Skip to main content

கிரகணப்பொழுது: சிறுகதை

மார்ச் 2018 சொல்வனம் இதழில் வெளியான கதை

கிரகணப்பொழுது      

மாடியறையின் படியில் அடுத்திருந்த திண்ணையில் கையூன்றி அமர்ந்தேன்.விரிசலிட்ட ஆளுயரக்கண்ணாடி திண்ணையில் அமர்ந்திருக்கிறது.குப்பைவண்டியில் போட வேண்டும்.சாயுங்காலம் ஆறுமணி. முழுநிலாநாள் இது. இன்னேரம் கிழக்கில் இந்த பெரிய கம்பிஜன்னலின் வழி பச்சைமலை குன்றிலிருந்து ஔித்தகடு எழுந்திருக்க வேண்டும்.ஆனால் இன்று மெல்லிய இருள் சூழத்துவங்கியது.மேற்குபக்கம் அடர்சிவப்பில் ஔி மறைந்ததைப் பார்த்து அம்மா, “கீழப் போறேன்,” என்று இறங்கினார்.தெருவிளக்கு ஔிராததால் இருள் சீக்கிரம் கவிவது போலிருந்தது.






தெருவில் நடமாட்டமில்லை.பதின்பயல்கள் ஏதோ சாகசம் என நினைத்து தெருமுடக்கில் நின்று உரக்க சிரித்துக் கொண்டிருந்தார்கள்.இதே போலொரு அந்தியில் பச்சைமலையின் மண்மலைக்குன்றின் அடிவாரத்திலிருக்கும் தாத்தா வீட்டுக்களத்தில் கட்டிலில் அமர்ந்திருந்தேன். கிழக்கே குச்சிவள்ளிக்கிழங்கு செடிகளின் பெரிய கைகள் போன்ற இலைகள் காற்றிலசைந்து கொண்டிருந்தன.அம்மா, பெரியம்மா, அம்மாச்சி என்று மூவரும் சமைத்துவிட்டு தாழ்வாரத்தில் அமர்ந்திருந்தார்கள்.

பெரியம்மா,“அய்யாவுக்கு இதெல்லாம் தேவையாம்மா? அவரு உங்கப்பனுக்கென்னடி பொழப்புங்கறார்?” என்றபடி தரையில் ஒருக்களித்துப் படுத்தார்.

அம்மா,“அய்யா எத்தனைதரம் பட்டாலும் இந்த வேலையெல்லாம் விட மாட்டாரு.அலையட்டும்,” என்றார்.

அம்மாச்சி,“இன்னைக்கி வரட்டும்,” என்றார்.மேற்கே கொட்டகையில் பசுக்களின் அசைவொலிகளும், அவைகளில் ஒன்று சிறுநீர்கழிக்கும் ஒலியும் கேட்கிறது.வெள்ளாட்டின் கழுத்தில் கட்டப்பட்டுள்ள நீள் தகரமணியின் ஓசை அழைக்கிறது.வானம் நன்றாகஇருட்டிவிட்டது.தென்னைகளின் அடியில் மாட்டுவண்டி இருளுக்குள் மறந்துவிட்டிருந்தது. 

தென்னைகளின் பின்னே தாத்தாவின் ஆணியடித்த வார் செருப்பின் ஓசை கேட்டது.அண்ணன் முதுகில் என்முதுகை சாய்த்து கயிற்றுக்கட்டிலில் அமர்ந்து உலக்கைத்தடி மீனை வானத்தில் பார்த்தபடி இருவரும் ஒத்திசைவாக முன்னும் பின்னும் அசைந்தவாறு அண்ணனிடம் பேசிக்கொண்டிருந்தேன்.

