் வைத்து… )

காப்பியம் என்பதும் காவியம் என்பதும் ஒரே பொருள்படுபவை. வடமொழியில் காவியம். தமிழில் காப்பியம்.

தமிழில்

 1.ஐம்பெருங்காப்பியங்கள்

2.ஐஞ்சிறுகாப்பியங்கள்

3.சமயகாப்பியங்கள்

என்ற வகைமைகள் உள்ளன.

சமய காப்பியங்களுள் கிருத்துவ காப்பியங்கள் வருகின்றன. சைவ வைணவ காப்பியங்கள் பக்தி காலகட்டத்தை சேர்ந்தவை. இதன் காலம் தோராயமாக பத்தாம் நூற்றாண்டிலிருந்து பனிரெண்டாம் நூற்றாண்டு வரை. 


கிருத்தவக்காப்பியங்களின் காலம் கிருத்தவர்கள் நம் நாட்டிற்குள் வந்த காலகட்டத்தில் துவங்குகிறது. இந்தியாவில் முதன்முதலாக அச்சான மொழி தமிழ்.

இயேசு சபை துறவியான ஆன்ட்ரிக் அடிகளார் கோவாவில் தமிழில் உலோக அச்சுகள் உருவாக்கி பயன்படுத்தி தமிழ் அச்சு வரலாற்றை தொடங்கி வைக்கிறார். 1570 களில் இந்த தொடக்கம் நிகழ்ந்து விட்டது.

கொல்லத்தில் முதல் நூலான தம்பிரான் வணக்கம் அச்சடிக்கப்படுகிறது. தமிழில் அச்சு நூலாக வந்த முதல் நூல் ஒரு மொழி பெயர்ப்பு நூல். பின் தூத்துக்குடி புன்னைகாயல் ,கொச்சி ஆகிய இடங்களில் அச்சகத்தை உருவாக்குகிறார். கொச்சியில் இரண்டாம் நூலான கிரீசித்தியானி வணக்கம் என்ற மொழிபெயர்ப்பு நூல் அச்சாகிறது. மூன்றாவதாக தமிழகத்தில் புன்னைகாயலில் கொப்பெசியொனாயரு என்ற நூல் அச்சாகி வெளியாகிறது. ஆன்ட்ரிக் அடிகளின் தூண்டுதலால் அத்தோணி அடிகள் அந்தோணி அம்மானை இயற்றுகிறார். ஆனால் அச்சேறவில்லை. உள்நாட்டு போர்களால் அச்சகங்கள் அழிந்தது என்று இந்த நூல் தமிழக அச்சுகலையின் தொடக்க காலத்தை முடிக்கிறது.

அச்சகங்களுக்கு என்ன ஆனது ? என்று நாம் தேடிச்செல்லும் போது பதினைந்தாம் நூற்றாண்டில் போர்த்துகீசியர்கள் இந்திய கிழக்கு கடற்கரை மற்றும் மேற்கு கடற்கரையோரங்களை ஆக்கிரமிக்க முயற்சிசெய்கிறார்கள். மதத்தை பரப்ப முயற்சி எடுக்கும் போது கொச்சி கோவா போன்ற இடங்களில் உள்நாட்டுபோர் மூளுகிறது. தூத்துக்குடி புன்னைகாயல் பகுதிகளில் முத்து எடுப்பதில் முத்துவியாபார உரிமை சார்ந்து உண்டாகும் கலவரத்தில் ஒரு பரதவ பெண்ணின் காது அறுக்கப்படுவதில் தொடங்கும் உள்நாட்டுபோரின் முடிவில் புன்னைக்காயல் எரிக்கப்படுகிறது.

மேற்கு கடற்கரையோரம் மரைக்காயர்களின் கடற்போர் நடக்கிறது. போர்த்துகீசியர்களின் மதம் பரப்பும் பணி மக்களால் எதிர்க்கப்பட்டது. அதனால் உள்நாட்டு போர் ஏற்படுகிறது. விளைவாக மூன்று இடங்களிலும் உள்ள அச்சகங்கள் அழிகப்பட்டிருக்கலாம்.

