அன்பில் : சிறுகதை

       2019 ஏப்ரல் 10 பாதாகை இதழில் வெளியான  சிறுகதை         

அன்பில்

தோட்டத்தில் மாமரத்தின் அடியில் சருகுகளை குவித்து நிமிர்ந்து, இடையில் கைவைத்து நின்ற சுந்தரவள்ளியம்மா, வீட்டிற்கு பின்புறம் பப்பாளியின் உள்சிவப்பில் எழும் ஆதவனை கண்டது கண்கள் கூச பார்வையைத் தாழ்த்தினார். சுற்றுத்தடுப்புக்கு வெளியே கண்முன் விரிந்த நிலத்தைப் பார்த்தார். சற்று மூச்சுவாங்கியது.அவரது இடதுகை மாமரத்தின் கிளையை தடவியபடி இருந்தது.

இன்னிக்கே சங்கரனிடம் பேசியாக வேண்டுமா? என்று தோன்றியது. இப்படித்தோன்றி ஒருவாரமாக ,காலையில் மேலிருந்து கீழேவந்து கோலமிட்டு முடித்து நிற்பதும், சொல்லாமல் செல்வதுமாக இருக்கிறார். குத்துகள் மட்டும் சாம்பல் பூத்து நிற்கும் காய்ந்தவயல்களில் ,மேயும் மயில்களில் ஒன்றின் அகவல் கேட்டு இடையில் செருகியிருந்த சேலையை எடுத்துவிட்டு சரிசெய்து திரும்பினார்.

வயல்களுக்கு பின்னால் சாலையில் வடக்குநோக்கி சிறுகும்பலாக மக்கள் செல்வது தெரிந்தது. சமயபுரத்திற்கு போகிறார்கள் என்று தோன்றியதும் புன்னகைத்தார். இந்தா இன்னும் செத்தநேரம் திருச்சியின் நம்பர்ஒன் டோல்கேட் என்று அவர்களுக்கு தெரியுமா? தெரிந்திருக்கும். இதோ வந்துட்டோம்மா என்று மனசுக்குள் நினைக்காமலா இருப்பார்கள் என்று நினைத்தபடி மேற்குபக்கம்  திரும்பி தெருவைப்பார்த்தார். 

காலை ஔியில் வீட்டுகேட்டிற்கு நேராக விரிந்த பாதையின் முடிவில் சங்கரன் நாய்கள் சூழ நின்றிருப்பது தெரிந்தது. அதைக்கண்டதும் சுந்தரவள்ளி சங்கரனிடம் இன்று சொல்லிவிடவேண்டும் என்று தன்னை உறுதிப்படுத்திக் கொண்டார்.

சருகுகளை அள்ளி மூலையில் குவித்தபடி சங்கரன் கேட்திறக்கும் ஓசைக்காகக் காத்திருந்தார். அவர் வெளியே நாய்களுக்கு ரொட்டிகள் போட்டுக்கொண்டிருக்கிறார் என்பது நாய்களின் பவ்பவ்வ் என்ற குழைந்து தாழ்ந்த குரலால் தெரிந்தது. அவர் உள்ளேவந்து செருப்பை சுழற்றிக்கொண்டிருக்கையில் , “நில்லுங்கய்யா,”என்ற சுந்தரவள்ளியம்மா விளக்குமாரை கீழே போட்டுவிட்டு சங்கரன் அருகில் வந்தார்.



சங்கரன், “ஈரமா இருக்குல்ல மெதுவா வாங்கம்மா. சமயபுரத்துக்கு நடக்கற பொம்பளையாளுக என்னா வேகங்கறீங்க..நம்மளால போட்டி போட முடியாதும்மா. காலையில இருந்து கும்பல்கும்பலா எத்தனை ஆட்கள்,”என்றார். இந்தமனிதனிடம் எப்படி வீட்டைக்காலி பண்ண சொல்வது என்று சுந்தரவள்ளியம்மாவிற்கு மனதிற்குள் ஓடியது.

“ஆமாங்க.இனிமே அம்மாவுக்கு பூபோடுவாங்க. இப்படித்தான் வருவாங்க. உங்களுக்கு இந்தஎடம் புதுசுல்ல…அப்பறம் கொஞ்சநாளாவே சொல்லனுன்னு இருந்தேன்….”என்றபடி சேலைமுந்தானையால் முகத்தைத் துடைத்தார்.

