உள்புண்

 2018 ஆகஸ்ட் 11 பதாகை இதழில் வெளியான சிறுகதை


உள்புண்                                                                    

பின்புறம் துணிக்காய வைக்கும் இடத்திலிருந்து அப்பா, “ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க,வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவாழ்க,”என்று தன் அடைத்தக்குரலில் வெட்டிவெட்டி  பாடிக்கொண்டிருந்தார். கார்த்திகா முற்றத்திலிருந்து எட்டிப் பார்த்தாள்.

முற்றத்தில் பாத்திரங்கள் கழுவிய ஈரம் அவள்கால்களுக்குக் கீழே பிசுபிசுத்தது. “அம்மா…ஒழுங்கா கழுவிவிட மாட்டியா…யாராச்சும் விழப்போறாங்க பாரு,”என்று நைட்டியை தூக்கிப்பிடித்தபடி கத்தினாள்.

“படிக்கறப்பதான் ஒன்பதுமணிக்கு எழுந்திருச்ச.இப்போ வேலைக்கு போயும் அதே பொழுது.நான் எந்த வேலையென்னு செய்யறது.இன்னிக்காச்சும் ஒத்தாசையா இருக்கலாம்ல,”என்று சொல்லும் பொழுதே கடையிலிருந்து, “அக்கா….போட்டுக்கடலை வேணும்,”என்ற குரல்கேட்டு அம்மா முற்றத்திலிருந்து கடையின் பின்புறம் ஏறினாள்.

“கார்த்திய பொண்ணு பாக்க வரவங்க நல்ல பெரிய இடமாமே?இதுக்குன்னுதான் இவ்வளவு நாளாச்சுன்னு நெனச்சி பட்டுன்னு முடிங்க.இவ சித்தப்பன் மவ ரெண்டு  பிள்ளகள பெத்து பெரிய மனுசியாயிட்டா,”என்று ரத்தினம் அக்காவின் குரல் கேட்டது.

‘வீடும் கடையும் ஒரே இடத்தில்  வச்சுக்கிட்டு எந்நேரமும் நாயா ஓடிக்கிட்டே… எந்த வேலையும் முழுசா செய்யாம… ச்சை’என்று நினைத்தபடி முற்றத்தில் தண்ணீரை அடித்து ஊற்றிவிட்டு முகம்  கழுவினாள். நடையின் படியில் அமர்ந்து முற்றத்து வெயிலில் கால்களை நீட்டினாள்.

முற்றத்தில் சுவரைத்தாண்டி கிளைநீட்டியிருந்த சீமைக்கொன்றையின் சிவந்தமலர்களைப் பார்த்தாள். அது மரம் கொள்ளாமல் காட்டுத்தீ என பூத்துக்கிடக்கையில் அப்பா  “சிவசிவ” என்று நெஞ்சில் கை வைத்து பார்த்துக் கொண்டிருப்பார்.அவரை அப்படிப் பார்க்க அவளுக்கு ஆசையாய் இருக்கும்.





இத்தனை வயது வரை படிப்பு,வேலை என்று வேறெதையும் பார்க்கவில்லை,பேசவில்லை,நினைக்கவில்லை. மெதுவாகத்தான் இந்தக்கடலில்  குதிக்கனும். தள்ளி விட்டுட்டு போறவங்களுக்கு என்ன? என்று எப்போதும் தன்னை  பெண் பார்க்க வரும் நாளன்று நினைத்துக் கொள்வாள்.

அவளுக்கு எதிர்புறம் இருந்த மாடிப்படிகளில் இறங்கிய கதிர், “என்ன கார்த்தி..இப்படி ஒக்காந்திருக்க. வர்ற மாப்ள ஓடிப் போயிறப் போறாங்க,”என்றான்.

“ரொம்ப நல்லது,”

அம்மா “அப்படியே கன்னத்தில ஒன்னு போட்டேனா பாரு.வயசு என்ன? கழுதைக்கு ஆகறாப்ல ஆவுது.ஒரு பயமிருக்கா.ஒன் வயசுல எனக்கு நீங்க ரெண்டு பேருமே பிறந்தாச்சு.போய் குளிடி,”என்றாள்.

