நிலவறையில் ஒற்றை ஔிக்கீற்று: சிறுகதை

 2018 மே பதாகை இதழில் வெளியான கதை.


நிலவறையில் ஒற்றை ஔிக்கீற்று


இளம்காலை

விடுதியின் வாயிலில் நின்ற என்தோளில் சங்கரிதான் கைவைக்கிறாள் என்று தெரிந்ததும் சிலிர்த்தது. மிருதுவான சற்றுதண்மையான கைகளின் தொடுதலுக்கு நெக்கியது உடல்.நண்பர்கள் அனைவரிடமும் தயக்கமில்லாமல் எதார்த்தமான சங்கரியின் இந்தத் தொடுகை முதலில் விதிர்ப்பை , சிறுபதட்டத்தை உண்டாக்கி பின் இயல்பாகியது . 

பதிவேட்டில் கையெழுத்திட்டு விட்டு நிமிர்ந்த சங்கரியிடம் நான், “மலரக்கா வரலயா?”என்றேன்.

இல்லையென தலையாட்டிய சங்கரி,  வாயிலவரிடம், “அண்ணா...ஏழுமணிக்கெல்லாம் வந்திருவேன்,”என்றபடி படியிறங்கினாள்.நாங்கள் நடந்துசென்ற  சிமெண்ட் பரப்பில் வெயில் ஔியாய் விரிந்திருந்தது.

“சாப்பிட்டியாம்மா?”என்ற அவரின் குரல் கேட்டு சங்கரி திரும்பி புன்னகைத்து தலையாட்டினாள்.

வடக்காக சாலையைக்கடந்து பேருந்துநிலையத்தின் காந்திசிலையருகே நடந்து கொண்டிருக்கையில், நேர்காட்டில் தொலைவில் கண்களில்பட்ட பிரம்மபுரீஸ்வரர் கோவில் கோபுரத்தைக் கண்டதும், “மழை வராப்ல இருக்கு சீக்கிரம் வேலைய முடிக்கனும்.வழியில் எதாச்சும் கோயிலுக்கு போயிட்டு போலாம்,”என்றேன்.மனதில் இந்தஅவசரத்தில் எதுக்கு போகனும்? என்று தோன்றியது.என்றாலும் இந்தக் கோவில்களை எல்லாம் தவிர்க்க முடியாத மனதை நினைத்து “ச்ச்”என்ற ஒலியெழுப்பி மனதிலிருந்து வெளிவந்தேன்.பாலாம்பிகை கோயிலிலிருந்து வெளியேறுகையில் சாலையில் காலைக்கூட்டம் கலைந்திருந்தது.

பாரதிசாலையில் மரத்திலிருந்து உதிர்ந்த அடர்சிவப்பு காகிதப்பூக்களை தரையெங்கும் துரத்திக்கொண்டிருந்தது ஆடிக்காற்று.தரையெங்கும் ஔிஊடுருவும் கண்ணாடி இதழ்கள் அடர்சிவப்பு சிறகுகளென பறக்க எழுவது போலிருந்தன.




சங்கரி,“லீவில இன்னிக்காவது சுடிதார்ல வந்திருக்கலாம்.புடவையில வான்னு கண்டிப்பா சொல்லிட்ட,” என்றாள்.

“இன்னக்கி வேலை அப்படிடா,” என்றேன்.

“நேத்து காலேஜ் முடிஞ்சி வரும் போது என்னோடவும்,மதியாக்காக்கிட்டவும் பேசின.அப்ப கேட்டா... கடிச்சு குதறுவன்னு விட்டுட்டேன்.என்ன அவசரம்?”

“ஒருவாரமா பேசிதான் பிரியலான்ற முடிவுக்கு வந்தோம்.ராஜ்க்கு டைம் தேவைப்படுது.அவன் எதுவுமே கடைசி முடிவில்லன்னு சொல்ற டைப்.நான்தான் இன்னக்கி ஹாஸ்டலுக்கு போலான்னு முடிவெடுத்தேன்.இன்னக்கிவரை அவனோட பைசாவிலதான் எல்லாம்.நான் வெளிய போறதுதான் சரியாயிருக்கும்,”என்றேன்.

முகத்தை கைகுட்டையால் துடைத்தபடி நடந்து ,அபி மெஸ்ஸில் தேநீர் குடித்துவிட்டு நகைக்கடைக்குள் சென்றோம்.பழையநகை வாங்குமிடத்தில் கூட்டமில்லை.அமர்ந்து பையிலிருந்து சங்கிலியை எடுத்துக் கொடுத்தேன்.அப்பாவின் சிறுசேமிப்பு கணக்கு முடிந்ததும் இளங்கலை முதலாமாண்டு சேர்க்கையில் வாங்கித்தந்தது.இதே போல ஒருகடையில் விரித்தப்பாயில் அமர்ந்து தேர்வுசெய்து கழுத்தில் விழுந்த முதல்சங்கிலி.

