Skip to main content

Posts

சுவை

  மழையையே பார்த்துக்கொண்டு கைகளை மறந்து போனேன்... சட்டென்று குனிந்து பார்த்தேன் என் வெல்லக்கட்டி எப்போதோ கரைந்து போயிருந்தது. வெல்லக்கட்டியை வைத்திருந்த கையையும் வழிந்தோடும் நீரையும் மாறி மாறி பார்த்தேன். கலங்கல் நீரில் ஒன்றுமில்லை. குழிந்திருந்த மறுகையின் உள்ளங்கை நீருக்கு குளிரின் சுவை.

அகமும் புறமும் : 20

   2023  மே 1   வாசகசாலை இணையஇதழில் வெளியான கட்டுரை: அகமும் புறமும் நிறைவு   காதலெனும் ஔி கவிதை:1 மாவென மடலும் ஊர்ப பூவெனக் குவிமுகில் எருக்கங் கண்ணியும் சூடுப மறுகி னார்க்கவும் படுப பிறிது மாகுப காமங்காழ் கொளினே குறுந்தொகை : 14 பாடியவர் : பேரெயின் முறுவலார் திணை : குறிஞ்சி தலைவன் கூற்று. நற்றிணை, குறுந்தொகை,கலித்தொகையில் மடலேறுதல் குறித்த பாடல்கள் உள்ளன. மடல் ஏறுதல் பெருந்திணைக்கு உரியது. பெண் மடலேறுதல் இல்லை என்று தொல்காப்பியம் கூறுகிறது. பெருந்திணை என்பது பொருந்தாக்காமம். ஒரு தலைக்காதல் பொருந்தாக்காம வகையை சேர்ந்தது.  தலைவி தன் காதலை ஏற்காத நிலையிலோ அல்லது தலைவியின் இல்லத்தார் தன் காதலை ஏற்காத போதோ தலைவன் மடலேறுகிறான். என்றாலும் உடன்போக்கு என்ற வழக்கம் உள்ளதால் குடும்பத்தாரின் ஏற்புக்காக தலைவன் மடலேறும் வாய்ப்பு மிகவும் குறைவு என்று நினைக்கிறேன்.  தலைவன் பனைமரத்தின் கருக்கு ஓலையால் செய்யப்பட்ட குதிரையில் ஊர் மன்றிற்கு வருகிறான். சிறுவர்கள் அந்தக்குதிரையை இழுத்து வருவது மடலேறுதலின் வழக்கம்.  தலைவன் தான் விரும்பும் தலைவி யார் என்று ஊருக்கு அ...

அகமும் புறமும் : 19

      2023 மார்ச்  16 வாசகசாலை இணைய இதழில் வெளியான    கட்டுரை.        அகநக நட்பு யாழொடும் கொள்ளா,பொழுதொடும் புணரா, பொருள் அறிவாரா; ஆயினும் தந்தையர்க்கு அருள் வந்தனவால்,புதல்வர்தம் மழலை: என் வாய்ச் சொல்லும் அன்ன_ ஒன்னார் கடி மதில் அரண் பல கடந்த நெடுமான் அஞ்சி! நீ அருளன்மாறே புறநானூறு : 92 பாடியவர்: ஔவையர் பாட்டுடைத்தலைவன்: அதியமான் நெடுமான் அஞ்சி திணை : பாடாண்திணை துறை : இயன்மொழி ஔவையார் அதியமானை பாட்டுடை தலைவனாக்கி ‘எண்தேர்செய்யும் தச்சன்’ [புறம் 87] போன்ற புகழ் பெற்ற பலப்பாடல்களைப் பாடியுள்ளார். உவமை அழகுகள் மிக்க பாடல்கள் அவை.  தனக்கு கிடைத்த அரிய நெல்லிக்கனியை தான் உண்ணாமல் ஔவைக்கு கொடுத்ததை கூறும் பாடல் உள்ளது. புலால் நாற்றமடிக்கும் என்  தலையை அவனுடைய நறுமணம் மிக்க  கையால் தடவுவான் என்று ஒளவை ஒருபாடலில் சொல்கிறார். ‘முழவுத்தோள் என் ஐயை’[புறம் 89] என்ற வரியில் தலைவனாக,இறைவனாக,தந்தந்தையாக அவனைப் பாடுகிறாள். அதியமானை ‘என் ஐயை’ என்று இன்னும் சில பாடல்களிலும் கூறுகிறாள். ‘நீர்த்துறை படியும் பெருங்களிறு போல இனியை’[ புறம் 94]...