“காப்பிம்மா.ஹாஸ்டல்ல நல்ல காபி கூட கெடையாது.கால் ரொம்ப வலிக்குது…நேத்து அலைச்சல்,” என்றாள். இரண்டுநாட்களாக மனம் கண்டதை நினைத்துக் கொண்டிருக்கிறது.என்னத்துக்கு மனதிற்கு  இந்தப்பீடிகை என்று அவளே அவளைக் கேட்டுக்கொண்டாள்.

அப்பா உள்ளே வந்து சமையலறை முன்னிருந்த நடையில் பாயில் அமர்ந்தார்.அம்மா நான்குஇட்லி வைத்து சாம்பார் கிண்ணத்தை அவர் அருகில் வைத்தாள். அவள் காபி குடிப்பதற்குள் சாப்பிட்டு முடித்தவரிடம் அம்மா, “பதினோரு மணிக்கு ஒருக்கா சாப்பிடலாம்.எந்திரிங்க,”என்றாள். அவர் சுள்ளென்ற முகத்துடன் எழுந்து கடைக்குள் சென்றார்.

“அங்க இங்கன்னு வீடுமுழுக்க ஒக்காந்து எந்திரிக்காம போய் குளிடி,”என்று சமையலறையிலிருந்து அம்மாவின் நாயனக்குரல் கேட்டது.

அடியுமல்லாது,மெல்லியதும் அல்லாது காற்றில் தட்டி நிறுத்தும் குரல்.காபியின் மெல்லிய கசப்பு மட்டும் நாவிலிருந்தது.நடையிலிருந்து இறங்கி பின்பக்கம் குளியலறைக்கு செல்லும்வரை அந்தக் கசப்பு இருந்து கொண்டேயிருந்தது.

தண்ணீரை அள்ளி வாயில் ஊற்றிக் கொப்பளித்துத் துப்பினாள்.அவளுக்கு நித்யாவின் நினைவு வந்ததும் தனக்குள் மூழகினாள். 

அந்தக்கிறுக்கியும் இன்னைக்கு லீவுங்கறதால யாருக்கு முன்னால நிக்கப்போறாளோ? நானாவது பரவாயில்லை. அது இன்னும் செங்குத்துமரம் என்று நினைத்தபடி தண்ணீரை அள்ளி தலையில் ஊற்றினாள்.

வயிற்றில் யாரோ ஊசியால் குத்துவது போன்ற வலி. அது நானே தானா? பனிரெண்டாம் வகுப்பில் குத்தத் தொடங்கி இன்னும் ஓயவில்லை.ஏன் படிப்பை இவ்வளவு சீரியஸா எடுத்துக்கொண்டேன்.நான் மட்டுமா? இன்னும் சில கிறுக்கிகளும்.வெளியில் என்ன நடக்கிறது என்றுத் தெரியாமல் புத்தகத்திற்குள்ளயே புதைந்தது இந்தவேலைக்கா? என்று நினைக்கையில் அப்பா பாடறமாதிரி, “பித்தா…பிறைசூடான்னு,”போயிடுது என்று நினைத்தபடி வெளியில் வந்தாள். கொடிக்கயிற்றை உரசிக் கொண்டிருந்த வாழைமரத்தைப் பார்த்தபடி தலை துவட்டினாள்.

 கண்ணகி பெரியம்மாவின், சந்திராஅக்காவின் வாழ்க்கையை கண்டுதான் அம்மா சின்னப்பிள்ளையாயிருக்கையிலிருந்து ஆறுமாதம் முன்புவரை, “எப்படியாவது படிக்கவச்சிடறோம்.வேலக்கு போயிடனும் கார்த்தி,”என்று சொல்லிக்கொண்டேயிருந்தாள்.

தனியார் வேலை,டி.என்.பி.எஸ்.ஸி கிளாஸ் ன்னு இரண்டுமே சரிவராமல் மூன்றுஆண்டுகள்.பின் இரண்டு ஆண்டுகள் பயிற்சிவகுப்புகள்,தேர்வுகள் இடையில் ஒத்துவராத திருமணப்பேச்சுகள் என்று அவள் மனம் முழித்து பின் விழித்தது.