கடைக்காரர்,“மூணுபவுனுக்கான காசும்மா...பாத்து எடுத்துட்டுப் போங்க,”என்றார்.

வங்கிக்கு சென்று என்கணக்கில் பணத்தை சேமிப்பில் வைத்துவிட்டு,மீதிப்பணத்தை எண்ணிக் கொண்டிருந்த சங்கரியிடம், “இன்னைக்கு செலவுக்கு,இந்த மாசத்துக்கான கைசெலவுக்கு போதுமாடா,”என்று நான் கேட்க,அவள் தலையாட்ட இருவரும் வங்கியை விட்டு சாலைக்கு இறங்கினோம்.வியர்வையை மறுமுறை துடைக்கையில் பதட்டமாக இருப்பதை உணர்ந்து மூச்சை இழுத்துவிட்டேன்.

வெந்தயநிற சேலையில் என்தோள் உரசி ,பின் நகர்ந்து நடக்கும் இவள் ஏன் நான் அழைத்ததும் வர வேண்டும்?சங்கரியுடன் அப்படி ஒன்றும் நீண்டகால நட்பில்லை.ஒரு ஆண்டாகத்தான் . ராஜ்க்கும் எனக்குமான பொதுவான தோழி என்பதாலா? அதையே காரணமாக்கி இவள் தப்பித்திருக்கலாமே?! என்று நினைத்தபடி நடந்தேன்.

“ஒன்னு கேட்டா தப்பா நினைக்க மாட்டியே?,” என்றேன்.

“கேளுப்பா”

“பெரும்பாலும் யாரையும் பாக்கறப்ப சின்ன ‘ டச்’ க்கு பிறகு தானே பேசற.ஏன் அப்படி?” என்று கேட்டேன்.

உதட்டைக் கடித்தபடி சிறிய யோசனைக்குப் பிறகு அவளுக்குரிய இனிய முகத்தோடு, “சின்னதில இருந்து சரியா யாருட்டயும் பேச மாட்டேன்...பேச தொடங்கின பிறகு அவங்கள எதிர்கொள்றதுக்கு இயல்பான வழி..இல்லன்னா சரியா பேசாட்டிக்கூட நம்ம அன்ப காட்டறதுக்கான வழி,” என்றாள்.

“நம்ம பசங்க முதலில மிரண்டுட்டாங்க தெரியுமா?”

“அவங்க முகத்திலயே தெரியும்...நான் எல்லாருட்டயும் கைய நீட்டறதில்லயே,” என்று சிரித்தாள்.

“இந்தமனுசங்க அன்புக்கு பயப்படற கூட்டம்ன்னு காந்திக்கு, புத்தருக்கு, யேசுக்கு நல்லா தெரிஞ்சிருக்கு,” என்றேன்.

“வந்த காரியத்த பாப்போம்.நாளைக்கு உக்காந்து பேசலாம்,” என்றாள்.

“அப்படில்லாம் திட்டம் போட்டு பேசமுடியுமா? தோணும் போது பேசலேன்னா..அப்படியே போயிடும்” என்று நான் முடித்த பிறகு இருவரும் அமைதியாக நடந்தோம்.நான் இத்தனை இயல்பாக இந்த நாளை எதிர்கொள்வது உள்ளுக்குள் அலைச்சலாக இருக்கிறது.உண்மையிலேயே எனக்கு கல்மனதுதானா? இருக்கும்.இவனுக்காக அப்பா, அம்மாவை உதறமுடிந்தால் ,எனக்காக இவனை உதறுவது இயல்பானது தானே.ஒன்றை உதறியப் பிறகு இன்னொன்று எளிது போல.எல்லா உயிர்க்கும் நானென்பதே முதலா? விட்டுக்கொடுத்தல் கூட மனம் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வதாலேயே சாத்தியமா? பின்னால் வந்த இருசக்கரவாகனத்தின் ஒலி என்னைக் கலைத்தது.

அன்னைவிடுதியிருந்த சங்குரோட்டுக்கு நாங்கள் திரும்புகையில் வெயில் ஏறியிருந்தது. வெயிலில் கண்கள் கூச மண்டையில் வலிய தொடுகையாய் சூடு அழுத்தியது.அதை வெல்ல இருவரும் தலையை குலுக்கிக் கொண்டோம்.முந்தானையின் மெல்லிய பறத்தல் தொந்தரவு செய்ய சங்கரி நுனியைஎடுத்து இடுப்பில் செருகிக் கொண்டாள்.

நான் நினைப்பதைப் போல முந்தானையை இடையில் சொருகுவதை நாகரீகக் குறைவாக அவள் நினைப்பதில்லை.இதுவும் அழகுதான் என்று நினைத்து பார்வையை திருப்பினேன்.மனம் அந்த தெப்பக்குளத்தின் ஒருபள்ளத்தில் நிற்கும் நீரென அசையாமலிருக்கிறது.ஆனால் அந்தநீர் எந்தக்கண்களுக்கும் தெரியாமல் ஆவியாகிக் கொண்டிருக்கிறது.

