இற்றைத்திங்கள் அந்நிலவில் 3
செப்டம்பர் 2023 இதழில் வெளியான கட்டுரை
சங்கப்பெண்கவிகள்:3
மொழியென்னும் ஆடி
ஆதிமந்தியார்,ஊண்பித்தை,ஓரிற்பிச்சியார்,காமக்கணிப் பசலையார்,காவற்பெண்டு,குமிழிஞாழலார் நப்பசலையார் மற்றும் குறமகள் இளவெயினி ஆகியோரின் பாடல்களை இந்தக்கட்டுரையில் பார்க்கலாம். இவர்கள் ஒவ்வொருவரும் ஒருபாடல் எழுதியுள்ளார்கள்.
சங்கப்பாடல்களில் துணங்கை கூத்து என்ற கூத்தினைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. பெண்கள் கைக்கோர்த்து ஆடும் நடனம் என்று சொல்லப்படுகிறது. திருவிழாவில் தேர்வலம் முடித்த மாரியம்மன் கோவில் ஊஞ்சலில் வைக்கப்பட்டப்பின், பெண்கள் கூடி கைக்கோர்த்து வட்டமாக ஆடும் ஆட்டம் துணங்கை கூத்தின் தொடர்ச்சியாக இருக்கலாம்.
ஆட்டன்அத்தியை காவிரி வெள்ளம் அடித்துச் செல்கிறது. அவரைத் தேடிச் செல்லும் மனைவி ஆதிமந்தியார் பாடும் பாடல் இது. ஆடிமாத காவிரியில் வெள்ளம் கரை புரள அதை வரவேற்கும் விழாக்கள் கரை நெடுக நடக்கின்றன.
………………என்கைக்
கோடீ ரிலங்குவளை நெகிழ்த்த
பீடுகெழு குரிசிலுமோர் ஆடுகளமகனே [குறுந்தொகை :31 ஆதிமந்தியார்: மருதத்திணை]
அனைவரும் கூடி ஆடி மகிழ்ந்திருக்கும் விழாவில் பாயும் காவிரி நீரில் தலைவனை தொலைத்தவள் அவள். உங்களைப் போன்றவர்களே நாங்களும்…அவனை எங்கும் காணவில்லை என்று சொல்கிறார். விழா மனநிலையில் உள்ளவர்களின் கவனத்தை கோரி நிற்கும் பாடல் இது. விழாக்கள் எப்போதும் காணாமல் போனவர்களையும் அவர்களை தேடி அலைபவர்களையும் கொண்டவை.
எங்கோ ஒரு கும்பலில் நின்று நம்மவர்களை தேடிய கணத்தை நினைத்தால் ‘யாண்டுங் காணேன்’ என்று ஆதிமந்தி சொல்வதில் உள்ள பரிதவிப்பை சென்றடைய முடியும்.
ஒரு திரைப்பாடலில் ‘கொக்கும் நாரைக்கும் கண் அலையுதே’ என்று பாடலாசிரியர் வைரமுத்து எழுதியிருப்பார். கடலின் தொடுவானம் வரை காணாமல் போன காதலனை தேடும் அவளின் கண்கள்.
ஆதிமந்தியாரின் கவிதையில் கவிதையில் மலங்க மலங்க விழிக்கும் கண்ணீர் தேங்கிய மையழிந்த தலைவியின் கண்களை கண்முன் காணமுடிகிறது.
மின்னிடை நடுங்கும் கடைப்பெயல் வாடை
எக்கால் வருவ தென்றி
அக்கால் வருவரெங் காத லோரே [குறுந்தொகை : 277 ஓரிற்பிச்சையார் . பாலைத்திணை]
ஒரு பாலை நிலத்தோழி அறிவரிடம் வாடையின் கடைசி மழை எப்போது வருமோ அப்போது தலைவன் வருவான். செந்நெல் சோறும் வெண்ணெய் உருண்டையும் பெற்று பசியாறி சூடான நீர் உள்ள கலத்தை பெற்றுக்கொள்வீராக என்று கூறுகிறாள். இதில் ‘ஓரிற் பிச்சை’ என்று கூறப்படுவது ஒரு இல்லத்தில் அளிக்கப்படும் உணவை மட்டும் பெற்று உண்பர் அறிவர் என்பதாம்.
மின்னிடை நடுங்கும் கடைப்பெயல் வாடை என்று தோழி வாடையை சொல்கிறாள்.
