திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் லலிதா நின்று கொண்டிருந்தாள். திருமணத்திற்குப் பிறகு முதன்முதலாக தனியாக திருச்சி வந்திருக்கிறாள்.
பணிபுரியும் தனியார் பள்ளியில் இதற்காக ஒருநாள் விடுமுறை வாங்குவதற்கு இரண்டு வாரங்களாக தலைமையாசிரியரிடம் சென்று நிற்க வேண்டியிருந்தது. எதுவாக இருந்தாலும் ஞாயிறு விடுமுறையை கைக்காட்டும் அந்த அம்மாள் இதை மறுக்க முடியாமல் பதினைந்துநாள் சென்று, “ சன்டே ஸ்கூலுக்கு வாங்க.. ஆஃபீஸ்ல கொஞ்சம் வேலை இருக்கு,”என்று புன்னகைத்தவாறு விடுமுறை அளித்தாள்.
அலைபேசி ஒலித்தது.
“ சீக்கிரமா வந்தா மாராடி ஜோசியரை பாத்துட்டு வரலாம், “
“எதுக்கு .. சிலிண்டர் ஏன் வெடிக்கலேன்னு ஜோசியர்க்கிட்ட கேக்கனுமா, “
“ஓவரா பேசாத.. ஏதோ கண்திருஷ்ட்டி இருக்குன்னு அம்மாதான் பாத்துட்டு வரசோன்னாங்க,”
“இங்க பாருங்க சதீஸ்..ஜோசியம் பரிகாரம் பாக்கறதெல்லாம் ஒரு போதை. எதுக்கெடுத்தாலும் ஜாதக நோட்டை தூக்கிட்டு அலையனுன்னு தோணும்..கட் பண்ணுங்க,”
லலிதா அலைபேசியை ஊமையாக்கி தோள்பையில் போட்டு மூடினாள். பேருந்து வந்து நின்று சென்றது.
மனதில் ஒரு அடைசல். உள்ளுக்குள் சொல்லமுடியாத நசநசப்பு. உடலோ மனமோ இரண்டுமோ எதுவோ போட்டுப்படுத்தி எடுத்தது. நடக்கும் பாதையில் எந்த நேரமும் முன்னால் ஒரு தூண் இருந்து கொண்டே இருப்பது போல. அதில் முட்டிக் கொண்டே இருப்பது பொன்ற மனநிலை.
திருமணமான கொஞ்சநாளிலேயே சில விஷயங்களை பேசமுடியாத தருணங்களில் மனம் மானசீகமாக ஒரு தூணில் முட்டிக்கொள்கிறது. திருமணத்திற்கு முன்பு இப்படி இல்லை. இப்போது எதற்கெடுத்தாலும் வீடு சரியில்லை, நேரம் சரியில்லை, ஜாதகம் பார்க்கணும் என்று சொல்பவர்களை அவள் எதிர் கேள்வி கேட்பதில்லை. ஆனால் சதீஸிடம் மட்டும் கேள்வி மேல் கேள்வி கேட்பாள். மற்றவர்கள் பரவாயில்லை. அவனையும் இதே வழியில் விட்டால் வாழ்க்கை முழுவதும் சிரமம் என்ற பயம் அவளுக்கு. இவளின் தோழிகள் திருமணத்திற்கு முன்பு அவர்களின் அம்மாக்களை கேலி செய்தவர்கள். மூன்று ஆண்டுகளில் அம்மாக்களை போலவே மாறிவிட்டதை
நினைத்தாலே இவளுக்கு பீதியாக இருந்தது.
“நமக்கு வர சாதாரண பிரச்சனைக்குகூட நாம காரணமில்லையா, “என்று இவள் கேட்டால் சதீஸ் சிரிப்பான்.
“சின்ன சின்ன விஷயத்துக்குக்கூட மத்தவங்களையே சொன்னீங்கன்னா காலப்போக்கில் அது துவேசமாக மாறாதா..அது ஒருமாதிரி வன்முறை இல்லையாங்க,”
“எல்லாரும் அப்படித்தான்..ஒனக்கு நடைமுறை புரியல..எதுக்கெடுத்தாலும் நாமதான் சரியா பண்ணலன்னு நினைக்கிறது தாழ்வு மனப்பான்மை டீச்சர்,” என்று சிரிப்பான்.