   பின்காலை

சிறுபாலத்தைக் கடக்கையில் சங்கரி, சாந்தினியின் முகத்தைப் பார்த்தாள்.சாந்தினிக்கு எதையும் உணர்த்தாத முகபாவம்.வெயிலில் காய்ந்து உதடுகளை முன்பற்களால் அழுத்தி மடித்திருந்தாள்.சாலையை வெற்றுக்கண்களால் பார்த்தபடி நடக்கிறாள்.நிதானமாகத் தான் எல்லாம் செய்கிறாள் .ஆனால் கோட்டுக்கு வெளியே இல்லையில்லை கோட்டுக்கு வெளியே என்று நான் எப்படி சொல்ல முடியும்? இந்த சூழலில் நானாக இருந்தால்....? அப்படி நினைக்கவே வழியில்லை.எந்தவகையிலும் நானல்ல அவள்.விடுதிக்குள் நுழைகையில் நிழல் வந்து தழுவிக்கொண்டது.இருவரும் வாயால் காற்றை ஒருமுறை வேகமாக ஊதிக்கொண்டோம்.எங்கள் தெருவிலிருக்கும் எண்பதுகளில் கட்டப்பட்ட வீடுகளின் சாயல் தெரியும் கட்டிடம். நிறம்கூட வெண்மை கலந்த பச்சை.ஆனால் புதிதாக வண்ணம் பூசப்பட்டிருந்தது.

விடுதி காப்பாளர், “காலேஜ் ஜ.டி கேட்டிருந்தேனில்ல,”என்றவுடன் சாந்தினி கொடுத்தாள்.மேலும் பலவிவரங்களைக் கேட்டுவிட்டு பணத்தை வாங்கிக் கொண்டு கையெழுத்து வாங்கினார்.சன்னலின் வழி ஔிப்பட்டைகள் சரிய மிக மெல்லிய இருளில் இருந்தது அந்தஅறை.

“சாயுங்காலம் லக்கேஜ் எடுத்துட்டு வந்து தங்கிக்கறேன் மேடம்,”என்ற சாந்தினியிடம் விடுதிக்காப்பாளர்,“இப்ப எங்க இருக்கு?”என்றார்.விடுதிகாப்பாளர்களுக்கு என்று ஒரு பார்வை வந்துவிடும் போல.கிட்டத்தட்ட எதிர்வீட்டு பாட்டியின் பார்வை போல ஒருவிதபார்வை.

“காலேஜ் ஹாஸ்டலுக்கு முதல்ல வந்ததால அங்க வச்சிட்டு வந்திருக்கேன்.கோர்ஸ் முடியற சமயங்கறதால இடமில்லனுட்டாங்க,”என்றாள்.

அவர் புன்னகையுடன் தலையாட்டியது நிம்மதியாக இருந்தது.மீண்டும் இந்த சிறுநகரத்தின் குடியிருப்பு சாலைகளில் நடந்து, கார்டன் சாலையினுள் நுழைந்தோம்.ஐந்தாம் சந்தில் இத்தனை சஞ்சலத்துடன் நுழைவது இதுதான் முதல்முறை.வானம் அடைத்துக்கொண்டிருந்தது.மழைக்கு முன்னான புழுக்கம் எரிச்சலை உண்டாக்கியது.

முதல்வீட்டின் ஜிம்மி ஆளை கண்டுகொண்ட உவகையில் கேட்டிற்கு பின்புறமிருந்து எம்பி வாலையாட்டி நெளிந்து சத்தமெழுப்பியதைக் கண்டு  புன்னகைத்து “ச்சூ..ச்சூ,”.நாய்களுக்கு புன்னகை புரியுமா?...ஆளின் மணமே போதுமோ என்னவா?

எட்டாம்வீட்டின் மேல்தளத்து இல்லத்தில் ராஜ் தட்டில் கைகழுவியபடி, “வா சங்கரி,”என்றார்.சாந்தினி எடுத்து வைத்திருந்த பைகளை வெளியில் கெண்டுவந்து வைக்கத் தொடங்கினாள்.

ராஜ்  என்னிடம்,“ரசம் மட்டும் இருக்கு.சாப்பிடு சங்கரி,”என்றபடி நீண்டஉணவுமேசையின் வலதுபுறமிருந்த கையடக்ககணினி முன் அமர்நதார். 

சங்கரி நிமிந்து சாந்தினியை பார்த்தாள்.அவள் யாரையும் கவனிக்காமல் வீட்டில் மறந்த  ஒன்றை தேடியபடி இருந்தவள்,“சாப்பிடு சங்கரி,”என்றாள்.

