Skip to main content

மறக்ககலீர்

 தொட்டனைத்தூரும் மணற்கேணி என்ற உவமையை கற்றலிற்கும் அறிவிற்கும் வள்ளுவர் சொல்கிறார். ஒரு படைப்பாளியின் படைப்பு மனநிலைக்கும் தொட்டணைத்தூரும் மணற்கேணி என்ற உவமையை சொல்லலாம்.





 சங்க இலக்கியம் ஊற்றை அடைக்கும் பொருளை 'துறுகல்' என்று சொல்கிறது. சில நேரங்களில் படைப்பாளிகளுக்குள் ஏதோ ஒன்று படைப்பு மனதை ஊறிப்பெருக விடாமல் தடுக்கிறது. படைப்புமனதை இரண்டு அடிப்படையான விஷயங்கள் பாதிக்கின்றன என்று தோன்றுகிறது. முதலாவதாக அன்றாட விஷயங்கள். 'என்னை இந்த உப்பிற்கும் புளிக்கும் கவலைப்பட விட்டுவிடாதே' என்று பாரதி அன்னை பராசக்தியிடம் கலங்கி சொல்கிறார். அடுத்ததாக அகத்தின் சஞ்சலங்கள் படைப்பு மனதை  தடுமாற வைப்பது. கம்பர் இதை'ஐம்புலக்குறும்பர்..மாறிலி கள்வர் மயக்காமல் என்னை காக்கும் தேவி' என்று சரஸ்வதியை பாடுகிறார்.( ஐம்புலன்களை ஐவகை நிலங்களாக சொல்வதில் உள்ள கவித்துவம் நம் மனதை பரவசமாக்குகிறது.


கம்பராமாயணம் போன்ற பெரும்படைப்பை இயற்றுவதற்கு முன்போ, இயற்றிய பின்னரோ கம்பர் சரஸ்வதி அந்தாதியை பாடியிருக்கக்கலாம். 

ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்

ஏய உணர்விக்கும் என்னம்மை _ தூய

உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே

இருப்பளிங்கு வாராது இடர்

என் உள்ளத்தில் கலைமகள் இருக்க இடர் வராது என்று கம்பர் சரஸ்வதி அந்தாதியை தொடங்குகிறார். துயர் என்று சொல்லாமல் செய்யும் செயலிற்கு இடையூறு ( இடர்) வாராது என்கிறார். செயல் (எழுத்து) நோக்கி எழுத்தப்பட்ட பாடல்கள். முப்பது பாடல்கள்.

அந்தாதி என்பது செய்யுள் இயற்றும் இலக்கண வகையில் ஒன்று. கம்பர் ஏன் சரஸ்வதியை எழுத அந்தாதி என்ற கூறுமுறையை தேர்ந்தெடுக்க வேண்டும்?

அந்தாதி என்ற பதம் தன்னளவிலேயே மன எழுச்சி தருவது. அந்தம்+ ஆதி. முடிவிலிருந்து தொடங்குவது. முந்தின செய்யுளின் இறுதி சொல்லை வரும் செய்யுளின் முதல் சொல்லாக்கி கவிதை பாடுவது அந்தாதி எனப்படுகிறது. இந்த இலக்கிய செயல் முறையில் உள்ள குதூகலத்தையும், சவாலையும் கவனித்தால் கம்பர் ஏன் கலை மகளைப் பாட அந்தாதி வடிவத்தை தேர்ந்தெடுத்தார் என விளங்கும். முடிவிலிருந்து தொடங்குதல். முடிவிலி. 

 அந்தாதி என்பது 'பற்றும்தீ' போல ஒரு படைப்பாக்க நிலை. முடித்த சொல்லில் இருந்து தொடங்குதல். இது தான் இந்தப்பாடல்களை கேட்கும் போது ஏற்படும் மன எழுச்சிக்குக்காரணம். ஒரு ஆவேசமான விளையட்டு போல. பூ தொடுத்தல் போல.

 சரஸ்வதி அந்தாதியின் முப்பது பாடலையும் ஒரே முன்னெடுப்பில் கம்பர் தொடர்ந்து பாடியிருக்கலாம். நாம் ஒரே முயற்சியில் வாசிக்கும் போதோ அல்லது பாடலாக ஒரே அமர்வில் கேட்கும் போது நமக்கும் அந்த மன எழுச்சி உண்டாகிறது.

காப்பு பாடலை  வாராது இடர் என்று முடிக்கும் கம்பர் உச்சமன எழுச்சியில்

பிரியாவென் நெஞ்சினில் நாவினும் நிற்கும் பெருந்திருவே..