 ‘வேலைக்கு சென்று ஒருமாதிரி இப்பதான் இயல்பான நிலைக்கு மனதும், புத்தியும் வந்திருக்கு.அடுத்து இந்தக் கல்யாணம் முன்ன பின்ன நடந்திருமா?! அதையும்,வேலையையும் சாமாளிக்கனும். முப்பது வயசுக்கு மேல நிம்மதியில்லையோ?’ என்று கண்டகண்ட தொடர்பில்லாத நினைப்புகள் அவள் மனதில் பேசிக்கொண்டிருந்தன.

காற்றில் அத்தனை இலைகளும் சீப்பு மாதிரி கிழிந்திருந்தன.புடைக்கன்றின் குட்டி இலைகள் இளம்பச்சையில் நிமிர்ந்து சிறியஇலைகளாக நிமிர்ந்திருந்தன.அதில் ஒன்றை தொட்டுத்தடவிப் புன்னகைத்தாள்.

நடைக்குள் நுழைகையில் கதிர் அலைபேசியைக் கொண்டுவந்து கொடுத்தான்.நைட்டியில் கையை துடைத்தபடி வாங்கி “யாருங்க..? ஆமா..வீ.ஏ.ஓ கார்த்திகா தான்,”என்றாள்.

“….”

“நாளைக்கு பத்துமணிக்கு மேல வாங்க பாக்கலாம்,”என்றபடி சிறுமுற்றத்தைக்கடந்து மாடிப்படிகளில் ஏறினாள்.படிகளின் வளைவுகளில் திரும்புகையில் ,படிகளின் அடியில் இருந்த ஸ்டார்ரூமை திறந்து கொண்டிருந்த அம்மா, “நல்லதா எடுத்துப் போடு..வீட்டுக்கு மாட்டிக்கறத போட்டுட்டு வந்து நிக்காத,”என்றாள்.

நீண்ட கோரைமுடியை சீவும் போது, “ இன்னக்கி முடிக்கு ஹென்னா போடலான்னு இருந்தேன்.க்ரே ஹேர் தெரியுது,” என்றாள். அலைபேசியை பார்த்துக் கொண்டிருந்த கதிர் நிமிர்ந்து, “அவ்வளவா தெரியல..”என்றான்.க்ரேகலர் சுடிதாரை எடுத்து அவனிடம் காட்டினாள். அவன் வேண்டாம் என்று உதட்டைப் பிதுக்கி விட்டு வெளியே சென்றான்.  பிங்க்கை எடுத்து மாட்டிக் கொண்டு கீழேவந்தாள். சாப்பிடும் போது அம்மா ஆறுஆண்டுகளாகப் பாடும் அதே மந்திரத்தைப் பாடினாள். 

“பக்குவமா நடந்துக்க”

ஆழத்தில் அந்த அவளென்ற வெகுளி எங்கோ ஔிந்து கொண்டாள்.மனுசங்களைப் பார்க்கையில் அவர்களின் பேச்சுப் போக்குக்கு போக இன்றைய இவளால் முடிகிறது.அந்த வெகுளி எவ்வளவோ பரவாயில்லை.இவர்களின் பேச்சுப் புரியாமல் நேரடியாக தன்மனதால் அடிப்பவள்.

அப்படி இருக்கக்கூடாது என்று அம்மா மெதுவாகப் புரியவைப்பதற்குள் கார்த்திகாவின் நிமிர்ந்த தன்மையின் முன் தினமும் மண்டியிட்டிருக்கிறாள். “இப்படி இருக்காத கார்த்தி.மனுசங்கள புரிஞ்சிக்கடி.கெட்டவங்கன்னு சொல்லலடி அறிவு கெட்டவளே.என்னத்தப் படிச்சியோ!” என்பாள்.