“வேண்டாண்ணா,”என்று ராஜ்ஜிடம் சொல்லிவிட்டு கழிவறைக்குள் சென்றேன்.வெளியில் வரும் பொழுது அவர்கள் இருவரும் வெளியே நிற்கவும் நான் உள்ளே உணவுமேசை முன் அமர்ந்தேன்.

சாந்தினி,“ராஜ்.. ஹாஸ்டலுக்கு போறேன்...அடுத்தது என்ன பண்ணலாம்?”என்றாள்.

“கொஞ்சநாள் கழிச்சு யோசிக்கலாம்.அவசரமில்ல”

சிறிதுநேர அமைதிக்குப்பின் சாந்தினி, “எதாவது சொல்லனுமா?”என்றாள்.

“ஒன்னுமில்ல.உனக்கு?”

“இது இந்தவீட்டோட இன்னொரு சாவி.இன்னும் ஒருமாசத்தில பரிட்சை முடிஞ்சிடும்.வேலைக்கு போனதும் படிக்கறதுக்காக நீ செலவு பண்ணின பைசாவை  திருப்பித்தர முயற்சி பண்றேன்,”என்று ராஜிடம் சாவியைத் தந்துவிட்டு உள்ளே வந்தாள்.அவள் உள்ளே சென்றதும் நான் ராஜின் அருகில் வந்து நின்றேன்.

“வேகமா வேல நடக்குது போல,”என்றார்.

“நாளக்கி காலேஜ் போகனும்..அதான்”

“எதுவுமே கேக்க மாட்டியா?”

“சரி..என்ன?”

“என்ன..என்னன்னா?”

“நீங்களா முடிவெடுத்தப்பின்னாடி என்ன சொல்ல?”

“அவ எடுத்தா..நானில்ல”

“!!??”

ராஜ்,“யாராயிருந்தாலும் மெல்லியகோடு ஒன்னு இடையில இருக்கனுமாம்,”என்றார்.மெல்லிய சலிப்பும், கசப்பும் அவர்குரலில் தெரிந்தது.

ராஜ்ஜின் சலிப்பான குரல் என்னுள் குத்திக் குமிழியிட,“ம்.நீங்க புரிஞ்சிக்க முயற்சி பண்ணுங்க.அவ எல்லாத்தையும் உங்ககிட்ட சொல்லியாகனுமா? உங்ககிட்ட எவ்வளவு ஜென்டிலா நடந்துக்கறா.எடுத்த வேலைக்கும், சொல்லுக்கும் பிடிச்சு பிச்சுத் திங்கனும்.அதுக்கு பேர்தான் அன்னியோன்யம்.இவ ஒரு மார்டன் லூசு. உங்கம்மா மாதிரி இவ தேவதையா இல்லேன்னீங்களமே?சரி... உங்கப்பா அவர் அவரோட பிரதாபங்களோட இருப்பாரு.இவங்க என்னன்னாலும் தேவதையா இருந்திருப்பாங்க.நீங்க உங்கப்பா மாதிரிதான் இருப்பீங்கன்னா இவள எதுக்கு லவ் பண்ணீங்க? பின்னாடியே டீன் ஏஜ்ல இருந்து சுத்தினீங்களாமே? சற்று தணிந்து “அவபாட்டுக்கு அவ உண்டு, அவ புத்தகங்களுண்டுன்னு இருந்திருப்பா”என்றேன்.

ராஜ் குரலை உயர்த்தி,“தங்ககம்பிகளா...அது ஏதோ ஒரு பேச்சுவாக்கில சொன்னது.கொஞ்சம் புரியலதான்.முன்னபின்ன அம்மா,அக்கா,தங்கய வச்சிதானே பொண்ணுங்கள புரிஞ்சிக்க முடியும்? ரெண்டுவருஷமா இவ..காணாதத கண்டது மாதிரி நல்ல ப்ரண்டுன்னு நீ ஒருத்தி”

இருவரும் சிறிதுநேரம் பாதையைப் பார்த்துக் கொண்டிருந்தோம்.

ராஜ்,“சங்கரி...அந்த முடக்கில வீட்டுநிழல் பக்கம் ஆட்டோ நிக்குது பாரு,”என்ற போது ராஜ்ஜின் குரல் ஆழத்திலிருந்தது.

நண்பகல்

குடியிருப்புசாலை ஓரத்து மரநிழல்களில் நடந்து செல்லும் சங்கரியின் வயிற்றுப்புண்ணை, பசி தைப்பதை என்னால் உணரமுடிந்தது.பசிதாங்க முடியாதவள்.சாந்தினியும் காலையில் சாப்பிட்டாளா என்னவோ? ஏனோ அதிகம் சாந்தினியிடம் பேசாமலிருப்பது ஆறுதலாக இருப்பதை நினைத்தபடி சாலையைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆட்டோவிலிருந்து சங்கரி இறங்கி வந்தாள்.அவள் பேசுகையில் முகம் தீட்டப்பட்ட கற்களாக மாறி மாறி தெரிந்தது மனதில் வந்து போகிறது.ஒருத்தியே இத்தனையாக ஒருபேச்சில் மாறமுடியுமா? அதான் முடிகிறதே என்று நினைத்தபடி கீழே பார்த்தேன்.

