ஓயாஅலை

2018 ஆகஸ்ட் மாத பதாகை இணைய இதழில் வெளியான சிறுகதை.


ஓயாஅலை

பனி இன்னும் முழுமையாக விலகவில்லை.விடுதியில் பெரும்பாலும் அனைவரும் உறங்கிக் கொண்டிருக்க விஜி மதியை எழுப்பி, “நான் ஸ்கூலுக்கு போயிட்டு வரேங்க்கா,” என்றாள்.

“தேவையில்லாத வேல பாக்கற நீ.நீங்க  என்ன எல்லாத்தையும் புரட்டப்போறீங்களா? நீயும் அவன்களோட சேந்துக்கிட்டு,”

“இல்லக்கா.டீச்சிங் ப்ராக்டிஸ் முடிஞ்சி காலேஜ் போறதுக்குள்ள நாலு டெஸ்ட் வைக்கனுல்ல,”

“ஸ்கூல் நேரத்தில உங்களால மட்டும் கலட்ட முடியலயாக்கும்.போய்த் தொல,”

விஜி போர்வையை எடுத்து அவள்மீது மூடிய போது ,அவளைப்பார்த்து மதி, “வயலெட் வித் வொய்ட் சாரி அழகாயிருக்கு,” என்று கண்சிமிட்டினாள்.பொங்கலும், சாம்பார் வடையும் தின்றுவிட்டு அவள் முருகன் கோவிலில் அமர்ந்திருக்கையில் மணி ஒன்பது.

“ஏண்டிம்மா சனியன்னைக்குமா? மத்தவா எங்க?”

“அவங்க வேல முடிச்சிட்டாங்கய்யா.ஃப்ரண்டு வருவான்.எனக்கு ஸ்கூல் வேல முடியல” என்றவளுக்குத் தலையாட்டிவிட்டு பட்டர் படிகளில் அமர்ந்தார்.அவரின் சருகுகளின் அசைவுகள் போன்ற கசகசத்தக்குரலில்,

“நாணி இனியோர் கருமமில்லை

   நாலய லாரும் அறிந்தொழிந்தார்…..

……

நீரெனைக் காக்க வேண்டில்

ஆய்ப்பாடிக் கேஎன்னையுய்த் திடுமின்,” என்று பாடி நிறுத்தினார்.

“ச்..”

“என்னடிம்மா?”

“கவிதைன்னா பொய்யாவே தான் இருக்கனுமா?”

“லோகத்தில இல்லாததையா பாடிட்டேன்.மார்கழியானா வாயில தானா வர்றது.உனக்கு பாட்டு புரியறது அதான் என்னடான்னு இருக்கு.ஆனா உன்னால நடைமுறையில இதெல்லாம் நம்பறத்துக்கு முடியல்ல.சின்னவயசில இதில இருக்கற  ஏக்கம் மனசுக்கு பிடிக்கவும்....என் ஆசையில திரும்பத்திரும்ப ஆண்டாளை படிச்சேன்..அங்கபாரு உன் சகா,” என்றார்.

வெளியில் கையில் ஒருபுத்தகத்தோடு நின்ற மனோ கைக்காட்டினான்.கையில் திருநீருடன் ,வாயிலில் கையெழுத்து போட்டுவிட்டு வாயிலவரிடம் தலையாட்டி நடந்தாள்.

மனோவிடம் திருநீரை நீட்டினாள்.

“புதுசா என்ன?இதெல்லாம் இட்டுக்கறதில்லன்னு தெரியாதா…”

“ராகவ ஐயர் புத்ரனா நீர்?”

“காலையிலேயேவா?அங்கபாரு திருநீருக்கு ஆள் வருது,”என்று பேருந்திலிருந்து இறங்கிய பாலுவைக் காட்டினான்.

திருநீறை நெற்றியிலிட்டுக் கொண்டே பாலு, “சும்மா விளையாடிட்டு இருக்கக் கூடாது.நான் கணக்கு டெஸ்ட் முதல்லவைக்கறேன்.இரண்டாவது பிசிக்ஸ்,”என்றான்.

இவள்,“நான் என்ன ஏமாந்த ஆளா?” என்றாள்.