அப்பாதான் எதற்கும் தணியாமல் அப்படியே இருப்பதால் அவர் பேச்சுக்கு செவிகளில்லாதவராக தனித்திருக்கிறார்.அம்மா இவர்களிடம் சிக்கி தடுமாறிப் போகிறாள்.கூட்டுக்குடும்பத்தில் எதையோ தொலைத்ததை உணர்ந்தப் பின்னரே அப்பா அம்மாவிடம் பணிந்திருக்கிறார். “நான் கல்யாணமாகிப் போயிட்டா இவங்களுக்கும் ஒருவேலை முடியும்,”என்று அடிக்கடி நினைத்துக் கொள்வாள்.

மாடியில் அமர்ந்து வாட்ஸ்அப் பார்த்துக்கொண்டிருக்கையில் கார் சத்தம் கேட்டது.வயிற்றில் கொஞ்சமாய் ஆசிட் சுரந்து நின்றது.எந்தவடிவம் எந்த வாகனத்தில் வந்திருக்கிறதோ? கண்முன்னால் பாடப்புத்தகங்கள் இருந்த இடங்கள் ஒழிந்துக் கிடக்கின்றன.அவை மட்டுமே இருந்தஇடத்தில் என்னத்தை அடுக்குவது?

கீழே முற்றத்தில் குரல்கள் கேட்டன.

“எப்படி வீட்டைக் கண்டுபிடிச்சீங்க?”

“அதான் சாரதாஸ் ஜவுளி மாளிகைன்னு வீட்டுசுவரை அடச்சு எழுதியிருக்கே? அதத்தான் ஜெயா அடையாளமா சொன்னா,” என்று ஒருஆண்குரல் சிரித்தது.

“இங்கவந்த நேரத்துக்கு திருச்சியிலிருந்து திருவாரூர் போயிருக்கலாம்.பாலகிருஷ்ணம்பட்டின்னு போர்டை பாத்து திரும்பி ஸ்டியரிங்க நாலு ஒடி ஒடிக்கறத்துக்குள்ள ஊருகடைசிக்கு வந்தாச்சு,”என்றார்.

நடையில் சர்றென்று இரும்புநாற்காலியை இழுக்கும் சத்தம் காதைக் குடைந்தது.இந்தக் கதிருக்கு எடுத்து போடவே தெரியாது.

“சின்ன கிராமந்தானே,” அம்மாவின் குரலில் சன்னமாக காற்றடித்தது.

நடையில் பாய்விரிக்கும் சத்தம் நீண்டு படுத்தது.ஜன்னல்வழி எட்டிப்பார்த்தாள்.அப்பா முற்றத்துநிழலில் கடைக்குபோகும் வழியில் கைகளை மடியில் வைத்து நடையைப்பார்த்துக் கொண்டிருந்தார்.திருநீரு பாதி அழிந்திருந்த நெற்றி பக்கவாட்டில் தெரிந்தது.வேட்டிக்குக் கீழே கணுக்கால் முழி வீங்கியிருப்பது இங்கிருந்தே அவளுக்குத் தெரிகிறது. 


ஆறுமாதங்களுக்கு முன்பு சுகரை அதன் போக்கில் விட்டு ,இவர்போக்கில் நடக்கவும் போகாமல் உட்கார்ந்திருந்து ஒருகட்டத்தில் கோயிலில் போய் உட்கார்ந்து கொண்டு அவர் போக்கில்,

“தாயும் இலி ,தந்தை இலி;

தான் தனியன்;காணேடி…”

என்று முடித்து, “அடுத்தத சொல்லுடா சிவசாமி என்று சிலஆண்டுகளுக்கு முன்பு இறந்த அவரின் தோழரை அழைத்து பின் இவரே,

“தான்தனியன் ஆயிடினும்

காயில்உலகு அனைத்தும் கற்பொடிகாண்..” என்றும்

“ஊனாய் உயிராய் உணர்வாய்…”என்று அவர் சிறுவயதில் கற்ற அனைத்தையும் தினமும் கண்மூடி பாடிக் கொண்டிருந்தார். கேட்டவர்கள் , “மவளுக்கு கல்யாணம் முடிக்காம..பித்து பிடிச்சுபோச்சு,” என்றோ, “அந்தப்பிள்ள திமிருக்கு இவரு இப்படி ஆயிட்டாரே,”என்றும் பேசிக் கொண்டேயிருக்கிறார்கள்.