“என்னம்மா…”

“வீட்டக்காலி பண்ணமுடியுங்களா?”

“ஏம்மா திடீர்ன்னு இப்படி சொல்றீங்களே…”என்று கண்களை விரித்துப் பார்த்தார்.

அவரின் கண்களைப் பார்க்காமல் அவருக்குப் பின்னாலிருந்த புங்கைக்கன்றைப் பார்த்தபடி“இல்ல…மூணுமாசம் அவகாசம் எடுத்துக்கங்க..”என்றார்.

“நீங்களும் ரிடையர்டு கப்பில்ஸ் தானே..திருச்சிக்கு வெளிய அமைதியா இந்த வீட்டப்பிடிக்க நாங்க பட்ட சிரமம் உங்களுக்கே தெரியுங்களே!”

அவரிடம் என்ன சொல்வது அவர் என்று தயங்கிக் கொண்டிக்கையில் சுந்தரவள்ளியம்மாவின் துணைவர் மேலிருந்து இறங்கி படிகளில் நின்றபடி, “குட் மார்னிங் சார்,”என்றார்.

“எனக்கு குட்மார்னிங் இல்லையே சார்,”

பத்மநாபன்,“வீடு காலிபண்றதுபத்தி பேசறீங்களா?”என்று உடனே நேரடியாகக் கேட்டார்.

“ஆமா…என்ன திடீர்ன்னு….”

“சார்..உங்கக்கிட்ட மறைக்க ஒன்னுமில்ல. நீங்க இப்படி வெளிய போகவரப்ப…வீட்டுக்கு முன்னாடி நாய்களுக்கு தீனி வைக்கறதால நாய்ங்க இங்கயே சுத்தி வருது.நெறய பேர் கம்ப்லெய்ண்ட் பண்றாங்க.சின்ன பிள்ளங்க பயப்படுதுக,”

“இதுவரைக்கும் ஒருநாயும் ஒன்னும் பண்ணலையேங்க..”

“சார்…உங்களுக்கே தெரியும். நாய் எப்ப என்ன பண்ணுன்னு. எதாவதுன்னா நீங்கதான் ஹவுஸ்ஓனர்.. பதில் சொல்லனுன்னு மூணாவதுவீட்டு எஸ்.ஐ வேகமா சொல்றார்..”

மூவரும் எதுவும் பேசாமல் கொஞ்சம் நேரம் நின்றார்கள். பத்மநாபன் அந்த இடத்திலிருந்து நகர்ந்து,“நாய்ங்க சத்தம் நிம்மதியா இருக்க விடுதில்ல சார்…”என்றபடி மோட்டாரை தட்டிவிட்டு செடிகளுக்கு தண்ணீர் விட சென்றார்.

சுந்தரவள்ளியம்மா மெதுவாக படிகளில் ஏறத்தொடங்கினார்.

பத்மநாபன் ஒவ்வொரு செடியாக மரமாக தொட்டபடி தண்ணீர் விடத்தொடங்கினார். சங்கரன் உள்ளே சென்று சிறிது நேரத்திற்கு பிறகு ,தனம்மா வெளியே வந்து, “ வீடுகாலிபண்ண சொன்னீங்களாமே,”என்றார்.

“எங்களுக்கும் சங்கடம் தான்.அவர இந்தநாய்களுக்கு தீனி போடற பழக்கத்த விட சொல்லுங்க.அதான் பிரச்சனையே..”

“இதுக்காக வீடுமாறிக்கிட்டே இருக்கோம்…சொன்னா கேட்டாதானே..இந்த முடியாத ஒடம்ப வச்சிகிட்டு வீடுமாத்தறது ரொம்ப கஷ்ட்டமா இருக்குங்க..சொன்னா கேட்காத ஜென்மம்..”என்று படிகளில் அமர்ந்தார்.

அடுத்து இரண்டுநாட்களில் வீட்டின் முன்பு நாய்களின்சத்தம் கேட்கவில்லை.மீண்டும் அந்தமுடக்கில் அவர் நாய்கள் சூழ நின்றுகொண்டிருந்தார்.அன்று அவர் மனைவி வீட்டிலிருந்த பிரட்,பிஸ்கெட் பைகளை எடுத்து வெளியில் வீசி கதவை மூடினார்.

