கடவுளின் டி.என்.ஏ:சிறுகதை

   ஏப்ரல் புரவி ஆண்டுவிழா சிறப்பிதழில் வெளியான சிறுகதை.

               கடவுளின்   டி. என். ஏ

இன்று திருச்சி மலைக்கோட்டை தாயுமானஈசனுக்கு  தெப்பத்திருவிழா. பங்குனி வெயில் ஏறுபொழுது. வியர்த்து வழிந்தது.

“சாயங்காலம் தெப்பக்குளத்துக்கு போகனும். இந்த நேரத்துல புத்தகஅலமாரிய எதுக்கு குடையற,”

“போகனுமா?”

“வருஷா வருஷம் தெப்பத்திருவிழா வந்துச்சுன்னா உன்னோட இதே தொல்லை…வயசானவா பாக்கனுங்கறா. புத்ர சோகம் என்னான்னுட்டு தெரியுமாடீ?   அவா வீட்டுக்குத்தான் போக மாட்டிக்கற. பொது எடத்துலயாச்சும் பாக்கலாமில்லையா. உன்னைய கெளப்பி அனுப்பறதுக்குள்ள இன்னிக்கு இன்னொரு பீ.பி டேப்லட் போடனும்,” என்ற அம்மாவின் குரல் பின்கட்டு வரை தேய்ந்து மறைந்தது.

புத்தக அடுக்கின் பின்வரிசையில் இருந்த கடவுளின் டி. என் .ஏ தரையில் விழுந்தது. செல்வா கல்லூரி மாணவனாக இருந்த போதே வெளிவந்த முதல் கவிதைத் தொகுப்பு. 

என்னுரையில் ‘இயற்கையின் அமைதியில் எனக்குள் என்னையே நோக்கிய நொடியில் இல்லாமல் போனேன். இறைவனானேன்’ என்ற வரி அவளை புன்னகைக்க வைத்தது. இறைவன் என்ற சொல்லை செல்வா கண்டபடி பந்தாடுவான். சில நேரங்களில் சிக்ஸராக விளாசுவான். சில நேரங்களில் ஸ்டெம்ப் ஆவுட் ஆகும். அப்போது அவளிடம் வாங்கிக் கட்டிக்கொள்வான். ஒரு முறை முதுகில் ஓங்கி ஒரு அடி வைத்ததாக நினைவு.



பக்கங்களைத் திருப்பினாள். மெல்லிய புழுதிவாசனை. ப்ரிய சங்கரிக்கு என்பதற்கு கீழே கையெழுத்திட்டிருக்கிறான். 

இந்தப் பத்தாண்டுகளில் வேறு யாரும் இந்த வார்த்தையை அவளுக்காகப் பயன்படுத்தியதில்லை. இந்த மொழியில் அன்பிற்கு எத்தனை வார்த்தைகள். அன்பில் எத்தனை எத்தனை விதமான நுணுக்கமான வேறுபாடுகள் உள்ளதோ அத்தனை அத்தனை வார்த்தைகளை உருவாக்கிக் கொள்ளலாம்.

ப்ரியம் என்ற வார்த்தையை எந்த உறவிற்குள்ளும் அகப்படாததாக அவள்   அர்த்தப்படுத்திக் கொள்கிறாள். இறந்தவர்கள் எப்பொழுதும் ஒருவர் மீது அன்றிருந்த அதே அன்பில் இன்றும் நினைவில் இருக்கிறார்கள். அன்பென்பது எப்போதும் வெளிப்படுத்துபவரை சார்ந்ததில்லை. பெறப்படுபவரை சார்ந்தது என்று செல்வா சொல்வான். 

கல்லூரி பயிலும் வயதுகளில் அவன் சமூகம் மீதான கோபம்,அன்பு,படிப்பின் மீதான கர்வம்,கடவுளர்களின் மீதான கேள்விகள், பூர்வீகத்தில் தஞ்சாவூர்கார்க்காரனாக காவிரிநீர் பிரச்சனை மீதான எரிச்சல்,ஆபாச சுவரொட்டிகள் மீதான ஒவ்வாமை, விரதங்கள் மீதான கிண்டல்கள்,மதங்களை மறுபரிசீலனை செய்வதைப்பற்றி என்று  பலவிதங்களில் இளமைக்குரிய அத்தனை  உணர்வுகளிலும் தீவிரமாக இருந்தான். அனைத்தையும் கவிதையாக எழுதிப் பார்த்துக் கொண்டிருப்பான்.

இலங்கை போர் குறித்து அவன் எழுதிய ‘சிங்களத் தீவினுக்கோர் பாலமைப்போம்’ என்ற தலைப்பிட்ட கவிதை கல்லூரி பத்திரிகையில் பிரசுரமாகி அறிவிப்புப்பலகையில் ஒட்டப்பட்டிருந்தது. கீழிருந்த ‘செல்வா’  என்ற பெயர் பலநாட்கள்  முகம் தெரியாததாக இருந்தது. 

அன்று முதலாமாண்டு இளங்கலை மாணவமாணவிகள் கலை இலக்கிய  போட்டிகளுக்கு செல்வதற்காக தமிழ்துறையின் முன் நின்றிருந்தார்கள். அறிவிப்புப்பலகையில் ஒட்டப்பட்டிருந்த அவளுடைய கவிதை பற்றி கேலியாக பேசிக்கொண்டிருப்பவனை எட்டிப் பார்த்தாள். தூணருகே நின்றிருந்தான். அவளைப் போலவே மெலிந்தவன். மீசையில்லாத கரிய முகம். அன்றிலிருந்து அவன் நல்ல மீசை வைப்பது வரையான ஐந்து ஆண்டுகள் அவனுடன் பேசிக்கொண்டும், பெரும்பாலும் அவன் பேசுவதை கேட்பவளாகவும் இருந்தாள்.