புலிசேர்ந்து போகிய கல்அலை போல
ஈன்ற வயிறோ இதுவே
தோன்றுவன் மாதோ போர்க்களத்தானே [புறநானூறு 86: காவற்பெண்டு]
என்னுடைய சிறிய இல்லத்தின் தூணை பற்றிக்கொண்டு தலைவியின் மகன் எங்கே கேட்பவரிடம் மறக்குலத் தலைவி , “புலி இருந்த கல்குகைப் போல அவனை ஈன்ற வயிறு இங்குள்ளது..அவன் போர்க்களத்தில் இருப்பான்” என்கிறாள்.
தமர்தன் தப்பின் அது நோன் றல்லும்
பிறர்கை யறவு தான் நாணுதலும் [புறம் : 157]
குறமகள் இளவெயினி]
நாம் இந்தப் பாடலில் இளவெயினி வைக்கும் வைப்பு முறையை கவனிக்க வேண்டும்.
முதலில் ஏறைக்கோனின் குணநலன்கள். பிறர் செய்த பிழைகளை பொருத்துக் கொள்பவன். மற்றவரின் செயலின்மைக்காக தான் நாணுவான்.மற்ற மன்னர்கள் உள்ள சபையில் நிமிர்ந்து நடப்பவன் என்கிறார்.
இரண்டாவதாக அவனின் வீரம் அதனுடன் இணைந்த அவன் அழகை,
‘சிலை செல மலர்ந்த மார்பின்,கொலை வேல்
கோடற் கண்ணி,குறவர் பெருமகன் [புறநானூறு : 157] என்று கூறுகிறார்.
மூன்றாவதாக அவன் குன்றின் பெருமை. மழை நின்று பெய்யும் உச்சியை உடைய குன்று. ஆண்மான் பெண்மானைத் தேடும் குரலை உற்றுக்கேட்கும் புலிகளை உடைய குகைகளை கொண்ட பெரிய மலை என்கிறார்.
இறுதியில் ‘இவையெல்லாம். நும்மார்க்கு தகுவன அல்ல. எம் ஏறைக்குத் தகுமே’ என்று முடிக்கிறார்.
இதுவே பாடாண்திணை எனப்படுகிறது. பாட்டுடை தலைவனின் இயல்புகளை மிச்சமின்றி உரைத்தல். புறப்பாடல் என்றாலும் கூட தலைவன் மீது எத்தனை காதல் இளவெயினிக்கு. [காதல் என்பது ஒற்றப்படை தன்மை கொண்ட சொல் அல்ல]
ஒரு ஓவியம் வரைவதைப் போல அவையோரின் மனதில் தன் குறவர் தலைவனை, அவன் குன்றை, வரைந்துவிடுகிறார். மொழி உள்ள வரை உயிர்ப்புள்ள ஏறைக்கோனின் ஓவியம் இந்தப்பாடல்.
நிறைச் சூழ் யாமை மறைத்து ஈன்று புதைத்த
கோட்டு வட்டு உருவின் புலவு நாறு முட்டை [குமுழிஞாழலார் நப்பசலையார். அகநானூறு : 160. நெய்தல் திணை]
சூழ் நிறைந்த காலத்தில் கடல் ஆமைகள் தங்கள் உள்ளுணர்வால் கரை சேர்ந்து மணலில் முட்டைகளை இட்டு புதைத்து வைக்குமாம். கருப்பை மணமுடைய, யானைத்தந்தத்தின் நிறமுடைய முட்டைகள் அவை.
இர வந்தன்றால் திண் தேர் கரவாது
ஒல்லென ஒலிக்கும் இளையரோடு வல் வாய்
அரவச் சீர் காண,
பகல் வந்தன்றால் பாய் பரி சிறந்தே
ஆமை முட்டைகளை போன்று அவர்கள் மறைத்து வைத்த காதல் வெளிப்பட தலைவன் பகலில் வருகிறான்.
‘நடுங்கின்று அளித்து என் நிறை இல் நெஞ்சம்’
என்று நெஞ்சில் கைவைத்து நிலை கொள்ளாது தத்தளிக்கிறாள் தோழி. காதலர்கள் காலகாலமாக ஔிக்க இயலாத ஒன்றை ஔித்து வைக்க முயல்கிறார்கள். அது வெளிப்படும் நேரத்தின் பரவசமும், அச்சமும் இந்தப் பாடலில் உள்ளது. நடுங்கின்று அளித்து என் நிறையில் நெஞ்சம் என்று இன்றைய 2k கிட்ஸ் தலைவிகள் வரை சொல்கிறார்கள்.
தலைவன் பொருள் தேடி பிரிந்து செல்கிறான். சோளிகளை [கவறு] உருட்டும் போது அது எந்தப்பக்கம் விழும் என்பதை கணிக்க இயலாது. அதைப் போன்ற இந்த ஊழ் வயப்பட்ட வாழ்வில் காதலை விட பொருளே பெரிதா? என்று தலைவி கேட்கிறாள்.