மனோ,“பயாலஜி தானே விஜி.பசங்க மதியம் கூட எழுதிடுவாங்க,” என்றான்.பள்ளியில் நுழைகையில் பிள்ளைகள் பேசிச்சிரித்தும்,ஓடிப்பிடித்தும் ஆடிக்கொண்டிருந்தனர்.

பாலு,“இந்த டெஸ்ட் அவங்களுக்கு ஒரு விளையாட்டு,”என்றான்.

“ஆமா பாலு.அதான் மதியக்கா நேத்தே வைக்க வேண்டியது தானே,படிச்சிட்டா வரப்போறாங்கன்னாங்க.அவங்க, இவங்க எல்லாம் சரிதான்.நாமதான் வீணா…”

“விடு விஜி.பிள்ளைகளுக்கு படிக்க நேரம்கொடுக்கனும்ல.நாம சரியாதான் பண்றோம்,”என்றான் பாலு.பிள்ளைகள் அனைவரும் வந்துசேர மேலும் அரைமணியாயிற்று.

விஜி பிள்ளைகளை மைதானத்தில் கட்டிடநிழல் பகுதியில் வரிசையாக அமரவைக்க மனோ பசங்களை மரநிழல்களில் அமர்த்திக் கொண்டிருந்தான்.பாலு வினாத்தாள்களை எடுத்து அமர்ந்திருந்த பிள்ளைகளிடம் கொடுத்துக் கொண்டிருந்தான்.

சிட்டுகளும் காக்கைகளும் எழுந்து பறந்து சத்தமிட்டுக் கொண்டேயிருந்தன.சிறிது நேரத்தில் மூவரும் நடக்கும் ஒலி மட்டும் கேட்கும் அமைதி.

விஜிதான் முதலில் அவள் இடப்பக்கமாக சரிவதைப் பார்த்தாள்.

“என்னாச்சு விமலா?”என்று ஓடியவளின் பின்னே பாலுவும் ,மனோவும் வேகமாக நடந்தார்கள்.

“விஜி பதறாத..காலயில சாப்பிடாம வந்திருக்கும்,”என்ற பாலு, விமலாவின் வாயில் நுரைவருவதைப் பார்த்ததும், “தள்ளு விஜி.யாராவது தண்ணி எடு,”என்று அவளைத் தூக்கி விஜிமீது சாய்த்தான்.கன்னத்தில் தட்டி நீர் தெளித்ததும் கண்களை மூடித்திறந்து பின் மூடிக்கொண்டாள்.

சூழ்ந்த பிள்ளைகளை மனோ கட்டுப்படுத்திக் கொண்டிருந்தான்.

பையன் ஒருவன்,“இங்க ஆட்டோ சீக்கிரம் கிடைக்காது சார்.பின் கேட் வழியா கவர்மெண்ட் ஹாஸ்பிட்டலுக்கு பத்து நிமிசத்துல போயிரலாம் சார்,”என்றான்.அதற்குள் விமலாவின் கைக்கால்கள் உதறத் தொடங்கியிருந்தன.

“மனோ நீ ஸ்டூடண்ஸை வீட்டுக்கு அனுப்பிட்டு வா.விஜி வா,” என்று துவண்ட விமலாவைத் தூக்கி நிறுத்தி தோளில் போட்டுக்கொண்டு பின்கேட்டிற்கு விரைந்தான்.பாதையில் வண்டியைப்பிடித்து மருத்துவமனையில் நின்று கொண்டிருந்தார்கள்.

செவிலி தன் குறிப்புஏட்டைப் பார்த்து,“வயசு என்ன?” என்றார்.

பாலு,“பதினேழு இருக்கும்,” என்றான்.

“நீங்க யாரு?”

“எங்க ஸ்டூடண்ட்ங்க,” என்ற விஜியையும் பாலாவையும் அந்த செவிலி மேலிருந்து கீழ் வரைப் பார்த்தாள்.

“ட்ரெய்னி ம்மா,”என்றான் பாலா.

“ம்.யாரு கையெழுத்து போடறீங்க?”

