இற்றைத்திங்கள் அந்நிலவில் 4
[அக்டோபர் 2023 சொல்வனம் இணைய இதழில் வெளியான கட்டுரை]
காட்டாற்று வெள்ளம்
ஒக்கூர் மாசாத்தியார் சிவகங்கை மாவட்டம் ஒக்கூரில் பிறந்தவர். இவர் மூதின் முல்லைத்துறையில் பாடிய புறநானூற்றுப் பாடல் இன்று வரை சங்ககால மகளீரின் வீரத்திற்கான பாடலாக உள்ளது. இவர் சங்க இலக்கியத்தில் எட்டுப்பாடல்கள் பாடியுள்ளார். இயற்பெயர் மாசாத்தியார்.
[ஒக்கூரில் (சிவகங்கை மாவட்டம்) நிறுவப்பட்டுள்ள மாசாத்தியார் நினைவுத்தூண்]
சங்ககாலத்தில் தொடர்ந்து போர் நிகழ்ந்ததை சங்கப்பாடல்களின் வழியே அறிகிறோம். முல்லைநிலத்தின் தலைவி ஒருத்தி தன் தந்தையை,கணவனை முந்தின நாட்களின் போரில் இழந்திருக்கிறாள். இன்றும் போர்ப்பறையின் ஒலி கேட்கிறது. மகன் தெருவில் விளையாடிக் கொண்டிருக்கிறான்.
‘இன்றும் செறுப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி
வேல் கைக் கொடுத்து வெளிது விரித்து உடீஇப்
பாறு மயிர்க் குடுமி எண்ணெய் நீவி
ஒரு மகன் அல்லது இல்லோள்
செருமுகம் நோக்கிச் செல்க என விடுமே’ [புறம்: 279]
போர்ப்பறையின் ஒலியில் மயங்கி விரும்பி மகனை அழைக்கிறாள். ஆடை அணிவித்து குழல் சீவி போர்களம் நோக்கி செல்க என்கிறாள். சிறுவனை போருக்கு அனுப்புபவளைக் கண்ட சுற்றத்தார் ‘கெடுக இவள் சிந்தை. கடிது இவள் துணிவே’ என்று பதைத்து கூறுகிறார்கள். இந்தத்தலைவியின் மனதிடம் இன்று வரை தமிழர் வீரத்திற்கு உதாரணமாக சொல்லத்தக்கதாக உள்ளது.
அகநானூற்றில் மாசாத்தியாரின் இரண்டு பாடல்கள் [324,384] உள்ளன. இப்பாடல்களில் தலைவன் வரவை நோக்கியிருக்கும் தலைவியின் உணர்வுகளை எழுதியுள்ளார்.
முல்லை நிலத்தில் கார்காலம் வந்து விட்டது. மழை நீரால் நிலம் குளிர்ந்து ஈரமாகிக் கிடக்கிறது. இந்த காலநிலையே இந்தப்பாடல்களின் உணர்வு நிலையாகவும் உள்ளது. ஆனால் தலைவனின் வரவு நோக்கியோ,தலைவன் வந்துவிட்டதாலோ,வராததாலோ,வர வேண்டாம் என்று மறுப்பதாலோ அந்த கார்காலத்தை தலைவி எவ்விதமாக உணர்கிறாள் என்பதே ஒவ்வொரு பாடலின் நிறபேதமாக இருக்கிறது.
அரிவைப்பருவத் தலைவி ஆடை திருத்தி தன்னை அழகுபடுத்திக் கொள்கிறாள். மகிழ்ச்சியை தனக்குள்ளே மறைத்து வைக்கிறாள். ஆனால் மனதில் மறைத்திருக்கும் உணர்வு அவளின் ஒவ்வொரு செயலிலும் வெளிப்படுகிறது.
வானத்தைப் பார்த்தால் மழை வரும் என்று தெரிந்துவிடுவதைப்போல அவளை பார்க்கும் சுற்றத்தாருக்கு பிரிந்து சென்ற தலைவன் வருகிறான் என்பது தெரிந்துவிடுகிறது.
அண்மையில் கிளிக்குஞ்சின் பிஞ்சு உடலை மூடியுள்ள பசும் மென்முடிகளை போல மழை பெய்த நிலத்தில் இளம்புற்கள் முளைத்து காடு முழுவதையும் பசுமையாக்கியுள்ளது. பாறையின் கண் போன்ற சுனைகள் நிறைந்துள்ளன. அந்த நீருடன் காற்று விளையாடுவதால் நீர்குமிழிகள் தோன்றி துள்ளுகின்றன. இந்த காட்சியை மாசாத்தியார் ‘துளிபடு மொக்குள்’ என்கிறார். வழியெங்கும் உதிர்ந்த மலர்களில் வண்டுகள் மொய்க்க அவை ஓடும்குதிரையின் தலைமுடியை போல ஈரமணலில் பறக்கின்றன.