இந்தப் பிச்சி…
பொருள்வயிற் பிரியல் ஆடர்வற்கு இயல்பு எனின்
அரிது மன்றம்ம,அறதினும் பொருளே?’ [நற்றிணை.243 காமக்கணிப் பசலையார் பாலைதிணை] என்றாள்.
தேன் விளையும் இந்த மலையில் தெளிந்த நீர் தேக்கியிருக்கிறது. அதன் தூய மணல்கரையில் மாமரத்தின் கிளையில் பூப்போன்ற கண்களை உடைய குயில் கூவிக் கொண்டிருக்கிறது. அது நிலையில்லா இந்த வாழ்க்கையில் பிறியாதீர் என்று சொல்வதைப் போல் உள்ளது என்கிறாள் தலைவி.
தேன் விளைகிறது. தெளிந்த நீர் நிறைகிறது. மா கனிகிறது. எங்கும் இனிமை பெருகி நிறைகிறது.
பெருகும் இனிமையை அருவியாய் கொட்ட விடாது அடைக்கும் கல்லாக இடையில் பொருள்வயப் பிரிவு இருக்கிறது.
‘அறல் தழீஇய துறுகல் அயல தூ மணல் அடைகரை’
[துறுகல் என்றால் நீரை அடைக்கும் பெரும்பாறை அல்லது கல்].
உரல் போன்ற கால்களை உடைய யானை யாமரத்தின் நெருங்கி அடர்ந்த கிளைகளை ஒடித்து உண்டு அதன் அடர்த்தியை குறைத்துவிட்டது. சூரிய ஔிக்கு இடைவெளி விடும் கிளைகளின் நிழலில், சிறுசெடிகளை உண்டு படுத்துறங்குகிறது மான். உறங்கும் மான் உடலில் வரிவரியாக நிழலும் வெயிலும் படிந்திருக்கிறது. அந்த வழியே காட்டை கடக்கும் அவர் என்னை நினைக்க மாட்டாரா? தலைவி கேட்கிறாள்.
உரற்கா லியானை யொடித்துண் டெஞ்சிய
யாஅ வரிநிழல் துஞ்சும்
[குறுந்தொகை : 232. ஊண்பித்தை. பாலைத்திணை]
இது தலைவன் தலைவியின் தனிப்பட்ட நினைவாக இருக்கக்கூடிய நிகழ்வாக இருக்கலாம். ‘வரிநிழல் துஞ்சும் மான்’ என்பது அன்றொரு இரவில் தலைவனுடன் நிலவு வெளிச்சத்தில் உறங்கிய தலைவியாக இருக்கலாம். பலகணி வழியே நிலவுவெளிச்சம் விழும் இல்லம் அது. ‘உரல்கால் யானை பறித்துண்ணும் யாமரம்’ அவர்கள் கொண்ட காதலாக இருக்கக்கூடும்.
உரல் கால் எடுத்து வைத்து பெரும் விருட்சங்களை பறித்து வீசுவதும், குறும் செடிகளின் சிறு இலைகளை கொறித்து உண்டு அயர்வதும் ஒன்றே. அது மனிதருள் விஸ்வருபம் கொண்டு எழுவதும், வாமன உருவம் கொண்டு அமைவதுமான தெய்வம். அதை காமம் என்றும் காதல் என்றும் சொல்லிக் கொள்ளலாம். சொற்களை தாண்டிய ஒன்றை சொல்லவே இத்தனைப் பாடல்கள். ஆடியை திருப்பித்திரும்பி நாம் காண விழைவது என்ன?
கவிஞர் : கல்பனா ஜெயகாந்த்
காடானது
உள்ளார்ந்த நதி
தன்னை
வெளிக்காட்டுகிறது
காடாய்
பசுமையாய்
வளமாய்
கனிவாய்
தாய்மையாய்
காதலாய்
எங்கெங்கிலும்
பரவியிருக்கும்
நீர்மையாய்
அனைத்திற்கும்
ஆதாராமான
உயிர்ஊற்றாய்…
தெய்வமாய்.
_கவிஞர் கல்பனா ஐெயகாந்த்
தொடரும்…
[கட்டுரைக்கு உதவிய நூல்கள்:
♦திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புகழகம்: சங்கத் தமிழ் புலவர் வரிசை : 5 பெண்பாற்புலவர்கள்.
♦புலியூர்கேசிகள் உரைகள்
♦சங்கஇலக்கியம் பத்துப்பாட்டு எட்டுத்தொகை உரைவிளக்கங்கள்_ அறிஞர். ச.வே.சுப்ரமணியன்
♦தமிழ்விக்கி: தமிழ் பெண்எழுத்தாளர்கள்]
Comments
Post a Comment