கடையைத்தாண்டி செல்பவர்களிடம், “ கடன்பாக்கிவரல,வாங்குன காசுக்கு நெல்லுவரல,” என்று நாற்பதுஆண்டுகளுக்கு முந்தைய கணக்கில் இருந்தார்.

அம்மா எடுத்த ருத்ரரூபத்தில் அடங்கி மருத்துவரிடம் மாற்றி மாற்றி காண்பித்து கடைசியில் மூளைக்கு செல்லும் குழாயில் அடைப்புக்கு மருந்துமாத்திரை சாப்பிட்டு கொஞ்ச ,கொஞ்சமாக தன் கணக்குவழக்கிற்கு வந்தமர்ந்து பேசாமலிருக்கிறார்.

பழைய சிவனே என்கிற அவரின் ஓசையில்லாத இருப்பும், அவர் இயல்புக்கு வந்திருக்கிறது.என்றாலும் இடையில் வந்த பித்தன் என்ற பெயர் மாறவில்லை.

“நான் கார்த்திய கூட்டிக்கிட்டு வரேன்,”என்ற குரல் அவளைக் கலைத்தது.ஜெயாஅக்காவின் குரல்.எப்போது வந்தாள்?

“சேலக்கட்டக் கூடாது? என்ன பொண்ணோ! கொஞ்சமும் பொருப்பில்லாம.சரி..சரி வா.நல்லாதான் இருக்க.ஆள் மெலிஞ்சிருக்கவும் அப்படியே இருக்க.உன்வயசில நான் ரெண்டுமடங்கு இருந்தேன்,”என்றவளுடன் நடந்தாள்.கதிர் அப்பாவுக்கு மிக்ஸர்தட்டைக் கொடுத்துக் கொண்டிருந்தான்.கார்த்திகாவை பார்த்ததும் கூடவே வந்தான்.

அத்தனைக் கண்களையும் ஒரே நேரத்தில் பார்க்கமுடியாமல் ஒவ்வொருவராக தாவிக் கொண்டிருந்தாள்.ஏழுஆட்கள்.அந்த மென்பச்சை சட்டை மாப்பிள்ளை.நிழலிலேயே இருக்கும் மினுமினுப்பு தெரிந்தது.கொஞ்சம் உருளையான சிவந்தவன்.

சட்டென்று வந்த புன்னகையை மறைக்க கைகளைக் கூப்பியதும் அம்மா , “பாயில உட்காரு கார்த்தி,”என்றாள்.இப்போது மட்டும் எங்கிருந்து வருமோ இந்தக் குரல்.பொத்திஎடுத்து கைகளுக்குள் வைத்துக் கொள்ளும் குரல்.

“என்னம்மா படிச்சிருக்க,”

“எம்.எஸ்.ஸி,”

“எங்க வேல”

“வாண்டையார் இருப்பு,”

“ம் ….”குரலிலேயே தனக்கு வேலையெல்லாம் பெரியவிஷயமல்ல என்பதை அழகாக சொல்லத் தெரிந்திருக்கிறாள்.

“ஊரு எப்படிம்மா….” என்ற ஆண்குரல்.பிள்ளையின் அப்பா.

“நல்ல மரியாதயான மனுசங்க..”

“நம்ம இப்படித்தான்னு தெரிய வச்சுட்டா எங்கயும் நல்ல மனுசங்கதான்,”என்றார் இன்னொரு பெரியவர். 

“இந்த மாதிரி வீடெல்லாம் இப்ப இல்ல,”

அப்பா,“ஆமாங்க…அப்பா காலத்தில சுதந்திரம் கெடச்சபுதுசில கட்டினது,”என்றார்.அனைவரும் அப்பாவை ஏறஇறங்கப் பார்த்தார்கள். 

அம்மா, “ஆமா அப்பதாங்க..”என்று முடித்தாள்.

