நகுமே தோழி நறுந்தண் காரே


புரட்டாசிமாதம் பெருமாள்மலையானை துறையூரில் இருந்து தூக்கி வந்து கொல்லிமலையாக்கி வைக்கும்.


 பச்சை மாமணி போல் மேனி, பவளவாய், கமலச்செங்கண், கதிர்மதியம் போல் முகத்தானை கண்ணெதிரே காணும் காலம். 

ஐப்பசி ஒரு நசநசப்பான காலம். நெல் அறுவடையை முடிக்காதவர்கள் பதறும் காலம். கதிர் சாய்ந்த வயல்கள் விவசாயிகளின் வயிற்றில் புளியை கரைக்கும். அறுவடை முடிந்த வயல்கள் மஞ்சளாய் 'சிவனே' என்று வானம் பார்த்து கிடக்கும். நான் இந்த பத்து நாட்களை 'நிலம் புரண்டு படுக்கும் காலம்' என்பேன். இங்கு நஞ்சைக்கு ஓய்வில்லை. சம்பா, குறுவை என்று எதாவது ஒரு பயிர் வயலில் தளிர்விடும் அல்லது விளைந்து கிடக்கும். நெல் அறுவடைக்குப் பின் குத்துகளுடன் கிடக்கும் வயல் எனக்குப்பிடிக்கும். இந்த பத்துநாட்களுக்குள் அறுவடையாகக் காத்திருக்கும் வயல்களும்,அறுவடை முடிந்த வயல்களையும், நாற்று முளைக்கும் வயல்களையும் ஒரு சேரக்காணலாம். கொட்டிக் கலைத்த சொப்பு சாமான்களை போல நிலம் கலைந்து கிடக்கும். 

ஐப்பசி எப்போதும் தான் வருகிறது. ஆனால் என் வாசிப்பில் இது சங்ககாலத்து கார்காலம்.

'இப்பம் கொஞ்சம் மாற்றமா தெரியுது. [மொழியே மாறிடுச்சு பாருங்க]. தொடர்ந்து சங்கப்பாட்டு படிக்காம்ல. பூமியே அழகா தெரியுது. அதுவும் இப்போ சங்கப்பெண்கவிகள் வாசிக்கறதுனால இந்த கார்காலம் தனியா தெரியுது'

இன்று அதிகாலை கருக்கலில் குளிர் எழுப்பியது. எங்கிருந்தோ பூமியின் கணக்கை சரியாக எழுதும் ஒன்றின் வேலை. நேற்று வரை இல்லாத குளிர். போர்வையை எடுத்து வைக்கும் அக்கறை கூட இல்லை. காலநிலை இரவுவரை சரியாகத்தான் இருந்தது. அதிகாலை நாலறை மணி. போர்வையை தேடி எடுப்பதற்கு பதில் எழுந்து கொள்ளலாம். விளக்கை போட்டதும் கண்ணனும் ராதையும்,பிள்ளையாரும்,மாரியம்மனும்,கலைமகளும்,ஏசுவும் மலங்க மலங்க விழித்தார்கள் [Roommates]. வேறெந்த அறையிலும் நினைத்த நேரத்திற்கு வாசிக்க, எழுத முடியாது என்பதால் இவர்களுடன் வாசம். தெய்வலோககமும், மனிதலோகமுமாக இரண்டு உலகங்களுக்கும் கொஞ்சம் இடிபிடிதான்.

 வரவேற்பறை விளக்கை போடாமல் இருளுக்குள்ளேயே நடந்து வாசலிற்கு வந்தேன். நல்ல குளிர். வாசல் படியில் தெரு நாய்க்குட்டிகள் இரண்டு ஒன்று உடல் மீது மாற்றொன்று தலை வைத்து ஒட்டிப்பிறந்த இரட்டையர் மாதிரி உறங்கிக்கொண்டிருந்தன. வாசல் தெளிப்பதுவரை இரண்டிற்கும் உறக்கம் கலையவில்லை. 'வெள்ளிக்கிழமை அதுவுமா வாசப்படி கழுவாம என்ன பொம்பளப்பிள்ளை' என்று அம்மாவிடம் திட்டு வாங்கி வைப்பதற்காக இறைவன் அனுப்பி வைத்திருக்கிறான். என்ன சுகமான தூக்கம். பார்க்கப்பார்க்க மறுபடி தூக்கம் வரும் போல.

உள்ளே வந்தால் அவரவர் அறையில் அய்யா,அம்மா,தம்பி,அவ்வா என்று அனைவருக்கும் நல்ல உறக்கம். யாருக்கும் அறை கதவை மூடி வைக்கும் பழக்கம் இல்லை. அன்றாடம் காலையில் ஒவ்வொரு அறையாக எட்டிப்பார்ப்பது என் வழக்கம்.

தேநீர் குடித்தப்பின் ஐந்து மணிக்கு மேல் மாடியில் ஏறி நின்றேன். கிழக்கே பச்சைமலையும் இல்லை. மேற்கே கொல்லி மலையும் இல்லை.மஞ்சுபடர்ந்து முடியிருந்தது. நெல்வயல்களில் நிலம் வரை குளிர் நீராவி இறங்கியிருக்கிறது.


கீழே வந்து நேற்று பாதியில் வைத்த மயில் கழுத்து [அறம் தொகுதி] கதையை முதலில் இருந்து வாசித்தேன். 

