சின்னஞ்சிறிய தாய்மை

 கடந்த பதினைந்து நாட்களாக தெருவிற்கு பேசுவதற்கு இரண்டு நாய்க்குட்டிகள் கிடைத்து விட்டன. எழுத்தாளர் கு.அழகிரிசாமியின் 'ஆதாரம் இருக்கிறதா?' என்ற கதை மனதிற்குள் ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு சின்ன விஷயம் எப்படி பெரிய புரளியாகிறது என்று அழகாக எழுதியிருப்பார்.

எதிர்வீட்டில் வீடு கட்டிக் கொண்டிருக்கறார்கள். மேல்தளம் போட்டு ஒரு மாதம் கட்டிடப்பணிகள் நிறுத்தப்பட்ட மழை இரவில் ஒரு நாய் அங்கு குட்டிகளை ஈன்றது. அந்த வீட்டுக்காரர்கள் வெளியூரில் இருக்கிறார்கள். அவர்களுடைய சின்னம்மா அந்த நாய்க்கு உணவு வைத்தார்கள். நாய் வீட்டுப்பக்கம் குட்டிகள் ஈனுவதை முதல் முறை பார்க்கிறேன். 

குட்டிகளுடன் அது தெருவில் இறங்கிய போது 'இனிமே இங்கருந்து போவாது...பெரிய தொல்லையா போயிடும். சோறு வைக்காம முடுக்குங்க' என்ற குரல்தான் தெருவின் அம்மாக்களிடம் இருந்து கேட்டது.

கனகா என்ற அத்தை குழந்தைகள் இல்லாதவர். தனியர். அவர்தான் அதிகாலைகளில் தினமும் குட்டிகளுக்கு பால் வைப்பார். சொந்தவீடோ, நிலமோ,கணவனோ அற்றவர். 

அடுத்ததாக எங்கள் வீட்டில் தம்பி. தயிர் சோறும் ,பிஸ்கெட்டுகளும் வயிறு நிரம்ப வைப்பான். இவனும் இன்னும் திருமணமாகாதவன். குட்டிகளின் பசியின் மீது அவனுக்கு இருக்கும் கவனத்தைக் கண்டு எனக்குமே கொஞ்சம் வியப்பு தான். இவன் முரடன் என்பதால் தான் நாய்க்குட்டிகள் மீது இன்னும் அடிகள் விழாமல் இருக்கிறது. நாய்க்குட்டிகள் பற்றிய புகார்கள் என்னிடமும், அம்மாவிடமும் வருகின்றன. 

நாய் குட்டிகளை ஈன்ற காலையில் முதலில் உணவு வைத்த எதிர்வீட்டம்மா வழக்கமாக தெருவில் திரியும் பெண்நாய்களுக்கு சோறு வைப்பதை சிறுவயதில் இருந்தே பார்த்திருக்கிறேன். அந்த நாய்கள் இங்கு தங்கியதில்லை. இவர் பசியை நன்கு உணர்ந்தவர். ஒரு முறை திருடன் ஒருவனை தெருவில் கட்டி வைத்திருந்தார்கள். திருட்டு உறுதியானது. அவன் மீது அத்தனை பேரும் குரோதத்துடன் இருந்தார்கள். அவன் தாகம் என்று கேட்ட போது, 'அதெல்லாம் ஒன்னும் கிடையாது...அடுத்தவன் பொருளை எடுத்தல்ல..கலையில போலீஸ் வரவரைக்கும் அப்படியே கிட,' என்று சொன்னார்கள். இவர் தான் 'அதான் நாலு அடி போட்டாச்சுல்ல..போலிஸ்க்கிட்ட சொல்லியாச்சுல்ல...என்னா கல்லு மனசு,'  என்று தண்ணீர் கொடுத்தார். கிராமத்தில் இப்படி மீறி செய்வது ஒன்றும் எளிதான விஷயம் இல்லை.

குட்டிகளை வயலிற்கு பிடித்து சென்றுவிட்டார்கள். இரண்டு குட்டிகள் மட்டும் எஞ்சி வளர்கின்றன. தினமும் காலையில் அவற்றை பற்றிய புகார்கள். இன்று காலையில் வாசல் பெருக்கும் போது பக்கத்துவீட்டு  பின்புற வாசல் திண்ணையில் குட்டிகளுடனும் அந்த நாய் படுத்து உறங்கிக்கொண்டிருந்தது. குட்டிகள் சிறுவர்களுக்கான பருவத்திற்கு வந்து விட்டதால் கொஞ்சம் சுட்டித்தனமாக இருப்பதும் உண்மை தான்.