பின்னால் வந்த மனோ, “நாங்க ரெண்டு பேரும்,”என்றதை மறித்து, “நானும் போடறேன்,” என்றாள் விஜி.

“கேஸ் என்ன தெரியுமா? ஏதோ பாய்சன் சாப்பிட்டிருக்கு.உள்ள வாங்க,”

மனோ,“இன்னும் கொஞ்ச நேரத்தில வீட்லருந்து வந்துருவாங்க,”என்றான்.

அவர்களால் விமலாவிற்கு வயிறு தூய்மை செய்து கொண்டிருப்பதை பார்க்கமுடியவில்லை.அந்த இடம் அதற்கே உரிய ஒவ்வாத நாற்றத்தோடு இருந்தது.




அங்கிருந்த இளம்செவிலி, “நேரமாயிடுச்சுன்னு நெனக்கறேன்….சொல்ல முடியாது,”என்று கிசுகிசுத்தாள்.

விமலாவின் வயிறு பொருமி எழுந்தது.உடலையும் சேர்த்து உயிருடன் வெளியே தள்ளிவிட வாய் எத்தனிப்பதைப் போல திறந்து உறுமியது.

“நீங்க வெளிய நில்லுங்க,”என்ற குரலால் மூவரும் வெளியே வந்தார்கள்.

பெயர்ந்த தரை சில்லென்றிருந்தது.முன்னால் செடிகள் அடர்ந்து படர்ந்திருந்தன.வாசனையாலும் இருப்பாலும் அந்தக்கட்டிடம் தன் பழமையைக் காட்டிக் கொண்டிருந்தது .மருத்துவமனையின் கடைசியிலிருந்த தனிசிறு ஒற்றை அறை கட்டடம் அது .ஆள் நடமாட்டம் கூப்பிடும் தொலைவில் இருந்தது.வெளியே சாலையில் வாகனங்களின் ஒலிகள்.

விஜி நடுங்கும் இருகரங்களாலும் பாலுவின் வலது மேல்கையை  பிடித்துக்கொண்டாள்.

“நீ போ விஜீ.நாங்க பாத்துக்கறோம்,” என்றாலும் பாலுவிடமிருந்த தடுமாற்றத்தை விஜியால் உணரமுடிந்தது.

“பொம்பளப்பிள்ளைங்கறதால விஜி இருக்கட்டும்,”என்றான் மனோ.

“ஒன்னுல்ல விஜி.பாத்துக்கலாம்,” என்ற பாலுவிற்கு உடல் வியர்த்து கசிந்தது.

“நா போகல.அந்தப் பொண்ணு உயிர் துடிக்கறத பாத்தியா? ஏன் இப்படி பண்ணிக்கறாங்க? இப்ப அவ ஒடம்புக்குள்ள ஒரு குருஷேத்ர யுத்தம்…தவறின தன்வாள் தன்னை வெட்றாப்ல தானே இது…”என்று கையைஎடுத்து வலதுகாதை தேய்த்துக்கொண்டாள்.மீண்டும் மீண்டும் அந்தக்கை வலது காதை தேய்த்துக்கொண்டிருந்தது.

“சும்மா இருக்கமாட்டியா விஜீ…எல்லாத்தையும் ஓவரா கற்பனை பண்ணிக்கிட்டு..உன்னோட கை எவ்வளவு சில்லுன்னு இருக்கு பாரு.ஒரு டீச்சராக வேண்டியவ இவ்வளவு பதட்டப்பட்டா எப்படி?..அவளுக்குத் திமிரு .வேறென்ன,”என்றான் பாலு.மனோ எதுவும் பேசாமல் செடிகளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

பையன் ஒருவன் உள்ளூர்ஆசிரியருடன் வருவது தெரிந்தது.விஜி பாலாவின் தோளிலிருந்து கையை எடுத்தாள்.

பாலு,“ இதில என்ன இருக்கு…அவர் வந்தா என்ன?”என்றான்.

இவள்,“பயப்படறது தெரியக்கூடாது பாலு,”,என்றாள்.

“ம்”

கணக்கு வாத்தியார் வேகநடையில் வேட்டிசட்டையில் வந்தார்.இந்தஉடையில் சாதாரணத் தந்தையைப் போல இருந்தார்.

