Skip to main content

காவிரி

கல்லூரியில் முதுநிலை படிக்கும் போது ஒவ்வொருவரும் தனிப்பட்ட சிறு ஆய்வு செய்ய வேண்டும். நான் படிக்கும் போது நுண்ணுயிரியலில் நோயாளிகளின் இரத்த மாதிரிகளில் இருந்து நுண்ணுயிரிகளை கண்டுபிடிப்பதும், அதை சார்ந்து சில சிறு ஆய்வுகள் அப்போது முக்கியத்துவம் பெற்றிருந்தது. அது வேலைவாய்ப்பிற்கான முன்னோட்டமும் கூட.  மருத்துவமனையில் மைக்ரோபயாலஜிஸ்ட்டாக பயிற்சி எடுக்க உதவும். எனவே அந்த ஆய்வுக்கு போட்டி இருந்தது.


புற்றுநோயாளிகளின் இரத்தமாதிரிக்காக திருச்சியில் பழமையான புற்றுநோய் மருத்துவமனையான ஜி. வி. என் மருத்துவமனையின் இலவச மருத்துவ பிரிவில் நிற்கும் போது எனக்கு கைகளிலும் மனதிலும் சொல்லமுடியாத ஒரு உணர்வு இருந்தது. 

நான் எப்போதுமே அறிவியல் மாணவியாக என்னை உணர்ந்ததில்லை. பதினைந்து வயதிலேயே பதினொன்றாம் வகுப்பு சேரும் போது 'அட்வான்ஸ் தமிழ்' எனப்படும் சிறப்பு தமிழ் பிரிவு உள்ள பள்ளியில் சேர விரும்பினேன். முசிறி அமலா பள்ளியில் படிக்கிறேன் என்று அய்யாவிடம் சொன்னேன். பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் அதிகம் என்பதால் பள்ளித்தலைமைஆசிரியையும் அய்யாவும் என்னை 'ப்யூர் சயின்ஸ்' குரூப்பில் தள்ளிவிட்டார்கள்.

 எனக்கு கணக்குப்பாடம் சிக்கல் என்று ஆசிரியராக அய்யாவிற்கு தெரியும் என்பதால் கணிதப் பிரிவிலிருந்து தப்பினேன். அவர் மூங்கில் குச்சியால் என்னை வெளுத்ததே அல்ஜுப்ராவின் அடிப்படைகளை என்னால் நினைவில் வைத்து கணக்குகளை தீர்க்க முடியவில்லை என்பதால் தான். கணித ஆசிரியரான அய்யா கணக்கு சொல்லித்தரும் போது நன்றாக புரியும். ஆனால் நோட்புக்கில் நானாக போடும் போது எங்கோ பிசகி முழு கணக்கும் தப்பாகி ஆகவிடும். 

அது தெரிந்தே அய்யா என்னை பதினொன்றாம் வகுப்பில் கணக்குப்பிரிவில் சேர்க்கவில்லை. ஆனால் அறிவியல் வகுப்பில் கரப்பான் பூச்சி.. எலி அறுவைகள் செய்ய மிகவும் திணறினேன். தாவரவியலில் பூக்களின் மீது புத்தம் புதிய ப்ளேடை வைக்க தடுமாற்றம் இருக்கும். அப்போதே நான் பூக்கள் பறிப்பதை நிறுத்தி மூன்று நான்கு ஆண்டுகள் இருக்கும். 

கல்லூரியில் நுண்ணுயிரியலில் முதல் மதிப்பெண்கள் (நோய் எதிர்ப்பியியல்) அவ்வபோது எடுத்த போதும் அதற்காக இரத்தம் எடுக்கும் பயிற்சி எனக்கு வதையாக தான் இருந்தது. 

என்னுடைய பேராசிரியர் 'மைண்ட்ல நீ ரொம்ப சாஃப்ட்ன்னு ஃபிக்ஸ் பண்ணாத.. யாரும் அப்படில்லாம் கிடையாது.. நோயை கண்டுபிடிக்கறது தான் உண்மையில் கருணையும் அன்பும்' என்பார். 