இரண்டு நாள்களுக்கு முன் சமைக்கும் போது சமையல் எரிவாய்வு கசியும் வாடையை உணர்ந்த உடனே சிலிண்டரை திறந்த வெளிக்கு கொண்டு வந்து வைத்துவிட்டாள். அவளுடைய முன்னெச்சரிக்கை பற்றி எதுவும் சொல்லாமல், “ ஜாதகம் பாக்கனும்...கல்யாணமாகி வந்து ஒரு நாளான நாளுல கோயிலுக்கு விளக்கு போட்டியா.. இதெல்லாம் செய்யாட்டா இப்படித்தான் வீட்டுக்கு கஸ்ட்டம் வரும்,” என்று பக்கத்துவீட்டு உறவுக்கார அம்மாள் முணுமுணுத்தாள். இவள் மானசீகமாக தன் முன்னால் இருந்த தூண் மீது வேகமாக முட்டிக்கொண்டாள். அந்த அம்மாள் தொடங்கி வைத்ததை வீட்டில் உள்ளவர்கள் பிடித்துக்
கொண்டார்கள். அவளுக்கு வீட்டில் வேலையிடத்தில் என்று யாரை பார்த்தாலும் எரிச்சலாக இருந்தாலும் வெளிகாட்டவும் முடியவில்லை.
“மாரீஸ் போலாமா..ஐஞ்சு தியேட்டர்ல்ல எதுலயாச்சும் நல்ல படம் ஓடும்,”என்ற குரல் அவள் கவனத்தை திருப்பியது. “பஞ்சபாண்டவாஸ்…”என்று ஒருத்தி சொல்ல மற்றவர்கள் சிரித்துக்கொண்டே உறையூர் செல்லும் பேருந்தில் ஏறிக் கொண்டார்கள். லலிதாவிற்கும் எங்காவது செல்ல வேண்டும் என்ற எண்ணம் ஓடியது. சட்டென்று தேவர் ஹால் நினைவிற்கு வந்தது. கைக்கடிகாரத்தை பார்த்துவிட்டு கல்லூரி சாலையில் வேகமாக நடந்தாள்.
மலைக்கோட்டைக்கு எதிரே உள்ள லூர்து அன்னை சர்ச்சை கடந்து செல்லும் போது உற்சாகமானாள். கல்லூரியில் படிக்கும் போது கைக்காசு குறைவாக இருந்தால் தேவர் ஹாலிற்கு வருவது வழக்கம். தோழிகளுடன் மலைக்கோட்டை நேதாஜி சாலைக்குள் நுழைந்தால் பர்ஸ் காலியாகிவிடும். இங்கு பரதநாட்டியம், பட்டிமன்றம், பாட்டுக்கச்சேரி, நாடகம் என்று எதாவது நடக்கும். சில நாட்களில் டிக்கெட் கூட தேவையில்லை. சிறு உணவகங்களை கடந்து தேவர் ஹாலின் நுழைவு வாயிலில் சென்று நின்றாள்.
படிகளில் நின்ற காவலாளி உள்ளே வருமாறு சைகை காட்டினார். ஹாலின் இரட்டை வளைவு முகப்பை பார்த்தவாறு இரும்புக் கதவை திறந்தாள்.
“இப்போ ஏதாச்சும் நிகழ்ச்சி நடக்குதாண்ணா, “
“இன்னும் கொஞ்ச நேரத்துல நாடகம் போடறாங்க...சீட் இருக்கு போம்மா..”
“டிக்கெட்..”
“ இந்த நாடகம் ஃப்ரீ ஷோ, “
“ பாகவதர்.. சிவாஜி..ஜெயலலிதால்லாம் இங்க நடிச்சப்போ எக்ஸ்ட்ரா சேர் போடுவாங்களாம்…அந்த காலமெல்லாம் எப்பவோ போச்சு..”என்று அவர் சலிப்பாக சொல்லியபடி இரும்பு நாற்காலியை டர்ரென்று இழுத்து அமர்ந்தார்.
கதவைத் தள்ளி அரங்கிற்குள் நுழைந்தாள். உள்ளே ஒளி இருந்தாலும் மெல்லிய இருள். சட்டென்று நகரத்தெரு சந்தடிகள் மறைந்த அமைதியில் தடுமாறி நின்றாள். கண்கள் தெளிவாவதற்காக கண்களை கசக்கினாள்.