இவ்வாறு மழையால் குதூகலிக்கும் நிலத்தை கடந்து அவனுடைய தேர்ச்சக்கரம் விரைந்து வரும். அந்தத் தேர் விரையவிரைய அதன் பின்னால் தேர்ச்சக்கரங்கள் ஏற்படுத்திய தடங்களில் நீர் ஓடி வந்து நிறைய அவளைக் காண அவன் நகர் புகுவான். அவள் அதை நினைத்து நினைத்தே இத்தனை அழகாகிறாள் என்று தலைவியை பார்ப்பவர்கள் நினைக்கிறார்கள்.
‘…..
வார்பெயல் வளர்த்த பைம்பயிர் புறவில்
பாறைக்கண் அன்ன நிறைச்சுரனை தோறும்
துளிபடு மொக்குள் துள்ளுவன சாலத்
தொளிபொரு பொருட்டுத் தோன்றுவன் மாய
வளிசினை உதிர்த்தலின் வெறிகொள்பு தாஅய்ச்
சிரற்சிறகு ஏற்ப்ப அறற் கண் வரித்த
வண்டுஉண் நறுவீ துமித்த நேமி
தண்நில மறுங்கில் போழ்ந்த வழியுள்
நிரைசெல் பாம்பின் விரைபுநீர் முடுக
செல்லும்,நெடுந்தகை தேரே
முல்லை மாலை நகர்புகல் ஆய்ந்தே’ [அகநானூறு : 324]
ஆனால் அடுத்தப் பாடலில் தலைவனின் வருகையே வேறுவிதமாக உள்ளது.
‘…
புரிந்த காதலொடு பெருந்தேர் யானும்
ஏறியது அறிந்தன்று அல்லது வந்த
ஆறுநனி அறிந்தன்றோ இலனே’ [அகம் 384]
போர் முடித்து தேர் ஏறியதையும் நான் அறியவில்லை. அதற்குள் தலைவி இல்லம் வந்துவிட்டதா? வந்த வழியைக்கூட நான் அறியவில்லை என்று தலைவன் தேரோட்டியிடம் சொல்கிறான்.
‘வான்வழங்கு இயற்கை வளிபூட்டினையோ?
மான்உரு ஆகநின் மனம்பூட்டினையோ
உரை மதி வாழியோ,வலவ’
நீ தேரில் காற்றை பூட்டி ஓட்டியா? அல்லது மனதை பூட்டி ஓட்டினாயா? என்று தேரோட்டியிடம் கேட்கிறான்.
நீண்ட வழியை கொண்ட ஒரு பாடலும், கண் இமைக்கும் பொழுதில் அந்த நிலத்தை கடந்து தலைவியை அடையும் ஒரு பாடலுமாக ஆகநானூற்றில் உள்ள மாசித்தியாரின் இவ்விரு பாடல்களும் வாசிப்பவருக்கு புன்னகையை வரவழைப்பது. எவ்வளவு விரைவாக தேரை செலுத்தினாலும் இடைப்பட்ட காலம் உண்டல்லவா? எனில் வந்த வழியைக்கூட காணாது தலைவன் கண்ட கனவு என்ன?
குறுந்தொகையில் ஐந்து [126,139,186,220,275] பாடல்கள் உள்ளன.
முல்லைநிலத்தின் கார்காலம் வந்து விட்டது. ஆனால் தலைவன் வரவில்லை. கார்காலத்தில் மொட்டுவிட்ட முல்லை என்ன பார்த்து தலைவன் வரவில்லையா? என்று சிரிக்கின்றன என்று தலைவி தோழியிடம் சொல்கிறாள்.
முல்லை மொட்டுகளை கார்காலத்தின் புன்னகையாக்கிய தலைவி
‘நகுமே தோழி நறுந் தண் காரே’ [குறுந்தொகை 126] என்கிறாள்.
அடுத்தப்பாடலின் தலைவி,
‘எயிறுஎன முகைக்கும் நாடற்குத்
துயில்துறந் தனவால் தோழி எம் கண்ணே’[குறுந்தொகை 186] என்கிறாள்.
‘வெருகுசிரித் தன்ன பசுவீ மென்பிணிக்
குறுமுகை அவிழ்ந்த நறுமலர்ப் புறவின்’
[குறுந்தாகை : 220]
இந்தப்பாடலில் முல்லைக்கொடிகள் மொட்டுவிட்டு நிறைந்து பொலிவதை பார்க்கும் தலைவிக்கு அதன் மலர்ச்சி காட்டுப்பூனையின் சிரிப்பை போல உள்ளது. முல்லை பொலியும் இன்றைய மாலையிலும் தலைவன் வரவில்லை.
