எட்டா வாழ்வை எட்டும் கதைகள்


         எழுத்தாளர் இராசேந்திர சோழன்


எட்டாத வாழ்வை எட்டும் கதைகள் என்ற கட்டுரை நூலிற்கான தொகுப்புரை:

சிற்றில் நண்பர்கள் குழு சார்பாக எழுத்தாளர் இராசேந்திர சோழன் அவர்களுக்கு ஒரு நாள் கருத்தரங்கு, குமரகுரு பன்முக கலைகல்லூரியில் எழுத்தாளர் சு.வேணுகோபால் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 

ஏற்கனவே சிற்றில் சார்பாக எழுத்தாளர்கள் எம்.கோபாலகிருஷ்ணன்,யுவன் சந்திரசேகர்,யூமாவாசுகி,விட்டல்ராவ் மற்றும் வண்ணநிலவன் ஆகியோருக்கு ஒருநாள் கருத்தரங்கு நடைபெற்றுள்ளது.



“எட்டாத வாழ்வை எட்டும் கதைகள்” கருத்தரங்குக்கு தலைமையுரையாற்றி எழுத்தாளர் சு.வேணுகோபால் கருத்தரங்கை தொடங்கி வைத்தார். இரண்டாம் அமர்வாக எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன் ஒருங்கிணைத்த இராசேந்திர சோழன் புனைவுலகம் சார்ந்து எழுத்தாளர்கள் ஹரிஸ், சிவப்ராசாத், கோகுல் பிரசாத் ஆகியோர் உரை வழங்கினார்கள். மதிய உணவு இடைவேளைக்கு பிறகு பேராசிரியர்  திலீப்குமார் இராசேந்திர சோழன் எழுதிய நாடகங்கள் பற்றிய உரையை வழங்கினார். மேலும் அவருடைய நாடகக் குழு எழுத்தாளர் இராசேந்திர சோழனின் சிறுகதை ஒன்றை நகைச்சுவையுடன் நிகழ்த்திக் காட்டினார்கள். அபுனைவு அரங்கையும், நிறைவு விழா அரங்கையும் எழுத்தாளர் கார்த்திக் பாலசுப்ரமணியன் ஒருங்கிணைத்தார். பேரா மானசீகன், பேரா பா.ரவிக்குமார், சீனு தமிழ்மணி மற்றும் பத்திரிக்கையாளர் மாயவன் கண்ணன் ஆகியோர் நெகிழ்வான செறிவான சிறப்புரைகளை வழங்கினார்கள்.


குமரகுரு பன்முக கலை கல்லூரி நிர்வாகமும், தமிழ்துறையும், விஸ்காம் துறையும் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்தார்கள். இந்த நிகழ்வில் கல்லூரியின் தமிழ் துறை மாணவர்கள் பங்கேற்றார்கள். அதுவே ஒரு எழுத்தாளுருக்கு செய்யும் மரியாதை என்று நினைக்கிறோம். ஒரு எழுத்தாளரை அடுத்த தலைமுறையிடம் கொண்டு செல்லும் இந்த வாய்ப்பிற்காக இந்த நிகழ்வில் பங்கேற்ற எழுத்தாளர்கள், ஏற்பாடு செய்தவர்கள் என்று உறுதுணையாய் இருந்த  அனைவருக்கும் உளம் நிறைந்த நன்றிகள்.


எட்டாத வாழ்வை எட்டும் கதைகள் என்ற தலைப்பில் நடந்த ஒருநாள் கருத்தரங்கை ஆவணப்படுத்தும் விதமாக இந்த கட்டுரை தொகுப்பு தொகுக்கப்பட்டுள்ளது. கருத்தரங்கில் பேசியவர்களில் கட்டுரைகளும் மேலும் சிற்றில் குழுமத்து நண்பர்கள் சிலரது கட்டுரைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த கட்டுரைத்தொகுப்பில் எழுத்தாளர் ராசேந்திரசோழன் படைப்புலகம் பற்றி பன்முகப்பார்வை கொண்ட கட்டுரைகள் உள்ளன. எழுத்தாளரின் படைப்புலகை பலகோணங்களில் புரிந்து கொள்வதற்கான வாய்ப்பாக இந்த தொகுப்பு அமைவதே இதன் முக்கியத்துவமாக நினைக்கிறோம்.


எழுத்தாளர் சு.வேணுகோபால், புயலாக நுழைந்து பனியாக நின்ற இராசேந்திர சோழன் என்ற தனது கட்டுரையில் எழுத்தாளரின் சிறுகதை உலகம் பற்றிய மிக விரிவான பார்வையை முன்வைக்கிறார். எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணன் சமூகமனிதன் என்ற தலைப்பில் எழுத்தாளரின் தனிப்பட்ட ஆளுமை பற்றி  எழுதியுள்ளார். எழுத்தாளர் ப.சுடலைமணி பின் நவீனத்துவ புரிதல் என்ற தலைப்பில் எழுத்தாளரின் பின்நவீனத்துவம் பித்தும் தெளிவும் என்ற நூல் பற்றி எழுதியுள்ளார். எழுத்தாளர் சிவப்ரசாத் மார்க்சியமும் நவீனஅழகியலும் இணையும் புள்ளி என்ற தலைப்பில் எழுத்தாளரின் சிறுகதைகளை பற்றிய தன்னுடைய மூன்று விதமான பார்வையை முன்வைக்கிறார். 

 எழுத்தாளர் லாவண்யா சுந்தரராஜன் அதிகாரத்தின் பிடியில் என்ற தலைப்பில் எழுத்தாளரின் எழுத்தின் அடிநாதமான கலகக்குரலானது அதிகாரத்தின் பிடியை தீவிரமாக விமர்சனம் செய்கிறது என்ற பார்வையில் எழுதியுள்ளார்.