படிகளில் ஏறும்போதே, “யாருக்கிட்ட கேட்டு கிளாஸ் வச்சீங்க.நீங்க என்ன இங்க வொர்க் பண்ணவா வந்திருக்கீங்க? அதிகபிரசிங்கத்தனம்.பிள்ளை எப்படி இருக்கு?” என்று குரலை உயர்த்தினார்.

“ஒன்னும் சொல்லல சார்,”என்றான் பாலா.

“ஐ திங்க் யூ ஆர் எ பர்பெக்ட் ஒன்,”

“சார் ஹெச்.எம் சார்க்கிட்ட கேட்டுதான் வச்சோம்.இந்த பொண்ணு இப்படி செஞ்சதுக்கும் பாலுவோட பெர்பெக்ஸனுக்கும் என்ன சம்மந்தம்?”என்ற விஜியைப்பார்த்து புருவங்களை சுருக்கிய கணிதஆசிரியர்,

“சட் அப்..” என்றபடி மனோ பக்கம் பார்வையை மாற்றினார்.

“ஸ்கூல் டேவா இருந்தா மட்டும் என்ன பண்ணமுடியும்?”என்றான் மனோ.

“இடியட்.அதாண்டா…” என்றபடி ஆள்அரவம் கேட்டு திரும்பினார்.

வெளியில்வந்த செவிலி கையெழெுத்திட காகிதங்களைக் காண்பித்தாள்.அதை வாங்கிய பாலுவிடமிருந்து பறித்த அவர் கையெழுத்திட்டு, “இவங்களும் ஸ்டுடண்ஸ் மா,”என்று திருப்பிக் கொடுத்தார்.

“எப்படியிருக்கா?”

அவள்,“பிழச்சுக்கும் சார்,”என்றபடி உள்ளே சென்றாள்.

பதறியஉடலும் நடையுமாக வந்த நடுவயது பெண், “நான் என்னடி சொல்லிப்புட்டேன்.படிக்கற வயசுல வேற நாட்டம் வேணாண்ணு தானே,”என்ற குரலடைக்க தரையில் அமர்ந்தாள்.

விஜி ஓடிச்சென்று அவளைப்பிடித்து, “பயப்படாதீங்க..காப்பாத்தீட்டாங்க,” என்றாள்.அவள் விஜியை மிரளப் பார்த்துவிட்டு மேலும் பதறினாள்.தொடுகையிலேயே அவளின் அத்தனை நடுக்கங்களும் தெரிந்தது.தன்னியல்பில் கண்கள் கலங்குவதை விஜி கட்டுப்படுத்தினாள்.

“ஏம்மா பிள்ளங்கள பாத்து பதமா பேசறதில்லயா?”என்றார்.

“என்ன சார் பேசிட்டேங்கறீங்க.ஒன்னுமே சொல்லக்கூடாதா...சொன்னா இந்த வேலயதான் பாப்பேன்னா..போகட்டுங்க,”என்று கத்தினாள்.

“சரிம்மா…சரிம்மா…கோவப்படாதீங்க,”

செவிலி வந்து, “ பயப்படாதீங்க…ரெண்டுநாள் இருக்கனும்.போய் பாக்கலாம்,”என்று சொல்லிவிட்டு சென்றாள்.

உள்ளே அமைதியாய் விமலா படுத்திருந்தாள்.அந்தம்மாள் விமலாவின் கன்னத்தைப் பிடித்து முத்தம் கொடுத்தபடி கத்தி அழுதாள்.சார் விமலாவின் தலையை தடவிவிட்டு கொஞ்சநேரம் பார்த்துக்கொண்டிருந்தார்.

“நீங்க கிளம்புங்க..”என்று சார் மூவரையும் சொல்லிவிட்டு அந்தம்மாவை மெதுவாக அந்தஇடத்திலிருந்து தள்ளி அழைத்து  பேசத்தொடங்கினார்.

“சிங்கம் உறுமுது…” என்று தொடங்கிய விஜியை பாலு முறைத்ததும் அவள் பேசுவதை நிறுத்தினாள்.