பைகளை பார்த்துக் கொண்டிருந்த சாந்தினி எதையோ தேடிக் கொண்டிருப்பவள் போல இருந்தாள்.உள்ளே சென்றுவிடலாம் என்று இந்த அரைமணியில் எத்தனையோ முறை நினைத்தும் நான் செல்லவில்லை.ஆறுமாதமாக பிரிவதுபற்றி நினைத்திருந்திருக்கிறாள்.அப்படி என்ன காயப்படுத்திவிட்டேன்? அவளும் பொறுமையாக சிந்திப்பவள் தான்.என்ன நாடகம் இது? உண்மையில் செல்கிறாளா? அவள் செல்லமாட்டாள் என்று உள்ளே ஆணித்தனமாக ஒன்று சொல்லிக்கொண்டிருந்த துணிச்சலில் கொஞ்சம் பெரும்போக்காக இருந்தேன்..அவளும் சிலநாட்களாக அதையே செய்கிறாள்.எதுவுமே பெரிய விஷயமில்ல என்பதைப் போல.எப்போதும் கையை பிடித்துக் கொண்டே இருப்பவள் எப்போது அதை நிறுத்தினாள்?! “போறேன்,” என்று அவளும், “ போனா போ,” என்று நானும்.இது சாத்தியமா? இடையில இந்த சங்கரியும் இந்தக்கிறுக்கில தலசுத்தி தடுமாறி போறா.விளையாட்டாக சங்கரி ,“உங்களோட சங்காத்தத்தை விட சைக்காலஜி தேவலாம்,” என்பாள் .இன்னக்கி அவசொல்வது சரியாயிடும் போல.

சாந்தினி, “சங்கரி...ஆட்டோல கொண்டு வை,”என்று பையை நீட்டிவிட்டு தானும் ஒன்றை எடுத்துக் கொண்டு சென்றாள்.இருவரும் ஒருமுறை என்னைத் திரும்பிப் பார்த்துவிட்டு சென்றார்கள்.

நான் மாடிப்படிகளின் இடையே நின்றேன்.செவ்வரிகளோடிய இந்தக்கண்கள் சொல்லிய அனைத்திற்கும் தலையாட்டிய நான் பழக்கதோசத்தில் இதற்கும் ஆட்டிவிட்டேனா?.உள்ளிருக்கும் மூளையும் அவள் பேச்சில் சமாதானமாகிவிட்டது.இது எப்பவுமே இப்படித்தான்.அழகு ஒருபுறமும்,அறிவு மறுபுறம் என்னை அலைகழித்து நிற்க வைத்திருக்கிறது.அப்பவே பயல்கள் சொன்னான்கள், “ மச்சான் சாந்தினி வேண்டாம்,” என்று, நான்தான் வாசுகி கடையும் மந்திரமலையா போயிட்டேன்..அட... ச்சை... எல்லாம் இந்த அகங்காரியோட சகவாசம்..யாருக்கோ நடக்கறத பாக்கறாப்ல எனக்கு நடக்கறத தள்ளி நின்னு யோசிக்கறேன்.ஏதாவது அவக்கிட்ட சொல்லுடா என்ற மனதின் சொல்லுக்கு முன்போல தடுமாறி நிற்கவில்லை நான். அவளை, அவளே சொல்வதைப் போல ஒருவாரமாக பிரித்து நினைப்பது புதிதாக இருக்கிறது.காதலியோ ,மனைவியாகவோ ஆவதற்கு முந்தய சாந்தினி!... வசீகரி! மறுபடியும் ஒருசுற்று வரவேண்டியிருக்குமோ?

ஓங்கி ஒருஅறைவிட்டு இழுத்து வர ஆத்திரம் வந்தது.அவ்வளவுதான், “சேவனிஸ்ட்,” என்று அனைத்திற்கும் தலைமுழுகிவிடுவாள்.முந்தாநாள் பேசிக்கொண்டிருக்கையிலேயே என்னை தோளைப்பிடித்து தள்ளிவிட்டு போனாள். இதை யாரிடம் சொல்வது? ஏதோ ஒன்றை தவறவிட்டுக் கொண்டிருக்கிறேன்.அதை கண்டடைய வேண்டும்.என் முன்னவர்கள் பெண்களின் ஆழம்பற்றி உணராத ஒன்று.பயல்கள் அந்த வயதிலேயே சாந்தினியிடம் கண்ட ஒன்று.என்மனம் உணர தவிர்த்த ஒன்று.