எழுத்தாளர் தி.பரமேசுவரி  ராஜேந்திரசோழன் பேசும் பெண்ணியம் என்ற தலைப்பில் அவரின் கட்டுரைகள் பற்றி எழுதியுள்ளார். பெண்ணியம் பேசுவதாக இருந்தாலும் மனித மாண்புக்கு அக்கறை தருபவர் என்றும் பெண்களுக்கான உரிமை சார்ந்த விஷயங்களில் அக்கறை  கொண்டவர் என்றும் பெண்ணியம் சார்ந்து இராசேந்திர சோழனின் பார்வையையும் எழுதியுள்ளார். எழுத்தாளர் அரிசங்கர் எதார்த்தம் என்பது கறைபடிந்த கருணையில்லாத ஒன்று என்னும் தலைப்பில் எழுத்தாளரின் படைப்புலகம் மற்றும் அவரின் கொள்கை சார்ந்த தனிவாழ்க்கையை இணைத்து எழுதியுள்ளார். இராசேந்திர சோழனின் படைப்புகளும் அவரின் ஆளுமையும் சரியாக புரிந்துக்கொள்ளப்பட வேண்டிய அவசியத்தை அரிசங்கர் வழியுறுத்துகிறார். எழுத்தாளர் ஹரீஷ் பெண்கள்,குழந்தைகள்,ஆண்கள் மற்றும் தோழர்கள் என்ற தலைப்பில் எழுத்தாளரின் சிறுகதைகள் பற்றிய தன் பார்வையை எழுதியுள்ளார். தமிழினி ஆசிரியர் கோகுல் ப்ரசாத் வருங்காலத்தை நோக்கும் எழுத்து என்ற தன் கட்டுரையில் இராசேந்திரசோழன் தன் எழுத்தில் கையாளும் ஆண்பெண் உறவுநிலைப் பற்றி எழுதியுள்ளார்.


மேலும் எழுத்தாளரின் ஏற்புரையும் இந்தத் தொகுப்பில் இணைக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக இந்தக்கட்டுரைகள் அனைத்தும் இராசேந்திர சோழன் என்ற படைப்பாளியை,தனிமனிதரை,தனக்கென ஒரு தனி அரசியல் பார்வை கொண்ட சமூகமனிதரை பலகோணங்களில் முன்வைப்பதாக இருக்கும் என்று நம்புகிறோம். 


இராசேந்திரசோழன் பற்றி சிலவற்றை தொகுப்புரையில் கூற விழைகிறோம். இவர் எழுத்தாளராக மட்டுமின்றி அரசியல் சார்ந்தும் சமூகம் சார்ந்தும் இயங்கிய களச்செயற்பாட்டாளர். இந்து தமிழ் இதழிற்கு இவர் கொடுத்த நேர்காணலில்,  “அறிவு சார்ந்து அதிகாரம் செலுத்தாமல் ஒருவருக்கு ஒருவர் இணைந்து இயங்க வேண்டும் என்பது என் நம்பிக்கை’ என்று அமைப்பு சார்ந்து இயங்குவது பற்றி தன் நிலைப்பாட்டை கூறுகிறார். 

மேலும் ‘மார்க்ஸியம் வழிகாட்டிய குறிக்கோள் என்பது அறிவை ஜனநாயகப்படுத்துவது தான்’ என்று கூறுகிறார். அவர் எழுத்தின் அடிப்படை குறிக்கோளாக இயங்கியது என்ன? என்ற கேள்விக்கு ‘மக்களின் தேவை சார்ந்து இயங்க எண்ணினேன். அறிவை ஜனநாயகப்படுத்துவதற்கு அதுவே நல்ல வழி’ என்று சொல்கிறார்.


எழுத்தாளர்,இதழாளர்,நாடகஆசிரியர்,சமூக களப்பணியாளர்,ஆசிரிய சங்கங்களின் செயல்பாடுகள் என்று பன்முகம் கொண்ட ஆளுமையான இராசேந்திர சோழன் அவர்களின் எழுத்துலகு சார்ந்த இந்த கட்டுரை தொகுப்பை கொண்டு வருவதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறோம். 

‘எனக்கு இறை நம்பிக்கை இல்ல.  ஆனால் இறை மறுப்பு சார்ந்த பகுத்தறிவுவாதம் சமூகத்தில் மனிதனை மேலும் மேலும் அவநம்பிக்கைக்கு கொண்டு போகிற செயல்பாடாகவே முடியும் என்று நினைக்கிறேன். இறைநம்பிக்கையும் மத வெறியும் ஒன்றல்ல . எனக்கு மார்க்ஸியம் காட்டிய வழி அறிவை ஜனநாயகப்படுத்துவது தான்’ என்று அழுத்திக் கூறும் எழுத்தாளர் இராசேந்திர சோழன் அவர்களை வணங்கி இந்த தொகுப்பை சிற்றில் நண்பர்கள் குழு சார்பாக அவருக்கு சமர்ப்பிக்கிறோம்.


இந்த நூலை வெளியிடும் யாவரும் பதிப்பகத்திற்கு அன்பும் நன்றியும்.


                                                                                                                                                                கமலதேவி 

                                                                                                                                                             15.04.2023/ பா.மேட்டூர்

                                                                                                                                                             






Comments

Popular posts from this blog

பசியற்ற வேட்டை

பெண் கல்வி,விடுதலை மற்றும் தன்னறம்

எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் நேர்காணல்