Skip to main content

அல்லிக்குளம்

 



பதின் வயதில் இந்த அல்லிக்குளத்தில் சாய்ந்து கொண்டு முதன்முதலாக தென்றல் பற்றி சொந்தமாக இருபது வரிகள் எழுதினேன். தென்றல், கடல், மலை என்று தலைப்புகள் கொடுத்து இருபது வரி கவிதை எழுதுவது தான் வீட்டுப் பாடம். 

விடுதியில் இருந்ததால் பள்ளி முடிந்தப்பின் மைதானத்தில் எங்கு வேண்டுமானாலும் அமர்ந்து படிக்கலாம். இந்த குளத்தின் வலது ஓரம் என்னுடைய இடம். 

நேற்று தங்கை நிவேதா பொதுத்தேர்வு கணிதத்தாள்களை திருத்தும் பணிக்காக முசிறி அமலா பள்ளிக்கு சென்றாள். எனக்காக பள்ளியை புகைப்படம் எடுத்து வந்தாள்.  

'பையனோ பெண்ணோ தெரியல  நூறு மார்க் போட்டேன் கமலா.. ஒரு சின்ன தப்பு இல்லை.. ஆறு பேர் மறுபடி மறுபடி திருத்தம் பாத்தாங்க.. என்று பரவசமாக சொன்னாள். 

கணிதப்பிரிவு வேண்டாம்  என்று இங்கு தான் நான் உறுதியாக சொன்னேன். நான் விரும்பிய சிறப்பு தமிழ் பிரிவு வேண்டாம் என்று அய்யா உறுதியாக இருந்தார். 
 அறிவியல் பிரிவில் படித்துக் கொண்டு தமிழில் எதையாவது சொந்தமாக எழுதி பழகியதும் இங்குதான். 

பத்தாம் வகுப்பு வரை வீட்டில் கல்கியின் கதைகள், கல்கி மாத இதழ்,இந்தியா டுடே, ராமகிருஷ்ண விஜயம் இதழ்கள் வாசிப்பது வழக்கம். விடுதியில் கதை புத்தகங்கள் வாசிக்கவோ வைத்திருக்கவோ முடியாத சூழல். துணைப்பாடத்தில் உள்ள சிறுகதைகளை மறுபடி மறுபடி வாசிப்பேன்.
 
அதனால் பெரிய நோட்புக் ஒன்று வாங்கி புத்தகப்பையில் வைத்துக்கொள்வேன். நாள்குறிப்பேடு ஒன்றும் பையில் உண்டு. அந்த நோட்புக்கில் மனதில் தோன்றுவதை எழுதுவது வழக்கம். அன்று பெரும்பாலும் அன்பு சார்ந்த மன  அல்லாட்டங்களை எழுதி பார்த்திருக்கிறேன். பின் சுற்றுலா சென்று திரும்பியப்பின் சென்று வந்த இடங்கள், இயற்கை சார்ந்த மன ஓட்டங்களை எழுதினேன். ( இரண்டு ஆண்டிற்குள் ஐந்தாறு சுற்றுலாக்கள். சிஸ்ட்டர்கள் சுற்றுலா விரும்பிகள். ) 

அதிகாலையில் நடந்து பார்த்த முட்டம் கடற்கரை, உச்சி வெயிலில் சென்ற மணப்பாடு தேவாலயம் இரண்டும் இன்றும் என் கனவில் எப்போதாவது வரும். 

பள்ளி மைதானம், வேம்புகள், புளியமரங்கள், மேனகா என்று மன ஆழத்தில் பதிந்தவற்றை எழுதினேன். பள்ளி இறுதி தேர்விற்கு முன் வழக்கமாக கேட்கப்படும் கேள்விக்கு  தமிழ் டிகிரி படிப்பேன்.. கதை எழுதுவேன் என்று சொன்னேன்.  விலங்கியல் ஆசிரியரான ஜூலி சிஸ்டர் நெற்றியில் சிலுவை குறியிட்டு தலையில் கை வைத்து 'எழுது மக்களே. . 'என்றார். ஆனால் வாழ்க்கை ஒரு விதத்தில் தமிழை என்னிடமிருந்து பறித்தது ஒரு வகையில் எல்லாமுமாக அதை அளித்தது. 
( அவர் குமரி மாவட்டத்துக்காரர் என்று இப்பொழுது புரிகிறது. அவரின் பாஷை அவரை தனியாகக் காட்டும்).  



இந்த அல்லிக்குளம் ஒரு சமயம் பூத்து நிறையும். சில நாட்களில் ஒன்றிரண்டு பூக்கள் மட்டுமிருக்கும். சில சமயங்களில் படத்தில் உள்ளது போல இலைகளாக படர்ந்திருக்கும். இது ஒரு தவம். ஜூன் மாதம் பள்ளி திறக்கும் போது தவறாமல் பூத்திருக்கும். இந்த மாற்றம் நாம் உட்பட அனைத்து உயிர்களுக்கும் உள்ள இயல்பு. மழை, பனி வெயில், காற்றுகால பருவ மாற்றம் போல. 