“வயசுக்கு வந்த பொம்பளப்பிள்ள கட்டில்ல ஒக்காந்து காலாட்டிக்கிட்டு…காலில ஒன்னு போடனும்,” என்றபடி தாத்தா வேட்டிசட்டையை கொடியில் போட்டுவிட்டு கோவணத்தோடு மோட்டார் தொட்டியின் நீரை அள்ளி அள்ளி தலையில் ஊற்றிவிட்டு பரபரவன்று உடலை,முகத்தை, பல்லை தேய்த்து மீண்டும் நீரை பரபரவன்று அள்ளி அள்ளி ஊற்றினார்.எதற்கெடுத்தாலும் இப்போதெல்லாம் இப்படி சொல்லி என்னை திட்டுவதை கேட்க எரிச்சலாக இருக்கிறது.

“ஒருநாளுக்கு பத்துதரமாவது குளிச்சாயிரும்..என்ன புண்ணியம்? காக்கா குளிக்கறாப்ல”

“அய்யா மேல ஒருநாள் வேர்வ வாடை அடிச்சிருக்குன்னு சொல்லு? இதுக்கு சோப்பு சேம்பு எதுவும் கெடையாது”

“நீதான் உகங்கப்பன மெச்சிக்கனும்.இருக்கற கருப்புல சோப்பு போட்டா என்ன? போடாட்டி என்ன? கல்லு போட்டு தேச்சாலும் மாத்தம் கெடையாதே”

மெல்லிய இருளில் தாத்தா நடந்து வருகையில் இடையில் கோவணத்தைப் பிடித்திருந்த வெள்ளி அரைஞாண் கயிறு தனியே ஔிர்ந்தது.தாத்தா என்னருகே வந்து ஈரம்சொட்ட நின்று துண்டை கொடியிலிருந்து எடுத்து உடலை அவருக்கே உரிய சுறுசுறுப்பில் துடைத்து கோவணம் மாற்றினார்.நான் காலாட்டுவதை நிறுத்திவிட்டு அவரைப்பார்த்தேன்.

வேட்டியை மாற்றி உதறிக் கொண்டிருந்தார்.உடலில் ஒருஇடத்தில் கைப்பிடி தசை அதிகம் கிடையாது.கோயில் சிலைமாதிரி.இல்லையில்ல…வெள்ளை தலைமயிர்..அதை சீப்பு கொண்டு சீவி பார்த்ததில்லை.கையில் எடுத்துவிடுவதோடு சரி.நீண்ட கைகளில் கருப்பு மயிர். வரிவரியாக வெள்ளை கருப்பு மயிர்கள்,நெஞ்சின் இருப்பக்கமுமிருந்து கிளம்பி இணைந்து ஒரு கேடாகி வயிற்றில் இறங்கும் முடிவரி.ஒரே ஒரு ஒச்சம்…முட்டி வளைவும் வலியும் மட்டும்.நீண்டு அகன்றபாதம் …மண்ணில் கிடந்து பழுப்பேறிய நகங்கள்.

பின்னாலிருந்து அண்ணன்,“ஏந்தாத்தா..கடன வாங்கி குடுத்துட்டு வாங்கினவங்க குடுக்காததுக்கு நீ அலையற?!” என்றது.

“கையில இருந்தா தந்துருவான்..இல்லாத கொடும.கெழங்கு போட்டான்..லாபம் இல்ல.என்ன பண்ணுவான்?”

“இதுமாதாரி எத்தனபேரு வந்து கடன உங்கிட்ட கேக்றாங்க.நீ வச்சிருந்தா குடு.இல்லன்னா விட வேண்டியது தானே,” என்றபடி அண்ணன் திரும்பி பக்கவாட்டில் அமர்ந்தது.