அன்று இரவில் நாய்களின் சத்தம் குழைவான குரலைக் கேட்டு எழுந்த  சுந்தரவள்ளியம்மா கழிவறைக்கு சென்றபின் வெளியில் எட்டிப்பார்த்தார். சங்கரன் தெருவிளக்கின் அடியில் நின்று சுற்றும் முற்றும் பார்த்தபடி நாய்களுக்கு ரொட்டிகளைப் போட்டுக்கொண்டிருந்தார்.

ஒரு பெண்நாய் அனேகஇடங்களில் கடிவாங்கிய அடையாளம் தெரிந்தது.அது ஒருகாலைத்தூக்கி அவரின் தொடைமேல் வைத்து அழைத்தது.அவர் திரும்பி அதற்கு ரொட்டியை நீட்டினார்.அவர் சிரித்தபடி அதன் தலையில் தட்டினார்.ஒருவாலறுந்த சிறுவன் முன்பின் தெரியாமல் சற்றுதூரம் ஓடியும் ,அருகில் வந்தும் காலை முகர்ந்தும் அழிச்சியாட்டியம் செய்து கொண்டிருந்தான்.அவர் அதன் கழுத்தைப்பிடித்து தூக்கிப்பார்த்து சிரித்தார்.அது உடலை வளைத்து நான்குகால்களையும் வாலையும் உள்ளிழுத்துக்கொள்வது, சட்டென்று மகளின் ஸ்கேனில் பார்த்த குழந்தையை போலத் தெரியவும் சுந்தரவள்ளியம்மாவின் நெஞ்சு படபடவென்று அடித்துக்கொண்டது.  ஜன்னலை சாத்திவிட்டு சுவரில் சாய்ந்து நின்றார்.

காலையில் எழுந்ததும் பத்மநாபனிடம், “ஏங்க..இது பாவமில்லயா? அவரு என்ன தப்புப் பண்ணிட்டார்ன்னு வீட்டக்காலி பண்ணனும்.நல்ல மனுசங்க..”என்றார்.

“பாவமும் இல்ல…மண்ணாங்கட்டியுமில்ல.அந்த எஸ்.ஐ எப்படி மிரட்றாப்ல பேசறார் தெரியுமா?”

“நாம என்னத்துக்கு அவருக்கு பயப்படனும்..அவருக்கு நாய்ன்னா ஆகாதோ …என்னவோ..”என்று எழுந்து கீழே வந்தார்.

 கோலமிட்டப்பின் மோட்டார் சாவியைத்தேடுகையில் சுற்றுசுவரின் சிறுபொந்தில் ஒரு ரொட்டிப்பை தட்டுப்பட்டது.சுந்தரவள்ளியம்மா திரும்பி மேலும் கீழும் பார்த்துவிட்டு சற்று உள்ளே தள்ளி வைத்தார்.நிமிரும் போது மீட்டர் பெட்டி மேல் ஒரு ரொட்டிப்பை கண்ணில்பட்டது.அதன் அருகில் செல்லும் போது பத்மநாபன் மாடியிலிருந்து இறங்கும் ஓசைக்கேட்கவும் திரும்பி, தண்ணீர் குழாயின் அருகில் சென்றார்.

இதென்ன கூத்து  என்று அவருக்கு எரிச்சலாக வந்தது.உள்ளுக்குள் ஒருபயம்.இன்னும் எங்கெங்கு ரொட்டிப்பைகள் கிடக்குமோ என்று.

அதை இவரிடம் சொல்லி விடலாம் என்று தோன்றும் கணம் ஒரு மெல்லிய பூஇறகு ஒன்று சுந்தரவள்ளியம்மாவின் மனதை மறைத்தது.அடுத்துவந்த நாட்களில் இரவில் நாய்களின் குறைப்புகள் அதிகமாக கேட்டு தூக்கத்தை கெடுத்தது.சிலஆட்கள் வீட்டிற்கு வந்து சொல்லிவிட்டுப்போனார்கள்.

சங்கரன் வீட்டிற்குள் சத்தம் கேட்டுக்கொண்டிப்பதை மேல்மாடியில் இருக்கும் இவர்கள் கேட்டபடியிருந்தார்கள்.