என்று 29 ம் பாடலில் உச்சமனநிலையில் நிற்கிறார். முப்பதாம் பாடல் சிறகு முளைக்கும் பாடல்.  

29 ம் பாடலில் சரஸ்வதியை பெருந்திருவே என்று பாடி விட்டு அடுத்தப் பாடலில் பெருந்திருவும் ஜெயமங்கையுமாகி என் நெஞ்சில் நிற்கும் செஞ்சொல் வஞ்சி என்கிறார்.  திருமகளும் சக்தியும் எல்லாம் நீயே என்கிறார்.

துவக்கப்பாடல்களில்   கம்பர் அனுதினமும் கலைமகளை துதித்தால் கல்லும் சொல்லாதோ கவி . எல்லா கலைகளும் உன்னையன்றி வேறொருவர் ஒருவரால் தர முடியுமா? ,மூவுலகையும் செயலால் அமைத்த கலைமகளே .. என்று துதிப் பாடல்களாக பாடத்தொடங்குகிறார். 

படிப்படியாக அடுத்தடுத்த பாடல்களில் என்னையாளும் மடமயிலே என்று உணர்வுபூர்வமான நிலையில் மனம் ஒன்றுகிறார். துதிகள் ஒரு தொடக்கம். பின் பஞ்சு வெடித்து காற்றில் பரவுவதப்போல ஒரு தன்னிச்சை கூடுகிறது. 

அழகெறிக்கும் திருக்கோல நாயகி , மயிலே, மடப்பிடியே, கொடியே ,இளமான்பிணையே ,குயிலே, பசுங்கிளியே, அன்னமே என்று காணும் அழகெல்லாம் கலையன்னை  என்று பாடும் கம்பர் அடுத்ததாக சூரிய சந்திர உதயங்களையும் அவளாகவே காண்கிறார்

 கார்பன் உணர்பவை அனைத்தையும்  கலைதேவியின் அம்சமாக உணர்கிறார். படைப்பு என்ற சொல்லை தொடர்ந்து மாறிக்கொண்டிருக்கும் க்ரியேட்டிவ் நிலை என்று சொல்லலாம்.  அலகிலா விளையாட்டு. 

ஊறிப்பெருகும் மனதை எதுவோ தடுப்பதை கம்பர் உணர்கிறார். மனம் ஒன்றை சிந்தனை செய்யும் போதே அதன் ஊடே புகுந்து சிந்தையில் உள்ள தெளிவின்மையை அகற்றும் அறிவாக கம்பர் கலைமகளை உணர்கிறார். உள்ளோடும் தர்க்கத்தை ,

புரிகின்ற சிந்தையில் ஊடே புகுந்து இருளை அரியும் ஆயும் கலைமான்என்கிறார்.

மனதின் கூர்முனையான படைப்பாக்க மனநிலையில் படிந்திருக்கும் தடையை நீக்க  'மனக்கூறிருளுக்கு வெயிலே' என்கிறார். அந்த இடத்தில் கூரிய வாள் ஒன்று நம் மனதில் வந்து போகிறது. 

கண்முன்னே காணும் இயற்கையை அழகை பாடியப்பின் சிந்தையை அறிவை அளிக்கும் அருளான கலைமகளை அகிலத்தின் இப்பேரண்டத்தையும் படைத்த தாயாக துதிக்கின்றார். புறத்தில் அனைத்தையும்  சரஸ்வதியாகக்காணும் கம்பர் பெருவெள்ளம் சுழித்து சுழாக ஆவதைப் போல மனம் குழம்பி கலக்கும் போது மனம் தெளிந்து வரும் சொல்லாக அவளை உணர்கிறார். 

கதிர் அரியும் அரிவாளுக்கு அடுத்தடுத்து பல கூர் முனைகள். ஒவ்வொரு முனையும் கூராக இருந்தால் தான் கதிரை அரிய முடியும் என்பதால் அரிவாள் தீட்டும் போது ஒவ்வொரு முனையையும் கவனிப்பார்கள். அது போல கம்பர் அழகு, உணர்வு, அறிவு, சமர்ப்பணம் என்று ஒவ்வொரு நிலையிலும் நின்று படைப்பின் தெய்வத்தை துதிக்கிறார். இந்தப்பாடல்களின் உணர்வு தீவிரத்தின் வழியே மனதை தீட்டி கூராக்குகிறார். 

கம்பருக்கு அன்னையானவள் பாரதிக்கு மகளாகிறாள்பாரதியாரின் வெள்ளை தாமரை பூவிலிருப்பாள் என்ற கவிதை கலைமகளை துதி வகையை சேர்ந்தது.

