தொடர்ந்து ஒருமாதத்திற்கு மேலாக மழை பெய்துகொண்டிருக்கிறது. சிலநாட்களில் பின் மதியம் தொடங்கி இரவு வரை பெய்வது வழக்கமாக ஆனது.
பின்பு நின்று நின்று பெய்தது. சென்ற வாரம் மூன்று நாட்கள் நல்ல வெயில். பெரும்பாலும் வீட்டில் உள்ள விதை நெல்லை ஒருமுறை வெயிலில் காய வைத்தார்கள். இங்கு நூற்றுக்கு நூறு சதம் சீரகசம்பா நெல் விவசாயம். நல்ல வருமானமுள்ள விவசாயிகள் வாழும் நிலம். கொஞ்சம் பணமிருந்தால் நெல் அறுவடை காலங்களில் நெல்லை வாங்கி பாதுகாத்து ஆறு மாதம் சென்று விற்றால் நல்ல லாபம் கிடைக்கும். இங்கு விளையும் சீரகசம்பா விற்கு நல்ல மதிப்புண்டு. நல்ல சன்னமான வடிவமும் சுவையும் காரணம். கொல்லிமலை அடிவாரத்தின் வளமான வண்டலும், நல்ல நீரும், நல்ல வெயிலும் சீரகசம்பா வளத்திற்கு காரணம் என்று அய்யா சொல்வார். இங்குள்ள இதே விதை நெல்லை ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள பச்சைமலை அடிவாரத்து அம்மாச்சி ஊரில் விதைத்தால் இத்தனை சன்னரகம் கிடைக்காது. அரிசி அதிகமாக உடையும்.
ஏதோ ஒரு மாயம்.ஆனால் ஏற்றுமதி போக மிச்சத்தை தான் பொங்கலிற்காக எடுத்து வைப்பது. கல்யாணம் செய்து கொடுத்த பெண்பிள்ளைகளுக்கு சில மரக்கால்கள் சீரகசம்பாஅரிசியை ஆசையாக எடுத்து வைப்பார்கள். ஒரு மூட்டை முழுதாக எடுத்து வைப்பவர்கள் பணக்காரர்கள். எங்கள் தெரு சிறு குறு நில விவசாயிகள் வாழும் தெரு. சிலருக்கு இப்போது தான் சொந்த நிலம் என்ற 'திரு' கை சேர்ந்திருக்கிறது. மற்றவர் வயலில் பண்ணையம் பார்ப்பது, குத்தகைக்கு வயல் பார்ப்பது, தண்ணீர் அடைக்கும் வேலை, வயல் வேலை என்று வேலை செய்பவர்கள் அதிகமாக வாழும் தெரு எங்களுடையது.
ஊரின் வடக்கே உள்ள தெருக்களில் ,மையத்தில் உள்ள தெருக்களில் உள்ளவர்கள் பெருநில விவசாயிகள். ஒரே சமூகத்தவர் அதிகமாக வாழ்ந்தாலும் ஊருக்குள் கண்களுக்கு தெரியாத ஒரு கோடு தாத்தா காலத்திலிருந்தும் அதற்கு முன்பிருந்தும் ஓடிக்கொண்டிருக்கிறது.
இங்கு ஒரே சமூகத்தினருக்கு இரண்டு இடு காடுகள் உண்டு. எங்கள் தெருவில் உள்ள பெரும்பான்மையான சமூகத்திற்கு ஒரு இடுகாடு, ஊர் பொது இடுகாடு தனியாக உள்ளது. எங்கள் தெருவின் பெருவிவசாயி ஒருவரின் நிலத்தில் ஊரின் ஆதித்தலைமுறையின் நாக தெய்வங்களின் பதிட்டைகள் தனியாக உள்ளன.