மஞ்சு,“வாடகைக்கு விடறப்பவே யோசிச்சிருக்கனும் மாமா..”என்றாள்.

“வயசானவங்க என்ன பிரச்சனை வரப்போகுதுன்னு விட்டாச்சு,”

“நான் சொல்லியிருந்த என்ஞ்ஜினியர வேணுன்னா இங்க குடிவைக்கலாம் மாமா..நமக்கும் நல்லது.தோட்டத்து மரங்கள வெட்டிட்டு சீக்கிரம் ஆகவேண்டியத பாத்தா நல்லதுன்னு அவரும் சொல்றார்.வீட்டக்கட்டி வாடகைக்கு விட்டா..வீடுகட்ற வேலையும் முடியும் .வருமானமும் வந்தமாதிரி இருக்கும்,”

“அதுக்குள்ள என்னம்மா? இந்தவீடுகட்டி ஐஞ்சுவருஷம்தான் ஆவுது.மரங்க செடிங்க இருந்தா நல்லதுதானம்மா.அந்த சின்னஎடத்தையும் அடைக்கனுமா?”

கீழே தனம்மாவின் குரல் வேகமாகக் கேட்டது.

“தினமும் ஓயாம எதாச்சும் சலசலன்னு… அவங்க நெனக்கறபடி இருக்கனுன்னா அவங்க வீட்ல இருக்கனுங்கத்த,இதெல்லாம் தேவையா..சீக்கிரம் வெரட்டனும்.நாசூக்கா அவங்களே காலிபண்றது நல்லது”

“அந்தம்மாவுக்கு சுத்தமா நாய்கள கண்டா ஆகாது..இவரு இப்படி.என்ன மஞ்சு பண்றது..சிலபேருக்கு சொன்னாதான் புரியுது”என்றபடி சுந்தரவள்ளியம்மா பெருமூச்சுவிட்டார்.

பத்மநாபன்,“இங்கபாரு சுந்தரம்..தனம்மாக்கிட்ட கண்டிப்பா சொல்லிடு.இவரு சரிப்பட்டு வரமாட்டார்.நமக்கு தொல்ல..இதென்ன மனுசன்.அந்த மாமரத்து கொப்புக்கு நடுவுல பிரட் பாக்கெட் இருக்கு.ஒரே எறும்பு வேற...அதுகளுக்கும் ஒருபிரட்டை வச்சிட்டு போறார்,”என்றார்.

சுந்தரவள்ளியம்மா பேசவில்லை.

நாளைக்கு காலி பண்றோம் என்று சங்கரன் சொல்லும் நேரம் இருவருக்கும் அவர் முகத்தைப்பார்க்க சங்கடமாக இருந்தது.

அன்றும் பின்னிரவில் நாய்களின் குரல் சுந்தரவள்ளியம்மாவை எழுப்பியது.படுக்கையிருந்து எழுந்து நாற்காலியில் அமர்ந்தார்.அவருக்கு சிலஆண்டுகளுக்கு முன் இங்கு வீடுகட்டி வந்த நாட்கள் நினைவில் எழுந்தன.மகளுக்கும் மகனுக்கும் திருமணமாகி அனுப்பி “அப்பாடா,” என்று நிம்மதியாய் அன்பிலில் அமர்ந்த நாட்கள் அவை.இவர்கள் இருவரும் மீண்டும் பேசிக்கொள்ளத் தொடங்கியநாட்கள்.பத்மநாபன் பேருந்திலிருந்து இறங்கி வந்துவாசலில் அமரும் அந்திப்பொழுதில் நெடுநேரம்  பேசிக்கொண்டிருப்பார்கள்.

அன்றுகாலையில் வேலையிலிருந்து வந்தவர் வாசலில் கிடந்த கயிற்றுக்கட்டிலில் அமர்ந்து கோலமிடும் சுந்தரவள்ளியிடம் பேசத்தொடங்கினார்.

“இத்தன வருஷமா இந்தப்பேச்ச மறந்திருதீங்களே..”

“மறக்கல சுந்தரம்.என்னமோ ஒரு அலைச்சல் மனசில.நாங்கூட வேல டென்சன்னு நெனச்சிருந்தேன்.இப்பவும் அதே வேல தான்.ஆனாபாரு…பாரமா தெரியல.மனசுபாரத்தை எல்லாத்தையும் ஏத்தி வேலமேல வைச்சு இப்ப எறக்கியாச்சு,”என்று சிரித்தார்.