பிள்ளையின் அப்பா,“ரெண்டு பசங்க.திருச்சியில ரெண்டு கடை இருக்கு.வெளிய தோப்பு ,நிலம் உண்டு.பொண்ணு வேலக்கு போகனுன்னு இல்ல.வீட்லயே சரியாயிருக்கும்.மூத்த மருமக இருக்கா.வீட்டுவேலைக்கு வேற ஆள் இருக்கு,”என்றார்.

அந்தஅம்மா, “இருந்தாலும் விசேசம்,போக்குவரத்துன்னு வாரத்தில நாலுநாள் போகவண்டியிருக்கும்…அதில்லாம வீட்டுக்கு வர்ற பொண்ணு மாகலட்சுமில்லீங்களா? எதுக்கு வெளிய போய்க்கிட்டு,”என்றாள். 

பெரியவர் மணிக்கட்டிலிருந்த கடிகாரத்தைத் திருப்பினார்.சந்தன சட்டையில் நல்ல தொப்பையுடன் நாற்காலியில் அசௌகரியமாக அமர்ந்திருப்பது அவரின் அசைவுகளிலேயே தெரிந்தது.

ஜெயா அக்கா அம்மாவைப் பார்த்து,“பையனுக்கு நான் பொறுப்பு சித்தி.பழக்கவழக்கமெல்லாம் தெரியும்,”என்றாள்.அங்கு இங்குத் தாவி பின் நாட்டு நடைமுறையைப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

இடதுபக்கத்திலிருந்தவள், “தம்பி உங்க போட்டாவை சுயம்வர மேளாவில பாத்ததும்…இந்தப் பொண்ணை பாக்கலாமா அண்ணின்னார்,”என்று கார்த்திகாவிடம்  கிசுகிசுத்தாள்.அவளிடம் என்ன முகபாவம் காண்பிப்பது என்று தெரியாமல் கார்த்திகா விழித்தாள்.

“வீட்லயே இருக்கனுன்னு நினைக்க வேணாம்.நானிருக்கேன்,”என்றாள்.

அந்தஅம்மாள்,“பெரியவங்க பேசிக்கிட்டு இருக்காங்கல்லம்மா,”என்றாள்.

“சரிங்கத்த,”என்றவளின் முகம் கூம்பியது.நீண்டமூக்கின் வைரமூக்குத்தியின் ஔியைவிட இவள் மெல்லிய எண்ணெய் படர்ந்த முகத்தில் ஔிகூடியிருந்தாள்.செப்புஉதடுகள் என்ற பாடல்வரிகளுக்குப் பொருத்தமானவள்.

“நீங்க எங்க படிச்சீங்க,”என்று மிகமெதுவாக அவளின் காதருகில் கார்த்திகா கேட்டாள்.

“சீதாலட்சுமிராமசாமி.யூ.ஜி முடிக்கறப்ப இதுங்க கண்ணில பட்டுட்டேன்,”என்று உதட்டைப் பிதுக்கினாள்.

“பின்ன என்னங்க ஜாதகம் பொருந்தவும்தான் வந்தோம்.ஜாதகத்தாலதான் தம்பிக்கு இத்தன தாமதம்,” என்ற அந்த அம்மாவின் குரலால் நகர்ந்து அமர்ந்தோம்.

பிள்ளையின் அப்பா,“பேசிட்டு சொல்லுங்க.எப்படியும் நீங்களும் யோசிச்சிருப்பீங்க.விசாரிச்சிருப்பீங்க.பிள்ளைங்களுக்கு பிடிச்சிருந்தா எவ்வளவு சீக்கிரமா அவ்வளவு நல்லது.முப்பது வயசுக்கு மேல நிக்கிறாங்க,”என்றார்.

“நான் மூணுவருசமா கிளாஸ்,எக்ஸாம்ஸ்ன்னு கஷ்டப்பட்டு இப்பதான் ஆறுமாசமாதாங்க வேலைக்கு போறேன்,” என்ற கார்த்திகாவின் குரலால் அவர் முகம்மாறியது.