“வேறொருத்தர்ன்னா நம்மள டென்சனாக்கி, நம்மையே கையகாட்டிவிட்டுருப்பாங்க,”என்ற பாலு  நடந்தான்.மனோவின் உடல்நடுக்கத்தை அருகில் நடந்த கணத்தில் உணர்ந்த விஜி, அவன் விலகியே நின்று கொண்டிருந்ததை நினைத்துக் கொண்டாள். 

இருபுறமும் செடிகள் அடர்ந்த அகலம் குறைந்த பாதையில் நடந்தார்கள். “இன்னக்கி காப்பாதியாச்சு…இந்தமாதிரி யோசிக்கற பிள்ளைய காவலா காக்கமுடியும்?”

பாலு முகத்தில் சலிப்பைக்காட்டினான்.மனோ, “இனிமே மேக்சிமம் அப்படி செய்யமாட்டா…”என்றான்.

“அவ்வளவு உறுதியா எப்படி சொல்ற?”

“இதமாதிரி நானும் நினச்சவன் தாண்டா,”

“யூ.ஜி முடிச்சதும் அவளுக்கு கல்யாணம் பண்ணி.. எனக்கு காருமாதி பண்றதா நேரம் வந்திச்சு…எத்தனையோ காரணங்கள்..” என்று பெருமூச்சுவிட்டான்.

“அந்த வயசில என்ன பண்ணமுடியும்?”

“அதான்…செத்துப்போலான்னு முடிவுபண்ணினேன்,”

“நீயா!” என்றான் பாலா.

விஜி“ஒரு பையனுக்கும் பொண்ணுக்குமான அன்பு….ச்…எதுக்கு மழுப்பல்…காதல்  எப்பவும்ஆச்சர்யம்,எப்பவுமே கேள்வி,எப்பவுமே பிரச்சனை…”என்று உதட்டப்பிதுக்கி முகத்தை சுளித்தாள்.

மனோ,“அந்தவயசில பெரிய மேஜிக்கும்தான்..எல்லாமே அழகா தெரியும்,”என்றான்.

பாலு,“அது சலிப்பானதும் தான்,”என்றான்.

எங்கிருந்தோ பேசுபவன் என மனோ,“அம்மா என்னை புரிஞ்சுகிட்டா…எங்கூடவ இருந்தா.சின்னபிள்ளையில அவக்கூடதான் படுத்துப்பேன்.பத்தாவது பரீட்ச்சைக்கு படிக்க தனியா தூங்க ஆரமிச்சபிறகு எனக்கு தனிபடுக்கை தான்.நான் விமலா மாதிரி முடிவெடுத்தப்ப மறுபடியும் என்நெஞ்சில ஒருகைய வச்சி தூங்க ஆரமிச்சா...எங்கூடவே இருந்தா.அதப்பத்தி எதுவும் பேச மாட்டா.நான் மூணுமாசம் வீட்டவிட்டு வெளிய போகல.மறுபடியும் எம்.எஸ்.சி முதல் நாளன்னிக்கி காலையில குளிச்சிட்டு துண்டோட வந்தப்ப அம்மா வீணை சத்தம் கேட்டுச்சு.நான் தோட்டத்து படியில நின்னுட்டேன்.அந்த ராகத்துக்கு …காத்தில நடுங்கற கொடிமாதிரி ஒருநடுக்கம்….பின்ன அதுவே எதுத்து நிக்க பண்ற பேலன்ஸ் மாதிரி எப்படியோ மாறிடுச்சு.வீணை நின்னபிறகு பாத்தா அப்பா ஹாலில் உட்காந்திருந்தார்.நான் மெதுவா வீட்டுக்குள்ள போய் நின்னேன்.பூஜை ரூமிலருந்து வந்தவ பாஞ்சு என்னய கட்டிபிடிச்சுக்கிட்டா…இந்த முதுகுல இன்னமும் அந்தக் கை சூட்டோட இருக்கறாப்ல இருக்கு,”என்று மனோ முன்னால் பார்த்தபடி நடந்தான்.மெயின் ரோட்டிற்கு வந்திருந்தார்கள்.