முதல் மூன்று வரிசைகளில் வயதானவர்களும், மத்திய வயதுக்காரர்களும் ஆண்களும் பெண்களுமாக அமர்ந்திருந்தார்கள். அவள் உள்ளே நுழைந்ததை உணர்ந்த சிலர் திரும்பிப்பார்த்துவிட்டு மறுபடியும் அடங்கிய குரலில் பேச்சை தொடர்ந்தார்கள். தனித்தனியாக அங்கங்கே சிலர் அலைபேசியும் ஆள்காட்டி விரலுமாக அமர்ந்திருந்தார்கள. லலிதா நடுவரிசை இருக்கை ஒன்றில் மையமாக சென்று அமர்ந்தாள். சுற்றிலும் யாருமில்லை.
டிஃபன்பாக்ஸிலிருந்த எலுமிச்சை சாதத்தை சிறுகரண்டியில் எடுத்து சாப்பிட்டுக்கொண்டே அரங்கை சுற்றி நோட்டம்விட்டாள். மேடையின் வலது ஓரத்தில் மைக்கில் ஒரு பெண் இன்னும் பத்து நிமிடங்களில் நாடகம் தொடங்கும் என்று அறிவித்துவிட்டு சென்றாள். சற்று நேரத்தில் அரங்கின் விளக்குகள் அணைக்கப்பட்டன.
விளக்குகளை அணைத்ததும் அரங்கில் இரவின் நிழல் விழுந்தது. அது மனதிற்குள்ளும் விழுவதை பல நாள் உணர்ந்திருக்கிறாள். காலமும் பொழுதும் அவளும் அற்ற நிழல் அது. அதற்காக தான் அவள் இங்கு வருவது. கூச்சல்கள் சத்தங்கள் இல்லாத அமைதியான வேறு உலகம். முக்கியமாக எந்த எச்சரிக்கையும், பயமும் தேவைப்படாத வெளிஉலகம். கல்லூரியில் படிக்கும் போது ஹாஸ்ட்டல் அவுட்டிங் நாட்களில் முழு நாளும் ஹாஸ்ட்டல் வெறிச்சோடி கிடக்கும். கலாட்டாக்கள் இல்லாத இடமென்று இங்கு வரத்தொடங்கினாள். பின்பு ஏனோ பிடித்துப்போனது. ஒரு பெண்பாடகி கம்பீரமான குரலில் பாடிய ‘ஆலோலம் கூவி மகிழ்ந்தருள் வேலோன் சேவடி சரணம்' என்ற பாடலில் உள்ள இனிப்பு காலத்துக்குமாக மனதில் ஒட்டிக்கொண்டது.
மேடையிலிருந்து அந்த பெண் குரல் “வனாந்திரத்தின் மைந்தர்கள் என்ற நாடகத்தை நாம் இப்போது பார்க்கலாம். இஸ்ரவேலின் பெர்செபா பாலைவனத்தின் அதிகாலை நேரத்தில் நாடகம் தொடங்குகிறது” என்று கம்பீரமாக அறிவித்தது.
திரை விலகி நீலநிறமான வானம் கண்களுக்கு புலப்பட்டது. மென்நீலம் மேடை முழுவதும் பரவி தழும்பியது. சற்று நேரத்தில் மெல்லிய மென்சிவப்பு படற தொடங்கியதும் மணல் குன்றுகளும் பாலை மணல்வெளியும் தெரிந்தது. பின்னால் வயலின் இசை. கேட்டும் கேக்காதது போல. ஒரே மாதிரி இசை மறுமுறை ஒலிக்க அது 'என்ன செய்வேன்' என்ற வார்த்தையாக மனதில் ஓடியது.
“ஆப்ரகாமே …நான் சொல்வதைக்கேள்,”என்ற அசரீரியின் குரல் மேடையின் அனைத்து பக்கங்களிலிருந்தும் ஒலிக்கத்தொடங்கியது. பெரிய யானைகள் நடப்பது போன்று ஒரு காட்சி எழுந்தது. பின்பு அங்கு பெரிய கூடாரங்கள் காற்றில் உப்பலாகி அடங்கி மீண்டும் உப்பலாக மாறிக்கொண்டிருந்தன.