அந்தோணி அம்மானை முந்நூறு ஆண்டுகளாக ஓலைசுவடியாக இருக்கிறது.1892 ல் அந்த ஓலைகள் கடல் தாண்டி யாழ்பாணத்தில் அச்சாக்கப்பட்டு வெளியிடப்படுகிறது.

அதன் பிறகும் நூறு ஆண்டுகள் கழித்து விவிலியத்தை மொழிபெயர்க்கிறார் சீகன்பால்கு. அதை அடிப்படையாக வைத்து வீரமாமுனிவரால் தேம்பாவணி  எழுதப்படுகின்றது.

முனைவர் ஞானசந்திர ஜாண்சன் அவர்களின் கிறித்தவக் காப்பியங்கள் என்ற இந்த நூலில்….


திருமறை வரலாறு, கிருஸ்து வரலாறு, திருமறை மாந்தர் வரலாறு, தழுவல் காப்பியம், மொழிபெயர்ப்பு காப்பியம், மக்களினக்காப்பியங்கள் என்ற அடிப்படையில் எழுதப்பட்ட 48   கிருத்துவகாப்பியங்கள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. 1728 ல் வீரமாமுனிவரின் தேம்பாவணியில் தொடங்கும் கிறித்தவக்காப்பியங்கள் முதல் 2020 ல் நாஞ்சில் நாரண. தொல்காப்பியன் எழுதிய விடிவெள்ளி மகராசன் வேதமாணிக்கம் என்ற காப்பியம் வரை தொகுக்கப்பட்டுள்ளது.

வீரமாமுனிவருக்கு பிறகு வேதநாயக சாஸ்திரியாரால் கீர்த்தனைகள் எழுதப்பட்டு மக்களை சென்றடைகின்றன. அவரை தொடர்ந்து 200 க்கும் மேற்பட்ட கீர்த்தனை கவிகள் உருவாகிறார்கள்.

இதற்கிடையில் 17 ம் நூற்றாண்டில் இலங்கையில் சாங்கோபாங்கர் கொன்சால்வஸ் சுவாமிகள் தமிழ், சிங்கள,போர்த்துக்கீஸிய அகராதிகளை தொகுக்கிறார்.

அதே போல நாடகங்களை தேடிச்சென்றால் 16,17 ம் நூற்றாண்டில் போர்த்துக்கீசியரால், கடற்கரையோர மக்கள் கிருத்துவத்தை புரிந்து கொள்ள நாடகங்கள் எழுதப்பட்டுள்ளன. ஓபரா என்ற இசை நாடகங்களை முன்னுதாரணமாகக்கொண்டு குறவஞ்சி, பள்ளு என்ற சிற்றிலக்கிய வடிவை கிருத்தவ நாடகங்கள் எடுத்துக் கொள்கின்றன

முதன் முதலாக 'சவிட்டு நாடகம்' என்ற நாடகம் கடற்கரை ஓரங்களில் நடத்தப்பட்டதாக தெரிகிறது. சவிட்டுதல் என்றால் அறைதல். ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு என்ற இயேசு வாக்கின் நாடகமாக இருக்கலாம். கடற்கரை மணலில் நிலாவெளிச்சத்தில் அமர்ந்து மக்களால் இந்த நாடகங்கள் பார்க்கப்பட்டிருக்கலாம். பின் கார்மேல் அரசன் நாடகம், செவஸ்தியார் நாடகங்கள் எழுதப்பட்டுள்ளன. தொடர்ந்து 18ம் நூற்றாண்டில் தஞ்சை வேதநாயகம் சாஸ்திரி  'ஞான ஆதிக்கம்' என்ற நாடகத்தை எழுதுகிறார். நாடகங்கள் தொடர்ந்து எழுதப்படுகின்றன.

இயலில் காப்பியங்கள், இசையில் கீர்த்தனைகள், கடற்கரை இசைநாடகங்களுமாக கிருத்தவ இலக்கியம் தமிழின் மூன்று கூறுகளிலும் தன் பயணத்தை பதினேழாம் நூற்றாண்டில் தொடங்குகிறது.