கம்பர் சரஸ்வதியை குயிலே கிளியே என்று சொல்லும் போது ,பாரதி கூயிலின் குரலில், குழந்தைகளின் மழலை மொழியில்,  பெண்களின் இனிய குரலில் கலைமகளின் இருப்பை உணர்கிறார்

கோதகன்ற தொழிலுடைத்தாகிக்

குலவு சித்திரம் கோபுரம் கோயில்

ஈதனைத்தின் எழிலிடை உற்றாள்

இன்பமே வடிவாகிடப் பெற்றாள்

 

என்று பாரதி தன்துதியில் கலைமகளை கலையின் சாரமாக்குகிறார். 

எங்ஙனம் சென்றிருந்தீர் – எனது
      இன்னுயிரே! என்றன் இசையமுதே

 என்று தொடங்கும் பாரதியின் கலைமகள் வணக்கம் உருக்கமானது. பாரதியின் வாழ்க்கை உக்கிரமான அலைச்சல் மிகுந்த வாழ்க்கை. கம்பரின் அனல் அந்தாதியாக பற்றுகிறது. அந்த அனல் என்னவென்று நாமறியோம்.

ஆனால் பாரதியின் இந்தப்பாடலில் காலையில் எழுந்து சூரியனை பார்க்கும் போதும், கடல் அலைகள் பார்க்கும் போதும், காற்றின் ஓசையை,விடியலை பார்த்ததும் அமிழ்தம் போல பொங்கி துயர் நீக்கும் தாயை காணாமல் தேடுகிறார்.

 மாதமொர் நான்காநீர் – அன்பு
      வறுமையி லேயெனை வீழ்த்திவிட்டீர்

..................................... 


தீயினை நிறுத்திடுவீர் – நல்ல
      தீரமுந் தெளிவுமிங் கருள்புரிவீர்!
மாயையில் அறிவிழந்தே – உம்மை
      மதிப்பது மறந்தனன்; பிழைகளெல்லாம்
தாயென உமைப்பணிந்தேன் – பொறை
      சார்த்திநல் லருள்செய வேண்டுகின்றேன்;
வாயினிற் சபதமிட்டேன்; – இனி
      மறக்கிலேன், எனை மறக்ககிலீர்!


லா. . ரா தன்னுடைய பாற்கடல் என்ற நூலில் பெருந்திருவின் அருளை கூறும் போது 'வாராமல் இருப்பாளோஅவள் என்ன சத்தியம் மறந்தவளா.. 'என்று தன்னுடைய முப்பாட்டனார் எழுதிய வரிகளை குறிப்பிடுகிறார். கலைமகளிற்கும் அதுவே தான்.

 'அன்பு வறுமை'என்று பாரதி சொல்வது எழுத, வாசிக்க ,சிந்திக்க முடியாமல் இருந்த நாட்களை என்று புரிந்து கொள்கிறேன். திருமகளின் சினத்தால் ஏற்பட்ட அன்பு வறுமை. 

கவி மனதின் முற்றத்தின் கவியும் இருளில் இருந்து மனம் மொழியின் சிறகிலேரும் தருணம் இந்தப்பாடல். 

 'இனி

மறக்கிலேன்.எனை மறக்ககிலீர்' 




பாரதி கலைமகளிடம் தன்னை
மறக்க வேண்டாம், அகல வேண்டாம் என்று சொல்வதாக எடுத்துக்கொள்ளலாம். 
மறந்தும் அகல வேண்டாம் என்றும் ஆணையிட்டிருக்கலாம். கவிஞன் ஆணையிடலாம். 

 

Comments

Popular posts from this blog

டமருகத்தின் தாளமானவள்

 திரியை மட்டும் திரும்பத்திரும்ப மாற்றி..  ஒவ்வொரு முறையும் எரியும் சுடர் ஒன்றே தானா.. ?  வேறு.. வேறா..                             _  சம்யுக்தா மாயா நம் கவிதை மரபில் காதலுக்கும் பக்திக்கும் இடையில் ஈசலின் சிறகு போன்ற மெல்லிய தடுப்பே உள்ளது. அது இருபக்கமும் ஊடுருவும் சவ்வு. பக்தி அதிகமானால் காதல். காதல் அதிகமானால் பக்தி. இந்த மாற்றம் புதிரானது.  அதே போல நாயகன் நாயகி ஃபாவம். அரங்கனை நோக்கி பாடப்பட்ட பாடல்களில்  நாயகி ஃபாவம் மேலோங்கி உள்ளது. ஈசனுக்கு பித்தா..பிறைசூடா என்று சக்ய ஃபாவம் இயல்பாக வருகிறது.  ஈசனை காதலனாக ஃபாவிப்பது என்பது முன்னால் நின்று அவனை பாடுவது அல்ல. அவன் பாதியாகவே ஆவது. ருத்ரனின் பகுதி என்பது அத்தனை எளிதல்ல என்பதாலோ என்னவோ பெண்களில் திலகவதி மட்டுமே பாடியிருக்கிறார்.  காரைக்காலம்மையால் அவனை விளையாட்டு பிள்ளையாக்கி ஆட வைக்க முடிகிறது. ( பொதுவாகவே ஈசன் மீது பாடப்பட்ட பாடல்களில் நாயக நாயகி ஃபாவம் குறைவு)  பெண்கவிகளில் ருத்ரனுக்கு இணையான காளியை சம்யுக்தாவின...