அவர் கையிலிருந்து தான் முதன் முதலாக ரத்தம் எடுத்தேன். ஆனால் அன்று ஜி. வி. என் மருத்துவமனையின் இலவச புற்றுநோய் பிரிவின் ஒரு மேசையில் கையிலிருந்த சிரிஞ்ச்சை வைத்துவிட்டு திரும்பி வந்துவிட்டேன். 

"நீ ப்ராஜெக்ட் முடிக்கபோறதில்லை... எல்லா பசங்களும் முதல் ஸ்டெப் தாண்டியாச்சு.. எம். எஸ்.சி டிகிரி எப்படி வாங்குவ, "என்று வில்சன்சார் கத்தியது இன்னும் நினைவில் இருக்கிறது. ஏனெனில் ஒரு வாரமாக நான் மருத்துவமனைக்கு சென்று சென்று திரும்பிக்கொண்டிருந்தேன். அந்த மருத்துவமனையில் ஒரு முதுநிலை மாணவருக்கு அனுமதி கிடைப்பதே அரிது. அது திருச்சியில் முதன்முதலில் நிறுவப்பட்ட புற்றுநோய் மருத்துவமனை. என்னுடைய நோய் எதிர்ப்பியல் ( Immunology) பாடத்திற்கான மதிப்பெண்களுக்காக அங்கு அனுமதி கிடைத்தது. 

மற்றவர்கள் அவர்களின் ஆய்வின் அடுத்தக்கட்டத்திற்காக பாரதிதாசன் பல்கலை கழக நூலகத்திற்கு சென்ற அன்று நான் மீண்டும் மருத்துவமனைக்கு கிளம்பினேன். மனதில் இன்னொரு திட்டமும் இருந்தது. மலைக்கோட்டைநிறுத்தத்தில் இறங்காமல் காவிரி பாலத்திற்கு அருகில் இறங்கி நடந்து அங்குள்ள படித்துறையில் அமர்ந்தேன். பெண்கள் துணிதுவைத்துக் கொண்டிருந்தார்கள். குழந்தைகள் சிறுவர்கள் குளித்துக் கொண்டிருந்தார்கள். ஆலமரநிழல் பின் காலை வெயிலிற்கு இதமாக இருந்தது. 

சிறிது நேரம் சென்றது. குளித்துவிட்டு புடவையை சுற்றியபடி ஒரு அக்கா என்னை பார்த்து, "குளிக்க வரல போலையே. .." என்றாள். 

"இல்ல.. காவிரி தண்ணி எடுக்க வந்தேன்.." என்றேன். அது இயல்பாக நடக்கும் விஷயம். அவள் தலையாட்டிவிட்டு துணிகள் நிறைந்த கூடையை எடுத்து இடுப்பில் வைத்துக்கொண்டு படியேறினாள். நான் நீரில் இறங்கி நடந்து ஒரு மணல்திட்டிலிருந்து ஈரமானமண்ணையும் நீரையும் கொண்டுவந்திருந்த ஸ்டிரைல் கண்டெய்னரில் போட்டு மூடினேன். திரும்பும் போது ஒரு அம்மாள் ' அப்டியே நிமிர்ந்து ரெண்டு பக்கமும் கும்பிடு போட்டுக்க' என்றார். வலதுபுறம் மலைக்கோட்டை இடதுபுறம் அரங்கனின் ஆலயத்தின் வெள்ளை கோபுரம். 


ஆய்வகத்திற்கு வந்து வில்சன்சாரிடம் மாதிரி குப்பிகளை கொடுத்துவிட்டு ' Isolation of soil and water microbes from the Cauvery river ங்ற தலைப்பு சரியா இருக்குமா சார், " என்று கேட்டேன். உதவி வழிகாட்டியான   ஸ்ரீமன் கலங்கிய என் கண்களை பார்த்து ' எந்த ஊர்லருந்து வந்தா என்ன..பயாலஜி படிக்க மனசில கட்ஸ் வேணும்' என்றார். அது உண்மை தான். நான் எப்போதும் அறிவியல் மாணவியாக இல்லை. எங்கள் ஊரின் மீது அப்பட்டமான வன்முறை கறைகள் இருந்தன. அதனால் தான் அவர் அப்படி கூறினார். ( எந்த ஊரில் தான் அது இல்லை.) 