‘நாற்புறமும்  சூழ்ந்த கடல்

தமிழ் அழுத கண்ணீரன்றோ’

என்ற வரியையும்,

அந்தத் தீயின் நாக்கு தின்று முடித்தது பூவின் இதழ்களையா? 

என்ற வரியையும் இப்பொழுது வாசிக்கும் போதும் அப்போதுதான் எழுதத்தொடங்கிய இளம்பையனின் நல்ல வரிகள் என்றே தோன்றுகிறது.

‘இந்தப் பொண்ணுங்களை கண்டாவே எரிச்சலா வருது…எப்பப் பாத்தாலும் செல்லங் கொஞ்சிக்கிட்டே…வீட்லருந்து காலேஜ் வரைக்கும் ஒரே மாதிரி இருக்குங்க’ என்று எரிந்து விழுவான்.

ஒரு கவிதையில் தொடங்கிய ப்ரியம் அது. 

‘தொட்டாச்சுருங்கி இலைகளையும், மலர்களையும் விரியவைக்கும் சூரியத்தண்மை அது….’

என்ற அவளின் வரிகளை கிண்டல் செய்து கொண்டிருந்தான்.

“சூரியதண்மையா…எவ்வளவு தப்பான வார்த்தை இது. சூரியனுக்கும் ஹீட்டுக்கும்  என்ன சம்மந்தம் இருக்கு,” என்றான்.

“ பெரும்பாலும் மலர்கள் ஏன் காலையிலயும் அந்தியிலையும் மலருது. எல்லாம் உச்சிவெயில்ல மலர வேண்டியது தானே,”என்றாள்.

“இப்ப என்ன சொல்ல வர்றீங்க,”

“விடியறச்ச… சூரியஔிபடும் போது குளிர்ல இருந்து தண்மைக்கு மாறும்…’

 “புரியல….”

“மெட்ரிகுலேசனா…’ என்றதும் தலையாட்டினான். அவளுக்கும் ஆங்கிலம் தகராறு.

“காலையில சூரியன் வரும் போது cold state லருந்து டக்கு  ஹீட்டுக்கு மாறாதுல்ல.  இடையில ஒரு டெம்பரச்சர் இருக்குல்ல அதுக்கு பேருதான் தண்மை,”

“வார்ம் ஸ்டேட்டா…”என்று நெற்றியை சுருக்கிக் கேட்டான்.

“அப்ப திரவ அழுத்தம் அதிகரிக்குந் தானே. திரவ அழுத்தம்ன்னா…ப்லூயிட் ப்ரஸ்ஸர்,”

“ஓ.கே,”

“அப்ப மலர் மலருது. இலைகள் விரியுது. அதுக்கு பேரு தண்மை தான். வெம்மை இல்ல,”

“ஆர்ஃக்யூ பண்றதுக்காக என்ன வேணுன்னாலும் பேசலாம். கவிதையால எதாச்சும் மாற்றம் வரனும்… பூக்குது ,மலருதுன்னு காலகாலமா இதையே எழுதிட்டே இருக்க வேண்டியதுதான். ஒரு வரிக்கு இவ்வளவு சின்சியரா!” என்று சிரித்து பேசத் தொடங்கிய நீர்மையான ப்ரியம் அது. அதை எதற்குள்ளும் அடைக்கலாம். அடைக்கமுடியாமலும் ஆகலாம். இப்படி தட்டுத்தடுமாறி தான் அவர்களை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டியிருந்தது.

கல்லூரியின் இரண்டாம் தளத்தில் உள்ள  தமிழ் துறையின் அகன்ற நடைபாதையும்,கைப்பிடி சுவரும் தான் அவர்கள் இருவருடன்  இருக்கும் மூன்றாவதான ஒன்று. முதல் ஒரிரு மாதங்கள் அவர்களை உற்று கவனித்தவர்கள் பின்பு போனால் போகிறது என்று விட்டுவிட்டார்கள். உலகஅதிசயங்களில் ஒன்றாக அதைச் சொல்லலாம். அதற்கு அவர்கள் கைகளில் இருந்த விதவிதமான புத்தகங்கள்தான் காரணமாக இருந்திருக்கும்.



சாக்ரடீஸ்ஸிலிந்து மார்க்ஸ் வரை தான்  புதிதாக வாசிக்கத் தொடங்கியவர்களை பற்றி அவளுடன் பேசிக்கொண்டே இருப்பான். அவனுடைய ஆங்கிலம் தான் அவளுக்கு எரிச்சலாக இருக்கும். அவன் அனைவரிடமும் இதையெல்லாம் பேசுபவன் அல்ல. இன்னிக்கு என்ன படிச்சீங்க.. என்று நூலகத்தில் புத்தகம் எடுக்கும்போதோ, கையெழுத்திட வரிசையில் நிற்கும் போதோ அவள் கேட்க வேண்டியிருந்தது. கேட்கும் காதுகளுக்காக காத்திருந்த சொற்களின் பரவசத்தால் சிறகடிக்கும் பேச்சு அவனுடையது.

அன்று கைத்தறி ஆடைகளுக்கு ஆதரவு கொடுப்பதற்காக மாவட்ட ஆட்சியாளர் தலைமையில் மாணவர்களுக்காக ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கூட்டத்திற்கான மணிக்கணக்கான  காத்திருப்பு, ஊர்வலம் என்று முழுநாளும் ஸ்ரீரங்கத்தின்  தெருக்களிலும், நிழலிற்காக நின்ற ஓட்டுக்கூரை வீட்டின்  தாழ்வாரத்திலும் மாக்ஸிம் கார்க்கியின் தாய் நாவலை அவளுக்கு கதையாக சொல்லிக் கொண்டிருந்தான்.