“அதனால என்னம்மா? பணத்துக்காகதானே.ஒரு பாதுகாப்புக்குத்தானே.அதுக்கு நம்மவீட்ல எந்தக் குறையும் இல்ல.சிவனேன்னு இருக்கலாம்.கார்ல போயிட்டு காரில வரலாம்”

“இல்ல…வேலக்கு போறது ஒண்ணும் சிரமமில்ல.மத்ததையும் மேனேஜ் பண்ணிப்பேன்.இப்ப ஜீனியர் அஸிஸ்டெண்ட் எக்ஸாம் கிளியர் பண்ணி வெரிபிகேசன் முடிச்சாச்சு.வேணுண்னா ஸ்ரீரங்கம்.. திருச்சி பக்கத்தில வர முடியும்,”

அவர்கள் பேசத்துவங்கினார்கள்.

அழைத்துக் கொண்டே இருந்த கார்த்திகாவின் அலைபேசியை தம்பி கொண்டு வந்து கொடுத்தான். அவள்  எழுந்து சமையலறைவாசலில் நின்றாள்.

“சரிங்க.நாளைக்கு ஆபிசுக்கு வாங்க”

“….”

“சொன்னா சொன்னதுதாங்க.அடுத்தவங்க மனசையும் பாருங்க.உங்களமாதிரி தானே அவங்களும்.... அந்த நிலத்தில ஜம்பதுவருஷமா விவசாயம் பண்றாங்க.சரிங்க….நாளைக்கு ஆபிஸ்ல பாக்கலாம்,”என்றாள்.

கார்த்திகாவின் குரலால் சபை அமைதியாகி அவளைப் பார்த்தது. அவர்கள் வீட்டு மூத்த மருமகளின் மைவழிகள்  விரிந்தது. அது மனதில் மறுபடியும் வருகிறது.உருண்ட மிரளும் விழிகள்.

அவர்கள் கிளம்பினார்கள்.அம்மா மதியஉணவுக்காக உள்ளே சென்றாள்.அப்பா கடைக்கு,இவன் பைக்கை எடுக்கும் சத்தம் கேட்டது.உள்ளிருந்துஅம்மாவும்,வெளியிலிருந்து ஜெயாஅக்காவும் பேசினார்கள்.அவள் மறுக்கப் போவது அனைவருக்கும் புரிந்திருந்தது.

ஜெயாஅக்கா,“உன்னால மனம்கலங்கிப்போறாரு அப்பா.அப்படி என்னத் திமிர்.இவ்வளவு நல்ல மனுசங்க.ஏழுதலமுறைக்கு குந்தித் திங்கலாம்,”என்றாள்.

“எவ்வளவு பிள்ளங்க படிச்சுவீட்ல இருக்காங்க.வீட்ல இருக்கற பிள்ளைகளுக்கா குறைச்சல்,” என்றாள் கார்த்திகா. 

“உன்னய பிடிச்சிருக்கு.இத்தன வயசுக்கு மேல இப்படி ஒருசம்மந்தம்!”

உள்ளிருந்து அம்மா, “கார்த்தி…கிருஷ்ணாபஸ்லயா கிளம்பற? முன்ன பின்ன இருக்காத.சரியா வந்திருவான்.சாப்பாடு என்ன வேணும்?” என்றாள்.

வெளியே வந்து, “ஜெயா…அவங்ககிட்ட நான் பதில் சொல்றேன்,”என்றாள்.அக்கா தலையாட்டியபடி திரும்பி நடந்தாள்.அம்மா, “காலையில இருந்து யாரோ போன் பண்ணிக்கிட்டே இருந்தாங்களே,”என்றாள்.

“ம்,” என்று மட்டும் கார்த்திகா சொன்னாள்.

கார்த்திகாவின் உயர்படிப்பால் உடைந்தது இவர்களின்  கூட்டுக்குடும்பம்.அம்மா படிக்க வைக்க ஆசைப்பட குடும்பம் திருமணம் செய்து கடனைமுடிக்க காத்திருந்தது.இத்தனை ஆட்கள் இருக்கற வீட்ல ஒருப்பிள்ளை படிப்புக்கு இவ்வளவு செலவு தாங்காது என்று சித்தப்பா கூறியதும் அவரவர் வாழ்க்கை அவரவர் குடும்பம் என்றானது.