நீண்ட பழுப்பு நிற அங்கியில் ஆப்ரகாம் கூடாரத்திலிருந்து வெளியே வந்தார். அவர் தலைப்பாகையை கட்டியிருக்கும் கருப்புக்கயிறு காது வரை தொங்கி ஆடியது. அவரின் தலை நடுங்கிக்கொண்டிப்பதை அந்த கயிறு முனைகளின் ஊசலாட்டத்திலிருந்து உணர முடிந்தது.
ஆப்ரகாம் கூடாரத்திற்குள் உறங்கும் இஸ்மாயில் முகத்தைப் பார்த்தார். பின்பு மணல்வெளியில் வந்து நின்றார். அங்கியை நன்றாக இழுத்துவிட்டபடி வெறுமை பொங்கும் மனதுடன் குளிர்காற்றில் நின்றார்.
அவருக்கும் அவருடைய மக்களுக்கும் நீண்டநாடோடி வாழ்க்கை. ஹைக்கல் மலர் பூத்த ஒரு வசந்தகாலத்தில் பெர்சபாவில் கூடாரம் அடித்து தங்கினார்கள். அங்கு ஒரு கிணற்றை தோண்டினார். வயதாவதன் சோர்வை விட எப்படியோ குழந்தையில்லாத சோர்வு அவர் முகத்திலும் உடலிலும் இருப்பதை அனைவரும் உணர்ந்தனர். முதிய பெண்கள் அவர் மனைவி சாராளிடம் அவருக்கு இன்னொரு மணம் செய்விக்க வேண்டினார்கள். சாராளின் பணிப்பெண்ணாக இருந்த ஆகாரை அவரின் கூடாரத்திற்குள் அழைக்கச்சொன்னார்கள். கூடாரத்திற்குள் அழைத்தல் என்றால் திருமணமாகிவிட்டது என்று பொருள். சாராள் மனம் தடுமாறினாள். இத்தனை காலம் தாழ்த்தியதே தவறு என்று அவர்கள் கடிந்து கொண்டார்கள். அன்றிரவு அவள் கையேந்தி இறைவனிடம் எதுவும் கேட்காமல் கண்ணீர் சிந்தினாள்.
ஆகார் மிக அமைதியாக புதிதாக அமைக்கப்பட்ட அந்த சிறிய கூடாரத்திற்குள் நடமாடினாள். முன்பெல்லாம் சாராளின் பணிப்பெண்ணாக ஓயாத வேலைகள். படுத்தவுடன் ஒரு கனத்த கம்பளி போல உறக்கம் அவளை மூடிவிடும். இப்போது அப்படியில்லை.
ஆப்ரகாம் கால்நடை மந்தைகளை, மற்ற கூடாரங்களில் உள்ள தன் மக்களை பார்த்துவிட்டு திரும்பி முன்னிரவில் தன்னுடைய கூடாரத்திற்கு வருவதற்குள் குளிர் அதிகமாகிவிடும். அதுவரை ஆகார் கூடாரத்திலிருந்து விண்மீன்களை பார்த்துக்கொண்டேயிருப்பாள். கூடாரத்து ஜன்னல் அருகில் நின்று கண்களை விரித்து மணல் வெளியை, மணல்குன்றுகளை, மணல்வரிகளை, மணலை சுழற்றும் காற்றை பார்த்துக்கொண்டிருப்பாள்.
கூடாரத்திற்கு சற்று தள்ளியிருந்த சிறிய கல்லிடுக்குகளில் தூலிப்மலர்கள் மலர்ந்த காலத்தில் ஆகாருக்கு இஸ்மாயில் பிறந்தான். நட்சத்திரம் போன்று அவன் கண்கள் மினுங்கி சிரிக்க அவன் வளர்ந்த காலத்தில் ஆபிரகாமின் கிணற்றில் நீர் வற்றவில்லை. ஆப்ரகாம் கிணற்றில் தண்ணீர் தங்கி நின்றது. அவர்கள் அங்கு தங்கி ஆட்டுக்குட்டிகளை விலையாக அளித்து இந்த நிலத்தை உரிமை கொண்ட அன்று கூடாரங்களின் மன்றில் உப்புதேவதாரு மரத்தை நட்டார். அது மெல்ல மெல்ல வளர வளர அவரின் மக்கள் பெருகினர். குடி பெருகி பரவியது. இறைவன் தனக்கு வாக்களித்த தேசம் இதுவே என்று உணர்ந்து தனக்கு இன்னொரு வாரிசும் இங்கே பிறப்பான் என்று அங்கேயே தங்கினார். சுற்றிலும் கிணறுகளை தோண்டினார்.