‘பழமழைக் கலித்த புதுப்புன வரகின்
இரலை மேய்ந்த குறைத்தலை பாவை
இருவிசேர் மருங்கில் பூத்த முல்லை’ [ குறுந்தொகை : 220]
தலைவன் மீதான தன் காதலை தலைவி ‘இருவி சேர் மருங்கில் பூத்த முல்லை’ என்கிறாள். அறுவடை செய்த வரகின் அடித்தண்டில் முளை விடும் புதுத்தளிரை போன்றது அவளுடைய காதல். புதுநிலத்தின் வரகு போன்றது அவளின் மனம்.
பழைய நிலத்தை மீண்டும் மீண்டும் புது நிலமாக்குவது மழை. அதைப்போல தன்னுள் புதிதாய் தளிர்விடும் காதலை கண்டுகொள்ளாது இந்த மாலையும் அவர் வரவில்லை தோழி என்கிறாள் தலைவி. இங்கு பேரிளம் பெண்ணான தலைவியை மீண்டும் மீண்டும் மங்கை பருவத்திற்கு கொண்டு சேன்று பூப்பிக்க வைக்கும் மழையாக இருப்பது காதல். இளம் புல்வெளியாக அவளை துளிர்விட வைப்பதும் அதுவே.
இந்தப்பாடல்களில் தொடக்கத்தில் முல்லை மொக்குளாக இருக்கிறது. ‘மொக்குள்’ என்பது மொட்டு தனக்குள் மணம் பெறும் நிலை. அடுத்து சிறு இதழ் விரித்து மணத்தை பரப்புக்கிறது,இறுதியாக வண்டு சூழ்ந்த நறுமலராகிறது.
தலைவன் வரவை நினைத்து அவள் மனம் மணம் பெறுகிறது. அவள் மனம் இதழ்விரிக்கிறது. அவள் மனம் மணம் பரப்புகிறது. அவள் வராமையால் அவள் மனம் அவளை கண்டு நகைக்கிறது.
அவள் மனம் அவள் மீது கோபம் கொண்டு வெருகுப்பூனைப்போல சிரிக்கிறது. வரவிற்குப் பிறகு வண்டுசூழ்ந்த மணம்மிக்க மலராகிறது.
‘…..
இன்னாது இசைக்கும் அம்பலோடு
வாரல் வாழியர் ஐய எம் தெருவே’ [குறுந்தொகை: 139]
இங்கு தோழி தலைவனிடம் எங்கள் தெருப்பக்கமாகக்கூட நீ வராதே என்கிறாள். ஊர் ஓயாது அலர் பேசுவதை ‘இன்னாது இசைத்தல்’ என்கிறாள் தோழி.
‘மனை உறை கோழிக் குறுங்காற் பேடை
வேலி வெருகினம் மாலை உற்றெனப்
புகும்இடன் அறியாது தொகுபுஉடன் குழீஇய
பைதற் பிள்ளைக் கிளைப்பயிர்ந்தாங்கு’
தோழி தன்நிலையை அன்னை கோழியுடன் ஒப்பிடுகிறாள். வெருகு பூனை இல்லத்தின் வேலிக்கு அருகில் வந்துவிட்டது. கோழி தன் குஞ்சுகளை எப்படி காப்பது என்று அறியாமல் தவித்து தன் சிறகிற்குள் சேர்த்துக் கொள்கிறது. அது போல என்னைக் கடந்து நீ தலைவியிடம் செல்லமுடியாது என்கிறாள். எதனாலோ இங்கு தலைவனின் வருகை மறுக்கப்படுகிறது.
மேலே சொல்லிய பாடல்களின் மனநிலைகளை கடந்து பின்வரும் பாடலில் இனிமையான காதல் ஒன்று குன்றின் உயரத்தில் தளிர் விடுகிறது. இது தளிர்கள் செறிந்த இன்னும் அரும்பாத முல்லைக்கொடி. மனம் கவர்ந்தவனை பார்ப்பது மட்டுமே காதலிற்கு போதுமான பருவம் அது. மங்கை பருவத்தின் இறுதியிலும் மடந்தை பருவத்தின் தொடக்கதிலும் உள்ள பருவம். இப்போது ‘மிடில் டீன்’ என்று சொல்லும் பருவமாக இருக்கலாம். அந்தப் பருவத்தின் அழகிய காதல் இந்தப்பாடலில் இருக்கிறது.
