Skip to main content

கங்கா எங்கே போகிறாள்

 இன்று எழுத்தாளர் ஜெயகாந்தனின் ஆவணப்படம் பார்த்தேன். சாகித்ய அகாதமியால் வெளியிடப்பட்டது. மலையாள எழுத்தாளர் தகழி சிவசங்கரன் பிள்ளையின் ஆவணப்படத்தை எதேச்சையாக சென்ற வாரம் ஒரு நாள் சாயுங்காலம் பார்த்தேன். அன்றாட இக்கட்டுகளிலிருந்து அது தந்த மலர்ச்சியால் அடுத்தடுத்து எழுத்தாளர்கள் அசோகமித்திரன், நீல பத்மநாபன், யூ. ஆர். அனந்தமூர்த்தி ஆவணப்படங்களை தொடர்ந்து இன்று ஜெயகாந்தனின் படம். 



படம் முடிந்ததும்  'கங்கை எங்கே போகிறாள்' நாவலின் இறுதி காட்சி மனதில் வந்து கண்கலங்க வைத்தது. அது தந்த தொந்தரவிற்கு காரணம் உண்டு. சமீபத்தில் இரு பெண்களின் வாழ்க்கை மாற்றத்தை கண்முன்னே கண்ட தொந்தரவு அது. 

என் தங்கை நிவேதாவும் நானும் கங்கை எங்கே போகிறாள் வாசித்து முடித்து கண்கலங்கியது நினைவில் வருகிறது. இருபதுகளின் தொடக்க வயதில் வாசித்தோம். 

பிரபுவை பிரிந்தப்பின் கங்காவில் ஏற்படும் மாற்றம் எங்களை அப்போது மிகவும் பாதித்தது. இன்றும் அந்த மாற்றம் தொந்தரவு தருகிறது. அப்படி என்றால் அந்த நாவலில் கலை சரியான விதத்தில் செயல்பட்டுள்ளது என்று சொல்லலாம். 

கற்பு ,சமூகம், சரி தவறு ,ஆண் மனோபாவம் இவற்றைப் பற்றி நாங்கள் பேசவில்லை. கங்காவிற்குள் பிசகிப் போகும் ஒன்று தான் எங்களுக்கு தொந்தரவாக இருந்தது . இங்கு பிசகு என்ற சொல்லை மன நலத்துடன் தொடர்பு படுத்தவில்லை. 

அந்த நாவலை வாசித்தவர்களுக்குத் தெரியும். அக மாற்றம், புற மாற்றமாக வருகிறது என்று பூரணமாக சொல்ல முடியாது. ஆனாலும் ஏன் அவள் பேச்சையும் உடையையும் மாற்றிக் கொள்கிறாள். உண்மையிலேயே அவள் அகம் மாறிவிட்டதா என்ன ? 

நாவலில் உள்ள காலம், சமூக மனநிலை, மனித அபிப்ராயங்கள் இன்று மாறிவிட்டது. ஆனால் கங்காவின் அகம்? ஏன் பெண்கள் புறத்தை மாற்றிக்கொள்ள விழைகிறார்கள். அவர்களுக்கு புறம் என்னவாக இருக்கிறது.


 

கங்கா ஏன் பிரிவிற்கு பிறகு முழுவதுமாக தன் நடை உடை பாவனைகளை மாற்றிக் கொள்கிறாள். 

அவளுக்குள்  உள்ளது என்ன... கோபமா வெறுமையா ஆங்காரமா சோகமா.. 

 ஜெயகாந்தன் அதை என்னவென்று நாவலில் சொல்ல முற்படவில்லை. வாசிப்பவர்களிடம் விட்டுவிட்டு நகர்ந்து கொள்கிறார். 

வலிந்து உருவாக்கப்பட்ட முடிவல்ல.. பிரச்சாரம் அல்ல அந்த முடிவு. 

கண்முன்னே வாழ்க்கை எத்தனை விதங்களில் பிடிபடாமல் இருக்கிறது.. 

தித்திக்க காதலித்து திருமணம் செய்து கொண்டு விரும்பி அலங்காரம் செய்து கொண்ட பெண்கள் ஏமாற்றத்தால் ஸ்லேட்டில் கிறுக்கியதை அழிப்பதை போல அலங்காரம் செய்வதை அறவே விட்டுவிடுகிறார்கள். 

இயல்பாக இருப்பவர்கள் மத்திம வயதில் புறக்கணிப்பால் தங்கள் தோற்றத்தை மாற்றுகிறார்கள். 

ஒரு குழந்தை பொம்மையை வீசி எறிவதை போல. இதுவரை தன்னில் இருந்த ஒன்றை வீசி எறிகிறார்கள். பொம்மையை வீசி விட்டு அழாத குழந்தை உண்டா? 

மீண்டும் இன்று இதை எழுதும் இந்த இரவில் இன்னும் ஆழமாக எழுத்தாளர் ஜெயகாந்தனை உணரமுடிகிறது. பெண்மை என்று சொல்லப்படும் விஷயங்கள் எல்லாம் உபரி தான். அது அவளிடம் கூட இல்லை. பெண் என்பவள் பெண்மையை பிரதிபலிக்கும் சாதனமா? என்ற கேள்வி எழுகிறது. 

காங்கா எங்கே போகிறாள்.. என்று எழுதியவரும் அந்தத் தாயை போல கேள்வியுடன் கங்காவை பார்த்துக்கொண்டு நம்முடனே நிற்கிறார். 

அது அன்றாடமான சென்று திரும்புதல் அல்ல. போய்க்கொண்டே இருத்தல். 