எவ்வளவு மறைத்தும் ஆகாரின் மனதின் ஏளனம் அவ்வபோது சுழற்றும் வாள்நுனி மின்னல் போல சட்சட்டென்று வெளிப்பட்டு மறைந்தது. சாராளின் கண்ணீர் துளி ஒன்று வைரமாய் உரு கொண்டது போல ஐரிஸ் மலர் மலரும் காலத்தில் மெல்லிய நீலக் கண்களுடன் ஈசாக் பிறந்தான். அவன் கண்களில் பாலைமணல் வெளியில் எப்போதும் வெம்மை தழும்புவது போல ஈரம் எப்போதுமிருந்தது. அந்த ஈரம் அவர்களை நம்பிக்கை கொள்ள செய்தது. அவன் சிரிக்கும் போது அந்தக் கண்கள் இன்னும் ஈரம் கொண்டன. ஆப்ரகாமின் மந்தை பெருகியது. இன்னும் கிணறுகள் தோண்டினார்.
இஸ்மாயிலின் விண்மீன்கண்களில் இருந்த ஆழமான கனவு அவர்களை எங்கேயோ பதட்டப்படுத்தியது. அலைந்து திரியும் கனவு அது. ஆனால் ஆப்ரகாமுடன் உர்ரிலிருந்து கிளம்பி அலைந்து திரிந்து இழந்து இங்கு அமர்ந்திருப்பது போதும் என்று அனைவருக்கும் தோன்றிய காலத்தில் தான் முதல் கிணறு நிலைத்து அமைந்தது. இனி அடுத்த தலைமுறை கிளம்பி செல்ல வேண்டியது.
ஒவ்வோரு நாளும் பிறை வளர்வது போல அவர்கள் வளர்ந்தார்கள். அந்தி குளிர தொடங்கும் வேளைகளில் கை முழுக்க நிறைந்து பின் ஒன்றுமில்லாமல் போகும் அந்த மணலை அள்ளி அள்ளி இறைத்தார்கள். மணல் அவர்களுக்கு உருமாறும் பொம்மை. ஒரு இனிய அந்தியில் இருவரும் கூடாரங்களுக்கு நடுவில் இருந்த முற்றத்தில் இருகைகளிலும் மணலை இறுக்கிப்பிடிக்கும் விளையாட்டை கண்டு கொண்டார்கள். மற்ற குழந்தைகளில் சிலர் ஓடிப்பிடித்து விளையாடினார்கள். சில வயசாளிகள் கிணற்று ஓரத்தில் வளர்ந்திருந்த பேரீட்சை மரங்களடியில் அமர்ந்து உர்ரிலிருந்து அவர்கள் கிளம்பி அலைந்து திரிந்த காலத்தின் கதைகளை குழந்தைகளுக்கு சொல்லிக்கொண்டிருந்தார்கள்.
மற்றவர்கள் எப்போதும் போல அவர்களின் விளையாட்டை ரசித்தபடி கிணறுகளில் தண்ணீர் முகர்ந்து மந்தைகளுக்கான மரத்தொட்டிகளில் ஊற்றிக்கொண்டிருந்தார்கள். நீண்ட நேரமாக மணல் விளையாட்டில் குதூகளிக்கும் இஸ்மாயிலையும் ஈசாக்கையும் பார்த்தவாறு சிலர் நின்றுவிட்டார்கள். இருவரும் ஒவ்வொரு முறையும் கை நழுவும் மணலை கண்டு சிரித்தபடி அடுத்த கைப்பிடி மணலை அள்ளினார்கள். விடாமல் மணலை அள்ளிக் கொண்டே சிரித்துக் கொண்டிருந்த தீவிரம் மற்றவர்களை நகரவிடாமல் அங்கேயே நிற்க வைத்தது. தண்ணீருடன் ஆட்கள் வராததால் ஆப்ரகாம் கூடாரங்களை தள்ளியிருந்த பட்டியிலிருந்து வேகமாக வந்தார். அவர்களின் விளையாட்டை கண்டு சமைந்திருந்த ஆட்களை கலைக்க விரும்பாமல் மரத்தினடியிலிருந்த சிறு பாறையில் அமர்ந்தார். அவர் எப்போதும் இவர்கள் இருவரின் வெண்ணீல விழிகளில் தன்னை பறிகொடுப்பது வழக்கம். வயது கடந்து தந்தையாவது மிகப்பெரிய இளக்கம்.கடினத்தன்மையெல்லாம் மறைந்து பாலை விட்டுக்கொடுக்கும் இடத்தில் மலரும் மலர்களை போல அவருள் பிள்ளைபாசம் மலர்ந்திருந்தது.