தாத்தா எங்கள் எதிரிலிருந்த மரக் குந்தானியில் வேட்டிய மடியில் வைத்துக் கொண்டு அமர்ந்தார். மடிப்புகள் விழுந்த நெற்றியில் தெரிந்தும் தெரியாமலும் சிறியதாக பச்சக்குத்திய பொட்டு.புன்னகையோடு,“எங்கிட்ட இல்ல..நாலு ஏக்கரில எனக்கே கையக்கட்டுது.அவனுக்கு ஒருஏக்கரா நெலம்.புஞ்ச வெள்ளாமையில என்ன வரும்? என் முகத்துக்கும் பழக்கத்துக்கும் கடன் குடுக்கறாங்க..வாங்கித்தர கொஞ்சம் பிந்துனா பேசி பாக்கனும்.அதுக்கில்லன்னா பின்ன எதுக்கு மனுசங்க?” என்றபடி அவரின் இயல்பான புன்னகையுடன் எழுந்து வேட்டியைக் கட்டிக் கொண்டு எறவானத்திலிருந்த கோழிஇறகை எடுத்து அகன்ற காதுகளை குடைந்தபடி, “அந்த ரேடியாவப் போடும்மா.சேதிக் கேக்ற நேரமாவுதுல்ல?” என்று உள்ளே செல்கையிலேயே அந்தப் புன்னகையை நமுட்டு சிரிப்பாக மாற்றிக்கொண்டார்.

 மண்மலையில் தென்கிழக்கு மூலையில் நிலவெழுந்தது.அங்கிருந்தே என்றாலும் சிலமைல்கள் தொலைவில் இன்றும் இந்த சிவந்தநிலா பிள்ளைகள் அழித்து வரைந்ததைப்போல பிசிறி கலங்கி எழுந்தது.இன்று நினைக்கையில் தாத்தாவின் சொற்கள் எடையென இறங்கின.

கிரகணம் முடியும்வரை சமைக்கக் கூடாது என்றது இந்த அந்தியை பார்க்கும் வாய்ப்புக்கு என்று நினைத்துக் கொண்டேன்.கீழே பயல்கள் ஔிராதவிளக்கைக் காட்டி தாழ்ந்த குரலில் பேசி உரத்து சிரித்துக் கொண்டிருந்தார்கள்.என்னவாக இருக்கும்? அந்தவயதில் சிரிக்க காரணம் தேவையில்லை தான்.உலகின்அனைத்தும் அவர்கள் சிரிக்க என்று இருப்பதுதானே.குழியான சாலையில் நழுவும் சைக்கிள்,படுத்திருக்கும் நாய் என்று எதாவது இருக்கும்.

சத்தமாக சிரிக்காவிட்டாலும் உள்ளுக்குள் நானும் இப்படிதானே இருந்தேன்.டெண்டுல்கரின் நூறாவது ரன்னிற்காக என்னைமறந்து சிரித்ததற்கு ஒருநாள் மிஜ்ஜூ,பிஜ்ஜூ,அண்ணன் மத்தியில் அம்மாவிடம் வாங்கிய திட்டுக்குப் பிறகு அதுபுன்னகையாய் ஔிந்து கொண்டது.

சிவப்புநிலா அடர்கருமையில் பதிந்திருந்தது.தென்கிழக்கில் ஒரேஒரு விண்மீன் சிமிட்டியது.அம்மாச்சி திருச்சிமருத்துவமனையில் மூன்றாவதுதளத்தில் வலியோடு படுத்திருக்கலாம் அல்லது மாத்திரைகளால் உறங்கியிருக்கலாம்.இந்தமாதிரி வானத்தை வேடிக்கைப் பார்க்க அம்மாச்சிக்கு பிடிக்கும்.

இப்படி அமர்கையில் மனதில் இருக்கும் அடைசல்கள் அனைத்தும் மொய்க்கத்துவங்கி அலைவரிசைகள் குழம்பிய ரேடியோவாக கொறகொறக்கும்.

அம்மாச்சிக்கு கதிர்வீச்சில் குணமாகிவிடும் என்று மூளை சொல்கிறது.சரி அடுத்தது என்ன? வேலைக்குப் போகனும்…அதுக்கு இப்ப என்ன? ஆண்டுகணக்காதான் வேலைக்கு போகல.இன்னக்கி என்ன புதுசா?.சிவந்தநிலா இருளில் முழுமையாக ஔிந்து கொண்டது.இருள் சூழ்ந்து கொண்டிருந்தது.நேரம் எண்ணங்கள் ஏதுமின்றி நகர்ந்தது.