“சில தலைவர்கள் மக்கள் மேல எவ்வளவு அன்பு வச்சிருந்திருக்காங்க. சிலபேரு பதவிக்குக் கூட ஆசைப்படல. அதனாலேயே  அவங்க மேல இம்ப்ரஸ் ஆகுதுல்ல,”

செல்வா சிரித்தபடி, “ உன்னோட பாயிட்ண்டுக்கு வந்துட்டியே..பேசிக்கிட்டே இருந்தா போதுமா? காமராஜ் மாதிரி வந்து செய்யனும்..”என்றான்.

“யாருடா உன்னோட தலைவர்,”

“எல்லா தலைவர்களுக்குள்ள இருக்கிற ஆழமான ஒரு விஷயத்தை தேடிப் போறேன். உன்ன மாதிரி ஒரு தாத்தாக்கிட்ட கதை கேட்டுக்கிட்டு இருக்க முடியாது,”

“என்னோட எய்ம் பாலிடிக்ஸ் இல்லையே..”என்று சட்டென்று சொன்னாள்.

சிறிது நேர மௌனம். அவர்களைச் சுற்றிலும் நண்பர்களின் சலசலப்பு. இத்தனை சலசலப்பும் இதுவரை எங்கிருந்தது என்று தெரியவில்லை. சூழலை இயல்பாக்குவதற்காக செல்வா பேச்சை மாற்றினான்.

 ”பொண்ணுங்களுக்கு சாரி கன்வீனியன்ட்டான ட்ரஸ் இல்ல...”

‘ம்…”

“எங்க மம்மிக்கிட்ட கண்ணுக்கு மை தீட்டத்தீங்கன்னு எவ்வளவு சொன்னாலும் கேட்கமாட்டாங்க. ,” 

அவளின் பிடிவாத மௌனத்தை கலைப்பதற்காக இப்படி எதையாவது உளறி வைப்பான்.

“உங்கப்பா கூடத்தான் பெரியமீசையா வச்சிருக்காரு. முழுசா மழிக்கலாம். இல்லன்னா தாடியா விடலாம்…ஏன் தினமும் மெயின்டெய்ன் பண்றார். திருச்சி ரோட்ல அவரோட கட் அவுட் பாக்கறப்ப பயமா இருக்கு,”

அவன் சிரித்தபடி,“பயமா இருக்கா. அவரு ரொம்ப சென்சிடிவ்டா. அதுசரி மம்மிய எப்பப் பாத்த,”என்றான்.

“உங்கம்மாப்பாவோட ஐம்பதாவது கல்யாணநாளுக்கு இன்விடேசன் குடுத்தில்ல. அதப்பாத்துட்டு  எங்கம்மா பெரியவங்கக்கிட்ட ஆசீர்வாதம் வாங்கிக்கன்னு அனுப்புனாங்க,”

“வந்தியா?”

“எப்பவும் போல முன்னாடியே வந்துட்டேன். உங்கம்மா ஃபர்ஸ்ட் ப்ளோர்ல செகண்ட் ரூம்ல செல்வா இருப்பான். போய் பாரும்மான்னு சொல்லிட்டு அவசரமா போயிட்டாங்க. உங்கண்ணா வராண்டாவில் நின்னு பேசிக்கிட்டிருந்தார். எனக்கு ரூம்க்கு வர பிடிக்கல,”

அவன் உதட்டை கடித்தபடி எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தான்.

“திரும்பி நடந்து மாரீஸ் தியேட்டர் தாண்டி ஜோசப் சர்ச்சில் கொஞ்ச நேரம் இருந்தேன். ஒருநாள் உங்கூட சர்ச்சுக்கு வரனுன்னு தோணுச்சு,”

“நடந்தேவா போன…”

“ம்…மலைக்கோட்டை வாசல் ஸ்டாப்பிங்கில் ஸ்ரீரங்கம் பஸ் ஏறிட்டேன்,”

அவன் நெற்றியை சுருக்கியபடி ஒன்றும் சொல்லவில்லை.

“அவ்வளவு பெரிய வீடுக்குள்ள பதட்டமாவே இருந்துச்சு..சாரி செல்வா,”

செல்வாவின் முகத்தில் அத்தனை இறுக்கம். தொடக்க நாட்களில் பார்க்க இப்படித்தான் இருப்பான். அவனை மாற்றுவதற்காக,“சிரமப்பட்டு உன்னோட பழக்கம் எதையாவது நீ மாத்தியிருக்கியா,”என்றாள்.

“இல்லையே…நீ,”

“கால் மேல கால் போட்டறத எல்லாரும் கண்டிச்சுக்கிட்டே இருப்பாங்க.  ரொம்ப கான்சியஸா அதை மாத்திக்கிட்டேன்,”

“இல்லையே…லைப்ரரியில கால்மேல கால் போட்டு தானே ஒக்காந்திருப்ப,”

“மாத்திக்கனும்,”

“அழகா இருக்கறத யாராச்சும் மாத்திப்பாங்களா?”

“ நீ இப்பிடில்லாம் லைப்ரரியில டைவர்ட் ஆனா வாழ்க்கையே போச்சு..நீ மாக்ஸிம் கார்க்கிக்கு வா,”

வாய்விட்டு வேகமாக சிரித்தான்.