சுந்தரவள்ளி தேநீர் கொண்டுவந்து கொடுத்துவிட்டு கோழிகளை கூண்டுகளில் இருந்து திறந்துவிடவும் ,பத்மநாபன் வந்து தண்ணீர் குழாயை திறந்துவிட்டு தீனிகளை எடுத்து கலன்களில் இட்டார்.

சுந்தரவள்ளி சிரித்தபடி, “போதும் வாங்க..நாமளும் டீ குடிக்கலாம்.,”என்றார்.

“அந்த ப்ரவுன் கோழியும் அதோட குலவான்களும் நல்லா இருக்குல்ல..”

சுந்தரவள்ளி,“ம்..இதெல்லாம் பாப்பீங்களா! எங்கம்மா குடுத்துவிட்ட கோழி  சேவன்னு தானே கண்டுக்காம இருந்தீங்க,”என்று புருவதை சுளித்தார்.

“ஆமா…யாருபுள்ள நீ. நீயும் ஒந்நெனப்பும்.அந்தம்மா செத்து பத்துவருசமாவுது.நம்ம கல்யாணத்து சமயத்துல கொடுத்த ரெண்டுஉருப்படிதானே? இப்ப ஐம்பது நூறா நிக்கிதுங்க...இதுகள பாக்கையில சந்தோசமா இருக்கும்.பஞ்சுருண்டையாட்டம்..இக்குணூண்டு கண்..துள்ளியூண்டு காலு..யாருக்குதான் பிடிக்காது..எதையும் சொல்லிக்கறதில்ல”

வாழ்வில் இப்படி சாவகாசமாக நிமிர்ந்து சாய்ந்தமர்வதற்குள், பாப்பாவின் பிள்ளைப்பேறு, மருமகளின் பிள்ளைப்பேறு என்று மீண்டும் திருச்சிக்கும், பெங்களூருக்கும் ஓடிக்களைத்தநாட்களில் அவரும் ஓய்வுபெற்று வீட்டில் அமர்ந்தார்.

தன்ராஜ்,“சும்மா இங்க இருக்கறதுக்கு திருச்சியில் வீட்டக் கட்டி அங்க இருங்க.நான் வெளிநாடு போயி நாலுகாசு பாத்துட்டு வர்றேன்.இந்த சனியன்கள தலமுழுகுங்க.நாத்தம் தாங்கலன்னு எத்தனமட்டம் சொன்னாலும் கேக்கறதில்ல.கோழிப்பண்ண உங்கக்கிட்ட தோத்துப்போவும்.யாரையாச்சும் கூட்டிக்கிட்டு வரமுடியுதா..”என்றான்.அவன் கால்களுக்கிடையில் ஒரு கோழிக்குஞ்சு குடுகுடு வென்று ஓடி தாயுடன் சேர்ந்துகொண்டது.

“இந்தவீட்டுக்கென்னடா…இதுங்கபாட்டுக்கு வெளியிலதானே திரியுதுங்க..முட்டைய முழுங்கையில நாத்தம் தெரியலயா? ஏன் உங்கூட வாரவுங்க திங்கமாட்டாங்களா?”

“நான் பேசறதுதான் பேச்சுன்னு பேசக்கூடாது.காலத்துக்கு தக்கன மாறலன்னா என்ன மனுஷங்க..”

“நீ மாறிக்க..நாங்கமாறி என்ன பண்ணப்போறாம்.மனகலக்கந்தான் மிச்சமாவும்.ஒரு ஈ எறும்பு ஆகாத பொழப்பு..”

“சும்மா வெறும்பேச்சு வேணாம்.ரெண்டுபேரும் சுயநலமாக இருக்காதீங்க…”

“….!” பத்மநாபன் கண்களால் சுந்தரவள்ளியை பேசவேண்டாமென்றார்.

பத்துநாளைக்குள் அன்பிலில் அனைத்தையும் முடித்து திருச்சிக்கு மாற சொல்லி தன்ராஜ் ஆணையிட்டுவிட்டு சென்றான்.என்ன தான் அவசரம்..மனுசர் என்ன ஒன்னுமில்லாத கல்லா என்று மனசுதாங்காமல் முதலில் கோழிகளை விற்க ஆட்களுக்கு சொல்லிவிட்டார்கள்.

