Skip to main content

Posts

ஔியை மறந்து விட்ட பயிர்

 காலையில் சூரியனை பார்ப்பதற்காக மாடிக்கு சென்றேன். உதிக்க நேரமிருந்தது. கீழே வந்து தி.ஜாவின் 'சிலிர்ப்பு' சிறுகதை வாசித்தேன். தி.ஜா வை தேடுவது என்பது ஒரு கன்றின் தவிப்பு போல.  ஒரு மாதத்திற்கு முன்பு துளசி செடியை வாடிவிட்டது. ஆழஊன்றிய வேரால் பிடுங்கும் போது மண் புரண்டு குலைந்தது. அடிமண் மேலே வந்தது. நல்லது தான்.  புரண்ட மண் வெயிலில் காய்ந்தும் மழையில் நனைந்தும் பக்குவமாகியிருந்தது. தம்பி கொடுத்த குட்டி துளசி செடிகளை நடுவதற்காக மீண்டும் மாடிக்கு சென்றேன். வேர் பிடித்த சின்னஞ்சிறு செடிகள். குட்டி காக்கை இறகு ஒன்று, செடிகளுடன் காற்றில் சிலிப்பிக்கொண்டு கூடவே வந்தது. நேற்று தோழி ஒருத்தியுடன் பேசும்போது அவள் Invitro fertilization சரிவராமல் உடலும் மனமும் சோர்வுற்றிருப்பது தெரிந்தது. பதினொன்றாம் வகுப்பில் pure science group எடுத்து படிக்கத் தொடங்கும் போதே உடல் ஒரு பேசுபொருளாக இயல்பாக ஆகிவிட்டது. உடல் சார்ந்த பேச்சு வீட்டில் வந்த போது நான் அவசரக்குடுக்கை தனமாக பேச முயன்றபோது அய்யா நாசுக்காக தடுத்தார்.  பின்னர் 'இதை பத்தியெல்லாம் நீ படிக்கற இடத்துல பேசினா போதும்...' என்றார்....

இருக்கை

 சிறுவயதில் பெரும்பாலும் நீண்ட விடுமுறைகளில் நாவல்கள் வாசிப்பது வழக்கம். நீள்கதைகள் என்று சொன்னாலும் கூட மனதளவில் அவை நாவல்கள். வாசிப்பே விடுமுறையின் இனிமை. அப்போதிருந்து தற்போது வாசிக்கும் நாவல் வரை இந்த இனிப்பு மனதில் இருக்கிறது. மனதின் மாறாத சுவை. அல்லது வாழ்வில் எஞ்சி நிற்கும் மதுரம். முதன் முதலாக கல்கியின் அலையோசை வாசித்தேன். வர்தமானன் பதிப்பகத்தில் அப்போது மலிவு பதிப்பாக கல்கியின் நாவல்கள் வெளியாயிற்று. எங்களுக்காக அய்யா அலையோசை,சிவகாமின் சபதம்,பொன்னியின் செல்வன்,பார்த்திபன் கனவை தபாலில் [VPP யில் ] வாங்கினார். பொன்னியின் செல்வன் ஆறு புத்தகங்கள்,அலையோசையும் சிவகாமியின் சபதமும் நான்கு,பார்த்திபன் கனவு ஒரு புத்தகம். அலையோசைக்கு பச்சை கலந்த ஊதா நிறத்தில் கடல் போன்ற அட்டை. எனக்கு ஏனோ அலைஓசை என்ற தலைப்பு பிடித்ததால் முதலில் அதை வாசிக்கத் தொடங்கினேன். இந்தக்கல்லில் அமர்ந்து தென்னையில் சாய்ந்து கொண்டு நிறைய நாவல்கள், புத்தகங்கள் வாசித்தேன். நானாக தேர்ந்தெடுத்த இடம்.  பெரியவர்களுக்கு பெண்பிள்ளைகள் கண்முன்னே இருக்க வேண்டும். எனக்கு தனிப்பட்ட இடம் மீது விருப்பம். அம்மாச்சிவீட்டிற்...