மோதிரவளையத்தின் ஒற்றை நீளக்கல் என நிலா விளிம்புத் தெரிந்தது.சற்று பார்த்துக் கொண்டிருக்கையிலேயே பிறையென்றாகியது.அடுத்தது என்ன? வலித் தொந்தரவு.இது விலகாதா? ஆண்டுக்கணக்கில்…ஆதான் டாக்டர் பெரிய பிரச்சனையில்லை..மாத்திரைப் போட்டா வலி குறையுதா? போட்டுகம்மா என்று தட்டிக் கொடுக்கிறார்.

பொருள் தேடி மனம் பயணிக்கையில் அனைத்தும் பொருளற்றவையாவதன் விந்தை  மனதை கவ்வுகிறது.சொற்களால் எந்த கங்கை மூடுகிறேன்? வானத்தில் தனித்து விடப்பட்டநிலா தன்னைமூடிய இருளைவிட்டு மெல்ல நகர்ந்து கொண்டிருக்கிறது அல்லது இருள் நகர்கிறது அல்லது இரண்டுமே நடக்கிறது.  

நிலா தன்இருளை மிக மெல்லக்கடந்து கால்பாகமாக ஔிர்கிறது.வானத்தில் மாயம் போல ஒரு திரை கண்ணெதிரே விலகிக் கொண்டிருக்கிறது.தெரு மிகஅமைதியாக இருக்கிறது.அடுத்து என்ன? இப்படியே சோறாக்கிக் கொண்டு பாத்திரம் கழுவிக் கொண்டேயிருக்கலாமா? இந்தக் கேள்விக்கு விடையாக மனதிற்கு என்ன சொல்வது என்று சில ஆண்டுகளாக தெரியவில்லை.

தாத்தா சொல்லிய மனுசிகள் மனிதர்கள் எங்கு சென்றார்கள்? இங்குதான் எங்கோ இருக்கக் கூடும்.காண கண்ணோ அல்லது மனமோ மங்கியிருக்கலாம் என்று நினைத்து கண் கண்ணாடியை சரிசெய்தேன்.

மேகமில்லாத தைவானம்.பகுதிநிலா ஔிவீசிக் கொண்டிருக்கிறது.ஜன்னலின் கீழே பக்கத்துவீட்டில் சந்தடி கேட்கிறது.நாய்க்கர் தாத்தா கேணிவேலை முடிந்து வந்திருப்பாராக இருக்கும். “சோறெடுத்து வையி,”என்று தாத்தா செம்பை தரையில் வைக்கும் ஓசை கேட்கிறது.

அவ்வா தெலுங்கில் ஏதோ சொல்வது புரியவில்லை.இவர்கள் பேசுவதும் சண்டைபோடுவது போலவே இருக்கிறது.

“நெலா வந்ததும் திங்கலாம்”

“பசிவந்திடுச்சில்ல…”

தாத்தா பாத்திரங்களை எடுப்பது “டங்.. ட்ர்ர்ர்.. ட்டரக்” என்று கேட்கிறது.ஏதோ ஆழத்தில் இன்னும் ஆழத்தில் என்று மனம் துளாவிக்கொண்டிருந்தது.முக்கால் பாகம் ஔியேறிய நிலா கண்களைக் கூசியது.கண்ணாடியை நைட்டியில் துடைத்து மாட்டினேன்.

தாத்தா வாழ்ந்ததைப் போல அல்ல இந்த என் வாழ்க்கை.அவர் வாழ்ந்துபார்த்தது அன்றைய விவசாயவாழ்க்கை.ஆமாம்? அதுக்கு இப்ப என்ன? எதையும் கேட்காமல் அமைதியானேன்.எப்போதும் போல.இந்தக் கட்டத்தில் வந்ததும் மனம் பேசுவது நின்றுபோகும்.

 எதையோஅடுப்பில் வறுக்கும் மணம் ஜன்னல்வழி வந்தது.

அவ்வா, “போதும் எடு,” என்றது.தாத்தா சமையலில் புகுந்துவிட்டார் போல.