கல்லூரியில் அவர்களின்  நான்காம் ஆண்டு நடந்து கொண்டிருந்தது. அன்று சாயுங்காலம் தன்னுடைய உயிர் தொழில் நுட்பவியல் ஆய்வகத்திற்கு கவிதை நோட்டுகளுடன் அவளை  வரச்சொல்லியிருந்தான். அவள் சென்ற போது ஓரமாகக் கிடந்த நீள்வட்டவடிவ மேஜையில் அவனுடைய கவிதைத் தாள்களை அடுக்கி வைத்திருந்தான்.

அவள் நோட்டுகளை மேசையில் வைத்துவிட்டு சுழலும் நாற்காலிக்கு ஓடிச்சென்று அமர்ந்து கால்களால் நகர்த்தி சுற்றினாள்.

“இங்க வா,”

“இன்னொரு ரவுண்டு,”

“சரி,”

சிறிது நேரம் அவளின் நோட்டுகளை திருப்பிப் பார்த்தபடி பொறுமையாக இருந்தான்.

“ஆள் வளந்தா போதுமா…பொருப்பே இல்லாம,”

அவள் மூடப்பட்ட ஜன்னல் ஓரம் நாற்காலியை நிறுத்தினாள். நிமிர்ந்து அவள்  முகத்தை பார்த்தவன், “ சாரி..இங்க வா,” என்றான்.

அவள் வெளியே கிளைநீட்டியிருந்த சிவப்பு அரளிபூக்களின் அடர்ந்த நிறத்தை பார்த்தபடி இருந்தாள்.

“Media க்களில் நான் பிரம்மா

Incubator களில் நான் விஷ்ணு

Autoclave நான் சிவன்,”

என்ற அவனின் கேலியான குரலால் திரும்பி புன்னகைத்தாள்.

“என்ன திமிருடா உனக்கு….”

“ஆமா திமிரு தான்…இருக்கனுல்ல,”

தலையாட்டிக்கொண்டே அவன் அருகில் வந்தாள்.

“ஸ்டூடெண்ஸோட கவிதை புத்தகங்கள் கொண்டு வரலான்னு தமிழ் டிபார்ட்மெண்ட் சொல்லியிருக்காங்க. நாம ரெண்டு பேரும் சயின்ஸ்ல…மேத்ஸ்ல ஆளில்ல. மத்த மூணு பேரும் தமிழ்த்துறை . கொஞ்சம் செலவாகுமாம்…நம்மதான் பாத்துக்கனுமாம்,”

“அப்படின்னா வேணாம்,’

“அப்பாக்கிட்ட கேட்டுட்டு வந்து சொல்லு,”

“இல்ல செல்வா…வேணாம்,”

‘நான் வேணுன்னா ‘பே’ பண்ணட்டா,”

அவள் முறைப்பை கண்டதும் அமைதியானான்.

இந்த மாதிரி சுடிதார் எல்லாம் எங்க வாங்கற? என்று சிரித்தபடி தாள்களை திருப்பினான். 

“பிராண்டட் சர்ட் மட்டுமே போடற வசதி உனக்கு இருக்கு…எங்களுக்கு முடியுமா,”

“உன்னோட சுடிதார் கலர் யுனிக். கிளிப்பச்சையும் இல்லாம டார்க்காவும் இல்லாம சாந்தமான பச்சை,”

“என்னது சாந்தமான பச்சையா?’

“உன்னமாதிரி….”என்று புன்னகைத்தபடி  கவிதைகளை வாசித்துக் கொண்டிருந்தான்.

இவனுக்கு நல்ல கரியநிறம்…எண்ணெய் ஊறிய முகம்.  சன்னிதியினுள் படுத்திருக்கும் ரெங்கநாதர் மாதிரி என்று நினைத்துக் கொண்டாள். அவன் அவள் பக்கம் திரும்பி அமர்ந்தான்.

“நீரின்றி நிறமிழக்கும் காப்பர் சல்ஃபேட் போல நீயின்றி நானும்…நல்லாருக்கே,”

“ப்ளஸ் டூ படிக்கும் போது ஏசுவுக்காக எழுதினது…”

அவள் தலையில் ஒரு தட்டு தட்டினான்.

“பாக்கற ஒவ்வொன்னுக்கும் நாலு வரி எழுதுவியா…அது யாரோட புன்னகை..மலரும் மிக மெல்லன்னு,”

“முகமே ஞாபகம் இல்ல. சிரிப்பு மட்டும்தான் ஞாபகம் இருக்கு. நேசனல் காலேஜ் இல்லல்ல பிஷப் ஸ்டூடெண்ட். படிச்சு முடிச்சுட்டு போயிருப்பார்ன்னு நெனக்கிறேன்,”

“லூசு..யாரையாச்சும் பாத்துக்கிட்டே இருந்து வம்பை வாங்கிறாத,”

“செல்வா…நான் கிறுக்குத் தனமா எழுதறதெல்லாம் இருக்கட்டும். நீ என்ன புதுசா இப்பிடி எழுதியிருக்க..”என்று குரலை மாற்றி தாளை அவன் பக்கம் நீட்டினாள்.

‘அரங்கன் மட்டுமா 

அவளை நெஞ்சில் சுமந்தான்…. ‘

பதில் சொல்லாமல் பக்கங்களை புரட்டினான்.

“நாங்கள் உள்ளே படுத்திருக்கும் ரெங்கசாமியை பார்க்க முடிவது வெளியே நிற்கும் ராமசாமியால்…இதை சிலை உடைப்புக்காக எழுதுனியா,”

“இல்ல…மறுபடி சிலை வச்சதுக்காக..”