அவர்கள் ஆட்டோ ஏறும் வரை என்ன செய்வது என்று ஆடிக்கொண்டிருந்த மனதின் துலா  நின்றது .தெருவைப் பார்த்தேன். முடக்குத் திருப்பத்தை ஆட்டோ கடந்தது. 

சாயுங்காலம்

 சாலையெங்கும் வெயில் சுமந்து வதங்கியமஞ்சள்பூக்கள் அசைவற்றுக் கிடந்தன.ஆட்டோவின் சத்தமின்றி எதுவும் இல்லை என்று நினைத்த வேளையில் நகரின் மைய சாலைகளில் இறங்கிய ஆட்டோவின் சத்தம் சந்தடிகளில் கலந்தது.பிற்பகலை கடந்த நேரத்தில் விடுதியிலிருந்தார்கள்.

முதல்தளத்திலிருந்த கடைசிஅறையில் பொருட்களை அடுக்கிக் கொண்டிருக்கையில் சங்கரி, “எல்லாம் சரி.இப்படியே இருக்க முடியுமா?,”என்றாள்.சிறிய அலமாரிகள்.சன்னல்,கதவு என்று அனைத்தும் சிறியவை.லக்கேஜ் பேக்,சூட்கேஸ் மாடல்களுக்கு பொருந்தாத அறை.ஆனால் ஏதோ ஒன்று ஈர்த்தது.

சாந்தினி,“தெரியலடா..இப்பக்கி கோர்ஸை முடிக்கனும்.முடிச்சதும் பக்கத்தில கண்டிப்பா வேலைக் கிடைச்சுடும்.ஊருக்கு எப்படிடா போறது.கிட்டத்தட்ட ரெண்டுவருசமாச்சு.ராஜ்க்கு பிரச்சனையில்ல...,”என்று எங்கோ ஆழ்ந்தாள்.

“ஆனா நீ இன்னும் கொஞ்சம் யோசிக்கலாம்.எனக்கு நீங்க ரெண்டு பேருமே நல்ல கணவன்மனைவிதான் இப்ப வரை”

சாந்தினி பேசவில்லை.சங்கரி,“நீங்களா கல்யாணம் பண்ணிக்கிட்ட மாதிரி, நீங்களா பிரியறீங்க.ஆனா இது இப்படி இவ்வளவு சிம்பிளான விஷயமா என்ன?”,என்றாள்.

“தெரியலடா.ஆனா எங்கயோ பாதையில்லாத எடத்தில முட்டிக்கிட்ட மாதிரி ரொம்ப தடுமற்றமா இருந்துச்சி”

“ம்”

“உங்கிட்ட முன்னமே சொன்ன மாதிரி ரொம்ப கோவிச்சுகிட்டோம்”

சங்கரி,“நம்ம அப்பா அம்மால்லாம் அப்படித்தானே.இதுல என்ன இருக்கு,” என்றாள்.

“அம்மாவுக்கு தனியா ஒரு இடம் தேவைப்படல.இல்லன்னா அவங்க அத வெளிக்காட்டிக்கல.எனக்கு சின்னதா என்னோட ஸ்பேஸ் வேணும்.அது ராஜ்க்கு புரியல”

“நம்ம இன்னும் அந்தளவுக்கு வளரலயே.விட்டு கொடுத்தா என்ன?”

சாந்தினி,“எதுக்காக?” என்றாள்.

“உன்னோட நல்லதுக்காக..சும்மா இதெல்லாம் இளமையோட அகங்காரன்னு தெரியலயா?  தனியா இருக்கிற பெண்களுக்கு சமூகம் காட்ற முகம் வேறமாதிரி இருக்கும்”

“ம். சரிதான்.ஒன்னுக்கு பயந்துக்கிட்டு இன்னொன்னுக்கு அடிபணிய சொல்றியா?”

“அப்படி இல்ல?”

சங்கரி,“பின்ன எப்படி?” என்றாள்.சாந்தினி சிறுது நேரம் அமைதியாக இருந்தாள்.உள்ளபடி தன்னை திறக்க வார்த்தைகளை தேடிக் கொண்டிருந்தாள்.

“எல்லாரும் வாழத்தான் பிறந்தோம் சங்கரி.பெரும்பான்மை மனுசங்க சொல்றதுதான் சரிங்கறது சரியா?”

“பெரும்பான்மை சரின்னு சொல்ல முடியாது.ஆனா நம்ம உருவாக்கி வச்சிருக்கற வாழ்க்கை அது சார்ந்தது தானே?”