அன்று நீரும் மணலுமாக பார்த்த காவிரி என் கனவில் அவ்வப்போது வரும். இந்த ஆண்டு இன்று வரை கோடை தான். இந்த ஆண்டு மழை இல்லை. ஊற்றுகள் வற்றிக்கொண்டிருக்கின்றன. கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள புளியஞ்சோலை வற்றி விட்டது. புளியஞ்சோலை வற்றியதை முதன்முதலாக பார்த்த போது தான் என் முதல் கதையான  'விடாய்' எழுதினேன். 

முப்பதுஅடிக்கு மேல் ஆழ்குழாய் கிணறு இறக்க முடியாமல் நிலத்தடி நீர் யானை மத்தகம் போல எழுந்து ஆழ்குழாய் தோண்டும் கருவியை தடுக்கும் நிலம் இது. எப்போதாவது வரளும். 2016 ல் வரண்டது. ஆழ்குழாய் கிணறுகளும் ஆழமில்லை. அரசு ஏற்படுத்தித் தரும் காவிரி நீர் வசதி குழாய்கள் பாதைக்கு கீழ் மட்டத்தில் இருந்ததால் குழிகள் பறித்து நீர் எடுத்தோம். நீர் வந்து கொண்டே இருக்கும். நாமாக அடைத்தால் தான் உண்டு. நேற்று கூட தங்கை குடியிருக்கும் வீட்டில் காவிரி நீர் வசதி இணைத்தார்கள். முப்பது அடி ஆழ் குழாயில் நீரில்லை. 

காவிரியின் ஊற்றுகள் வற்றுவதில்லை. மேலே பாலை போல தோன்றலாம். ஆனால் தாகத்திற்கான நீர் வற்றுவதல்லை. தாயின் தனம் போல. மறுநாளே பிள்ளை போல துள்ளி வருவாள். அடுத்த நாள் அரங்கனை சூழ்வாள். 

எங்களின் முதுநிலை ஆய்வு மூன்று மாதங்களில் முடிந்தது. அது நிறைவு பெற்று கல்லூரி திரும்பும் முன் எங்களின் வழிகாட்டி வில்சன் சார் மற்றும் ஸ்ரீமனுடன் ஹோட்டல் கண்ணப்பாவிற்கு இரவுஉணவு உண்ண சென்றோம். மொத்தம் இருபது பேர். அது திருச்சி உறையூரில் முக்கியமான அசைவ உணவகம். 

"நீ என்ன சாப்பிடற, "என்று வில்சன் சார் கேட்டார். 

 ஸ்ரீமன் சார் அவர் அமர்ந்திருந்த மேசையை தட்டி,"இந்த டேபிள் எனக்கும் கமலாவுக்கும்" என்றார். அதில் காளானும் சப்பாத்தியும் இருந்தது. 

"சார்.. நான் அங்க போகல.. சார் எப்பப் பாத்தாலும் முறைப்பார்" என்றேன். 

"கடைசிநாள் தானே.. ஒன்னும் சொல்லமாட்டார், "என்று ஸ்ரீ மன்சார் பக்கமாக திரும்பினார். 

சாப்பிடும் போது நான் பேசவில்லை. அவராகவே உணவை வைத்தார். 

"உங்க ஊர் மேல நிறைய புகார்.. புரளிகள் உண்டுல்ல"என்று கேட்டவுடன் தலையை குனிந்து கொண்டேன். 

"அப்பாவை வெட்டி மடைவாயில வச்சு வாய்க்கால் தண்ணி அடைச்சுட்டு வந்தாராமே ஒருத்தர், "

"அது எப்பவோ.. "

"பத்து வருஷத்துக்கு முன்னாடி தானே, "

 "ஏன் அப்படி நடந்துச்சுன்னா.. "என்ற நான் அதற்கு விளக்கம் தரக்கூடாது என்று அதற்கு மேல் பேசவில்லை. 