அவருக்குப்பின்னால் பெண்களும் வந்து நின்றார்கள். பிள்ளைகள் இருவரும் கைகளை இணைத்து மணலை அள்ளி கீழே நழுவாமல் பிடித்துக்கொண்டு சிரித்த போது இறைவா என்று அனைவரும் நெஞ்சில் கைவைத்தார்கள். முதிய தாய் ஒருத்தியின் விம்மல் அந்த இடத்தை அதிர செய்தது.
வான் நோக்கி சிரித்த ஆப்ரகாமின் வலது தொடையில் அமர்வதற்காக இருவரும் ஓடிவந்தார்கள். ஒரு அடி முன்னே வந்த இஸ்மாயில் சட்டென்று குதித்து அமர்ந்து சிரித்தான். இளையவன் சிறுகைகளை கால்களை அசைத்து எம்பி இடது தொடையில் அமர்ந்தான். அன்று இரவு கூடுதல் இறைச்சியும் இனிப்புகளும் உண்டார்கள். அனைவரும் சிரித்துக் கொண்டு நெருப்பை சுற்றி அமர்ந்து பாடிக்கொண்டிருந்தார்கள்.
சாராள் தன் கூடாரத்தில் தீ எரியும் கண்களுடன் உணவு உண்ணாமல் அமர்ந்திருந்தாள். ஆப்ரகாம் நீண்ட நேரமாக அவள் இல்லாததை உணர்ந்து அவளை தேடி கூடாரத்திற்கு சென்றார். அவள் கண்களை பார்த்ததும் உணர்ந்து கொண்ட அவர் நெஞ்சதிர மெல்ல திருப்பினார்.
“ பணிப்பெண்ணின் மகனும் என்மகனும் சரிசமமா.. “
அவர் அவளை நோக்கி திரும்பாமலேயே “ இருவரும் என் மக்கள்..”என்றார்.
“இந்த கூடாரத்தின் தலைமகளாக சொல்கிறேன்… அவளும் அவள் மகனும் நாளை இரவுஉணவிற்கு இங்கிருக்கக்கூடாது..”
“ ஒருதாய் மற்றபிள்ளையை புறம்தள்ளும் போதே தன் பிள்ளையையும் புறம்தள்ளுகிறாள், ”
அவள் வேகமாக நடந்து வருவதை அவள் ஆடையின் சத்தத்தால் உணர்ந்த ஆப்ரகாம் திருப்பிப்பார்க்காமல் கூடாரத்திலிருந்து வெளியேறினார்.
சற்றுமுன் வசந்தகால நிலம் போல இருந்த அவர் முற்றம் வெறிச்சோடியிருந்தது. நெஞ்சம் துணுக்குற மன்றில் எரிந்த இரவுத்தீயை நோக்கி நடந்தார் . ஒருவர் கையை ஒருவர் பற்றியவாறு தீயை சுற்றி ஓடிவிளையாடிய இருபிள்ளைகளையும் இருகைகளில் தூக்கிக்கொண்டு வானத்தை பார்த்தார். பின்னால் தூரத்து கூடாரத்தின் ஜன்னலில் இருந்து ஆகார் இவர்களை பார்த்துக்கொண்டிருந்தாள். இருபிள்ளைகளை இருகைகளில் வைத்தவாறு நிற்கும் ஆப்ரகாமை
பார்த்தபடி தரைமணலில் மண்டியிட்டு தந்தையே என்று கையுயர்த்தினாள்.
இந்த இரவு முடிந்துவிடாமல் நீளட்டும். இந்த பிறை மங்காமலிருகட்டும். இந்த விண்மீன்கள் மறைந்துவிடாமலிருக்கட்டும். எம்பிள்ளைகள் விலகாதிருக்கட்டும் என்று ஆப்ரகாம் இவ்விரவில் வானத்தை நோக்கி மன்றாடிக்கொண்டிருந்தார்.