தமிழில் சங்கமறுமலர்ச்சி காலகட்டத்தில், காப்பியங்களின் காலகட்டம் சிலப்பதிகாரத்தில் தொடங்குகிறது. பின் அதன் தொடர்ச்சியாக மணிமேகலை எழுதப்படுகிறது. சங்க இலக்கிய மரபுகளை உள்வாங்கி தன்னுடைய பேசுபொருளிற்கான புது வடிவத்தை உண்டாக்கிக் கொண்டு காப்பியமரபு தொடங்குகிறது

இன்றிருந்து பார்த்தால் தமிழில் சிற்றிலக்கியங்களுக்குப் பிறகு பத்தொன்பதாம்,இருபதாம் நூற்றாண்டில் நாவல், சிறுகதை, புதுக்கவிதை எழுதப்பட்டதற்கு நிகரானது சங்க இலக்கியத்திற்கு பிறகு காப்பியங்கள் எழுதப்பட்ட நிகழ்வு. சங்கப்பாடல்களிலிருந்து, காப்பியம் என்ற சொல்லல் முறை நோக்கிய நகர்வு என்பது ஒரு மாளிகையில் முன் வாசல் படியில் வெளிச்சம் நுழைந்த காலம் கடந்து ,அத்தனை ஜன்னல்களையும் கதவுகளையும் திறந்து வெள்ளம் போ ஒளி நுழையும் அனுபவத்திற்கு ஒப்பானது.

ஆனால் இந்த மாற்றத்திற்கு முன்பே படிப்படியாக சங்க இலக்கியத்தில் வரிகளின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருவதை பார்க்கமுடியும். இன்னும் சொல்ல வேண்டும் என்ற உந்துதலும், சொல்லியதன் போதாமையாலும் சங்க  இலக்கியத்தில் வரிகள் அதிகமாகிறது.

அதன் பின் பெரியகதையுடன் ,விழுமியங்களை சேர்க்கும் உந்துதலால் காப்பியம் உருவாகிறது. மறுபடி பக்தி இலக்கிய காலகட்டத்தில் இது போல ஒரு வளர்ச்சி நிலை வந்து கம்பராமாயணம் என்னும் பேரிலக்கியம் எழுதப்படுகிறது.

காப்பிய காலகட்டத்தையும் பேரிலக்கிய காலகட்டத்தையும் கவனிக்கும் போது அரசியல் மாற்றங்களையும் ,சமயங்களின் பங்களிப்பையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. காப்பிய காலகட்டத்தில் சமண சமயம். பக்தி காலகட்டத்தில் சோழ பேரரசின் சைவ,வைணவ மதங்கள்அதே போல மீண்டும் சில நூற்றாண்டுகளுக்கு கழித்து இஸ்லாம் ,கிருத்துவம்  என்று பண்பாட்டு வெளிக்கு மிக அப்பாலிருந்து நம்பிக்கைகளும் கதைகளும் இங்கு வருகின்றன.

இயேசு மாதிரி ஒரு ஞானியை நம் மக்கள் எப்படி எதிர் கொண்டிருப்பார்கள் என்று நினைக்கும் போதே வியப்பாக இருக்கிறது. இங்குள்ள இயற்கை வழிபாடு, படைக்கும் காக்கும் அழிக்கும் தெய்வங்களுக்கு பழகிய மனங்கள் இயேசுவை எப்படி பார்த்திருக்கும். ஏனெனில் பதினைந்தாம் நூற்றாண்டில் சமண பௌத்த மதங்களுக்கு செல்வாக்கு இல்லை. இந்த காலகட்டத்தில் இஸ்லாமியர்கள், போர்த்துகீசியர், டச்சுக்காரர்கள் என்று சிதறிக்கொண்டிருந்தது இந்த நிலம். அதே போல இலக்கியமும் கலைகளும் சிதறி சிற்றிலக்கியங்களாக மாறியிருந்த காலகட்டத்தில், கிருத்தவகாப்பியங்கள் தமிழ் மரபை உள்வாங்கி இந்த நிலத்தில் இல்லாத இன்னொரு வரலாற்றை, தொன்மத்தை தமிழ் சூழலில் எழுதுகிறது.