“அது ஒண்ணுமில்ல மனோ…இயற்கையாவே அந்த வயசில ஹார்மோனல்...”என்று தொடங்கிய விஜியின் தோளில் ஓங்கித்தட்டிய பாலு, “என்னப்புள்ள நீ…அவன் என்ன சொல்றான்…நீ என்னத்த பேசற.. வாயமூடிக்கிட்டு வா…” என்றவனை முறைத்துவிட்டு தோளைத்தடவியபடி வேகமாக நடந்து மனோ பக்கம் சென்றாள்.

பாலு மனோவிடம், “ரூமுக்கு போய் கொஞ்சநேரம் தூங்கிட்டு வேலயப்பாரு..விஜீ நீ ஒழுங்கா ஹாஸ்ட்டல் போய் சேரு,”என்றபடி  பேருந்தில் ஏறிக்கொண்டான்.

மீண்டும் மனோ, “நீ சொல்றாப்ல அந்தவயசில…. வெய்யிலுக்குப்பின்னாடி நல்லமழ வந்து சட்டுன்னு நின்னாப்ல ஒரு ஏமாத்தம்…கோபம் ,அதத்தாண்டி என்னமோ…இந்தவயசில உணரமுடியாது விஜி.எல்லாத்துக்கும் காலத்துக்கிட்ட செக் உண்டுல்ல,”என்றான்.விஜி தன்னுள் ஆழ்ந்தாள்.அவர்கள் நின்றிருந்த புளியமரத்தின் நிழலில் குட்டி இலைசருகுகள் காற்றில் சுழன்று சுழன்று விழுந்தன.

மனோ, “விமலாஅம்மாவுக்கும் ,அவளுக்கும் குடிக்கறதுக்கு ஜீஸ், சாப்பிட எதாவது  வாங்கி குடுத்திட்டு வர்றேன்,” என்று சுற்றி கடைகளைப் பார்த்தான்.

பக்கவாட்டில் நின்ற விஜி அவன் முதுகில் கைவைத்து, “உண்மையாலும் சாகனுன்னு தோணுச்சா?!” என்றாள்.

“அது எப்பவுமே சந்தேகப்படற விஷயம் தானே…..”என்ற மேனோ,விஜியின் கண்களைப் பார்த்து, “எல்லாத்துக்கும் காரணகாரியம் தேடாத விஜி…படிப்பால உலகத்தப்பாக்காத…”என்றான்.

“பின்ன?” என்றவளைப் பார்த்து புன்னகைத்த மனோ, “நீ ஃபிசியாலஜி படிச்சத வச்சு அந்தபொண்ணுக்கு இப்ப எவ்வளவு கஸ்ட்டன்னு புரிஞ்சுக்கிட்டமாதிரி ,அதில மனச போட்டுப்பாரு.இப்ப என்முதுகில நீ கை வச்சிருக்கறது எதுக்கு? நீ எதாச்சும் சொல்வ…ஆனா அன்னிக்கு அம்மா வச்ச அதே கை,”என்றான்.

“இது ரொம்ப பைத்தியக்காரத்தனமா இருக்கு.மதர் அபெஃக்சென்ங்கறது ...”என்று ஆரம்பித்த விஜியின் கையைப்பிடித்து நெரிசலாக சாலையைக்கடந்த மனோ, “நான் அப்படித்தான்…நீ இப்படித்தான்.என்னால உன்னப் புரிஞ்சுக்க முடியும்…உன்னால எப்பவுமே முடியாது.... நீ படிச்சத, நீ எப்படி இருக்கனுன்னு மத்தவங்க சொன்ன குப்பைகளை உன்மேல போட்டு மூடிட்ட..நீதான்  உதறனும்....”என்று சிரித்தபடி, “கண்ண உருட்டி உருட்டி கேள்வியா யோசிக்காம…பாதையப்பாத்துப் போ..”என்றபடி கடைக்குள் நுழைந்தான்.புழுதி மங்கலாக்கிய சாலையில் மதிய வெயிலில் பசியுடன் விஜி நடந்தாள்.

                                                                  

                                                             


Comments

Popular posts from this blog

பசியற்ற வேட்டை

பெண் கல்வி,விடுதலை மற்றும் தன்னறம்

எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் நேர்காணல்