இரவு மிச்சமிருந்த விடியலில் யாரும் கூடாரங்களை விட்டு வெளியே வரவில்லை. கூடாரகூட்டங்களை விட்டு மூவரும் ஒரு மணற்குன்று தூரம் நடந்து வந்து நின்றார்கள். மெல்லிய காற்றின் ஓசை முனகல் போல கேட்டது.
“ஆகார்.. தைரியமாகச்செல்.. ஆண்டவர் நமக்காக எதை நிச்சயித்திருக்கிறாரோ அதை ஏற்பது நம் கடமை,”
“இந்தக் கொடும்பாலையில் நானும் நம் மகனும் எங்கு செல்வோம்,”
இஸ்மாயிலின் இடது கையை ஆப்ரகாம் பற்றியிருந்தார். அவன் கால்களால் மணலை அளாவி விளையாடிக்கொண்டிருந்தான்.
“நான் இந்த பாலைவெளியில் நம் மகனுடன் எப்படி தனித்து என்ன செய்வன்.,”என்று அகார் தடுமாறும் குரலில் கேட்டாள். அவள் விழிகள் தொடுவானம் வரை விரிந்து கிடந்த மணல்வெளியில் அலைபாய்ந்தன.
அவள் தோள்களில் கை வைத்தவாறு ஆப்ரகாம், “அதோ பார் அந்த பாறைஇடுக்குகளை, மணல் வெளியில் பூக்கப்போகும் மணல் வெளி மலர்களை..அவைகளின் இலைகள் கண்களுக்கு புலப்படுவதில்லை.. ஆனால் வண்ணமலர்கள் சட்டென்று இதழ்விரிக்கும் ,”என்றார்.
அவருடைய கைகளின் குளிர்தொடுகையை உணர்ந்தபடி அவள் கண்களை விரித்து பாலை வெளியை பார்த்தாள். பாலைவனத்திலேயே வாழ்ந்தாலும் இதுவரை அவள் வானத்தை தான் பார்த்தாளே தவிர மணல் வெளியை பார்த்ததில்லை. கூட்டமாக செல்லும் இடத்தில் தங்கி ஊழியம் செய்து மீண்டும் நடந்து சமைத்து பேசி சிரித்திருக்கும் பெண்களுக்கு எங்கு கூடாரம் அடிக்கப்பட்டாலும் பாலை என்பது அவர்களுக்கு எப்போதும் ஒரே கூடாரம் தான். அவர்கள் கண்வெளிக்கு அப்பால் உள்ளதை பார்ப்பதில்லை. தங்கள் குழந்தைகளைத் தவிர.
“மரம் வளரும் போது கிளைகள் இரண்டாவே முதலில் பிரிக்கின்றன..” என்று சொல்லிய ஆப்ரகாம் மகனை தூக்கிக்கொண்டார்.
“நேற்று இரவே நம்மரத்தின் தண்டு கிளைத்துவிட்து.. இனிமேல் சாராளுக்கு கூட்டாக ஒவ்வொருவராக செல்வார்கள். தங்களில் ஒருத்தியின் மகனை அவர்கள் தாங்களாக நடத்துவார்கள் தவிர தங்களுக்கு மேல் உயர்த்தமாட்டார்கள்.. விதைகள் தனித்தனியாகத்தான் முளைக்க முடியும் என்பது ஆண்டவரின் கட்டளை,”
ஆகார் அமைதியாக இருந்தாள்.
“இவன் மீதும் உன் மீதும் இல்லாத குற்றங்களின் பழி இறங்கும்.. நான் தலைவன். இவனையும் உன்னையும் ஒவ்வொரு கணமும் பாதுகாத்துக்கொண்டே இருக்க முடியாது.. “
“இனி சகோதரர்கள் இணையமாட்டார்களா..”
ஆப்ரகாம் புன்னகைத்து அவள் உச்சந்தலையில் கை வைத்தார். இவர்கள் இனி பிரிந்தும் சேர்ந்தும் மாறி மாறி வருவார்கள் கானலும் பனியும் போல, பிறையும் நிலவும் போல என்றார். தரையில் இறக்கி வைத்திருந்த தண்ணீர் நிறைந்த தோல்பையையும் அப்பங்களின் முடிப்பையும் அவளிடம் தந்தார்.