கொஞ்சநேரம் கழித்து தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, "உங்க ஊர்க்கூடத்தான் புனிதத்தளம், "என்றேன். அனைவரும் சிரித்தனர்.  சூழல் சகஜமானது. 

இரவு உணவு முடித்து திரும்பும் போது  சாலையில் ," ஆனா காவிரி நம்ம காவிரி தானே சார்.. அந்த மைக்ரோப்ஸ் எல்லாமும் அதுல இருக்குல்ல, "என்றேன். 

"அழுக்கில்லாத கசடில்லாத ஆறுண்டாம்மா, "என்றவரிடம் ,"ஊரும் அப்படித்தான்  சார், "என்றேன். 

நுண்ணுயிரியல் நினைவின் ஆழத்தில் புதைந்துவிட்டது. என்னுடன் படித்த ஒரே ஒருத்தி தான் நுண்ணுயிரியல் சார்ந்த வேலையில் இருக்கிறாள். ஆனாலும் அது சார்ந்த புனைவை எப்போதாவது நான் எழுதக் கூடும். 

அன்று என்னுடைய சிறியஆய்வு மிக சாதாரணமானது. ஆனால் காவிரியுடன் என் உறவு மானசீகமானது. சிலருக்கு அவள் அன்னை. சிலருக்கு மகள். அரங்கனின் காதலி. அவளில் நாம் அஸ்தியாக கரைகிறோம். முன்னோர் தெரியவில்லை என்றால் காவிரியம்மாவாகவும் அரங்கசாமியாகவும் நமக்காக வந்து நிற்கிறாள். நம்மை கடலுடன் சேர்த்து பிறவி நிறைவு செய்கிறாள்

 என்னுடைய படைப்பூக்க மனநிலையை தூண்டும் சக்திகளில் காவிரியும் ஒன்று. காவல் கோட்டம் நாவலில் மலைக்கோட்டை உச்சியில் நின்று சிராப்பள்ளியை நிரவி செல்லும் காவிரி பெருவெள்ளத்தை ராணி மங்கம்மாள் காணும் சித்திரமும், தி. ஜாவின் அம்மா வந்தாள் நாவலில் அப்பு குளிக்கும் சாந்தமான காவிரியும் மனதில் நிற்கும் காவிரி. 

அவள் இயல்பாக இருந்தால் இந்த நிலம் முல்லை, நிலையில் திரிந்தால் பாலை. அவள் எப்போதும் ஒரே நிலையில் இருப்பதில்லை. 



Comments

Popular posts from this blog

டமருகத்தின் தாளமானவள்

 திரியை மட்டும் திரும்பத்திரும்ப மாற்றி..  ஒவ்வொரு முறையும் எரியும் சுடர் ஒன்றே தானா.. ?  வேறு.. வேறா..                             _  சம்யுக்தா மாயா நம் கவிதை மரபில் காதலுக்கும் பக்திக்கும் இடையில் ஈசலின் சிறகு போன்ற மெல்லிய தடுப்பே உள்ளது. அது இருபக்கமும் ஊடுருவும் சவ்வு. பக்தி அதிகமானால் காதல். காதல் அதிகமானால் பக்தி. இந்த மாற்றம் புதிரானது.  அதே போல நாயகன் நாயகி ஃபாவம். அரங்கனை நோக்கி பாடப்பட்ட பாடல்களில்  நாயகி ஃபாவம் மேலோங்கி உள்ளது. ஈசனுக்கு பித்தா..பிறைசூடா என்று சக்ய ஃபாவம் இயல்பாக வருகிறது.  ஈசனை காதலனாக ஃபாவிப்பது என்பது முன்னால் நின்று அவனை பாடுவது அல்ல. அவன் பாதியாகவே ஆவது. ருத்ரனின் பகுதி என்பது அத்தனை எளிதல்ல என்பதாலோ என்னவோ பெண்களில் திலகவதி மட்டுமே பாடியிருக்கிறார்.  காரைக்காலம்மையால் அவனை விளையாட்டு பிள்ளையாக்கி ஆட வைக்க முடிகிறது. ( பொதுவாகவே ஈசன் மீது பாடப்பட்ட பாடல்களில் நாயக நாயகி ஃபாவம் குறைவு)  பெண்கவிகளில் ருத்ரனுக்கு இணையான காளியை சம்யுக்தாவின...