அரசியல் சூழல்களால், பஞ்சங்களினால், ஆக்கிரமிப்புகளால் பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து இணையாகவே நாட்டார் தெய்வங்களும் இந்த நிலத்தில் முளைக்கின்றன. கிருத்துவ காப்பியங்கள் என்ற இந்த நூலினை வாசிக்கும் போது ஜெயமோகன் எழுதிய தெய்வங்கள் பேய்கள் தேவர்கள் என்ற நாட்டார் தெய்வங்கள் பற்றிய கதைக்கட்டுரைகள் மனதிற்குள் வந்தன. குருதி வழிய சிலுவையில் அறையப்பட்ட இயேசு ஒருவகையில் கழுமாடன்களை மக்களுக்கு நினைவு படுத்தியிருக்கலாம். இந்த நூலில் வரும் நாட்டார்  தெய்வங்களும் கிழக்கு மேற்கு கடற்கரையோர நிலங்களின் தெய்வங்கள்.

 மதபரப்புநர்கள் ,அரசு ஆதிக்கம், இயேசு சபையின் கல்வி மருத்துவ சேவைகள் மூலம் மட்டுமே இயேசு உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டார் என்று சொல்ல முடியாதுஅவரின் சிலுவைத்தோற்றம் ஆழ்உள்ளத்தினை ஊடுருவக்கூடியது. (அவர் மீதுள்ள குருதியும்)

15 ம் நூற்றாண்டில் தொடங்கும் கிருத்துவ காப்பியங்கள், 18 ம் நூற்றாண்டில் திருமறை மொழிபெயர்ப்பிலிருந்து உயிர்ப்புற்று, இருபதாம் நூற்றாண்டில் மக்களின் கதைவடிவில், கும்மிபாட்டில் ,தெருக்கூத்தில் உள்ள நீலகண்டப்பிள்ளையின் வாழ்க்கையை திருத்தொண்டர் காப்பியமாக எழுதுவதன் மூலம், இந்த நிலத்தின் மக்களின் ஒருவரை பாடுபொருளாகக் கொள்கிறது.

ஜாண்சன் அவர்களின் இந்த நூல் கிருத்துவகாப்பியங்களில் தொடக்கத்திலிருந்தே செல்வாக்கு செலுத்தும் சிலப்பதிகாரம், கம்பராமாயணம், திருக்குறள், பெரியபுராணம் போன்ற தமிழ் மரபு நூல்களின் பாடல்களை விவாதிக்கிறது. 48 காப்பியங்களில் கதை பின்புலத்தை கூறுகிறது. ஆசிரியர் குறிப்பு, காலம் போன்ற தகவல்கள் உள்ளன.

 இந்த தொகுப்பு 'பாகு' போல என்று சொல்லலாம். ஏக்கர் கணக்கான கரும்பு வயல்களை அல்லது மூலிகைகள் நம் பயன்பாட்டிற்காக வர வேண்டும் என்றால் அவற்றை பாகு பதத்தில் செய்ய வேண்டியிருக்கிறது. உலர வைத்து மறுபடி நீர்க்க செய்கிறோம். இந்த நூலும் கிருத்துவகாப்பியங்களை அறிமுகப்படுத்தி அதன் சுவையை காட்டித் தருகிறது. நாம் அதை விரிவாக்க அந்த நூல்களை தேடி செல்ல உதவும் வழிகாட்டியாக இந்த நூல் உள்ளது. அல்லது ஆய்வகத்தின் மாதிரிகளின் சேகரிப்பு போல ஒரு வகைமையின் பல கூறுகளை ஒன்றாக சேர்த்து காட்டுகிறது. ஜாண்சன் அவர்கள்  இந்த நூலில் கிருத்தவ காப்பிய துவக்ககாலத்திலிருந்து இருப்பத்தோராம் நூற்றாண்டின் 2020 வரை எழுதப்பட்ட காப்பியம் வரை  தொகுத்திருக்கிறார்.