“இந்த வாழ்வில் நாம் மறுபடி பார்க்க முடியுமா, “
“தீராத அன்பு பிரிவதுமில்லை இணைவதுமில்லை..”
அவள் அவரைப் பார்த்து புன்னகைத்தாள். மகனின் கைகளை பற்றிக்கொண்டாள். அவர் அவனுடைய இளம்சிவப்பு பாதங்களை வருடியபடி இறக்கி விட்டார். ஆகாரின் தலையிலிருந்த கைகளை எடுத்தார். அவன் அவரை பார்த்து சிரித்தபடி தாயின் கைப்பற்றி நடந்தான்.
அவர் கூடாரங்களை நோக்கி திரும்பி நடந்தார். அவர் கால்கள் தளர்ந்திருந்ததால் மெல்ல ஊன்றி எடுத்து வைத்தார்.
தூரத்தில் பெரிய கூடாரத்தின் ஜன்னலில் சிறுஈரவிழிகள் அவர்களை பார்த்தது. அந்த ஈரம் காலத்தின் ஈரம். காலம் கொண்டு செல்லும் ஈரம். காலத்தால் காயாத ஈரம். அந்த ஈரம் அவன் கால் வைக்கும் இடத்திலெல்லாம் ஜீவ ஊற்றாக ஊறிப்பெருகப் போகும் ஈரம்.
அவர்களையே பார்த்துக்கொண்டிருந்த சாராள் தளர்ந்த குரலில், “விண்மீன்கள் தனித்தனியே ஒளிர்வது ஆண்டவரின் சித்தம். ஆனால் அவை இருப்பது ஒரே வானத்தில்,”என்று ஈசாக்கின் தலையை வருடிக்கொண்டே கூறினாள். அவன் வெற்று பாலைவெளியை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான்.
வழக்கம் போலஅன்றாடத்திற்காக எழுந்தன அனைத்தும். ஒளிப்பிழம்பும், இரவு முழுவதும் ஊறி நிரம்பிய சிறு கிணறும், தூரத்தில் எங்கோ கண்படாத மணல்வெளியில் ஒரு சிறு மலரும் என்று ஒலித்த பின்னணி குரல் நின்றதும் திரை விழுந்தது.
நாடகஅரங்கின் வெளிச்சம் கண்களை கூசச்செய்தது. லலிதா முகத்தை புடவை தலைப்பால் துடைத்தாள். மெல்ல அசைந்து அமர்ந்தாள். எங்கு இருக்கிறோம் என்ற சிறு பதட்டத்தில் இதயம் வேகமாக அடித்துக்கொண்டதில் பிரக்ஞை விழித்துக்கொண்டது. ஏனோ அரங்கில் பேச்சு சத்தமில்லை. வெளிக்கதவு கரகரவன்று ஓசை எழுப்பியபடி திறந்தது. அன்றாடத்தின் ஓசைகள் உள்ளே புகுந்தன.
லலிதா பேருந்திற்காக வேகமாக நடந்தாள். சிகப்பு விளக்கு சைகையை பார்த்தபடி நின்றாள். மதிய வெம்மை கலைந்து புதியதாக தெரிந்தது மலைக்கோட்டை சாலை. மனிதர்களும், வாகனங்களும் ,தேவாலயத்தின் கோபுரமும், கருங்கல்கோட்டை சுவர்களும், அதன் சுவரிடுக்கின் சின்னஞ்சிறு செடியும்,திறந்திருக்கும் கோட்டைகதவுகளும்,சீராப்பள்ளி குன்றும் தன் கதியிலிருந்தது. இவை அனைத்திற்கும் மேலாக வானம் மெல்ல மெல்ல பகலின் வெள்ளைத்திரையை சுருட்டிக் கொண்டிருந்தது. கல்லூரிசாலையின் பிஷப் ஹீப்பர் பள்ளியின் உயர்ந்த மதிலை அடுத்த காந்தி சிலைக்குப்பின்னால் மேற்கே அந்தி தன்னுடைய
பலவண்ணத்திரையை விரித்துக்
கொண்டிருந்தது. சட்டென்று உடல் சிலிர்க்க லலிதா வானத்திலிருந்து கண்களை மாற்றினாள். போக்குவரத்து சைகை மாறியதும் வேகமாக நடக்கத்தொடங்கினாள்.
( 2026 அக்டோபர் ஆவநாழி இதழில் வெளியான கதை)

Comments
Post a Comment