வண்டியிலேற்றி கொண்டு சென்றபின் உதிர்ந்து கிடந்த வெள்ளை, அழுக்குவெள்ளை, பழுப்பு, கருப்பு ,காப்பிவண்ண சிறுஇறகுகள் மேலும் குறு இறகுகளை குமித்துவிட்டு அமர்ந்த சுந்தர வள்ளியிடம் பணத்தைக்கொடுத்த பத்மநாபன், “என்னைக்கிருந்தாலும் காசுக்குக் கொடுக்கறதுதானே..விடு,”என்றார்.

ஆமாம் என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டாலும் நெடுநாட்கள் மனதில் உறுத்திக் கொண்டேயிருந்ததை நினைத்தபடி சுந்தரவள்ளியம்மா எழுந்து ஜன்னல் பக்கம் சென்றார்.

சங்கரன் சிமெண்ட் பாலக்கட்டையில் அமர்ந்திருந்தார்.பக்கத்தில் நாய்கள் அமைதியாகப் படுத்திருந்தன.ஒன்று எழுந்து நடந்தது.பெண்நாய் அவரின் கால்செருப்பில் முகம் வைத்துப்படுத்திருந்தது.குனிந்து அதைப்பார்த்தபடியிருந்தார்.சுந்தரவள்ளியம்மா திரும்பி கண்களை துடைத்தபடி படுக்கையில் படுத்து மின்விசிறியைப் பார்த்துக்கொண்டிருந்தார். 

சங்கரன் வீட்டைகாலி செய்து சென்று இரண்டுதினங்களாக நாய்கள் அங்கேயே சுற்றிக்கொண்டிருந்தன.கேட்டிற்கு அருகில் அச்சத்தோடு வருவதும் போவதுமாக பரிதவித்தன.இரவிலும் நாய்களின் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது.

நாட்கள் மசமசப்பாக கடந்துசென்றன.நாய்களின் கூட்டம் குறைந்தது அல்லது வெவவேறு பொழுதுகளில் வந்துசென்றன.

வீட்டின் முன் வந்து குறைத்த இரண்டுமூன்று நாய்களை பத்மநாபன் விரட்டினார்.சுந்தரவள்ளியம்மாள் தெருவைப் பார்ப்பதும்,ஜன்னல் அருகே நிற்பதுமாக பத்துநாட்கள் கடந்தன.

அன்று காலையில் கோலமிடுகையில் மிகஅருகில் வந்த அந்த தளர்ந்தநாயை கண்டு சுந்தரவள்ளியம்மா நெஞ்சில் கைவைத்து எழுந்தார்.பின்னால் ஒருசிறுவன்.ஒட்டிய வயிறு.மின்னும் கண்களுடன் வாலையாட்டிக்கொண்டிருந்தான்.

“வீட்ல குடிவச்சதுக்கு பாவி…படுபாவி என்னய இந்த இம்சைக்கு கொண்டுவந்து விட்டுட்டானே,”என்றபடி சுந்தரவள்ளியம்மா கதவை பிடித்துக்கொண்டு நின்றார். அவரிடம் பிஸ்கெட் பாக்கெட்டை கொடுத்த பத்மநாபன்,“என்ன நடந்தாலும் பாத்துக்கலாம்..சுந்தரம்.அன்பிலுக்கு போனதும் முதல்ல கோழி சேவலும் வாங்கனும்.அதுங்க காவலுக்கு இங்கருந்து ஒருநாய்க்குட்டிய தூக்கிட்டு போகனும்,”என்றார்.

அந்தஅம்மா அதை நெஞ்சோடு சேர்த்தபடி  தலையாட்டினார்.அவர் அந்தம்மாவின் தோள்களில் கைவைத்து, கண்களைத் தூக்கிக்காட்டி  நாய்கள் பக்கம் சுந்தரவள்ளியம்மாவை திருப்பினார்.



Comments

Popular posts from this blog

பசியற்ற வேட்டை

பெண் கல்வி,விடுதலை மற்றும் தன்னறம்

எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் நேர்காணல்