இதன் மூலம் கிருத்துவ இலக்கியத்தின் வரலாற்றை இலக்கியத்தை அதில் செல்வாக்கு செலுத்தும் மரபை எடுத்து காட்டுகிறார். அடுத்து இதன் வளர்ச்சி நிலையாக சிறுகதை நாவல் பற்றிய எண்ணம் இயல்பாகவே நமக்கு  வருகிறது. எழுத்தாளர் ஜெயமோகனின் வெள்ளை யானையின் தரிசனம் கிருத்துவம் சார்ந்தது. கடல் நாவல் கிருத்துவத்தின் அடிப்படை தத்துவமான தந்தைமை(பிதா)யை அடிநாதமாகக்கொண்டது. ( என் வாசிப்பின் எல்லையிலிருந்து குறிப்பிடுகிறேன். இன்னும் நூல்கள் இருக்கலாம்) 

கிருத்துவ இலக்கியம் அடுத்த கட்டத்தை துவங்கிவிட்டது. இலக்கியத்தின் இந்த பகுப்பு முறைகள் இலக்கியத்தை புரிந்து கொள்ள உணர்ந்து கொள்ள வகைப்படுத்திக் கொள்ள தேவைப்படுகிறது.

எருசலேமின் லில்லிமலரும்  ஓக்மரமும் கெத்சமணி தோட்டத்தின் ஆலிவ் மரமும் இங்கு வாழையும் ,குவளைமலரும் ,ஆலமரமுமாக மாறும் போது நாம் தேவனின் கண்ணீரை முல்லை பூக்களாக உணர்கிறோம்.

ஓக் மரம் முழுமையாக வெட்டப்பட்டாலும்  மண்ணுக்குள் எஞ்சிய வேர் மூலம் மீண்டும் உயிர்த்தெழுமாம். ஓக் மரத்திற்கு பதிலாக ஆலமரத்தின் விழுதுகள் இந்த காப்பியங்களில் வருகின்றன.

இதை என் புரிதலாக இப்படி சொல்வேன். .

அமீபா போன்ற உயிர்கள் உணவை உணரும் திசையில் தன் உடலின் பகுதியை கால்களாகவோ வாயாகவோ மாற்றி உணவை தன்வயமாகி செரிக்கும்.  தொடக்ககால கிருத்துவ இஸ்லாமிய இலக்கியங்கள் தமிழில் எழுதப்பட்ட முறை இது போல ஒரு நிகழ்வே.

 சில உதாரணங்கள்.....


குழந்தை இயேசுவிற்கான தமிழ் தாலாட்டு

 

சோதிமணிப்பெட்டமே சுடரோளியே யூதருக்கு

ஆதிமகனாய்ப் பிறந்த அருந்தவமே தாலேலோ

_ இயேசுகாவியம்

 

இயேசு சிலுவையுடன் கல்வாரி மலையில் ஏறுகிறார். அப்போது

 

பேதை முதலாகப் பேரிளம்பெண் ஈறாக

மாதர் எருசலை மாநகரின் வீதி

இருமருங்கும் ஆண்டி அகற்றும் புலம்பும்

பெருநதியாக் கண்ணீர் உகுத்து…. ..

_ அருள்மைந்தன் மாகாதை காப்பியம்

 

ஆதியாகமத்தில் உலகு படைக்கப்படுகிறது

கனிந்தது வாழை;தேறல் கசிந்தது பாலாவின் தொங்கல்

இடித்தது தேமா:கண்முன் இரைந்தது பழத்தின் கொத்தே

தனித்த சீர் மாதுளையாம் தகும் பல பழங்கள் காய்கள்

தனி சுவை யோடு எங்கு, எங்கும் நலமுடன் தோன்றச் செய்தார்

_ அருள்நிறை  மரியம்மைக் காவியம்.


மரியன்னை பற்றி... 

 

அன்புதான் அன்னை தோற்றம் அன்புதான் அன்னை வாழ்க்கை

அன்புதான் பெற்ற துன்பம் அன்புதான் பெருகும் ஆற்றல்

அன்புதான் எல்லாம் ஆகி அரிய விண்வெளி மேலே ஏக

அன்புதான் அனைத்தினுக்கும் அடிப்படை ஆன தாங்களே..

_அருள்நிறை  மரியம்மைக் காவியம். 

