நேற்று ஒரு கதை எழுதுவதற்கு பாலைநில மலர்களை தேடி பார்த்துகொண்டிருந்தேன். குறிப்பாக இஸ்ரேல் பாலை நில மலர்களை பார்த்தேன். கூகுள் அதாகவே அடகாமா பாலைவன மலர்களை காட்டியது.
எத்தனை வகை மலர்கள். எத்தனை நிறங்களில்!
பாலைநிலத்தின் வசந்த காலங்களில் மிகக்குறைவான மழைக்குப்பின் இந்த மலர்கள் சட்டென்று மலர்கின்றன. நம் கள்ளி பூப்பது போல.
நல்ல இரத்த நிறத்தில் பாலைவன ட்யூலிப்பை பார்த்ததும் இயேசுவின் படங்களில் அவர் மீதுள்ள சிவந்த சால்வை மனதில் வந்தது.
பாலைவனத்தில் ,மணலின் கொதிக்கும் வெம்மையில், இத்தனை மலர்செடிகளின் விதைகள் உயிர்காத்து, ஒருமழையைக்காத்து, ஒருகாலநிலையை காத்து நிற்கிறது என்பதை நினைக்கும் போது இயற்கையின் இயல்பை நினைத்து மனம் பரவசமாகிறது.
வரிசையாக பூக்களை பார்த்துக்கொண்டிருக்கும் போது வெண்மையும் மஞ்சளுமாக ஒருவகை மலர். அது என்னவோ என்னை மறுபடி மறுபடி பார்க்க செய்தது. உள்ளுக்குள் அதுவோ என்ற எண்ணம். அப்படி இல்லை என்றால் பதின் வயதின் அழகான சித்திரம் ஒன்று உடைந்து விடுமே என்று அந்தப் பூவின் பெயரை பார்ப்பதை தவிர்த்தேன்.இதற்கு முன்பும் சிலமுறை அந்தப்பூவை தேடும் ஆவலை தவிர்த்திருக்கிறேன்.
வில்லியம் வேர்ட்ஸ் வொர்த்தின் டெபோடைல்ஸ் (Daffodils)என்ற Lyrical poem எங்களுக்கு பத்தாம் வகுப்பில் பாடமாக இருந்தது. பத்தாம் வகுப்பின் முதல் ஆங்கில கவிதை. ஒரு உரைநடை, ஒரு கவிதை, ஒரு உரையாடல், இலக்கணம், ஒரு துணைப்பாடம் சேர்ந்தது ஒரு பாடப்பகுதி. இது போல பத்துப்பகுதிகள் பத்தாவது ஆங்கில புத்தகத்தில் இருந்தது.
ஒன்பதாம் வகுப்பு பாஸாவதுதான் நான் படிக்கும் போதெல்லாம் பெரியவிஷயம். சிறப்பு வகுப்பு, கூடுதல் நேரமெல்லாம் கிடையாது. ட்யூஷனெல்லாம் எட்டாம் வகுப்புடன் முடிந்துவிட்டது. பனிரெண்டாம் வகுப்பு வரை வகுப்பில் கவனிப்பது மட்டும் தான். அதனால் வகுப்பில் கவனம் தீயாய் இருக்கும். துளியும் தவறவிடாத கவனம். ஆனால் இந்த ஆண்டுகளில் தமிழ், ஆங்கிலத்திற்கு எனக்கு சரியான ஆசிரியர்கள் அமையவில்லை. இரண்டையும் வகுப்பில் பயிற்சி கொடுத்து மனப்பாடம் செய்யவிட்டார்கள்.
ஆனால் பத்தாம் வகுப்பில் என்னுடைய ஆங்கில ஆசிரியை அல்ஃபோன்ஸ் ஜெனட் பாய் விதிவிலக்கு. வகுப்பு நேரத்தில் ஆங்கில இலக்கணத்திற்காக எங்களை சக்கையாய் பிழிந்தெடுத்துவிட்டு சாயங்காலம் பள்ளிநேரத்திற்கு பிறகு கவிதை, உரைநடையில் உள்ள கதை, துணைப்பாடத்தை ரசித்து நடத்துவார். இந்த தேவதையா காலையில் காளியாக கண்களை உருட்டி மூங்கில் குச்சியை தொண்டையில் வைத்தது என்று மலைப்பாக இருக்கும். எண்பது பேர் உள்ள வகுப்பில் வரிசையாக கரும்பலகையில் உள்ள இலக்கண கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும். எனக்கு அவ்வளவு சத்தமாக குரல் எழாது. முயற்சி செய்தாலும் பத்து பேர் கேட்கலாம்.
