மலைநாடனோடு கொண்ட நட்பு


அய்யாவுக்கும் அம்மாவுக்கும் இது நாற்பதாவது திருமணநாள். 

அய்யா திருமணத்தில் ஈடுபாடு இல்லாதவர்.  தனக்கு வந்த மாப்பிள்ளைகளில் அய்யாவின் ஆளுமையை,தோற்றத்தை விரும்பி அம்மா அய்யாவை தேர்ந்தெடுத்தார்.


          அய்யாவின் கையெழுத்தில் அவரின் திருமண புகைப் படத் தொகுப்பு

ட்யூசன் மட்டும் வைத்து வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்த தந்தையில்லாத வறுமையான குடும்பத்தின் மூத்த மகனிற்கு, நிலஉடைமையாளரான தாத்தா தன் மகளின் விருப்பத்தின் பொருட்டும்,பையனின் நன்நடத்தைக்காகவும் படிப்பின் மீதான நம்பிக்கையிலும் தன் மகளை அளித்தார்.



 அம்மா முதன்முதலில் பார்த்த அய்யா

அய்யா தன் திருமணப்பத்திரிகையில் சாதிப்பெயரை எடுத்தார். இன்றைய தலைமுறையில் என் தங்கையின் திருமணப்பத்திரிகையில் அதை எங்களால் செய்ய முடியவில்லை.





இவர்களின் குடும்பவாழ்க்கை நடைமுறை வாழ்வைத்தாண்டி  கொஞ்சம் இசக்கு பிசக்கான சிக்கல்களை கொண்டது. 

கூட்டுகுடும்ப அமைப்பு காலாவதியான காலத்தில் இவர்கள் கூட்டுக்குடும்பத்தின் தலைவன் தலைவியாக முப்பது ஆண்டுகளுக்கு மேலாக இருந்தவர்கள். 

ரொமாண்டிக்கான தம்பதிகளா? என்று கேட்டால் ....அவர்களிடம் அது இப்பொழுதுள்ள பொருளில் சுத்தமாக இல்லை என்றே சொல்வேன். பரஸ்பரம் ஆதார நம்பிக்கை இருவர் மீதும் இருவருக்கும் உண்டு. காலம் எத்தனை அடிஅடித்தாலும் ஒருவிரிசலும் காணாத அன்பு. காதல் இல்லை. அது அன்பு தான்.

 நடைமுறையில் அம்மா அய்யாவை எதிர்த்து பேசிக்கொண்டே இருப்பார். அய்யா பெரும்பாலும் புன்னகையுடன் 'சின்னப்பிள்ளை பேச்சுக்கெல்லாம் நம்ம பேசினா நம்ம மரியாதை என்னாகிறது' என்பது மாதிரியே இருப்பார். அம்மா அய்யாவைவிட பனிரெண்டு ஆண்டுகள் இளையவர். திருமணமே வேண்டாமென்று காலத்தை ஓட்டியவரை சொந்தங்கள் இழுத்துப்பிடித்து கட்டிவைத்தார்கள். அவரின் திருமணத்தின் போதே சொந்தத்தில் அவருக்கும் இளையவர்களுக்கு பிள்ளைகள் இருந்தார்கள்.

திருமணத்தை அய்யா கையாண்ட விதம் இன்றும் எனக்கு வியப்பானது. திருமணம் நிச்சயம் ஆனதும் அய்யா அதை ஏற்றுக்கொண்ட விதம் அழகானது. தவிர்க்க முடியாத பந்தம் என்று சொல்வார். அவரின் அப்பா ,அம்மா, தம்பி, தங்கை போல இனிமேல் முக்கியமாக உறவு என்ற அடிப்படையில்தான் அம்மாவையும் வைத்தார். நிச்சயம் ஆனதும் இனிமேல் பிரிவில்லை என்றே நினைத்ததாக ஒருமுறை என்னிடம் சொன்னார். அவருக்கு விவாகரத்து ,பிரிவுகள் மீது நம்பிக்கை இல்லை. எப்படியாவது பேசி சரி செய்து கொண்டு, விட்டுக்கொடுத்து மனிதர்களை உடன் வைத்துக்கொள்ள விரும்புவார். மனஸ்தாபத்தால் யாருடனும் பேசாமல் இருந்தவரில்லை. பேசி பேசி உறவை நட்பை மனிதர்களை பேணிக்கொள்வார்.