‘கிள்ளை மொழிபேசும் வெள்ளைக் கிள்ளையே மேனி மட்டுமா வெள்ளை..’ என்ற வரிகளை வாசித்தவள் அவனிடமிருந்த தன் கவிதைத் தாள்களை பிடுங்கி மூடி வைத்தாள்.

“உன்னோட எய்ம்…பாலிடிக்ஸ் தானே.  தேவையில்லாம மனசை விரயம் பண்ணாத…” 

நெற்றியை சுருக்கினான்.

“நாம விழுந்து விழுந்து படிக்கறதெல்லாம் இதைப்பத்தி தான்.  கொஞ்சம் விட்டா ஹார்மோன்ஸ் தொல்லை பண்ணி மத்தவிஷயங்களை ஒன்னுமே இல்லைன்னு சொல்லும்..”

“ம்…”

“காந்தி காலத்துல காந்திய பாக்கறப்பவே அவ்வளவு எமோஷ்னல் ஆவாங்களாம்,”

“ம்,”

நிமிர்ந்து அமர்ந்து சட்டையை இழுத்து விட்டுக்கொண்டான். அவனின் தீர்க்கமான பார்வை கூர்மையானது.

“எல்லாரும் யாரையாச்சும் தலைவர்ன்னு சொல்லிக்கிறாங்கடா. தலைவன்னு நானும் ஒருத்தரை  சொல்லனுன்னு ஆசையா இருக்குல்ல,”

அவள் தோளில் தட்டி சிரித்தான். 

“நீ சாதாரண பையன் இல்ல செல்வா. அல்ஃபா மேல் ன்னு சொல்லுவாங்களே அந்த மாதிரியோன்னு தோணுது. சாதாரணமான விஷயங்களுக்கெல்லாம் நீ மனசையும் நேரத்தையும் கொடுத்தா பெரிய விஷயங்களுக்கான சக்தி இருக்காது செல்வா..”

“சரி…”

“கல்யாணம் பண்றதுக்கு இன்னும் பல வருஷமாகும். அப்ப இதெல்லாம் சாதாரணமா மாறிடும்,”

“அது சரி…காதல் சாதாரணவிஷயன்னு உனக்கு யாரு சொன்னா…”

“எங்கப்பா…”

“எங்கப்பாவே பரவாயில்ல. உங்கப்பா பயங்கரமான ஆளா இருக்காரே,”

“பேசறச்ச டைவர்ட் பண்ணாத. உங்க வீட்ல இருக்கிற பணத்துக்கு..” என்று நிறுத்தினாள்.

“சொல்லு … சொல்லு,” என்று முகத்தை தீவிரமாக்கினான்.

“அப்பாக்கூட இருந்து சீக்கிரம் பாலிடிக்ஸ் கத்துக்க,”

“பேச்சை மாத்தாத..’

“ஆல்ஃபா மேல் அப்படிக்கறதோட ஸ்பெசல் கேரக்டர்ஸ் சிலது பயங்கரமானதும் கூட,”

“எல்லாத்தையும் சயின்ஸா பாக்க ஆரம்பிச்சுட்ட. இது நல்லதில்ல சங்கரி…”

“சரி..இப்போதைக்கு கவிதைக்கு வா,”

“சொர்க்கவாசலின் தென்றல்

அவள் நாசி நுனி….

முதல் புத்தகத்துக்கு இதெல்லாம் வேணாம்,”

“சரி… எனக்கு ஒரு டவுட்”

“என்ன?”

“சிவனின் DNA template க்கு

சக்தியின் fragments தானா

Complementary?”

“அடுத்த வார்த்தை வந்துச்சுன்னா கன்னத்துல நிஜமா அறை விழும்…”

“இப்ப வருதுல்ல கோவம்,”

முறைத்துக்கொண்டு எழுந்தாள்.

“காதலும் கடவுளும் ஒன்னு சொல்றாங்களே. அதான் சொன்னேன்..”

“நீ என்னோட ஃப்ரண்டு…உன்னோட பேசி நிறைய புரிஞ்சுக்க வேண்டியிருக்கு. ஆர்கியூ பண்றத்துக்கு எதுவும் இல்ல,”

அவன் மீண்டும் அவளின் தோளில்தட்டி தலையாட்டினான். 

“இதை எங்கருந்து பழகின. ஒரு நாளைக்கு பத்து தடவையாவது தோள்ல்ல தட்றது,”

“அப்பாக்கிட்டருந்து,”

“சரியான அரசியல்வாதிங்க,”

அவன் முறைத்துக்கொண்டு எழுந்து சென்றான்.

கவிதை நூல்களின் வெளியீடு அன்று அவனுடைய புத்தகங்கள் அடுக்கப்பட்டிருந்த இடத்தில் நின்றுகொண்டாள். 

“உன்னோட புத்தகமும் வந்திருந்தா இந்த ஈவெண்ட் எனக்கு கம்ப்ளீட் ஆகியிருக்கும்,”

“என்னோட புத்தகம் கண்டிப்பா வரும்..எவ்வளவு பெரிய பொலிட்டீசியனா மாறினாலும் செல்வாவும் வருவான்,”

அவன் குனிந்து அவளுக்கான புத்தகத்தில் ‘நிழலில் இருக்கும் தாவரத்தை தேடிவரும்  வெயிலின் ப்ரியமே இந்த உலகை இன்றுவரை ஆள்கிறது . ப்ரிய செல்வா’ என்று கையெழுத்திட்டு கொடுத்தான்.

“நான் எழுதியிருக்கறத பாத்தா எனக்கே ஆச்சரியமா இருக்கு சங்கரி. இந்த நாலு வருஷத்துல பேசிப்பேசி நம்ம ரெண்டு பேரோட சிந்தனை, மொழி எல்லாம் மாறியாச்சு,”என்று சிரித்தான்.