காலத்தில் எங்கோ ஒரு மடிப்பில் காவலாளியாக , கூலியாட்களாக இருந்தவர்கள் சிறுகச் சிறுக நிலம் வாங்கி சொந்த வயலில் சீரகசம்பா விதைக்கும் காலம் இது. இன்னும் சில நாட்களில் பயிர் பொங்கல் வந்துவிடும். நட்ட பயிர் வேரூன்றி தலைநீட்டி எழும் கார்த்திகை முழுவதும் தங்கள் வயல்களுக்கு அருகில் உள்ள சிறு தெய்வங்களுக்கு பொங்கலிடும் காலம். தங்கள் பயிர்களையும் தங்களையும் காக்க வேண்டி மலை மேலிருக்கும் தாயம்மாவையும், ஆகாசகங்கை சூடி நிற்கும் அறப்பள்ளீஸ்வரரையும், அறம் வளர்த்த நாயகியையும், அவர்களின் கீழ் நிலத்தை காக்கும் எதுமலையானையும், ஊமைப்பிடாரியையும் இன்னும் பல தெய்வங்களையும் காவலிற்கு அழைக்கும் காலம் இது.
பிரபஞ்சத்தின் முன் வெட்ட வெளியில் தங்களின் கையகல நிலத்தில் விதைத்து நட்டு, அதை காக்க வேண்டி பிரபஞ்சத்தையே அழைக்கும் ஒரு நிகழ்வு இந்தவிழா. எனக்கு சிறு வயதிலிருந்தே பயிர் பொங்கல் விழாவின் மீது ஈடுபாடு உண்டு. நான் நேசிக்கும் பச்சை மாமலை மழையால் வழிந்து கொண்டிருக்க ,கண்ணெட்டும் வரை பயிர் தலை தூக்கி நிற்க, மழையின் ஈரமும், வாய்க்கால் எங்கும் நீர் வழிந்து கொண்டிருக்க. ..இது படைப்பின் காலம்.
நான் இந்த காலகட்டத்தில் தான் என் முதல் கதையை எழுதினேன். கோடையில் மிக வரண்டு மழையே வராது என்று நினைத்த அந்த ஆண்டில் சட்டென்று வந்த மழையால் மாயம் போல எல்லாம் மாறியது. அந்த கோடையை என் கதையில் வைத்தேன். அந்த கோடை மகத்தானது. அது அந்த சட்டென்ற பெருமழைக்காக நிலம் செய்த தவம். தன்னின் ஆற்றலை உட்கரந்த நிலத்தின் உறுமல். கோடையில் தனித்த சிங்கம் போல நிலம் அமர்ந்திருந்தது. அந்த சித்திரம். ..என் எழுத்தை தொடங்கி வைத்தது.
எப்போதும் கோடையில் சற்று உயரமான இடத்திலிருந்து இந்த நிலத்தை பார்க்கும் போது மலையுச்சியில் பசியுடன் அமர்ந்திருக்கும் சிங்கமாக உணர்வேன். இங்கு வெயிலும் உச்சம். மழையும் உச்சம். இந்த பூமிக்கும் கந்தக பூமி என்று உள்ளூர் பெயருண்டு.
கெந்தக பூமி என்று சொல்வார்கள். அதே போல இது இந்திரனின் நிலமும் கூட.
இன்று அதிகாலையில் மழை ஓய்ந்ததும் ஓடிச்சென்று வாசலில் கோலமிட்டேன். நான் வழக்கமாக செய்வது தான். உடனே மழை வரும் என்று எனக்கு தெரியாமலில்லை. பக்கத்து வீட்டு அக்கா தங்கைகள் அம்மா அத்தைகள் என்னை வித்தியாசமாக பார்ப்பார்கள்.
'மழை வருமா..வராதான்னுக்கூட இன்னும் தெரியல.. 'என்ற கேலி என்னைப் பற்றி அவர்களின் மனதிற்குள் இருக்கும்.
மழை பெய்து கழுவி தூய்மையாகிய வாசலின் அழகில், மென்மையான ஈரத்தில், ஈடு சொல்ல முடியாத அழகிய மழை அதிகாலையில், ஒரு சிறிய மூவிதழ் தாமரையை வரைவது என்பது சடங்கு அல்ல. அதிகாலையின் பாதத்தில் என் மனமென்னும் மலரை வைக்கிறேன். அதை பார்த்து எதோ ஒன்று புன்னகைக்கைக்கூடும். அது இல்லாமலும் இருக்கலாம். அந்த மூவிதலே ஒரு புன்னகை.
உள்ளே வந்து சற்று நேரத்தில் மழை வலுத்து பெய்கிறது. வெயிலாக உறுமியதும் மழையாகி பொழிவதும் காக்கட்டும் நம்மை.



Comments
Post a Comment