 செருப்பை எடுத்து வேறு இடத்தில் போடுவது,இரண்டும் குலைப்பது என்று சிறு சிறு அடங்கள். அம்மாவின் செருப்பை கடித்து பிய்த்து விட்டன. சோறு வைக்கும் கனகா அத்தையின் செருப்பையும் ஒரு நாள் கடித்து விட்டன. அதற்கு மேல் பெரிதாக ஒன்றுமில்லை. மனம் இருந்தால் நாம் செருப்பை கவனமாக வேறு இடத்தில் வைத்துக்கொள்ளலாம். 

இன்னும் கொஞ்சம் வளர்ந்தால் ஓடிப்போய் விடும். அன்னையர்களின் மனநிலை எனக்கு கொஞ்சம் விலக்கமாக இருக்கிறது. அந்த குட்டிகள் செய்திருக்க இயலாத அடங்களையெல்லாம் அவற்றின் மீது சொல்வதை கேட்கும் போது எரிச்சலாகவும் இருக்கிறது.


அடைக்கலமாக தெருவிற்கு குட்டியிட வந்த நாய்க்கு ஒரு வேளை சோறு வைக்க மனமில்லா விட்டாலும் பரவாயில்லை. அவற்றை அடித்து முடுக்க வேண்டும் என்ற சொல்லில் உள்ள வன்மம் மனதை தொந்தரவு செய்கிறது. 'சோறு வைக்கறதுனால தானே இங்க இருக்கு' என்ற மறைமுக பேச்சுக்களை மூன்று வீட்டார் மீதும் வைக்கும் அனைவரும் அன்னைகளே!

அந்த குட்டிகளின் கண்ணாடிக் கண்களின் முன்பு பணியாத உள்ளங்கள் மீது கொஞ்சம் விலக்கம் தோன்றவே செய்கிறது.

என்னை ஏன் சின்ன சின்ன அன்றாட விஷயங்களை கதையாக எழுதுகிறீர்கள்? என்று கேட்பதுண்டு. சின்ன சின்ன விஷயங்களும் மனதை தொந்தரவு செய்யும் போது எழுதாமல் என்ன செய்வது? 'அடித்து முடுக்குவது' என்ற வார்த்தையில் உள்ள வன்மம் எளிதானதாக எனக்குத் தெரியவில்லை.

இதே வார்த்தையை சிறுமியாக இருக்கும் போது உறவுக்கார தாத்தா ஒருவரிடமிருந்து கேட்டதை இன்னும் மறக்கமுடியவில்லை.

பட்டுஅவ்வா சொந்த ஊரான குங்குமபுரத்தில் பிழைக்க முடியாமல் கணவனுடன் தாய்ஊருக்கு வந்தாள். தாய் இறந்தப்பின் இருந்த சிறிய வீட்டுமனையை அவள் சகாய விலைக்கு கேட்டபோது,சிலர் கொடுக்க சொன்னார்கள். அந்த உறவுக்கார தாத்தா, 'பொட்டப்பிள்ளையை கட்டிக்குடுத்தா முடிஞ்சு போச்சு. அது எதுக்கு இங்க வருது. அடிச்சு முடுக்காம..பேசிக்கிட்டு இருக்கீங்க,' என்று கேட்டார். 

மேலே சொல்லிய மூவரும் பெரிய ஞானிகள் இல்லை. நம்மை போன்றே குறைகள் உள்ள எளிய மனிதர்கள் தான். ஆண் என்றாலும், பெண் என்றாலும் இந்த சின்னஞ்சிறிய தாய்மை உணர்வு அவர்களை கொஞ்சம் உயரத்தில்  வைக்கிறது.

இவர்களை போன்றவர்களையே எழுதுகிறேன். இவர்களில் இருந்து எம்பி எழும் அடுத்தடுத்த படிகளை எனக்கு  அளிப்பவர்களும் இவர்களே.

கலைமகள் உடனிருக்கட்டும்.


Comments

Popular posts from this blog

அகத்தின் ஆரக்கால்கள்

பெருகும் காவிரி

பசியற்ற வேட்டை