" எந்தா தேவி.. அங்கோட்டு வந்தேன்னா.." என்றாலே எனக்கு பீதியாகி மேலும் குரல் தொண்டையிலேயே நின்றுவிடும். Tense நடத்திய ஒரு ரணகள நாளில் டீச்சர் பயங்கர கடுப்பில் இருந்தார். என் முறை வந்த போது என் குரலால் எரிச்சலாகி சட்டென்று வேகமாக வந்து மூங்கில் குச்சியை தொண்டை குழியில் வைத்துவிட்டார். நான் வாயே திறக்கவில்லை. வைத்த வேகத்தில் உடனே குச்சியை எடுத்துவிட்டு, " பொன்னு மக்கா.. இப்பம் சொல்லு, "என்றார். நான் அப்படியே நின்றேன்.
டெஸ்க்கில் என் நோட் புக்கில் எழுதியிருந்த பதிலை பார்த்துவிட்டு, " எந்தாதிது.. கரெக்ட்டு தானே.." என்று அமைதியாகி என்னை பார்த்தார். குச்சியை கைமாற்றிவிட்டு தோளில் தட்டிவிட்டு அடுத்த பிள்ளையிடம் பாய்ந்தார். யாரும் காப்பி கூட அடிக்க மாட்டார்கள். யார் சரியான பதில் எழுதுகிறோம் என்ற புரிதல் இருக்காது. பத்தாவது வரைக்கூட ஆங்கிலத்தில் பேதையாக இருக்கும் எங்களை தேற்றி எடுப்பதற்குள் ஒவ்வொரு ஆண்டும் அவர் படாதபாடுபடுவார்.
அந்த தொடுகை தான் எனக்கு Daffodil. அன்று சாயங்காலவகுப்பில் Daffodils poem நடத்தினார். இப்போது நினைக்கும் போது முதன்முதலாக கவித்துவம் என்பது என்னை தொட்ட தருணங்கள் என்று அவர் வகுப்புகளை சொல்ல தோன்றுகிறது. உரைநடை துணைப்படம் என்று அனைத்தையும் ரசித்து விரிவாக நடத்துவார்.
உயர்நிலை மேல்நிலை பயின்ற நான்கு ஆண்டுகளில் ஜெனட் டீச்சர் வகுப்புகள் தான் பாலையில் பெய்த சிறு மழை என்று சொல்வேன்.
அவர் நடத்திய daffodils poem மூலம் நான் கற்பனை செய்திருந்த மலரை மனதிற்குள் பொத்தி வைத்திருந்தேன். அந்த மலர் அன்பின் அடையாளம். டீச்சர் திருமணம் செய்துகொள்ளாதவர்.
எப்போதாவது சீருடை இல்லாத நாட்களில் வண்ண ஆடை அணிந்து செல்லும் போது வகுப்பு வாயிலில் மூங்கில் குச்சியுடன் நிற்கும் டீச்சர் நமுட்டு சிரிப்புடன் பிள்ளைகளை பார்த்து ரசிப்பார். குச்சியை என் ஜடையில் வைத்து "பூ வச்சுட்டு வரலியா, " என்பார். ( உணர்ச்சிவயப்பட்டால் மட்டுமே மலையாளம் வரும். மற்றபடி உள்ளூர் தமிழ் நன்றாக பேசுவார்). பெரும்பாலும் பதினான்கு பதினைந்து வயதில் வயதெய்தும் பிள்ளைகள் ஒரு வாரம் விடுமுறை முடிந்து புதுஆடையுடன் வரும் போது அவரின் புன்னகையுடன் "விருந்தெல்லாம் முடிச்சாச்சு இல்லையா... இனிமே படிக்கணும்" என்பார். ( அவர் மிரட்டல் உருட்டல் தான் அதிகம். குச்சி கையில் இருக்கும். பயன்படுத்துவது அரிது)
நான் மேல் நிலை பள்ளியில் படிக்கும் போது அவருக்கு கடிதங்கள் எழுதியிருக்கிறேன். அவரும் எனக்கு எழுதி கொடுத்தனுப்பி இருக்கிறார். அவருடைய பணி ஓய்வு விழாவிற்கு அய்யாவை அழைக்க வீட்டிற்கு ஒரு முறை வந்தார். அதே நமுட்டு சிரிப்புடன், "தேவியல்லே, " என்று ஒரே வார்த்தை தான். அய்யாவிடம் தான் பேசிக்கொண்டிருந்தார்.