‘முல்லை ஊர்ந்த கல்லுயர்பு ஏறிக்
கண்டனம் வருகம் சென்மோ தோழி
எல்ஊர்ச் சேர்தரும் ஏறுடை இனத்துப்
புல்ஆர் நல்அன் பூண்மணி கொல்லோ?’ [குறுந்தொகை :275]
மேய்ச்சலுக்கு சென்ற ஆநிரைகள் மேய்ச்சல் முடிந்து திரும்பும் பொழுதாகிவிட்டது. அசைப்போட்டபடி திரும்பும் அவற்றின் கழுத்துமணிகளின் ஓசை கேட்கிறது. அது தலைவன் தேரின் மணி ஓசை போலவும் உள்ளது. முல்லைக் கொடி படர்ந்த உயர்ந்த பாறை மீது ஏறி பார்க்கலாம் வா என்று தலைவி தோழியை அழைக்கிறாள்.
மழை பெய்த புதுநிலத்தின் காட்டாறுகள் கணக்கில்லாதவை. மழைபெய்து நீர் பெறுகி வழிந்து நிலத்தில் இறங்கும் போது நிலமெங்கும் சிறு சிறு ஓடைகள் தன்னிச்சையில் பிரிந்து செல்லும். முந்தின நாள் பார்த்த ஓடைகள் அடுத்தநாள் இருக்காது. எதிர்பாராத இடத்தில் புத்தம் புதிய ஓடைகள் ஓடும். இந்தப்பாடல்களில் வரும் காதலும் அப்படியானது.
இந்தப்பாடல்களை வாசித்தப்பின் ‘நகுமே தோழி நறும்தண் காரே’ என்ற வரி மனதில் ஓடிக்கொண்டிருந்தது. அந்த கார்காலம் என்பது முல்லை நிலமெங்கும் பாயும் நீர்மை. அது அந்த நிலத்தின் புன்னகை. அந்தப் புன்னகையே இங்கு காதலாகவும் இருக்கிறது.
அவன் வருகையை கனவு காணும் பாடலில் வழியெங்கும் பசுமையாகவும், சுனையாகவும்,உடன் ஓடி வரும் நீராகவும் இருப்பது அந்தப் புன்னகையே. நீராக இருந்த அது நவீனக்கவிதையில் வேறொன்றாக மாறுகிறது.
கவிஞர் சல்மா
நினைவால் ஒரு பயணம்
குழம்பிய என்னுள்
நீ விட்டு சென்ற
நினைவுகள்
அடர்ந்து படரும்
நானில்லாத பொழுதில்
என் அறையில் படரும் தூசி போல
அன்றாடப் பொழுதின்
முதல் கசப்பை
நான் விழுங்கிச் செரிக்கவும்
எங்கோ நிகழும் மரணம்
ஏற்படுத்தும் இன்மையின் பீதியை
இல்லாமல் செய்வதும்
உன் நினைவுகள்தான்
இன்று மாலை வந்து சென்ற
வானவில்லைப்
பார்க்காமல் போனதில்
எனக்கு வருத்தங்களில்லை
நேற்றைய எனது பயணம்
வழமையான
அசௌகர்யங்களோடிருந்தாலும்
எளிதாய் மாறியது உன் நினைவுகளால்தான்
உனது பிரியங்களின்
அருகாமையில் அமைதியுறும்
எனது பெரும் துயரங்கள்
நிலவு இரக்கமற்று பிரகாசிக்கும்
இந்த இரவு
இன்று உருவாக்கும் தனிமை
எப்போதை விடவும் கடுமையானது
இலக்கை நோக்கிப்பாயும் நதியாய்ப்
பெருகும் எனது தவிப்புகள்
போய்ச் சேரும் உன் நினைவுகளுக்கு
இருந்தும்
உன் அருகாமை வேண்டிப் பெருகும்
தாபம் கரைக்க
வெறும் நினைவுகள் மட்டும்
போதுமானதாயில்லை
_கவிஞர் சல்மா
நினைவுகள் மட்டும் போதுமானதாயில்லை நீ வா… என்று கேட்கும் இன்றைய கவிதையில், அந்தக்காட்டாறு அடர்ந்து படரும் தூசியாகவும்,நதியாகவும் இருக்கிறது.
[கட்டுரைக்கு உதவிய நூல்கள்:
# திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புகழகம்: சங்கத் தமிழ் புலவர் வரிசை : 5 பெண்பாற்புலவர்கள்.
# புலியூர்கேசிகள் உரைகள்.
# சங்கஇலக்கியம் பத்துப்பாட்டு எட்டுத்தொகை உரைவிளக்கங்கள்_ அறிஞர். ச.வே.சுப்ரமணியன்
# தமிழ்விக்கி: தமிழ் பெண்எழுத்தாளர்கள்]
Comments
Post a Comment