முரண்களின் சமன்
என்றைக்கும் அவள்
அன்பை மறுதலிப்பவளாகவும்,
அன்பை யாசிப்பவளாகவும்,
திருகி நிற்கிறாள்.
நோக்கி வரும் அன்பை
திருப்பிவிடும் காயங்களுடன்
அந்த ஆட்டிடையனின் மடியின் கதகதப்பில்
சயனிக்கும் ஆட்டுகுட்டி.
அன்பின் காயங்களை அறிந்தவனின்
தொடுகையில் மீள்கிறது அவள்
திருப்பியனுப்பிய அனைத்தும்.
ஆயுதம்
அன்பின் பொருட்டு ஆயுதம் ஏந்தியவனின்
கைகுருதியில் மலர்கின்றன மலர்கள்.
அவன் சென்ற வழிகளில் திறக்கின்றன
ஊற்றுக்கண்கள்.
அவன் பார்க்கும் திசைகளில் சூழ்கின்றன மழைமேகங்கள்.
கட்டியெழுப்பிய அன்பு மாளிகையின் முகப்பில்
அனைத்தையும் கைக்கழுவி
உள்நுழைகிறான்.
அங்கு வழிந்த குருதி வழுக்கி விழுந்தவன்
அவசரமாய் தன்ஆயுதத்திற்காய் கைநீட்டுகிறான்.
Comments
Post a Comment