“தும்மடிக்கா வத்தல்ன்னா உயிரவுட்டு அலயற..கசந்து கடக்குது..அதுல என்ன இருக்கோ!”

“அது கசப்பு இல்ல குப்பம்மா…துவப்பு,” என்ற தாத்தா கரண்டியைத் தட்டிக் கொண்டிருந்தார்.

கவனத்தை வானத்துப்பக்கம் திருப்பினேன்.முழுநிலா….கண்களை மூடினேன்.கண்களுக்குள் நிறைந்தது.வானத்தை நோக்கி கண்களைத் திறந்தேன்.ஔி…இதுவரை எங்கோ இருந்தது… இல்லை அங்கேயே தான்.ஔி…வழிந்து பரந்து பரவி ஓட்டுக்கூரைகளில், தகரத்தாழ்வாரங்களில், மாடிவளைவுகளில், தென்னங்கீற்றுகளில், தெருவின் தரையில், முற்றங்களில்,எதிரேயிருந்த கிணற்றினுள், சற்று உயரே….அகண்ட வெளியில் என உலகை தழுவி விரிந்து கொண்டிருந்தது.கைகள் அனிச்சையாய் கூம்பியது.

பக்கவாட்டில் நிலவொளியில் சிறுதிண்ணையிலிருந்த விரிசல்விட்ட ஆளுயரக்கண்ணாடியில் நான் மேல் பாகத்தில் விகாரமாகவும் ,விரிசலின் கீழ்பாகத்தில் புன்னகையோடும் தெரிந்தேன்.என்நிலை வந்ததும் கைகளை சட்டென்று கீழே போட்டுவிட்டு நிலவைப் பார்த்து சிரித்தேன்.கீழே வேலையிருக்கிறது.நடைமுழுவதும் ஔியால் நிரம்பியிருந்தது.அதில் நடக்கத் தொடங்கினேன். தெருவிளக்கு ஔிராத படிகளின் திருப்பத்தில் இருள் நின்றிருந்தது.அதன் மேல் மெல்லிய படுகையாய் நிலவொளி சரிந்து நிற்கிறது.









Comments

Popular posts from this blog

அகத்தின் ஆரக்கால்கள்

 [ எழுத்தாளர் மயிலன் ஜி.சின்னப்பனின் முப்போகம் [குறுநாவல்], நூறு ரூபிள்கள் மற்றும் சிருங்காரம் சிறுகதை தொகுப்புகளை முன்வைத்து...] எழுத்தாளர் மயிலன் தண்டவாளத்தின் இருபக்க தண்டுகள் அதை இணைக்கும் குறுக்குப்பட்டைகள், ஜல்லிக்கற்கள் என்று அனைத்தும் சரியாயிருக்க ஓடும் ரயிலில் எங்கோ ஒரு சின்னஞ்சிறு விலகல் அனைத்தையும் குழப்பி தடம் புறளச்செய்கின்றது. புரண்டு கிடக்கும் ரயில் அந்த சின்னஞ்சிறு விலகலின் உண்மையான ரூபம். மறுபடி சரி செய்யப்பட்டு ஓடும் ரயில் பின் எங்கோ அதே போல தக்கி நிற்கும். அதை போன்ற ஒரு உணர்வு சித்திரத்தை மயிலனின் கதைகளை தொகுப்பாக வாசிக்கும் போது உண்டாகிறது. மனதின் அகஅடுக்குகளை கீறிப்பார்க்கும் சவரக்கத்தி என்றும் இவரின் எழுத்துகளை சொல்லலாம். அதில் ஒரு அடுக்கு காயத்தால் அழுகி புறையோடி சீல் கொள்கிறது. அது மற்ற அடுக்குகள் மீது கொள்ளும் செல்வாக்கின் கதைகள் இவை. அந்த வலி நிறைந்த அழுகிய அடுக்கை உருவாக்கும் விசைகளை நோக்கி செல்லும் கதைகள் இவை. மனித இயல்புகள் அல்லது  இயல்புகளை பாதிக்கும் சூழல்கள் என்று இவை இரண்டும் ,அந்த சவரக்கத்தியை தீட்டும் மணலின் நெறுநெறுப்பாகவும் தீட்டிய கத்தியை ...