Comments

Popular posts from this blog

டமருகத்தின் தாளமானவள்

 திரியை மட்டும் திரும்பத்திரும்ப மாற்றி..  ஒவ்வொரு முறையும் எரியும் சுடர் ஒன்றே தானா.. ?  வேறு.. வேறா..                             _  சம்யுக்தா மாயா நம் கவிதை மரபில் காதலுக்கும் பக்திக்கும் இடையில் ஈசலின் சிறகு போன்ற மெல்லிய தடுப்பே உள்ளது. அது இருபக்கமும் ஊடுருவும் சவ்வு. பக்தி அதிகமானால் காதல். காதல் அதிகமானால் பக்தி. இந்த மாற்றம் புதிரானது.  அதே போல நாயகன் நாயகி ஃபாவம். அரங்கனை நோக்கி பாடப்பட்ட பாடல்களில்  நாயகி ஃபாவம் மேலோங்கி உள்ளது. ஈசனுக்கு பித்தா..பிறைசூடா என்று சக்ய ஃபாவம் இயல்பாக வருகிறது.  ஈசனை காதலனாக ஃபாவிப்பது என்பது முன்னால் நின்று அவனை பாடுவது அல்ல. அவன் பாதியாகவே ஆவது. ருத்ரனின் பகுதி என்பது அத்தனை எளிதல்ல என்பதாலோ என்னவோ பெண்களில் திலகவதி மட்டுமே பாடியிருக்கிறார்.  காரைக்காலம்மையால் அவனை விளையாட்டு பிள்ளையாக்கி ஆட வைக்க முடிகிறது. ( பொதுவாகவே ஈசன் மீது பாடப்பட்ட பாடல்களில் நாயக நாயகி ஃபாவம் குறைவு)  பெண்கவிகளில் ருத்ரனுக்கு இணையான காளியை சம்யுக்தாவின...

லில்லி மலர் பூக்கும் நிலம்

  ( முனைவர் யோ . ஞான சந்திர ஜாண்சன் அவர்களின் கிறித்தவக்காப்பியங்கள் நூலை   முன் வைத்து … ) காப்பியம் என்பதும் காவியம் என்பதும் ஒரே பொருள்படுபவை . வடமொழியில் காவியம் . தமிழில் காப்பியம் . தமிழில்   1. ஐம்பெருங்காப்பியங்கள் 2. ஐஞ்சிறுகாப்பியங்கள் 3 . சமயகாப்பியங்கள் என்ற வகைமைகள் உள்ளன . சமய காப்பியங்களுள் கிருத்துவ காப்பியங்கள் வருகின்றன . சைவ வைணவ காப்பியங்கள் பக்தி காலகட்டத்தை சேர்ந்தவை . இதன் காலம் தோராயமாக பத்தாம் நூற்றாண்டிலிருந்து பனிரெண்டாம் நூற்றாண்டு வரை.  கிருத்தவக்காப்பியங்களின் காலம் கிருத்தவர்கள் நம் நாட்டிற்குள் வந்த காலகட்டத்தில் துவங்குகிறது . இந்தியாவில் முதன்முதலாக அச்சான மொழி தமிழ் . இயேசு சபை துறவியான ஆன்ட்ரிக் அடிகளார் கோவாவில் தமிழில் உலோக அச்சுகள் உருவாக்கி பயன்படுத்தி தமிழ் அச்சு வரலாற்றை தொடங்கி வைக்கிறார் . 1570 களில் இந்த தொடக்கம் நிகழ்ந்து விட்டது . கொல்லத்தில் முதல் நூலான தம்பிரான் வணக்கம் அச்சடிக்கப்படுகிறது . தமிழில் அச்சு நூலாக வந்த முதல் நூல் ஒரு மொழி ...

மூள் தீ

        வாசகசாலை இணைய இதழில் 2020 ஜூலை இதழில் வெளியான சிறுகதை.                             மூள் தீ ம்மா..ம்மா…என்ற பதறும் குரல் கேட்டு நடுநிசி கடந்த பின்னிரவு நேரத்தில் பதறி விழித்தது கணபதிபாளையம்.இரு மச்சுக்கட்டிடங்களுக்கு இடையிலிருந்த நூறாட்டுகாரபெரியசாமி தாத்தாவின் தகரம் வேய்ந்த வீட்டை நோக்கி ஆட்கள் ஓடினார்கள். கைலியை மடித்துகட்டிக்கொண்டு வெற்றுடலுடன் தெருவின் முச்சந்தியில் நின்ற சரவணன், “வீட்ல இருக்கற தண்ணிக்குடத்தை எடுத்துக்கிட்டு ஓடியாங்க…”என்று கத்தியவாறு ஓடினான்.நாய்கள் தெருவில் நிலைகொள்ளாமல் திரிந்தன. பெரியசாமி தாத்தாவின் கட்டுத்துறையிலிருந்து அவிழ்த்துவிடப்பட்ட ஆட்டுக்குட்டிகளின் கண்கள் பதறியபடியிருந்தன.அவற்றை இழுத்து தெருவோரமாக மின்கம்பத்தில் மேனகா கட்டிக் கொண்டிருந்தாள்.அவை வீட்டை நோக்கி அடிக்குரலில் கத்தின.நான்குவீடுகள் தள்ளியிருந்த இடிந்தவீட்டின் நுணாமரத்திலிருந்து பறவைகள் சலசலப்பு கேட்டது. ஆட்கள் தண்ணீரை வாரியிறைப்பதற்கு மேல் தீ எழுந்து விட்டிருந்தது.உள்ளே கட்டுத்துறையின் மூங்கில்கள்...