கூட்டுக்குடும்ப அழுத்தத்தால் நாற்பதுகளை கடந்த வயதில் அம்மா 'அழகா இருக்கறாருன்னு ஏமாந்து கல்யாணம் பண்ணிக்கிட்டேன். எங்க அம்மா வீட்டுக்கு போனா சொத்து கிடக்கு. போறேன்' என்று சொன்னால் அய்யா சிரிப்பார். அய்யா ஒருமுறைக்கூட பிரிவைப்பற்றி எங்கள் முன்  பேசியதில்லை என்பது இப்போது வியப்பாக இருக்கிறது. 

இதுவரை அம்மா அய்யா நான் தங்கை தம்பி ஐவரும் ஒருமுறைக் கூட குடும்பமாக வெளியே சென்றதில்லை. இனிமேலும் வாய்ப்பில்லை. எங்கள் உறவில் இது முக்கியமாக இசக்கு பிசக்கான இடம்.

கல்வி சார்ந்த விஷயங்களுக்கு அய்யாவுடம் செல்வோம். விசேசங்கள் மருத்துவமனைக்கு அம்மாவுடன் செல்வோம். 

'ஒரு கோயிலுக்கு குடும்பமா கூட்டிட்டு போயிருக்காரா மனுஷன்' என்று இன்று வரை அம்மா சொல்வார். அப்படியே அய்யா திட்டமிடும் சில பயணங்கள் பெரும்படையுடன் தான் இருக்கும்.

அவருக்கு முதலில் பள்ளிக்கூடம்,கூட்டுக்குடும்பம் அடுத்ததாக நாங்கள். ஆனால் முடிந்தவரை மூன்றையும் சமமாக நடத்தினார். 

கூட்டுக்குடும்பம் என்ற ஆதிக்க அமைப்பில் ஜனநாயகத்தை  செயல்படுத்திப் பார்த்தவர். கூடுமான வரை சரியாக செய்தார். சரிவுகளும் அதிகம். அதற்கு அம்மா ஈடுகட்டியது என்பது வெள்ளத்தை நிறுத்தும் கரைகளுடைய சிரமத்தை ஒத்தது.

அம்மாவை எப்படி தனக்கேற்ற மாதிரி மாற்றினார் என்பதே வியப்பான ஒன்று. இன்றும் அம்மாவிடம் அய்யாவின் எண்ணங்களின் தாக்கம் அதிகம். அம்மா பதினேழு வயதில் அய்யாவுடன் வாழ்வை தொடங்கினார். அய்யாவுக்கு முப்பது வயது. அவர் பேசிப்பேசி அம்மாவின் ஆளுமையை உருவாக்கினார். 

சில அடிப்படை அறங்கள் இருவருக்கும் உண்டு. பலகீனங்களும் அதிகம். எப்படி ஈடுகட்டி ஏர் பிடித்து ஓட்டினார்கள்?

பரஸ்பர நேர்மை,அம்மாவுக்கான பொருளாதார சுதந்திரம்,நம்பிக்கை மற்றும் கூட்டுக்குடும்பத்திற்காக தாங்கள் முதலில் விட்டுக்கொடுத்தல்,அய்யாவின் தொழிலுக்கு அம்மா அனைத்து உதவிகளையும் செய்தல்,அய்யா அம்மாவின் பெற்றோருக்கு, உறவுகளுக்கு அன்பும் முக்கியத்துவமும் அளித்தல்,தான் பேசாத ஒருவரிடம் நீயும் பேசக்கூடாது, அன்பாக இருக்கக்கூடாது என்றெல்லாம் சிறுபிள்ளைத்தனமாக பரஸ்பரம் ஒருவரை ஒருவர் கட்டுப்படுத்தக்கூடாது போன்றவற்றை இயல்பாகவே  கடைபிடித்தார்கள்.

அய்யாவின் கூட்டுக்குடும்பம் சார்ந்து சில கட்டளைகள் அம்மாவுக்கு உண்டு. அம்மா அப்படியே பின்பற்றினார். ஆனால் அம்மாவை யாரும் மரியாதை குறைவாக நடத்துவதை அனுமதிக்க மாட்டார். அம்மாவும் தன் தாய் தந்தை உறவு சார்ந்து அய்யாவுக்கு கட்டளைகள்  இட்டாரா என்று தெரியவில்லை. ஆனால் அய்யா இம்மி பிசகாமல் அவர்களின் உறவை பேணினார். இருவரும் ஈகோவை உறவு சார்ந்து விட்டுக்கொடுத்தார்கள்.