“ரொம்ப சரி.ஆனா நான் வலியவள்ன்னு வச்சுக்க.உன்னப்போல பயந்துக்கிட்டே இருக்க முடியாது.இப்பத் திருத்தின மாதிரி, தவறுகள் நடந்தா திருத்திக்கிட்டு போய்க்கிட்டே இருப்பேன்.இதுதான் வாழ்க்கை,இதுதான் மகிழ்ச்சின்னு மத்தவங்க சொல்லக்கூடாது.நாம சொல்லனும்.அறிவிருக்கு அதுக்கு மேல மனசிருக்குல்ல அத பயன்படுத்தனும்.உன்னமாதிரி சேஃபர் ஸைடு வாழ்க்கை எனக்கு ஆகாது.உன்னக் கேட்டா புராணம் வாசிப்ப..அந்தபுராணங்களிலும் வாழ்ந்தவங்களவிட தன்மனம் சொன்னத செஞ்சி வீழ்ந்தவங்களுக்குதான் அதிக இடமிருக்கும்”

“ராஜ் அப்படி என்ன தப்பு செஞ்சார்?” என்று அலமாரிபக்கமிருந்து திரும்பிய சங்கரி இரும்புக்கட்டிலில் அமர்கையில் அந்த ஈர்ப்பு அவளுக்கு புலப்பட்டது.

“நான் ஒரு தனிமனுசின்னு அவரால நினைக்கமுடியல.ஒருநாள் காலேஜ் முடிஞ்சி தெப்பக்குளத்துப்படியில நேரம் காலம் தெரியாம உட்காந்துட்டேன்.இவன் தேடி இருக்கான்.எனக்கே ஏன் அவ்வளவு நேரம் அங்க இருந்தேன்னு தெரியல.மனசு சில நேரம் நின்னு போயிடும்.அது அப்பா அம்மாக்கு நல்லா தெரியும்.என்னய எதும் கேக்க மாட்டாங்க.இவன் வீட்டுக்கு வந்ததும் என்ன ஏதுன்னு துளச்சி எடுத்துட்டான்.அங்க ஆரம்பிச்சது எல்லாம்....”

“?!...அன்பானவர்”

சாந்தினி,“ரொம்ப...அது மட்டும் போதுமா?” என்றாள்.

சங்கரி புன்னகைத்தபடி, “நான் கிளம்பட்டுமா?மழ வராப்ல இருக்கு. இருட்டிகிட்டு வருது,”என்றாள்.

“நானும் வர்றேன்”

“கொஞ்சம் முன்னாடி பேசின சாந்தினியா இது?”

“அதுக்குன்னு?சங்குமுடக்குக்கு அஞ்சுக ன்னு ஆத்மை சொல்றா.கேட்டுக்கனும்.பின்ன நீ கொஞ்சம் ஓடுற நாய்..,”

சங்கரி,“ம்.எனக்கு வேணும்.காலையில இருந்து பசியோட இருந்தா.. ஓடித்தானே ஆகனும்,”என்று சிரித்தாள்.

சாந்தினி,“ராஜ் சாப்பிட சொன்னப்ப சாப்பிட்டுறக்கலால்ல.ரசம் நல்லா வைப்பான்,”என்றாள்.

ப்ரியா,“என்ன ஜோடி நீங்க?..புரியல,”என்றபடி செருப்பை மாட்டினாள்.மீண்டும் மேலே வெள்ளை,இடையில் சிவப்புப்பட்டை,கீழே வெண்பச்சை நிறங்கள் பூசப்பட்ட அந்த அறையை சுற்றி நோக்கினாள்.நிறங்கள் மங்கியிருந்தன.

சாந்தினி,“ காதல்கல்யாணம் பண்ணிப்பாரு,” என்றாள்.

“வேணாம் சாமி...உங்க காதல்ல்ல்.நான் வாழ்க்கையில ரிஸ்க் எடுக்கவிரும்பல”

“நீயும் ஒருஆளுன்னு..வாழ்க்கய வாழ்ந்து கடந்து போகனும்..உனக்கு பசங்க ப்ரண்ட்ஸ் நிறைய உண்டுல்ல?”

“ஆமா.மனுசங்க முக்கியம்மா”

“ம்...ஆண்டாள் மாதிரி அச்சுதா,மணிவண்ணா வாடான்னு கெஞ்சப் போற பாரு”

“சாபம் குடுத்திட்டா உடனே விமோசன காரியமும் சொல்லிடனும்,” என்று சங்கரி சிரிக்க பேசிக்கொண்டே விடுதியிலிருந்து இறங்கி நடந்தார்கள்.

“ம்ம்..காதல்ங்கறது உயர்வுநவிற்சி அல்லது கற்பனைன்னு உணர்வாயாக,”என்று சாந்தினி சொல்லிக் கொண்டிருக்கையில் வானம் மெல்ல முழங்கியது.நடையை துரிதப்படுத்தினார்கள்.