அந்த விழாவிற்கு நானும் சென்றேன். அப்போது உள்ளூர் பள்ளியில் தற்காலிக ஆசியராக இருந்தேன். அவ்வளவு மாணவிகள் வந்திருந்தார்கள். பள்ளி ஆசிரியர்கள், மருத்துவர்கள், கல்வி துறை அதிகாரிகள், தலைமைஆசிரியர்கள், குடும்ப தலைவிகள், அரசு பணிகளில் இருந்த அவருடைய மாணவிகள் மைதானம் முழுவதும் நிரம்பி இருந்தார்கள்.
நிறைய கண்ணீரும் சிரிப்புமாக கொந்தளிப்பான இரவு அது. இருசக்கர வாகனத்தில் திரும்பி அய்யாவுடன் வரும்போது கூடவே வந்த நிலா இன்னும் நினைவில் உண்டு. அன்று கும்பல் சற்று குறைந்ததும் டீச்சரிடம் ஆசி பெற சென்றேன்.
அவர் காலடியில் மண்டியிட்டதும்," தேவியல்லே.. "என்று நெற்றியில் சிலுவை குறியிட்டப்பின்,
கன்னத்தில் கைவைத்து.. " நீயல்லே அது எழுதியது... "என்று கேட்டார்.
"எது டீச்சர்.. "
"அடிக் கள்ளி..ஊரெல்லாம் ஒட்டிட்டுண்டே அந்த நோட்டீஸ்.. "
"அது ஆனிடீச்சர் அடிச்ச நோட்டீஸ் . . "
"எழுந்திரு மக்களே.. உன்னட டீச்சருக்கு டீச்சர் நானாக்கும் .. அதுக்குள்ள வரிகள் யாராக்கும் எழுதியது, "என்றதும் நான் சிரித்தேன். அதற்குள் அவருக்காக நிறைய பேர் காத்திருந்தார்கள்.
"சூசிச்சிருக்கனும் ஈஜீவிதத்தில்.. கேட்டோ, "என்று மீண்டும் தலையில் கை வைத்தார்.
உணர்ச்சிவயப்பட்டிருந்த அய்யா எதாவது பேசனுமே என்று, " ஊருக்கு போய் தினமும் வாக்கிங் போங்க டீச்சர்... "என்றார்.
"சரிங்க தம்பி, " என்று சொல்லி ஒரு சால்வையை அவர் கைகளில் தந்தார். அரசுபள்ளி ஆசிரியர்கள் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு ஒன்றாகவே பயிற்சி வகுப்புகள் நடக்கும். பெரும்பாலும் எங்கள் பள்ளி ஆண்டுவிழா விருந்தினர்களில் பக்கத்து ஊர் பள்ளி ஆசிரியராக அய்யா செல்வார். விரல்விட்டு எண்ணும் அளவில் ஒன்றிரண்டு ஆண்களே தொடர்ந்து எங்கள் பள்ளியின் விழாக்களில் காண முடியும்.