 

நம் குறிஞ்சி முல்லை நிலத்திலிருந்தான்தான் இயேசு நம்மை அழைக்கிறார்

 பெருஞ்சுமை சுமந்து சோர்வோர்

பேரிடர் நீங்குதற்கு

ஆறுதல் பெற்றுய்ந்திட

அன்பன் என்னிடத்தில் வாரீர்

            _எபிரேய பேரழகி ஏசுத்தார் காப்பியம்.


 இந்த காப்பியங்களின் மதம், நம்பிக்கை சார்ந்த விஷயங்களை கடந்து ,காப்பியங்கள் சொல்லும் மன்னிப்பும் அன்பும் மீண்டெழுதலும் எக்காலத்திற்கும் உரியவை. கிருஸ்து எங்கு இருக்கிறாரோ அந்த இடம் எதுவானாலும் அது லில்லி மலர் பூக்கும் நிலம் தான். இந்த காப்பியங்கள் தமிழில் பூத்த லில்லி மலர்கள். 

ஒரு தொகுப்பாக இத்தனை காப்பிய அறிமுகம் கிடைப்பதால் கிருத்துவ இலக்கியத்தின் வளர்ச்சி போக்கை சட்டென்று ஒரு வரைபடமாக உணரமுடிகிறது. விவிலியம் சார்ந்தும் ,  கடவுளின் மகிமை, நீதி ஒழுக்கக்கருத்துகள் தாண்டி இந்தக்காப்பியங்கள் படிப்படியாக கவித்துவத்தை தொடமுயல்கின்றன. முன்பு சொல்லியது போல பாகு நிறைந்த கலம் போன்றது இந்த நூல். 


என்னை இழந்தேன் எனினும் எஞ்சுகிறேன்

என் தலைவன் தோள் சாய்ந்து 

என்னை உணர்கிறேன்.

இதோ எல்லாம் மறைகின்றன.

எஞ்சியவை எல்லாம்

என் ஆசைகள் முழுக்க.

ஏன் நானேகூட!

நான்  இறந்த அந்த லில்லிமலர் வெளியில்

அனைத்துமே தொலைந்து போயின!’

_ புனித ஜான். 

இது போன்ற கவித்துவத்துடன்... தரிசனத்தை, அறத்தை நோக்கி இனி நவீன கிருத்தவ இலக்கியத்தின்  அடுத்த கட்டம் நகரும் என்ற கனவுடன்... 

தமிழ் விக்கி_ தூரன் விருது பெரும் முனைவர் யோ. ஞான சந்திர ஜாண்சன் அவர்களுக்கு வணக்கங்களும் அன்பும்.




 

 

 

 






Comments

Popular posts from this blog

டமருகத்தின் தாளமானவள்

 திரியை மட்டும் திரும்பத்திரும்ப மாற்றி..  ஒவ்வொரு முறையும் எரியும் சுடர் ஒன்றே தானா.. ?  வேறு.. வேறா..                             _  சம்யுக்தா மாயா நம் கவிதை மரபில் காதலுக்கும் பக்திக்கும் இடையில் ஈசலின் சிறகு போன்ற மெல்லிய தடுப்பே உள்ளது. அது இருபக்கமும் ஊடுருவும் சவ்வு. பக்தி அதிகமானால் காதல். காதல் அதிகமானால் பக்தி. இந்த மாற்றம் புதிரானது.  அதே போல நாயகன் நாயகி ஃபாவம். அரங்கனை நோக்கி பாடப்பட்ட பாடல்களில்  நாயகி ஃபாவம் மேலோங்கி உள்ளது. ஈசனுக்கு பித்தா..பிறைசூடா என்று சக்ய ஃபாவம் இயல்பாக வருகிறது.  ஈசனை காதலனாக ஃபாவிப்பது என்பது முன்னால் நின்று அவனை பாடுவது அல்ல. அவன் பாதியாகவே ஆவது. ருத்ரனின் பகுதி என்பது அத்தனை எளிதல்ல என்பதாலோ என்னவோ பெண்களில் திலகவதி மட்டுமே பாடியிருக்கிறார்.  காரைக்காலம்மையால் அவனை விளையாட்டு பிள்ளையாக்கி ஆட வைக்க முடிகிறது. ( பொதுவாகவே ஈசன் மீது பாடப்பட்ட பாடல்களில் நாயக நாயகி ஃபாவம் குறைவு)  பெண்கவிகளில் ருத்ரனுக்கு இணையான காளியை சம்யுக்தாவின...