மொட்டு மலர் அலர்

 [வாசகசாலை இணைய இதழ் 2025 ஆகஸ்ட் இதழில் வெளியான சிறுகதை] மொட்டு மலர் அலர் பௌர்ணமி அதிகாலை. வாசல் தெளிக்க கதவை திறக்கும் போது மேற்கே கொல்லிமலைத்தொடரின் சிகரம் ஒன்றில் முழுநிலா அமர்ந்திருந்தது.  நிலாவை மெல்ல மெல்ல மலை விழுங்கிக்கொண்டிருந்தது. சட்டென்று எழுந்த உடுக்கை ஒலியில் என்  கைகளிலிருந்து தண்ணீர் வாளி நழுவியது. கிழக்கு பக்கம் அந்த இரண்டாம் வீட்டின் வெளிமுற்றத்தில் உடுக்கை அடிக்கிறார்கள். வாளியை எடுத்து எதிரே இருந்த கிணற்றடி தண்ணீர் குழாயின் கீழ் வைத்துவிட்டு நின்றேன். மேற்குவீட்டு அக்கா அடுத்த குழாயடியில் வாளியை வைத்தாள். “உடுக்கு சத்தத்துல திடுக்குன்னு நெஞ்சு பதறி போச்சு..அது என்னமோ நம்ம நெஞ்சுக்குள்ள அடிக்கறாப்ல,” “ம்,” “ நேரங்கெட்ட நேரத்துல வயலுக்கு போறதுனால பயந்துருப்பாளோ ,” “முல்லையும் ஒத்தையாளவே எல்லாத்தையும் பாக்கனுல்லக்கா..”  பெருமூச்சுவிட்டவாறு வாளியை தூக்கிக்கொண்டு சென்றாள். வயல்காட்டிற்கு செல்லும் பசுக்கள், ஆடுகள், காகங்கள் ,சிட்டுகள் ,குயில்கள் தவிர வாசல்களை பெருக்கும் தென்னம்விளக்குமாறுகளின் ஓசைகள். வாளியிலிருந்த தண்ணீர் துளிகள் தரையில் விழ விழ காலைநே...

அந்தராளம்

[ ஆகஸ்ட் 2025 ஆவநாழி இதழில் வெளியான சிறுகதை] அந்தராளம் இன்னும் விடியவில்லை. கிழக்கே விடிவெள்ளி வரும் நேரம். மொட்டை மாடியில் சம்மணமிட்டு அமர்ந்திருந்தேன். வலது கை தானாகவே மனதில் ஓடும் தாளத்திற்கு ஏற்ப தொடையில் தட்டிக்கொண்டிருந்தது. முடியிலிருந்து சொட்டிய ஈரம் முதுகில்  நனைத்திருந்த இடத்தில் காற்று பட்டு உடல் சிலிர்த்துக் கொண்டது. தாளமிடும் கைகளையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தேன். தவிப்பு தொண்டையை அடைத்தது. கூடாது..மனதை அடக்கிக்கொண்டேன். அலைபேசியில் ஏதோ விளம்பர குறுஞ்செய்தி மடக் என்றது. மனதை மாற்றுவதற்காக எழுந்து நடக்கத் தொடங்கினேன். அந்தப்பக்கம் கொட்டிலில் விளக்கெரிந்தது. ரங்கனிற்கு தானமாகக் கொடுக்கப்படும் சிறுகன்றுகள் வளரும் கொட்டில். அந்த செம்புநிறக் கன்றை இப்போதுதான் பார்க்கிறேன். இங்கும் அங்கும் மருள விழிப்பது நன்றாக தெரிகிறது. பட்டையாக மையெழுதியது போன்ற தடம் கொண்ட மணிக்கண்கள். அது நிற்கும் இடத்திலிருந்த கல்தூணை தலையால் இடிக்கிறது. சிறிது நேரம் கழித்து முகவாயை தூணில் தேய்க்கிறது. பின் நெற்றி. மீண்டும் தலையால் தூணை முட்டிவிட்டு இருகால்களால் மண்டியிட்டு நாவால் தடவ...