மேலும் எங்கள் பள்ளிக்கூடம் வயல்களுக்கு நடுவில் என்பதால் இடது வழியில் உள்ளதேவாலயத்திற்கோ வலது வழியில் அடுத்த ஊருக்கு செல்வதற்கோ விடுதியில் உள்ள ஆசிரியைகளும் சிஸ்ட்டர்களும் நடக்க வேண்டும். இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் வழியில் பார்த்தால் வண்டியில் கொண்டு விடுவார்கள். அய்யா எப்போதும் வரும் போதும் திரும்பும் போதும் பள்ளி வாயிலில் வண்டியின் வேகத்தை குறைப்பார். அய்யா போல எப்போதும் அவர்களுக்கு lift கொடுக்கும் ஒரு தலைமுறை சகோதரர்கள் இருந்தார்கள். இப்போது அவர்களே வண்டி ஓட்ட கற்றுக்கொண்டுவிட்டார்கள்.
பணிஓய்வு விழாவிற்கு பிறகு நான் டீச்சரை பார்க்கவில்லை. அவருடைய ஊர் கன்னியாகுமரி நாகர்கோவில் பக்கம் ஒரு கிராமம். ஊர்பெயர் தெரியவில்லை. அவர் சொல்லியதில்லை. பெரும்பாலும் யாருக்கும் தெரியாது.
என்னுடைய முதல் புத்தகம் வெளியான போது அவருடன் பேச விரும்பி அலைபேசி எண் விசாரித்தேன். எதற்காகவோ கோட்டபாளையம் சென்ற அம்மா இன்னோரு டீச்சரிடம் கேட்டு வாங்கித்தந்தார்.
"கமலதேவி பேசறேன் டீச்சர், "என்றதும்
"தேவியல்லே, "என்றார். அது வரை அந்த அழைப்பை இத்தனை ஆழமாக உணர்ந்த தில்லை. இரண்டு மணி நேரம் பேசினார். எதுவோ இல்லாமலாகி எதுவோ பிறந்தது போல மொத்த வாழ்க்கையையும் என்னிடம் பகிர்ந்து கொண்டார்.
பின்பு என்னை பற்றி கேட்டுக்கொண்டிருந்தார்.
"கதை எழுதறே என்ன... "
"ஆமா டீச்சர்"
"சொல்லனும்ன்னாக்கும் விளிச்சது"
"உங்கள்ட்ட பேசனும்ன்னு தோணும் பிறகு என்னத்த பேசறதுன்னு தோணும்"
"அதாக்குமே.."
"என்ன டீச்சர்.. "
"என்னட ஒற்றைக்கு ஒற்றை ஸ்டூடெண்ட் .. "
"என்ன டீச்சர்.. "
"ஸ்டூடென்ஸில் டாக்டர்ஸ் உண்டு.. என்ஜினியர் மற்ற பணியெல்லாம் என்னிட்ட பிள்ளைகள் சொல்லிட்டுண்டு.. ரைட்டரல்லே.."என்று சிரித்தார்.
"சூசிச்சிருக்கனும்.. கேட்டோ.. "
"சரிங்க டீச்சர்"
"சரியாயிட்டு மனசிலாயோ... "
உண்மையில் இன்றுவரை அவர் சொல்லிய தன் முழு அர்த்தம் புரியவில்லை. பொதுவாக கவனமாக இருக்க வேண்டும் என்று புரிந்து கொள்கிறேன். அந்த வார்த்தை தாயின் சொல். வாழ வாழ வளரும் என்று புரிகிறது.
அந்த வெள்ளை மஞ்சள் மலர்களை இன்று பிற்பகலில் daffodils என்று கூகுள் காட்டியது.
அடுத்த ஆறு மாதத்தில் இறந்துவிட்டார். டீச்சர் நடத்திய கவிதைகளாலும் துணைப்பாடங்களாலும் பத்தாம் வகுப்பு அழகான நினைவாக உள்ளது. பதின் வயதில் மனதில் மலர்ந்த daffodils இன்றும் நாளையும் எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும். ஒவ்வொரு நல்ல கவிதையை.. புனைவை வாசிக்கும் போதும்.
இலக்கியமும் கவித்துவமும் எவ்வகையிலாவது பதின் வயதின் முற்பகுதியில் மனதில் மலரும் வாய்ப்பு பெற்றவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.

Comments
Post a Comment