மூள் தீ

        வாசகசாலை இணைய இதழில் 2020 ஜூலை இதழில் வெளியான சிறுகதை.                             மூள் தீ ம்மா..ம்மா…என்ற பதறும் குரல் கேட்டு நடுநிசி கடந்த பின்னிரவு நேரத்தில் பதறி விழித்தது கணபதிபாளையம்.இரு மச்சுக்கட்டிடங்களுக்கு இடையிலிருந்த நூறாட்டுகாரபெரியசாமி தாத்தாவின் தகரம் வேய்ந்த வீட்டை நோக்கி ஆட்கள் ஓடினார்கள். கைலியை மடித்துகட்டிக்கொண்டு வெற்றுடலுடன் தெருவின் முச்சந்தியில் நின்ற சரவணன், “வீட்ல இருக்கற தண்ணிக்குடத்தை எடுத்துக்கிட்டு ஓடியாங்க…”என்று கத்தியவாறு ஓடினான்.நாய்கள் தெருவில் நிலைகொள்ளாமல் திரிந்தன. பெரியசாமி தாத்தாவின் கட்டுத்துறையிலிருந்து அவிழ்த்துவிடப்பட்ட ஆட்டுக்குட்டிகளின் கண்கள் பதறியபடியிருந்தன.அவற்றை இழுத்து தெருவோரமாக மின்கம்பத்தில் மேனகா கட்டிக் கொண்டிருந்தாள்.அவை வீட்டை நோக்கி அடிக்குரலில் கத்தின.நான்குவீடுகள் தள்ளியிருந்த இடிந்தவீட்டின் நுணாமரத்திலிருந்து பறவைகள் சலசலப்பு கேட்டது. ஆட்கள் தண்ணீரை வாரியிறைப்பதற்கு மேல் தீ எழுந்து விட்டிருந்தது.உள்ளே கட்டுத்துறையின் மூங்கில்கள்...

அலைகடல் துலாவும் கட்டுமரம்

 எழுத்தாளர் ஜெயமோகனின் கடல் நாவலை ஏற்கனவே திரைப்படமாக பார்த்த நினைவிலிருந்து வாசிக்கத்தொடங்கினேன்.   இத்தனை படங்களுக்கு பின்பும் ஏழாம் வகுப்பு விடுமுறையில் துறையூர் அஜந்தா தியேட்டரில் பம்பாய் திரைப்படத்தில் கண்ணாளனே பாடலின் அரவிந்தசாமியே இன்று வரை மனதில் பதிந்திருப்பவர். படத்தின் தொடக்கத்தில் அவரை ஃபாதராகவும் அர்ஜூனை எதிர்கதாபாத்திரமாகவும் ஏற்று கொள்வதும் சாதாரண ஒரு சினிமா பார்வையாளராக எனக்கு சிரமமாக இருந்தது. நம் சினிமாவில் கதாநாயகர்களில் கமல்ஹாசன்  தவிர யாரும் நம்மை கதாபாத்திரமாக ஒரு நடிகரை பார்க்கப்பழக்கவில்லை.[ என்னுடைய இந்த அபிப்ராயம் கடல் வெளியான காலகட்டத்தை சார்ந்தது. நான் சினிமா பார்ப்பது மிகவும் குறைவு. அதிலிருந்து என் எண்ணத்தை சொல்கிறேன்]. அரவிந்தசாமி பாசிநிற பச்சை யெஸ்டி (Yezdi) பைக்கில் ஊருக்குள் நுழையும் காட்சியிலிருந்து படிப்படியாக அந்த காட்சி முடியும் போது ஃபாதர் சாம் ஆக நம் மனதில் மாறுவார். அவரின் இயல்பான புன்னகை இந்த ஃபாதர் கதாபாத்திரத்திற்கு பெரிய பலம். அதே போல அர்ஜூனின் இறுகிய முகமும் அதை உடைத்து வரும் சிரிப்பும் ஏதோ ஒரு வகையில் கதாப்பாத்திரத்தை நம்முள்...