கல்லூரி முடிந்து அவரவர் வேலைகளுக்கு செல்லத் தொடங்கியிருந்தார்கள். 

ஒருநாள் சாயுங்காலம் வேலை முடித்து ஸ்ரீரங்கம் பேருந்திற்காக அண்ணா சிலை சிக்னலிற்கு சற்றுத்தள்ளி, இ.ஆர் மேல்நிலைப்பள்ளி சுவரோரமாக நின்று கொண்டிருந்தாள். திருச்சிக்குள் நுழையும் வாகனங்களும் திருச்சியிலிருந்து வேளியேறும் வாகனங்களும் கொந்தளிக்கும் சந்திப்பு அது. ஓரமாக நின்ற செல்வாவின் ராயல் என் ஃபீல்டு கண்களில் பட்டது. டவுண்டானாவிற்கு பக்கத்தில் அண்ணா சிலைக்கு கீழே நின்ற  கூட்டத்தைப் பார்த்தாள்.

வெள்ளை வேட்டிசட்டைகளின் இடையில் தனியாக  இளம்ஊதாவில் தெரிந்தான். அவனுடைய என் ஃபீல்டுக்கு அருகில் சென்று கையாட்டியதும் சாலையைக் கடந்து வேகமாக வந்தான்.

அவள் இரண்டடி முன்னால் வந்து அவன் கையைப்பற்றி மண்சாலையின் ஓரத்திற்கு  இழுத்தாள்.

“எவ்வளவு பெரிய சிக்னல்…அறிவிருக்கா…மடத்தனமா க்ராஸ் பண்ற,”

“சாரி..சின்ன எக்ஸைட்மெண்ட்..”

அரசியல் பற்றியே பேசினான். படிப்பதற்கும் நடைமுறையிலும் நிறைய வேறுபாடுகள் இருப்பதாக சொல்லிக்கொண்டே இருந்தான்.

“இது யார் படிச்ச ஸ்கூல்ன்னு தெரியுமில்ல..ராமன் ..நோபல் அவார்ட் வின்னராக்கும். அவரெல்லாம் எத்தனை எத்தனை விஷயங்களை சமாளிச்சாரோ..இங்க நின்னுக்கிட்டு புலம்பற,”

“உனக்கு பேசறதுக்கு எதாச்சும் கிடைச்சுருமா? இல்ல தேடிக் கண்டு பிடிப்பியா,”

“கண்முன்னால இருக்கறத பாத்தாவே போதும். தேடிக் கண்டுபிடிக்கெல்லாம் வேணாம்,”

“ம்,”

“அரசியல்ன்னு இல்ல ஆரம்பத்துல எல்லாமே அப்படிதான் இருக்கும் தலைவரே,” என்றபடி அவன் தோளில் தட்டினாள். அவன் சிரித்தபடி, ‘ மிஸ் யூ சங்கரி,”என்றான்.

“எதுக்கு மிஸ் பண்ற…உங்க ஆஃபீஸ்ல யாரும் ஃப்ரண்ட் கிடைக்கலையா,”

“இந்த சிரிப்போடையே கிளம்பறேன்..எங்க கட்சி ஆஃபீஸ்க்கு ஒருநாள் நீ வரனும்,” என்றபடி ஓடி சாலையைக் கடந்தான்.

 செப்டம்பர் மாதத்தில் ஒரு சாயுங்காலம் ஜெயா தொலைபேசியில் அழைத்தாள்.

 “என்ன ஜெயா ஆச்சரியமா இருக்கு…”

“செல்வா சீனியர்க்கு ஆக்சிடெண்ட்க்கா,”

“செல்வாவுக்கா..எப்ப,”

“காலையிலக்கா. கோமாவுல இருக்காரு. தலையில நல்ல அடிக்கா..பேங்க் முன்னாடி நிறுத்தியிருந்த பைக்கை பின்னாடி தள்ளும் போது ஏதோ வண்டி மோதுச்சாம்…வண்டி கீழ சாயும்போது இவரும் விழுந்துட்டாராம்,”

தலையில எங்கே? என்று அவள் மனதிற்குள் ஓடியது.

“அக்கா நீங்க வந்து பாருங்கக்கா..அவங்கப்பா  நீதான் சங்கரியான்னு என்னையக் கேட்டாரு,”

“அவன் முழிச்சதும் போய் பாக்கறேன்,”

“இல்லக்கா…எதுக்கும் போய் பாருங்கக்கா,”

மூன்றாம் நாள் அவன் எழுந்து கொள்ளவே இல்லை. ராஜகோபுர வாசல் நிறுத்தத்தில் திருச்சி பேருந்திற்காக சங்கரி அப்பாவுடன் நின்றாள். எதிர்புறம் செல்வாவின் கண்ணீர் அஞ்சலி அறிவிப்பை இரண்டு பையன்கள் ஒட்டிக் கொண்டிருந்தார்கள். செல்வாவின் தீர்க்கமான முகம். சட்டென்று அவள் கழுத்தில் ஒரு நழுங்கல் போன்ற உணர்வு. பின்தலையில் எறும்பு ஊர்வதைப் போன்று கிளைவிரித்துப் பரவியது. அனைத்தும் முடிந்து வீட்டிற்கு வந்து சேரும் வரை எந்த நினைப்பும் இல்லாமல் அவள் மனம் அசையாமல் இருந்தது.