அம்பையின் படைப்புலகம் : 1

 பிப்ரவரி 2023 நீலி இணைய இதழில் வெளியான கட்டுரை. எழுத்தாளர் அம்பை அவர்களின் வீட்டின் மூலையில் ஒரு சமையலறை என்ற சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து….                 விழிப்பிற்கான சொல் ‘ஒரு வேளை நீங்கள் அந்த ஆப்பிள் விழுவதைப் பார்த்திருக்கலாம். புதுக் கண்டங்களை கண்டுபிடித்திருக்கலாம். குகைகளுக்குள் ஓவியம் தீட்டியிருக்கலாம். பறந்திருக்கலாம். போர்கள்,சிறைகள்,தூக்குமரங்கள்,ரஸாயன யுத்தங்கள் இல்லாத உலகத்தை உண்டாக்கியிருக்கலாம். நீங்கள் எங்கே போய்விட்டீர்கள் ஜீஜி?’ என்ற எழுத்தாளர் அம்பை அவர்களின் வரிகளுடன் இந்தக் கட்டுரையை தொடங்குகிறேன். வீட்டின் மூலையில் ஒரு சமையலறை என்ற கதையில் வரும் வரிகள் இவை. பொதுவாகவே அம்பையின் கதைகளின் ஆதாரமான, பெண்களை நோக்கிய அம்பையின்  சொற்கள் இவை. ஒரு பிரார்த்தனையைப்போல ஒரு வேண்டுகோளைப்போல பெண்களை நோக்கி ஒலிப்பவை.  இந்த சிறுகதைத் தொகுப்பில் மொத்தம் பதினோரு கதைகள் உள்ளன. நான் முதன்முதலில் வாசித்த பெண் எழுத்தாளர் அம்பை. பதினாறு வயதில் என்று நினைக்கிறேன். அதுவரை எழுத்தாளர்கள் என்றால் ஆண்கள் தான் என்று நினைத்துக் கொண்டிரு...

அகமும் புறமும் 18

       ஏப்ரல் 1 ,2023          வாசகசாலை இணைய இதழில் வெளியான கட்டுரை.           ஒரு பழைய நீர்த்தேக்கம் நாயுடை முதுநீர்க் கலித்த  தாமரைத் தாதின் அல்லி அவிர் இதழ் புரையும் மாசுஇல் அங்கை, மணிமருள் அவ்வாய், நாவொடு நவிலா நகைபடு தீஞ்சொல், யாவரும் விழையும் பொலந்தொடிப் புதல்வனைத், தேர்வழக்கு தெருவில், தமியோற் கண்டே, கூர்எயிற்று அரிவை குறுகினள்; யாவரும் காணுநர் இன்மையின், செத்தனள் பேணிப், பொலங்கலம் சுமந்த பூண்தாங்க இளமுலை, ‘வருக மாள,என் உயிர்!’ எனப் பெரிது உவந்து, கொண்டனள் நின்றோட் கண்டு,நிலைச் செல்லேன், ‘மாசுஇல் குறுமகள்! எவன் பேதுற்றனை? நீயும் தாயை இவற்கு?’ என யின்தற் கரைய,வந்த விரைவனென் கவைஇ, களவு உடம்படுநரின் கவிழ்ந்து,நிலம்கிளையா நாணி நின்றோள் நிலை கண்டு,யானும் பேணினென் அல்லெனோ_ மகிழ்ந! _ வானத்து அணங்குஅருங் கடவுள் அன்னோள்,நின் மகன்தாய் ஆதல் புரைவது_ ஆங்கு எனவே! அகநானூறு:16 பாடியவர்: சாகலாசனார் திணை : மருதம் துறை :  தலைவனுக்கு தலைவி கூறியது. அகத்துறை முழுவதுமே  உன்னதமான காதல் வரிகள், தருணங்கள் நிறைந்துள்ளன. ...

அவள்

எப்போதும் அவளைத் தேடிச்செல்கிறேன். அன்றொரு நாள் அவளிடம் எதையாவது  கேட்கச்சொன்னார்கள். என்ன கேட்பது? சொல்லாகி நிற்பவள் முன்பு வெற்று கல்லென்று நின்றேன். மீண்டும் மீண்டும் அவளை நோக்கியே செல்கிறேன். ஆனால் அவள் சென்ற பாதையில் அல்ல.. அவளை அடையவும் அல்ல அவளாக மாறவும் அல்ல. என்றாலும்  அவளையே தேடிச்செல்கிறேன். அவள் மதுமணக்கும் மலர்வனம். நான் சமனமாகாத துலாத்தட்டில் விழும் ஒற்றை துளசி.

சன்னிதி

  சன்னிதியின் படிகளில் படிந்திருக்கும் ஒவ்வொரு சுவட்டிலும் வியர்வையின் ஈரம்.. உள்ளே சிவந்த ஔியாய் தேங்கி நிற்கிறது அமைதி... ஆகாயத்தின் கீழே உக்கிரமானவெயிலில் நனைந்தபடி கோபுரஉச்சியில் தனித்து நிற்கிறது சிலுவை.. உன் கோபுர இடுக்கொன்றில்  கூடு கட்டியிருக்கும் குருவி ஒன்று தன் குஞ்சுகளை  உன்னிடம் விட்டுவிட்டு இறைதேடி செல்கிறது... அதன் இறகில் நீ அமர்ந்து பறக்கிறாய்.