[2023 டிசம்பர் சொல்வனம் இதழில் வெளியானக் கட்டுரை] இயற்கையை நோக்கியிருத்தல் கழார்க்கீரன் எயிற்றியார் சங்ககாலக்கவிஞர். இவரின் பாடல்கள் அகநானூறு, நற்றிணை,குறுந்தொகை பொன்ற சங்கஇலக்கிய தொகை நூல்களில் உள்ளன. இவர் காவிரிபூம்பட்டிணத்திற்கு அருகில் உள்ள கழார் என்னும் ஊரில் பிறந்தவர். கீரன் என்பரை மணந்தார். எயிற்றியார் என்பது குறிஞ்சி நிலப்பெண்ணை குறிக்கும் பெயர். ஒக்கூர் மாசாத்தியாரின் பாடல்களில் ‘முல்லை எயிறு என நகைக்கும் கார்காலம்’ முழுவதும் முல்லை மலர் அனைத்துப் பாடல்களிலும் மலர்ந்து கொண்டிருந்தது. கழார்கீரன் எயிற்றியாரின் பாடல்களில் பல நிறங்களில் பலவிதமான மலர்கள் மலரும் கார்காலத்தின் இறுதிநாட்களின் சித்திரம் உள்ளது. தோன்றிப்பூ அகல் ஔியை போல சுடர்ந்தன என்று ஒரு பாடலில் வருகிறது. கார்த்திகை மாதமான இதே காலத்தில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட பாடலை இன்று வாசிக்கிறோம். ஈங்கை மலர் விண் அதிர்பு தலைஇய,விரவு மலர் குழைய தண் மழை பொழிந்த தாழ்பெயற் கடைநாள் [அகம்: 163] இடிகள் முழங்கி மலர்கள் உதிர குளிர்ந்த மழை பெய்து முடிக்கும் காலம். எதிர்பார்ப்பின் மகிழ்ச்சி, ...