இரவு

ராம் தியேட்டர் வந்ததும் காற்று மண்ணை வாரியிறைத்தது.அருகிலிருந்த மூடிய கடையின் கீழ் ஒதுங்கினார்கள்.சாந்தினி பழக்கப் பார்வையாக எதிரேயிருந்த வளாகத்தைப் பார்த்தாள்.ராஜ் நின்றிருந்தான்.இவர்களை கவனித்திருப்பான்.தியேட்டரும்,ராஜுமாக சாந்தினி மனதிற்குள் ஒரு ரசவாதம்.

சட்டென்று அடித்துப்பெய்யத் துவங்கியது மழை.காற்றோடு இணைந்த கடும் மழை.கிழக்கு நோக்கிய மழை.அவன் முழுதாக நனைந்திருக்கக் கூடும் என சாந்தினி நினைத்தாள்.

நனைந்தக் குரலுடன் சங்கரி, “மழை வருன்னு நினைக்கல இல்ல,”என்றாள்.

“ஆடிமழை இயற்கை தானே சங்கரி”

“பேசிக்கிட்டே குடைய மறந்துட்டோம்”

“குடைக்கு அடங்காத காத்துமழை.எந்ததிசையில் நின்னாலும் நனைக்கற மழை இது,”என்றாள் சாந்தினி.மழை “ சர் ...சர்” என்று திசைமாற்றி மாற்றி சத்தமாக பெய்து கொண்டிருந்தது.இருளின் தனிமையில் தெருவிளக்கின் ஔியில் மழைத்தாரைகள் மினுமினுத்து ஒழுகின.மினுமினுத்து கரியதார்ப்பரப்பில் வழிந்தன.விளக்குகள் அணைந்து கும்மிருட்டு சூழ்ந்தது.மின்னல் வெளிச்சத்தில் இடப்பக்க கழிவுநீர் கால்வாயில் அதே மினுமினுப்புடன் கரியநீர் சலசலத்தது.

“என்ன சங்கரி? ரோடு,மேடு..பள்ளம்ன்னு ஒன்னும் தெரியலயே? எப்பிடி இறங்கி நடக்கறது?”

“இரு சாந்தினி..வெளிச்சம் வரட்டும்,” என்றாள் சங்கரி.

மழை நின்று குளிர்காற்றடிக்கத் தொடங்கியது.காற்று குளிரை அதிகப்படுத்தியது.இருவரும் கைகட்டியபடி ஈரத்தில் படிந்த புடவையோடு வெளிச்சம் எதிர் நோக்கி நின்றிருந்தனர்.ஒருமின்வெட்டில் அவனும் அவ்வாறே எதிர்பக்கத்தில் நின்றிருப்பது புலப்பட்டது.கோடாகி கிளைவிரித்து மேலும் வளர்ந்து பெருவிருட்சமென வானில் ஔியாலான கிளைகளை வரைந்து நொடியில் அழிந்த கோபத்தில் உறுமியது.இருவருக்கும் திடுக்கிடலில் அடிவயிறு நடுக்கம் கண்டது.இருண்டவானில் மீண்டும் மீண்டும் ஔி ஓவியங்களுக்கான போராட்டங்களும், சீற்றங்களும் மாறி மாறி நடந்து கொண்டிருந்தன.சாந்தினி, “மாபெரும் யுத்தகளம்,” என்றபடி பின்வாங்கி நின்றாள்.

சங்கரி , “ அப்படிமட்டும் சொல்லமுடியாது... உயிர் பெருகச் செய்யும் பெருமழைக்கான துவக்கன்னு பெரியவங்க சொல்வாங்க,” என்றாள்.

இவர்களை நோக்கிவந்த ராஜ் இவர்களின் முகத்தைப் பார்த்து, “ஆடிமழ தொடங்குதில்ல...அதான் இவ்வளவு வேகமும்.கொஞ்சம் பொறுங்க.போகலாம்,” என்றபடி அவர்களருகே நின்றான்.

சங்கரி,“இடி மின்னல் பயமாருக்குண்ணா,” என்றாள்.

ராஜ் , “எனக்கும் திடுக்குன்னுதான் இருக்கு.அதான் மூணுபேர் இருக்கமில்ல.ஆளோட ஆளா இருக்கையில என்னபயம்? பசியோட இருந்தா இன்னும் நடுங்கும், இன்னும் பயமா இருக்கும்,” என்று கைகளை தேய்த்துக் கொண்டான்.அவன் புன்னகை அவன் குரலில் தெரிந்தது.மழை பெய்து கொண்டிருந்தது.



Comments

  1. "ஒன்றை உதறியப் பிறகு இன்னொன்று எளிது போல." என்ற வரியை படித்த போது “இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை // மயலாகும் மற்றும் பெயர்த்து" என்ற குறள் நினைவுக்கு வருகிறது. நன்றி.

    ReplyDelete
  2. நல்ல கதை. மறுபடியும் வாசிக்க வேண்டும்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பசியற்ற வேட்டை

எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் நேர்காணல்

முதல் கனி