ஒருமாதம் கழிந்து காலை நேரத்தில் மாடி கைப்பிடி சுவரில் சாய்ந்து அமர்ந்திருந்தாள். காவிரியில் குளித்துவிட்டு அவளின் அப்பா மாடிக்கு வந்தார். அவரின் உபகரணங்களுடன் அமர்ந்து செவ்வகக் கண்ணாடியை முன்னால் நிறுத்தினார். சூரிய ஔி வெப்பம் கொள்ளத் தொடங்கியிருந்தது. முகத்தில் நுரையை தடவும் வரை அமைதியாக இருந்தார்.

 செவனோக் கிளாக் பிளேடை  சவரக்கருவியில் பொருத்தியபடி, “என்னப்பா…ஒடம்பு சரியில்லையா,” என்றார்.

“கழுத்துல ,பின்தலையில வலிக்குதுப்பா. தோள்பட்டையில கூட வலி இருக்குப்பா..நேத்து வலி ரொம்ப இருந்தது…கையும் வலிக்குதுப்பா..”

இடது கைவிரல்களால் வலது தாவாயை அழுத்தி பிடித்து சவரம் செய்து கொண்டிருந்தவர் அப்படியே நிறுத்திவிட்டு நிமிர்ந்து பார்த்தார்.

“உனக்கு ரொம்ப வேர்க்குதா,”

“ம்,”

சவரத்தை முடித்துவிட்டு அவள் அருகில் வந்தார். 

எங்கு வலி இருக்கிறது என்று கேட்டு முதுகு தசைகள், தோள், கழுத்துப் பகுதியை தொட்டுக் கேட்டார். தோள்பட்டையை மெதுவாக அழுத்தினார். வலியால் அவரின் கைகளை தட்டிவிட்டாள்.  இடதுகையால் அவளை அணைத்துப் பிடித்துக் கொண்டார்.

“செல்வாவுக்கு தலையில ரொம்ப வலியிருந்துருக்குமோ,”

“முடிஞ்சு போனதை யோசிக்காத,”

“மூளையில அடிப்பட்டா வலியே தெரியாதுப்பா,”

அப்பாவின் இதயத்துடிப்பு அவள் காதுகளில் வேகமாகக் கேட்டது. சூரிய ஔி சுள்ளென்று முகத்தில் அறைந்தது. அப்பாவின் வியர்வை வாசம் மூக்கில் ஏறியது.

“ஸ்டார்ட்டிங் பெயின் தானேப்பா…டாக்டரை பாக்கலாம். சரியாயிடும். எனக்கு ஸ்ட்ரஸ் ரிலேட்டெட் பெயினா இருக்குன்னு தோணுது ,”

அப்பா அவளை மேலும் இறுக அணைத்துக்கொண்டார். மெதுமெதுவாக நாட்கள் சாதாரணமாகி கரைந்து மாதங்களாகி ஆண்டுகளாகி கரைந்து கொண்டிருந்தன.

மூன்றுநாட்களுக்கு முன்பு அவளின் முதல் புத்தகம் வெளியாகியிருந்தது. அடுத்தநாளே மீண்டும் வலிப்பிரச்சனைகள் அதிகமாயின. தோள்ப்பட்டையின் பந்து கிண்ண மூட்டிற்குள் மெல்லிய ஆணியை நானோ நானோவாக அறைந்து துளைப்பதைப் போன்ற வலி.

மருத்துவர் ஜாஸ்ப்பர் முகத்தை தீவிரமாக வைத்தபடி, “என்ன பண்ணி வச்சிருக்கீங்க. மறுபடியும் இவ்வளவு பெயின் எப்படி? ஐ தாட் தட் யூ ஆர் மெச்சூர்ட் ஒன்,”என்றார்.

அவள் பேசாமல் அமர்ந்து வலது கை விரல்களை  நெருக்கிப் பிடித்திருந்தாள்.

“பிங்கர்ஸ்லையும் பெயின் இருக்குல்ல,”

தலையாட்டினாள். மேசையிலிருந்த அவள் கையை எடுத்து மெதுவாக அழுத்தினார். வலிக்கு இதமாக இருந்ததும் புன்னகைத்தாள். பெற்றோர் உணர முடியாத வலிகளை உணர்ந்தவர். 

“என்ன செஞ்சீங்கன்னு கேட்டேன்?’

“மூணு நாள் முன்னாடி என்னோட முதல்புத்தகம் வெளியாச்சு டாக்டர்,”

“வாவ்…எவ்வளவு ப்ளஷரான விஷயம்,”

“புத்தகவெளியீடு மனசுக்கு தொந்தரவா இருக்கு டாக்டர்,’

அவர் கைகளுக்குள் இருந்த அவள் கையை மெதுவாக அழுத்திக் கொண்டிருந்தார். நெற்றியை சுருக்கிப் பார்த்தார்.

“என்னோட ஃப்ரண்டு இல்லைங்கறதுதான் மனசு முழுக்க இருந்துச்சு,”

“ஃப்ரண்ட்? என்கிட்டயாவது மனசில உள்ளத சொல்லுங்க. அதை ஏத்துக்கங்க..இந்த ஸ்ட்ரெஸ் சரியாயிடும்,”

“செல்வா எனக்கு ஃப்ரண்ட் மட்டும்தான் சார். உங்களுக்குமே புரியலயா? க்ளோஸ் ஃப்ரண்டு திடீர்ன்னு அகாலமா செத்துப்போனா இருபத்தி மூணுவயசு பொண்ணு எப்படி ஹேண்டில் பண்ணமுடியும்?”

மருத்துவர் புன்னகைத்தார்.

