மெல்ல உருகும் மெழுகு



 நேற்று மக்தலேனால் திருவிழா. கோட்டப்பாளையத்தின் மிக முக்கியமான திருவிழா. பதினைந்திற்கும் மேற்பட்ட சுற்றுபுற கிராமங்களின் திருவிழா. மதஒற்றுமை இயல்பாக எந்த ஆர்ப்பாட்டமும் இன்றி நடக்கும். ஜூலை இரண்டாம் வாரம்  கொடியேற்றப்பட்டு திருவிழாத் தொடங்கும். முதல் வேளையாக பெரிய பெரிய மிட்டாய் கடைகளுக்காக சாரம் கட்டப்படுவது நடக்கும்.



 ஊரின் முச்சந்தியிருந்து பிரியும் மூன்று முக்கியத்தெருக்களை நிறைத்து கடைகள் போடப்படும். எங்கள் பக்கம் நடக்கும் திருவிழாக்களில் இங்குதான்  பெரிய திருவிழாக்கடைகள் நடத்தப்படும்.




புரியும்படி சொன்னால் பெரிய தெருவோர shopping mall . மண்பானைகளிலிருந்து விவசாயக்கருவிகள், பீங்கான் பாத்திரங்கள், அரிவாள் கொடுவாள், சமையல் பாத்திரங்கள், சாவிக் கொத்துகளுக்கான தனிக்கடைகள், உலக்கை ,மரக்கால் முதல் பெண்களுக்கான அலங்காரப் பொருட்கள் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள்,கல்லால் செய்யப்பட்ட பாத்திரங்கள்,நெல் உளுந்து சலிக்கும் இரும்பு சல்லடைகள் என்று வகைப்படுத்துவது கடினம். சகலமும் கிடக்கும் என்று உண்மையாகவே சொல்லலாம். 



இதன் காரணமாக கடைசியாக மலையடிவாரத்தில் இருக்கும் எங்கள் ஊருக்கு மூன்றுநாட்கள் பேருந்துகள் வராது. சிறியவயதில் திருவிழாவிற்கு  நடந்து செல்வோம். எங்கள் ஊருக்கு அடுத்துள்ள அக்ரஹாரத்தைக் கடந்து ,வடக்கு விசுவாம்பாள் சமுத்திரத்தை கடந்தால் தேவாலய கோபுரம் தெரியும். அதை பார்த்தபடி ஓடிச்செல்வோம். இரண்டு மூன்று நாட்களுக்கு பள்ளிக்கூடம் விடுமுறை விடப்படும்.


எங்களுக்கு முதன்முதலான badtouch என்பதை அறிமுகப்படுத்துவது இந்த திருவிழாவின் கடைவீதிகள் தான். நம் ஊர் திருவிழாக்கள் நமக்கு பாதுகாப்பானது. பதினைந்து ஊரின் மக்கள் சேரும் போது இப்படித்தான் ஆகிறது.

திருவிழாவிற்கு அடுத்தநாள் தேர் கோவில் முன்னால் நிற்கும். அன்றும் வழிபாடு உண்டு. எதுவும் மாறாது என்பதால் தேருக்கு அடுத்தநாள் தான் சிலர் செல்வோம்.

பேருந்தும் இல்லாமல், மனதும் இல்லாமல் சில ஆண்டுகளாக திருவிழாவிற்கு செல்லாமல் இருந்தேன். 

இந்த ஆண்டு செல்ல வேண்டும் என்று  ஜூன் மாதமே நினைத்திருந்தேன். எங்கள் ஊரிலிருந்து இருசக்கர வாகனத்தில் பத்து நிமிடத்தில் சென்று விடலாம். நேற்று மதியம் தேர். ஊர்மக்களும், பிள்ளைகளும் நடந்தும், குட்டி டெம்போக்களிலும் சென்றார்கள். முந்தின நாள் இரவு ஒன்பது சப்பரங்களில் ஏசுவின் சீடர்கள் வருவார்கள். 

அதற்காக அங்கேயே தெருவோரங்களில், திண்ணைகளில், கோவிலில் தங்குபவர்களும் உண்டு. தேர் செல்லும் போது அதன் மீது உப்பும் பொறியும் தெளிப்பது இங்கு வேண்டுதல். உப்பு,பொறி பைகள் விற்கும். நோய்களுக்காக, திருமணத்திற்காக வேண்டுதல்கள் இருக்கும்.