மூள் தீ

        வாசகசாலை இணைய இதழில் 2020 ஜூலை இதழில் வெளியான சிறுகதை.                             மூள் தீ ம்மா..ம்மா…என்ற பதறும் குரல் கேட்டு நடுநிசி கடந்த பின்னிரவு நேரத்தில் பதறி விழித்தது கணபதிபாளையம்.இரு மச்சுக்கட்டிடங்களுக்கு இடையிலிருந்த நூறாட்டுகாரபெரியசாமி தாத்தாவின் தகரம் வேய்ந்த வீட்டை நோக்கி ஆட்கள் ஓடினார்கள். கைலியை மடித்துகட்டிக்கொண்டு வெற்றுடலுடன் தெருவின் முச்சந்தியில் நின்ற சரவணன், “வீட்ல இருக்கற தண்ணிக்குடத்தை எடுத்துக்கிட்டு ஓடியாங்க…”என்று கத்தியவாறு ஓடினான்.நாய்கள் தெருவில் நிலைகொள்ளாமல் திரிந்தன. பெரியசாமி தாத்தாவின் கட்டுத்துறையிலிருந்து அவிழ்த்துவிடப்பட்ட ஆட்டுக்குட்டிகளின் கண்கள் பதறியபடியிருந்தன.அவற்றை இழுத்து தெருவோரமாக மின்கம்பத்தில் மேனகா கட்டிக் கொண்டிருந்தாள்.அவை வீட்டை நோக்கி அடிக்குரலில் கத்தின.நான்குவீடுகள் தள்ளியிருந்த இடிந்தவீட்டின் நுணாமரத்திலிருந்து பறவைகள் சலசலப்பு கேட்டது. ஆட்கள் தண்ணீரை வாரியிறைப்பதற்கு மேல் தீ எழுந்து விட்டிருந்தது.உள்ளே கட்டுத்துறையின் மூங்கில்கள்...

அலைகடல் துலாவும் கட்டுமரம்

 எழுத்தாளர் ஜெயமோகனின் கடல் நாவலை ஏற்கனவே திரைப்படமாக பார்த்த நினைவிலிருந்து வாசிக்கத்தொடங்கினேன்.   இத்தனை படங்களுக்கு பின்பும் ஏழாம் வகுப்பு விடுமுறையில் துறையூர் அஜந்தா தியேட்டரில் பம்பாய் திரைப்படத்தில் கண்ணாளனே பாடலின் அரவிந்தசாமியே இன்று வரை மனதில் பதிந்திருப்பவர். படத்தின் தொடக்கத்தில் அவரை ஃபாதராகவும் அர்ஜூனை எதிர்கதாபாத்திரமாகவும் ஏற்று கொள்வதும் சாதாரண ஒரு சினிமா பார்வையாளராக எனக்கு சிரமமாக இருந்தது. நம் சினிமாவில் கதாநாயகர்களில் கமல்ஹாசன்  தவிர யாரும் நம்மை கதாபாத்திரமாக ஒரு நடிகரை பார்க்கப்பழக்கவில்லை.[ என்னுடைய இந்த அபிப்ராயம் கடல் வெளியான காலகட்டத்தை சார்ந்தது. நான் சினிமா பார்ப்பது மிகவும் குறைவு. அதிலிருந்து என் எண்ணத்தை சொல்கிறேன்]. அரவிந்தசாமி பாசிநிற பச்சை யெஸ்டி (Yezdi) பைக்கில் ஊருக்குள் நுழையும் காட்சியிலிருந்து படிப்படியாக அந்த காட்சி முடியும் போது ஃபாதர் சாம் ஆக நம் மனதில் மாறுவார். அவரின் இயல்பான புன்னகை இந்த ஃபாதர் கதாபாத்திரத்திற்கு பெரிய பலம். அதே போல அர்ஜூனின் இறுகிய முகமும் அதை உடைத்து வரும் சிரிப்பும் ஏதோ ஒரு வகையில் கதாப்பாத்திரத்தை நம்முள்...