முந்தின நாட்களில் நன்நாகையார் எழுதிய குறுந்தொகை பாடல்களுக்கான கட்டுரையை முடித்தப்பின், மயில் கழுத்து வாசிக்க வேண்டும் என்று தோன்றியது. இடையில் கொஞ்சம் பொன்முகலி கவிதைகளை வாசித்துக்கொண்டிருந்தேன்.

'மௌனங்கள்

கூரிய மலைமுகடுகளுக்கு

என்னை செலுத்துகின்றன.

அங்கே நான் தன்னந்தனி.

திரும்புவதற்கான பாதைகள் என்பவை

அங்கே

எப்போதும் நீர்த்தடங்களே'

                                       _பொன்முகலி

[இந்தப்பிள்ளை வேற அமைதியா போறதுன்னு நம்ப முடியாது. திடீர்ன்னு ஆகாசத்துக்கும் பூமிக்குமா நிக்கும்]

மயில் கழுத்து கதையை முடித்துவிட்டு காயப்போட வேண்டிய ஒரு வாளி துணியுடன் மறுபடி மாடியேறினேன். இளம்காலை வெளிச்சத்தில் வயல்களை பார்த்துக்கொண்டிருந்த போது அருகில் இருந்த முல்லை செடி பளிச்சென்று மலர்ந்திருந்து.

' நகுமே தோழி நறுந்தண் காரே 'என்று சட்டென்றே மனதில் வந்து போனது. ஒரு முல்லை செடியில் வரிசையாக சங்கமுல்லைகள் மலரத்துவங்கின.



'முல்லை ஊர்ந்த கல் உயர்பு ஏறி 

கண்டனம் வருக சென்மோ தோழி'


'குறுமுகை அவிழ்ந்த நறுமலர்ப் புறவின்'


'வெருகு சிரித்தன்ன பசும்வீ'


'மென்கொடி முல்லை எயிறு என முகைக்கும்'


'தொகுமுகை இலக்கெயிராக நகுமே தோழி நறுந்தண் காரே'


உண்மை தான். இயற்கை மலர்களாகி சிரிக்கிறது என்று தோன்றியது. மெல்லிய மஞ்சுப்படலம் புறத்தை மறைத்து கனவு காட்சியாக்குகிறது. பளிச்சென்றே வெண்முல்லை. இலக்கியத்தால் உலகம் அழகாகிறதா? இயற்கை அழகே இலக்கியமாகிறதா? இரண்டும் தான். 

இந்த பிள்ளைகளுக்கு [சங்கப்பெண்கவிகள்.....] எத்தனை ரசனையான மனம். பருவங்களை பந்தாடும் ஒரு விளையாட்டு. ஒரு பாடலில் அரிவையாகவும், மறுபாடலில் மங்கையாகவும் மாறுவார்கள். வாசலுக்கும் வீட்டுற்கும் நடப்பது போல பேரிளம்பெண்ணிலிருந்து பெதும்பைக்கு ஒரு எட்டில் ஓடிவிடுகிறார்கள். உடல் ஒரு கருவிதான் ...மனம் செய்யும் மாயம் இந்தக்கவிதைகள். 

கார்காலத்தின் ஓயாத பாடலின் 'ஃபாவம்' தாபமாகவே இருந்துள்ளது. நமக்கு புரிந்து கொள்வது கடினம் எனினும் இயற்கை காட்சிகளில் அந்த ஃபாவத்தை  உணரமுடிகிறது. மயில்கழுத்து கதையை வாசிக்கும்போது கார்காலத்து சங்கத்தலைவிகளை புரிந்து கொள்ள முடிகிறது.

மனிதனின் உணர்வுகள் என்பவை காலநிலையின் பருவடிவா? பிரதிபலிப்பா? நரம்பு மண்டலம் காலநிலைக்கு செய்யும் பதில்வினையா?

இதையெல்லாம் விட்டுவிட்டு சங்கப்பாடல்களும், கார்காலமுமாக இருந்து விட்டால் இன்னும் நல்லது. நம் முன்னோர்களின் மொழி வழி,கண் வழியே இந்த கார்காலம் நகரட்டும்.

'இப்ப என்னதான் சொல்ல வறீங்க' என்று அவர்களை கேட்பதை விட நறுதண் காருடன், பனிநீர் முல்லையை சும்மா பார்த்திருந்தாலே போதும்.

மனித உணர்வுகளின் தாளாமையை இயற்கையில் வைக்கும் போது அது மேலும் அழகாகிறது. இயற்கையை நட்பாக்கிக் கொள்ள முடிகிறது. இப்போது எனக்கு உள்ள சிந்தனையே.....சங்கப்பாடல்களில் தலைவி அழைக்கும் தோழி என்பவள் யார்? அவள் மலராகவும், பறவையாகவும்,தன் மனமாகவும்,கண் முன் இருக்கும் மரமாகவும் இருக்கலாம் இல்லையா?

 மயில்கழுத்தில் சொல்லப்படும் அழகின் மிகச்சிறிய துளி ஒன்றை கண்முன்னே காண்கிறேன். வெறும் அழகு மட்டுமே. தூய அழகு. லா.சா.ரவின் சௌந்தர்யம்.

[கீழே அன்றாடம் அழைக்கிறது. அன்றாடமில்லாது இவையெல்லாம் இத்தனை சுவைக்காது]




[கார்காலம் முடிவதற்குள் தி.ஜா வை மறுபடி கொஞ்சம் வாசிக்க வேண்டும்]








Comments

Popular posts from this blog

பசியற்ற வேட்டை

பெண் கல்வி,விடுதலை மற்றும் தன்னறம்

எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் நேர்காணல்