“நம்ம வீட்ல யாருக்காவது இப்படி நடந்திருந்தா? ஃப்ரண்டுன்னா யாரோவா? அது நம்மளே தானே. செல்வாவ என்னால வேறமாதிரி யோசிக்க முடியாது,”

“ஓ.கே…வீட்ல இழப்புன்னாலுமே தாண்டி வந்து தானே ஆகனும்,”

“ஆமா டாக்டர். இப்ப ஒன்னும் நான் சின்ன பொண்ணு இல்லை. என்னால தவிர்க்க முடியலன்னாலும் மேனேஜ் பண்ணிக்க முடியும்,”

“குட்…” என்று சிரித்தபடி மாத்திரைகளை எழுதினார்.

“இன்னுமா கெளம்பல? “ என்ற அம்மாவின் குரல் அவள் புலன்களை உசுப்பியது. செல்வாவின் புத்தகத்தை அடுக்கில் வைத்துவிட்டு ஊதாநிற பருத்திப்புடவையின் கஞ்சி மடிப்பை கலைத்து உதறினாள்.

மலைக்கோட்டை வாசலில் பேருந்திலிருந்து இறங்கும் போதே மெல்லிய வலி தொடங்கியிருந்தது. பர்சில் மாத்திரை இருக்கிறதா என்று மூன்றாவது முறையாக பார்த்துக்கொண்டாள். செயிண்ட் ஜோசப் சர்ச்சில் நுழைந்து சற்று நேரம் அமர்ந்தாள். சடாரென்று தோள்பட்டை பதறி அடங்கியது. இயேசுவே.…என்று தோள்ப்பட்டையை தடவிக்கொண்டாள். முன்னால் இருந்தவர் திரும்பிப்பார்த்தார். 

மலைக்கோட்டையை பார்த்தபடி சாலையைக் கடந்து தெப்பக்குளக்கரையில் அவள்  நிற்கும் போது இருட்டத் தொடங்கியிருந்தது. நல்லக்கூட்டம். ஐந்தாவது முறையாக தாயுமானசுவாமிகளும், மட்டுவார் குழலம்மையும் தெப்பக்குளத்தை வலம் வந்து கரையேறியதும் கூட்டம் கலையத் தொடங்கியது. 



வழக்கம் போல வடக்குப்புற படிக்கட்டுக்களில் சென்று அமர்ந்தாள். இருள் நீராக கரைந்தது போல இருந்த தெப்பக்குளம் விளக்கொளியில் மினுமினுத்தது. உச்சிப்பிள்ளையார் குன்று குட்டி  யானையின் நிழலைப் போல நின்றது. செல்வாவின் அப்பா முதலில் அவளின் கண்களில்பட்டார். அவள் எழுந்து நீண்ட கருங்கல் படிகளில்  நின்று கொண்டாள். 

வேகவேகமாக வெள்ளைவேட்டி சரசரக்க வந்தவர் , “எப்பிடிடா இருக்க?” என்று தோளில் கைவைத்தார். சட்டென்று உடல் பதறியது. சற்று நகர்ந்து கொண்டாள். அவர் புன்னகைத்தபடி பின்னால் திரும்பி செல்வாவின் அம்மாவைப் பார்த்தார். கையிலிருந்த அவளின் முதல் புத்தகத்தை அம்மாவிடம் கொடுத்தாள்.

“அரசியலுக்கு வரனுங்கிறியே..கவிதை, புத்தகன்னு சுத்த முடியாதுன்னு ஒரு தடவை செல்வாக்கிட்ட சொன்னேன். நான் எழுதினாலும் சங்கிரி எழுதினாலும் அடிப்படையில ஒன்னுதாம்ப்பா. ஐஞ்சு வருஷமா அவ்வளவு பேசியிருக்கோம்ன்னு சொன்னான். நாங்க ரெண்டு பேரும் சீக்வன்சா …என்னமோ சொன்னான்,”

“சீக்வன்ஸ்ப்பா…மரபணுன்னு சொல்றாங்கல்ல. அதுல உள்ள அடுத்தடுத்த வரிசை….” 

“அதுதான்,”என்று மீண்டும் தோளில் தட்டினார்.

அவரை பக்கவாட்டில் பிடித்தபடி, “தொப்பையக் குறைங்கப்பா…கட்டிப்பிடிக்க பயமாயிருக்குல்ல,’என்றாள்.

அவர் சத்தமாக சிரித்தபடி, “குறச்சிட்டா போச்சு,”என்றார்.

“ஆமா குறச்சிட்டாலும்,”என்ற அம்மா புத்தகத்தை புரட்டினாள்.

“எதைவிட்டா தொப்பை குறையுன்னு எங்களுக்குத் தெரியும்,” என்று தோளில் கிடந்த துண்டால் முகத்தை துடைத்துக் கொண்டார்.

“டாக்டர் சொல்லி கேக்கல,”

“பிள்ளை கட்டிப்பிடிக்க முடியலேங்குது. அப்பறம் எதுக்கு இந்த ஒடம்ப வச்சுக்கிட்டு. என்னம்மா,”

அம்மா சிரித்தாள்.

எங்கள் மூவருக்கும் முன்பாக கரிய  தெப்பக்குளம் பளபளத்து ததும்பியது. தெப்பம் எப்போதோ கரையேறி சென்றிருந்தது. தெப்பம் கலைத்த தண்ணீர் முடிவில்லாது அலைகழிந்து கொண்டிருந்தது. அப்பாவின் கரத்திற்குள் இருந்த அவளின் வலது தோளின் ஆழத்தில் வலி மெல்ல மெல்ல கரைந்து கொண்டிருந்தது. 


                         ♦♦♦♦♦♦





 






Comments

Popular posts from this blog

பசியற்ற வேட்டை

பெண் கல்வி,விடுதலை மற்றும் தன்னறம்

எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் நேர்காணல்