எப்போதும் இருவருக்கும் விவாதம் நடந்து கொண்டே இருக்கும். அம்மாவும் அய்யாவும் பேசிக்கொண்டே இருப்பார்கள். ஆனால் அய்யாதான் முடிவு எடுப்பார். எப்போதும் ஒற்றுமையான தம்பதி என்ற நாடகத்தன்மை இல்லாது இயல்பாக இருந்தார்கள். சண்டை சச்சரவுகள் இல்லாத நாட்கள் குறைவு.

இருவருக்கும் சண்டை என்றால் அய்யாதான் அம்மாவிடம் போய் போய் பேசுவார். அம்மா முறுக்கிக்கொண்டு நிற்பார்.

"பேசாம இருக்கலான்னாலும் விடமாட்டிக்கிறாரு..அப்பதான் சும்மா சும்மா எடுத்ததுக்கெல்லாம் கூப்புடுவாறு..கொஞ்சமும் ரோசமே கிடையாது,"என்று அம்மா எரிச்சல்படுவார்.

கோபத்தில் அய்யா பேசினால் ஒரு அதட்டலுக்கு மேல் அம்மா பேசுவதில்லை.



பிள்ளைகள் மூன்று. மூன்றும் முக்கோணத்தின் மூன்று புள்ளிகள். உச்சியில் இருக்கும் நானே அதிக சவாலையும் சோர்வையும் பயத்தையும் அவர்களுக்கு அளித்தவள். என்னை போன்ற பிள்ளையை என்னாலேயே கையாள முடியுமா என்று தெரியவில்லை. எனக்காக சமூகத்திடமும் உறவுகளிடமும் பதில் சொல்லிக்கொண்டே இருந்தார்கள்.

பிறந்ததும்.. முன்றுநாள் கழித்துதான் உயிர் பிழைக்குமா இல்லையா என்று சொல்லமுடியும் என்று நான் அவர்களை அதிரடியாக பயமுறுத்தி அவர்கள் கைகளுக்கு வந்து சேர்ந்தேன். என்றும் என் உடல் சார்ந்து பயமுறுத்திக்கொண்டே இருந்தேன்.

இதையெல்லாம் விட எனக்கு நிறைய கிறுக்குத்தனங்கள் உண்டு. ஆறாவது படிக்கும் போது பட்டு உற்பத்தி பற்றி பாடம் கேட்டுவிட்டு.. ' இத்தனை பட்டுபுழுக்களை சுடுதண்ணியில போடனுன்னா இனிமே பட்டுப்பாவாடை  வேண்டாம்' என்று உறுதியெடுத்து இன்று வரை மாறாமல் இருக்கிறேன். இது  எனக்கு தனியான ஒரு விஷயமாக இருக்கலாம். பெற்றோரான அவர்களுக்கு எவ்வளவு சவால். மற்ற பிள்ளைகள் பட்டு உடுத்தி நிற்கும் போது நான் மட்டும் சாதாரண உடையில் வந்து நிற்பேன். பட்டு நம் பாரம்பரியத்தில், விசேசங்களில் எத்தனை முக்கியமானது.

அடுத்ததாக இன்னும் பெரிய குண்டு. ஒன்பதாம் வகுப்பில் ஒரு ஆங்கில கவிதை கேட்டுவிட்டு வந்து இனிமேல் பூப்பறிப்பதில்லை,பூ வைத்துக்கொள்வதில்லை என்று அதிரடியாக சொல்லிவிட்டேன். இன்று வரை அதை செய்வதில்லை. ஒரு அம்மாவுக்கு இது எவ்வளவு பெரிய அன்றாட சவால். இதுமாதிரி எதாவது செய்து கொண்டே இருப்பேன். திடீரென்று பதிமூன்று வயதில் சைவமானது..என்று எதாவது தொல்லை தந்து கொண்டே இருந்தேன்.