கடையிலிருந்து அப்பாவின்,

“பித்த னென்றனை உலகவர் பகர்வதோர்

காரணம் இதுகேளீர்…”குரலைக் கேட்டது.இந்தப்பாட்டெல்லாம் சிலநேரம் தனக்குன்னு அவளுக்குத் தோணும்.முற்றத்திலிருந்த கல்தொட்டி நீரைஎடுத்து முகத்தைக் கழுவினாள்.நேற்று வாண்டயார் இருப்பின் ஆற்றுப்பாலம் விரிசல் கண்டதை பார்க்க சென்றபோது முள்செடி முகத்தில்பட்டு கீறலாக்கியது. தண்ணீர் பட்டதும் அது சுள்ளென்று எரிந்தது.கண்களை இறுக மூடிக்கொண்டாள்.

“கார்த்தி….கார்த்தி…”கடையிலிருந்து அப்பாவின் குரல்.பேரீச்சபழத்தை எடுத்துவைத்திருப்பார்.

“என்னப்பா..?”என்றதும் பொட்டலத்தைக் கொடுத்தார்.

கடையில் அமர்ந்திருந்த சங்கர் அண்ணா, “சாயங்காலம் கெளம்பணுமாடா,”என்றார்.தலையாட்டினாள்.

அப்பா சங்கர் அண்ணா பக்கம் திரும்பி பேசத் தொடங்கினார்.

“இங்கபாருய்யா…கையில இருப்பில்லாம எதுலேயும் முழுமுதலையும் போடக்கூடாது,”

சங்கர் அண்ணா,“இல்லப்பா…துணிஞ்சு வாங்கியிருந்தா இப்ப கொள்ளை  லாபம்,”என்றார்.

“எதுக்கு இல்லாத லாபத்துக்கு தவிக்கற.வியாபாரத்தில இன்னும் அடிவாங்கல…அதான்.மனசு அப்படித்தான் நீயா நிறுத்தாத வரைக்கும்.போய்யா…எங்கயாச்சும் வெளிய போயிட்டு வா…..”என்றார்.

அவள் முற்றத்தில் இறங்கி மாடிப்படிகளில் ஏறினாள்.மேலிருந்து எட்டிப்பார்த்தாள்.சங்கர் அண்ணா சைக்கிளை எடுத்தார்.அப்பா இவரிடம் மட்டும் நீண்டநேரம் பேசுவதும்,அண்ணன் இவரிடம் வருவதும்  புதிர்தான்.சங்கர் அண்ணா முகத்திலிருந்த புன்னகை கார்த்திகாவிடமும் வந்தது. எடுத்து செல்லவேண்டிய பையில் பொருட்களை அடுக்கத் தொடங்கினாள்.

அவளுக்கு மனம் லேசாகி காற்றில் எழும்பிப் பறப்பது போல இருந்தது.அவளின் உள்மனம் அவனைப் பார்த்தவுடன் சொல்லிவிட்டது.அதை ஏமாற்ற அவளே முயன்றும் முடியவில்லை. ஜன்னலின் வழியே தொடுவதற்கு மென்மையாக,அடர் வண்ணத்தில் இருந்த கொன்றைப் பூக்கள் தெரிந்தது.கிருஷ்ணா நேரத்துக்கு வந்துவிடுவான் என்ற நினைப்பு வந்ததும் எழுந்து பையைத்தூக்கிக் கொண்டு,அப்பாவின் குரலை எதிர்பார்த்தபடி கீழிறங்கினாள்.பசிநேரம் கடந்திருந்ததால் அவளின் வயிற்றில் குத்தலெடுக்கத் தொடங்கியிருந்தது.




Comments

Popular posts from this blog

பசியற்ற வேட்டை

பெண் கல்வி,விடுதலை மற்றும் தன்னறம்

எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் நேர்காணல்