கர்ணனின் கவசகுண்டலங்கள்

இந்த ஆண்டு நித்யவனத்தில் நடத்தப்படும் முழுமைஅறிவு [Unified wisdom] வகுப்புகளில் மரபிலக்கிய வகுப்பிற்கு செல்ல வேண்டுமென்று தோன்றிக்கொண்டிருந்தது. மரபின் மைந்தன் முத்தய்யா அவர்கள் நடத்தும் மரபிலக்கிய அறிவிப்பு வந்ததும்  வழக்கம் போல நிறைய யோசனைகள். பொங்கல் விடுமுறை நாட்களில் வருகிறது என்பது வேறு. இருந்தாலும் செல்ல வேண்டும் என்று ஒரு பிடிவாதம். பதினாறாம் தேதி ரம்யா மனோகருடன் ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்திலிருந்து வெள்ளிமலை சென்றேன். சாயுங்காலம் ஐந்து மணி்க்கெல்லாம் மலையேறிவிட்டோம். அங்கு ஈரோடு கிருஷ்ணன் அவர்களை முதலில் பார்த்தோம். அவருடன் எங்கள் வகுப்பு சகாவான ஆனந்த் குமார் அறிமுகமானார். பின்பு அறைக்கு சென்று வந்து மலைச்சூழலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அங்கிருந்த திறந்தவெளி இருக்கைகளில் ரம்யாவும் நானும் கொஞ்சம் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நல்ல நட்பிற்கான அடித்தளம். மேடம்,கமலதேவி,கமலா...கடந்து...ரம்யாவை அக்காவிற்கு வர வைத்ததும் வேலை முடிந்தது. இனி இயல்பாக எல்லாம் நடக்கும். ரம்யாவின் இனிய முகம் மூன்றாவது நாள் ஈரோடு பேருந்து நிலையத்தில் விடைபெறும் வரை உடன் இருந்தது. அதே ப...

பெருகும் காவிரி

 காவிரியை பார்ப்பது எப்போதுமே எனக்கு பரவசமான பொழுது. பள்ளி வயதில் முசிறி காவிரி. கல்லூரி வயதில் திருச்சி காவிரி. கடைசியாக முசிறிக்கு சென்று நான்கு ஆண்டுகளாகிறது. முசிறியிலிருந்து திருச்சிக்கு செல்லும் பேருந்து வழியில் காவிரி உடன் வரும். கொல்லிமலையில் உருவாகி எங்கள் ஊரில் பாயும் அய்யாறு முசிறி காவிரியில் கலக்கிறது. அண்மையில் எழுத்தாளர் சுரேஸ்குமார இந்திரஜித் கருத்தரங்கிற்காக திருச்சி செல்லும் போது இரண்டுஆண்டுகள் கழித்து  அந்தியில் காவிரியை பார்த்தேன். கொள்ளிடம் பாலத்தில் நல்ல காற்று. கொள்ளிடத்தில் ஓரளவு நீர் இருந்தது. கொள்ளிடம் பாலத்தில் பேருந்து செல்லும் போது வலது பக்கம் மலைக்கோட்டை ,திருவரங்க ராஜகோபுரம் இரண்டும் நீருக்கு அப்பால் இணையாக காட்சிக்கு வரும். அதற்கும் அப்பால் மேற்கு வானில் சரியும் ஆரஞ்சு வண்ண சூரியன்.    மங்கம்மாளை, தாயுமானவரை,ஆண்டாளை,வெள்ளையம்மாளை,ஆண்டாளை போலவே அரங்கனை தேடி வந்த முகலாய இளவரசி சுரதானியை மனம் சென்று தொடுகிறது. அன்னிய படையெடுப்பின் போது கோயில் உற்சவரை காப்பதற்காக கிழக்கு கோபுரத்தில் இருந்து உயிர் விட்டாள் தாசி குலத்து வெள்ளையம்மாள். வெள்ளை ...