Comments

Popular posts from this blog

வைதரணி மலர்கள் [ காவியம் நாவல் வாசிப்பு]

 மனித ஆழ்மனதை [ Subconsious] தன் நிகழ்களமாக கொண்ட நாவல் எழுத்தாளர் ஜெயமோகனின் 'காவியம்'.  இந்த நாவலில் வரக்கூடிய பைதான்...பாட்னா , காசி உட்பட அனைத்து இடங்களும் மனதின் அகவெளி தான். ஆழ்மனம் வழி ஆதிப்பெருகவிகளுள் ஒருவரான குணாட்யரின் வாழ்வையும்,தற்கால சமஸ்கிருத அறிஞனான துகாராமின் வாழ்க்கையும்,சாதவாகன பண்பாட்டின் கதைகளும் கோர்க்கப்பட்ட நாவல். நாவலின் காலம் இருபத்தோராம் நூற்றாண்டிலிருந்து கதைகளின் வழி சாதவாகனர்களின் காலம் வரை பின்னோக்கி சென்று இதிகாசகாலம் வரை கதைகளின் வழியே நீண்டு செல்கிறது. இந்த நாவலில் உணர்வுகள் நாவலின் காலம் வரலாறு என்று அனைத்தும் கீழ்நோக்கி [பின்னோக்கி] நோக்கி ஆழத்திற்கு செல்கிறது.  விந்தியமலைக்காட்டின் கதை சொல்லும் பிசாசான கானபூதி காலத்தில் மாறிமாறி அமர்ந்து கதை சொல்கிறது. நிகழ்காலம் என்று நம்பப்படும் நம் காலத்தில் அமர்ந்து சாதவாகன காலத்தின் கதையை துகாராமிற்கு சொல்கிறது. சாதவாகனர்களின் காலத்தில் அமர்ந்து குணாட்யரிடம் இருபத்தோராம் நூற்றாண்டின் துகாராமின் கதையை சொல்கிறது. காலத்தின் நடுவில் அமர்ந்து குணாட்யரிடம் இதிகாச கதைகளை எழுதிய வால்மீகி வியாசரின் கதைகளை ...

டமருகத்தின் தாளமானவள்

 திரியை மட்டும் திரும்பத்திரும்ப மாற்றி..  ஒவ்வொரு முறையும் எரியும் சுடர் ஒன்றே தானா.. ?  வேறு.. வேறா..                             _  சம்யுக்தா மாயா நம் கவிதை மரபில் காதலுக்கும் பக்திக்கும் இடையில் ஈசலின் சிறகு போன்ற மெல்லிய தடுப்பே உள்ளது. அது இருபக்கமும் ஊடுருவும் சவ்வு. பக்தி அதிகமானால் காதல். காதல் அதிகமானால் பக்தி. இந்த மாற்றம் புதிரானது.  அதே போல நாயகன் நாயகி ஃபாவம். அரங்கனை நோக்கி பாடப்பட்ட பாடல்களில்  நாயகி ஃபாவம் மேலோங்கி உள்ளது. ஈசனுக்கு பித்தா..பிறைசூடா என்று சக்ய ஃபாவம் இயல்பாக வருகிறது.  ஈசனை காதலனாக ஃபாவிப்பது என்பது முன்னால் நின்று அவனை பாடுவது அல்ல. அவன் பாதியாகவே ஆவது. ருத்ரனின் பகுதி என்பது அத்தனை எளிதல்ல என்பதாலோ என்னவோ பெண்களில் திலகவதி மட்டுமே பாடியிருக்கிறார்.  காரைக்காலம்மையால் அவனை விளையாட்டு பிள்ளையாக்கி ஆட வைக்க முடிகிறது. ( பொதுவாகவே ஈசன் மீது பாடப்பட்ட பாடல்களில் நாயக நாயகி ஃபாவம் குறைவு)  பெண்கவிகளில் ருத்ரனுக்கு இணையான காளியை சம்யுக்தாவின...

மூள் தீ

        வாசகசாலை இணைய இதழில் 2020 ஜூலை இதழில் வெளியான சிறுகதை.                             மூள் தீ ம்மா..ம்மா…என்ற பதறும் குரல் கேட்டு நடுநிசி கடந்த பின்னிரவு நேரத்தில் பதறி விழித்தது கணபதிபாளையம்.இரு மச்சுக்கட்டிடங்களுக்கு இடையிலிருந்த நூறாட்டுகாரபெரியசாமி தாத்தாவின் தகரம் வேய்ந்த வீட்டை நோக்கி ஆட்கள் ஓடினார்கள். கைலியை மடித்துகட்டிக்கொண்டு வெற்றுடலுடன் தெருவின் முச்சந்தியில் நின்ற சரவணன், “வீட்ல இருக்கற தண்ணிக்குடத்தை எடுத்துக்கிட்டு ஓடியாங்க…”என்று கத்தியவாறு ஓடினான்.நாய்கள் தெருவில் நிலைகொள்ளாமல் திரிந்தன. பெரியசாமி தாத்தாவின் கட்டுத்துறையிலிருந்து அவிழ்த்துவிடப்பட்ட ஆட்டுக்குட்டிகளின் கண்கள் பதறியபடியிருந்தன.அவற்றை இழுத்து தெருவோரமாக மின்கம்பத்தில் மேனகா கட்டிக் கொண்டிருந்தாள்.அவை வீட்டை நோக்கி அடிக்குரலில் கத்தின.நான்குவீடுகள் தள்ளியிருந்த இடிந்தவீட்டின் நுணாமரத்திலிருந்து பறவைகள் சலசலப்பு கேட்டது. ஆட்கள் தண்ணீரை வாரியிறைப்பதற்கு மேல் தீ எழுந்து விட்டிருந்தது.உள்ளே கட்டுத்துறையின் மூங்கில்கள்...