பொய்த்தேவு [வாசிப்பனுபவம்]

               [ 2020 தில் பதாகை இணைய   இதழில் வெளியான வாசிப்பனுபவம்]   என்னதான் வேண்டும்! நாவல்:பொய்த்தேவு       ஆசிரியர்:க.நா.சுப்ரமணியம் பணத்தை தேடி சேர்த்தால் வாழ்வில் அனைத்தையும் அடைந்துவிடலாம் என்று மிகசிறுவயதில் மனதில் பதிந்து கொள்ளும் ஏழை சிறுவன் சோமுப்பயலின் முழுவாழ்வும் நாவலின் பேசுபொருள்.           கும்பகோணத்தின் அருகில் காவிரிக்கரையின் சாத்தனூர் கிராமத்தின் கதை.ஊரின் மையத்தில் மேட்டுநிலத்தில் சிவன் கோயில்.காவிரியை ஒட்டிய மேட்டுத்தெருவும்,சர்வமாணிய அக்ரஹாரமும் நாவலின் முக்கியமான கதைக்களம்.குறியீடும் கூட என்று எனக்குத்தோன்றுகிறது.மேட்டுத்தெரு× சர்வமாணியஅக்ரஹாரம். தன்போக்கில் வளரும் ஒரு காட்டுச்செடியாக சோமு வளர்கிறான்.திருடன் அடாவடிக்காரனின் மகன் என்ற அடையாளத்துடன் சிறுவயதிலிருந்து சமூகத்தால் பார்க்கப்படும் சோமு சிறுவயதிலேயே தந்தையை இழந்தாலும் அடையாளம் அப்படியே இருக்கிறது.ஊரின் ஒவ்வொரு இடமாக ஓரமாக தள்ளிநின்று சமூகத்தை வேடிக்கைப் பார்க்கிறான்.அதன் மூலம் அவன் பணம் பிரதானம் அது...

பிள்ளையார்

ஒரு சமூகமாக நம் குழந்தைகளை நாம் என்னவாக மாற்றிக்கொண்டிருக்கிறோம் என்று அதிகாலையில் இருந்து யோசனையாக இருந்தது. அதிகாலை 3.50 திலிருந்து உறக்கம் வரவில்லை. நான் கல்வியியல் கல்லூரி முடித்து வந்ததிலிருந்து சிறுவர்களை கவனித்து வருகிறேன்.  அவர்கள் ஏன் சிறுவர்களாக இல்லை? என்பது என்னை அடிக்கடி தொந்தரவு செய்கிறது. சூட்டிகை,குறும்பு,விஷமத்தனங்களுடன் இருக்கும் சிறுவர்கள் மனதிற்கு நெருக்கமானவர்கள். ஆனால் இன்று சிறுவர்கள் பதின்வயதுடையவர்கள் போலவோ,இளைஞர்கள் போலவோ நடந்து கொள்வதை பார்ப்பது கோபத்தை ஏற்படுத்துகிறது. [பூமர் என்பது சொல்லப்படும் காரணப்பொருளால் நல்ல சொல்] . ஊடகங்களை நாம் காரணம் சொல்கிறோம். அது ஒரு காரணம் தான். தனக்கு எதிரே கண்முன்னே காண்பவற்றை தான் அவர்கள்  பிரதிபலிக்கிறார்கள். அவர்கள் கண்முன்னால் பார்க்கும் சகமனிதர்கள் பற்றிய எந்த பிரக்ஞையும் அற்ற இளைஞர்களும் மூத்தவர்களும் அவர்களுக்கு முன் மாதிரிகளாக இருக்கிறார்கள். இன்று அதிகாலை மூன்றே முக்காலுக்கு விசில் சத்தமும், பாட்டு கருவியில் பாட்டு சத்தமும் கேட்டு சட்டென்று கண்விழித்தேன். எதிர் வீட்டில் வீடுகட்டுகிறார்கள். கட்டுமான பொருட்கள்...

உன்னிப்பூக்கள்

உச்சிப்பொழுதின் வெயிலில் வாய்க்கால் தண்ணீரின் பளபளப்பு. அம்மாச்சியின் ஊதாப்பூ சேலைக்கு சோப்பு போட்டுக்கொண்டிருந்தேன்... கண்கள் கூசிக்கொண்டே இருந்தது. மூன்று நாட்களாக எந்தநிமிஷத்திலும் விட்டு போய்விடுவாள் என்று தெரியும். வாய்க்காலிற்கு மேலே  களத்திலிருந்து குரல்கள்.. சேலையை அலசி கல்லில் வைத்துவிட்டு பெருமூச்சுடன் நின்றேன். கால்களை தழுவி நீர் ஓடியது. உன்னிப்பூ கொத்து காற்றிலாடி உசுப்பியது... இருட்டிலும் வெளிச்சத்திலும் பளபளக்கும் அம்மாச்சியின் பத்துக்கல் மூக்குத்தி போல.