சில விஷயங்களில் இன்றுள்ள பதின் பிள்ளைகளின் திடமான மனநிலையை மதிக்கிறேன். அவர்கள் தவறான தொடுகையை அதீத பதற்றமாக எடுத்துக் கொள்வதில்லை. சொல்லி புரிய வைக்க முடியாது என்று இத்தனை நூற்றாண்டுகளாக புரிந்துவிட்டதால் பிள்ளைகளே பயல்களுக்கு பதட்டத்தை காட்டத் துவங்கியிருக்கிறார்கள். இந்த மாதிரி விஷயங்களில் இனி என்ன நடக்கிறது என்று பார்வையாளராக மட்டுமே இருக்கமுடியும்.

மதியம் ஒரு பேருந்து மட்டும் வருவதாக இருந்தது. அதற்காக கிளம்பினோம்.

என் குழந்தை பருவத்தின் வலிகளுடனும், நோயுடனும் அதிக தொடர்புள்ள இடம் இது. இந்த தேவாலயத்தின் வளாகத்தில் நான்கு வயதில் இருந்து பத்து வயது வரை படித்தேன். இங்குள்ள மருத்துவமனையில் தான் பிறந்தேன். சிலஆண்டுகளுக்குப் பிறகு இன்று மீண்டும் வந்திருக்கிறேன். 



சகிப்பு என்ற சொல்  இங்குதான் மனதில் விழுந்து முளைத்தது. மந்திரம் போன்ற ஒரு சொல். அதை நான் எனக்குள் வேறொன்றாய் மாற்றிக்கொண்டேன். முழுமனதுடன் வாழ்வில் நடப்பவற்றை ஏற்றுக்கொள்ளுதல் என்பதே தேவன் சொல்லிய சகிப்பு என்பதன் பொருள் என்று விரித்துக்கொள்கிறேன். முடியுமா? என்று வாழ்ந்து பார்த்துதான் தெரிந்து கொள்ள வேண்டும்.

கோயில் வளாகம் எங்கும் மெழுகுகள் துளித் துளியான மொட்டுகளாக சுடர்கின்றன. அன்பு எரியாகி கண்ணிற்கு புலப்படும் ஒன்றாகிறது. என்னுடைய  ஆத்மசொல்லின் வடிவமாக ஏசு சிலுவையில் காத்திருக்கிறார். 

மக்தலேனால் சகிப்பை அன்பாக மாற்றி அவர் பாதங்களில் தலை சாய்த்திருக்கிறாள். சிலுவையின் பாதங்களுக்குக் கீழ், ஏசு மீது தான்  கொண்ட அன்பே பெருவலியாக அவள் அதை சகிக்கிறாள். சகிப்பின் நிரந்தர ரூபம் என்றைக்கும் வழிபாட்டுக்கு உரியதாகி கண்முன்னால் நிற்கிறது. நம் முன்னோர்கள் காலங்காலமாய் கண்டு மனம் கனிந்து நின்ற ரூபம். இனி வருவோருக்குமானது.


அதன் காலடியில் மெல்ல உருகும் மெழுகு என்பது மெழுகு மட்டுமல்ல.

உப்பாகி துவர்த்து மீண்டும் நீர்த்து சுவையாகும் ஒன்றை அளிக்கும் ஒன்றின் பின்னால் ஈரம் இருக்கத்தான் வேண்டும். அந்த சாரத்தைத் தொட்டு எடுத்து எழுதச்  சொல்வது எது என்று தெரியவில்லை. நான் அன்பை ,நம்பிக்கையை எழுதுவதை எழுதி முடித்து வாசிக்கும் போது வியப்புடன் பார்க்கிறேன். எழுத்தாகிய ஒன்றின் ஆணையாக இருக்கலாம். அது எப்போது வேண்டுமானாலும் மாற்றுப்பக்கத்தை எழுதச் சொல்லியும் ஆணையிடக்கூடும். 

அண்மையில் நான் எழுதிய உயிர்த்தெழல் மற்றும் செம்புலம் என்ற இரண்டு கதைகளும் கிருஸ்துவையும்,மக்தலேனாலையும் சார்ந்தவை. உயிர்த்தெழல் என்ற கதை  நேரடியானது. செம்புலம் என்ற கதை  அவர்களைத்  தொட்டு செல்வது.

சுமைகளை இறக்கி வைத்துவிட முடியும் என்று சிறு பொழுது மனம் மயங்கும் இடம் இது. அன்பை பிடிமானமாக்க முடியும் என்று மனதிற்கு திரும்பத் திரும்ப சொல்லும் இடம். அன்பு அழிவில்லாதது. அது தொடர்ந்து பயணிக்கக்கூடியது என்ற புரிதலினை இங்கிருந்து தான் பெற்றேன். சுடருக்கு கீழே உருகுவதும், மேலே சுடராய் சுடர்ந்து எழுவதும் ஒன்றே.








Comments

Popular posts from this blog

பசியற்ற வேட்டை

பெண் கல்வி,விடுதலை மற்றும் தன்னறம்

எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் நேர்காணல்