[ ஆகஸ்ட் 2025 ஆவநாழி இதழில் வெளியான சிறுகதை] அந்தராளம் இன்னும் விடியவில்லை. கிழக்கே விடிவெள்ளி வரும் நேரம். மொட்டை மாடியில் சம்மணமிட்டு அமர்ந்திருந்தேன். வலது கை தானாகவே மனதில் ஓடும் தாளத்திற்கு ஏற்ப தொடையில் தட்டிக்கொண்டிருந்தது. முடியிலிருந்து சொட்டிய ஈரம் முதுகில் நனைத்திருந்த இடத்தில் காற்று பட்டு உடல் சிலிர்த்துக் கொண்டது. தாளமிடும் கைகளையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தேன். தவிப்பு தொண்டையை அடைத்தது. கூடாது..மனதை அடக்கிக்கொண்டேன். அலைபேசியில் ஏதோ விளம்பர குறுஞ்செய்தி மடக் என்றது. மனதை மாற்றுவதற்காக எழுந்து நடக்கத் தொடங்கினேன். அந்தப்பக்கம் கொட்டிலில் விளக்கெரிந்தது. ரங்கனிற்கு தானமாகக் கொடுக்கப்படும் சிறுகன்றுகள் வளரும் கொட்டில். அந்த செம்புநிறக் கன்றை இப்போதுதான் பார்க்கிறேன். இங்கும் அங்கும் மருள விழிப்பது நன்றாக தெரிகிறது. பட்டையாக மையெழுதியது போன்ற தடம் கொண்ட மணிக்கண்கள். அது நிற்கும் இடத்திலிருந்த கல்தூணை தலையால் இடிக்கிறது. சிறிது நேரம் கழித்து முகவாயை தூணில் தேய்க்கிறது. பின் நெற்றி. மீண்டும் தலையால் தூணை முட்டிவிட்டு இருகால்களால் மண்டியிட்டு நாவால் தடவ...
🌿🦋என்னால் பூக்காமலிருக்க முடியவில்லை _ கவிஞர் அய்யப்ப பணிக்கர் 🌺🍀