மூள் தீ

        வாசகசாலை இணைய இதழில் 2020 ஜூலை இதழில் வெளியான சிறுகதை.                             மூள் தீ ம்மா..ம்மா…என்ற பதறும் குரல் கேட்டு நடுநிசி கடந்த பின்னிரவு நேரத்தில் பதறி விழித்தது கணபதிபாளையம்.இரு மச்சுக்கட்டிடங்களுக்கு இடையிலிருந்த நூறாட்டுகாரபெரியசாமி தாத்தாவின் தகரம் வேய்ந்த வீட்டை நோக்கி ஆட்கள் ஓடினார்கள். கைலியை மடித்துகட்டிக்கொண்டு வெற்றுடலுடன் தெருவின் முச்சந்தியில் நின்ற சரவணன், “வீட்ல இருக்கற தண்ணிக்குடத்தை எடுத்துக்கிட்டு ஓடியாங்க…”என்று கத்தியவாறு ஓடினான்.நாய்கள் தெருவில் நிலைகொள்ளாமல் திரிந்தன. பெரியசாமி தாத்தாவின் கட்டுத்துறையிலிருந்து அவிழ்த்துவிடப்பட்ட ஆட்டுக்குட்டிகளின் கண்கள் பதறியபடியிருந்தன.அவற்றை இழுத்து தெருவோரமாக மின்கம்பத்தில் மேனகா கட்டிக் கொண்டிருந்தாள்.அவை வீட்டை நோக்கி அடிக்குரலில் கத்தின.நான்குவீடுகள் தள்ளியிருந்த இடிந்தவீட்டின் நுணாமரத்திலிருந்து பறவைகள் சலசலப்பு கேட்டது. ஆட்கள் தண்ணீரை வாரியிறைப்பதற்கு மேல் தீ எழுந்து விட்டிருந்தது.உள்ளே கட்டுத்துறையின் மூங்கில்கள்...

அலைகடல் துலாவும் கட்டுமரம்

 எழுத்தாளர் ஜெயமோகனின் கடல் நாவலை ஏற்கனவே திரைப்படமாக பார்த்த நினைவிலிருந்து வாசிக்கத்தொடங்கினேன்.   இத்தனை படங்களுக்கு பின்பும் ஏழாம் வகுப்பு விடுமுறையில் துறையூர் அஜந்தா தியேட்டரில் பம்பாய் திரைப்படத்தில் கண்ணாளனே பாடலின் அரவிந்தசாமியே இன்று வரை மனதில் பதிந்திருப்பவர். படத்தின் தொடக்கத்தில் அவரை ஃபாதராகவும் அர்ஜூனை எதிர்கதாபாத்திரமாகவும் ஏற்று கொள்வதும் சாதாரண ஒரு சினிமா பார்வையாளராக எனக்கு சிரமமாக இருந்தது. நம் சினிமாவில் கதாநாயகர்களில் கமல்ஹாசன்  தவிர யாரும் நம்மை கதாபாத்திரமாக ஒரு நடிகரை பார்க்கப்பழக்கவில்லை.[ என்னுடைய இந்த அபிப்ராயம் கடல் வெளியான காலகட்டத்தை சார்ந்தது. நான் சினிமா பார்ப்பது மிகவும் குறைவு. அதிலிருந்து என் எண்ணத்தை சொல்கிறேன்]. அரவிந்தசாமி பாசிநிற பச்சை யெஸ்டி (Yezdi) பைக்கில் ஊருக்குள் நுழையும் காட்சியிலிருந்து படிப்படியாக அந்த காட்சி முடியும் போது ஃபாதர் சாம் ஆக நம் மனதில் மாறுவார். அவரின் இயல்பான புன்னகை இந்த ஃபாதர் கதாபாத்திரத்திற்கு பெரிய பலம். அதே போல அர்ஜூனின் இறுகிய முகமும் அதை உடைத்து வரும் சிரிப்பும் ஏதோ ஒரு வகையில் கதாப்பாத்திரத்தை நம்முள்...