என் திருமணம் சார்ந்தும் அதே தான். அவர்களுக்கு பழகிவிட்டது. என் சார்ந்த முடிவுகளை இருவருமே நாள்கணக்கில்  பேசி சமாதானமாகி புரிந்து கொள்வார்கள்.

அய்யா மேசைமுன் புத்தகத்துடன் அமர்ந்திருப்பார். அம்மா பாயில் படுத்திருப்பார். இருவரும் எங்களைப்பற்றியும் குடும்பத்தை பற்றியும் பேசிக்கொண்டிருக்கும் சித்திரம் மனதில் அப்படியே இருக்கிறது.

அம்மாவின் குடும்பம் சார்ந்தும் நிறைய எழுதலாம். இரண்டு மட்டும். தாத்தா அம்மாச்சிக்கு உடல் நிலை சரியில்லாத நாட்களில் அய்யா சம்பளம் வந்ததும் ஒரு கட்டு பணத்தை பீரோவில் வைத்து விடுவார். அய்யா பள்ளிக்கூடம் சென்று விட்டால் அம்மா எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு செல்வார். அய்யா கணக்கு கேட்பதில்லை. எப்போதும் அம்மா  அவசர தேவைக்கு பணம் இருக்கும். அப்போது நிலம் வாங்குவதின் மீது அய்யாவுக்கு விருப்பம் இல்லை. தாத்தா நிலத்தை விற்கும் நிலையில் இருந்தார். அம்மாச்சியின் அழுகைக்காக அய்யா அதை வாங்கினார். அதற்காக அம்மாச்சி எப்போதும் அய்யாவை ஆசீர்வாதம் செய்து கொண்டே இருப்பார். அம்மாபாடு தான் சிரமம். அய்யாவை குறை சொல்ல முடியாமல் போனது.

அம்மாவும் அய்யா அவருடைய பிறந்த குடும்பத்திற்கு செய்வது பற்றி  குறுக்கிட மாட்டார்.

எங்கள் நால்வருக்கும் அய்யா தந்த செல்வம் என்பது பணம் பற்றிய எங்கள் மனஅமைப்பை உருவாக்கியது. வீண் செலவு ஆகாது. தேவையென்றால் பெருஞ்செலவுமே ஒன்றுமில்லை. பணம் என்பது தேவைக்குதான். பணத்தின் பின் ஓடக்கூடாது. சேமிப்பு இருக்க வேண்டும். பண இழப்பு ஒரு இழப்பே இல்லை. பணம் சார்ந்து ஒருவரை மதிக்கத் தேவையில்லை. ஒரு ரூபாய்க்கும் தனக்குள் கணக்கு இருக்க வேண்டும். உணவு மருத்துவம் போன்ற அடிப்படைகள் தாண்டி பணத்தை பற்றிய பதற்றம் வாழ்க்கையை வீணாக்கிவிடும் என்று சொல்லிக்கொண்டே இருப்பார்.

என் தங்கை அய்யா உருவாக்கிய perfect product. தம்பி.... அந்த இணை யானைகளுக்கு சருக்கிய அடி. நான் இசக்குபிசக்கான ஆளுமை என்றாலும் அவர் நேசித்து வியந்த product. கொஞ்சம் அய்யாவே தான் நான் என்பதால் அம்மாவால் புரிந்து கொள்ள முடிகிறது. 

இருவரும் கொண்ட மதிப்பீடுகள் வீழ்ச்சி அடைந்த இந்த காலகட்டத்திலும் பணத்தை பதட்டமாக்கிக் கொள்ளாத இயல்பு ஒன்றால் மட்டுமே இயல்பான வாழ்க்கைக்கு மீள முடிந்திருக்கிறது.


                             இன்று

ஏற்றத்தாழ்வுகள், கஷ்ட நஷ்டங்கள், கோபதாபங்கள் தான் மிகுதி. அதை மீறி நாற்பது ஆண்டுகளாக இருவரிடமும் இருப்பது நல்ல நட்பு. 

அம்மா கொல்லிமலை நாடனோடு விரும்பி ஏற்ற நட்பு அப்படி ஒன்றும் பாதிக்கு மீதி பழுதில்லை.



Comments

Popular posts from this blog

பசியற்ற வேட்டை

பெண் கல்வி,விடுதலை மற்றும் தன்னறம்

எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் நேர்காணல்