Skip to main content

பாதாளக்கரண்டி

                                                                           பாதாளக்கரண்டி           

குப்பைமேனிகளும், வெட்டுக்காயப்பூண்டுகளும் ,தும்பைகளும் சூழ தனித்துக்கிடந்த அந்தக்கிணறு அவர்கள் கவனத்திலிருந்து நழுவியிருந்தது. எப்போதாவது எட்டிப்பார்க்கும் சிறுபிள்ளைகளாலும், பறக்கத்தெரியாமல் பறந்து விழுந்துவிடும் கோழிகளாலும் துணுக்குற்று, “என்ன மண்ணாங்கட்டிக்கு இத திறந்து போட்டுருகானுங்க,”என்று அதன் பக்கத்தில் வருவார்கள்.

செடிகள் அடர்ந்து சிறுபிள்ளைகளும் கிணற்றை மறுதலிக்கும் மழைகாலத்தில் பரவிய காய்ச்சலால் அது மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டது. ஊரின் தெற்குத்தெருவான  கணபதிபாளையத்தின் மையத்து நாற்சந்தியிலிருந்தது அந்தக்கிணறு.

ப்ளீச்சிங் பவுடர் கொட்டப்பட்டு மீண்டும் தனிமையில் அமர்ந்த அதை லட்சுமி அம்மாவின் திடீர் இறப்பு எழுப்பியது. அன்று கூடிய கூட்டத்திற்கு இடம் பற்றாமல் ஆட்கள் கிணற்றின் சுற்றுசுவரிலும் ,முன்னால் போடப்பட்டிருந்த சிமெண்ட் தளத்திலும், சுற்றுசுவர் மட்டத்திற்கு இடிக்கப்பட்டிருந்த மோட்டார் அறைசுவர்களிலும் அமர்ந்தார்கள்.

ட்ரம்ஸ் அராஜகம் இல்லாமல் ஆட்களை அதிரபதற வைக்காமல் தப்புகள் தாளமிட்டன. சத்தம் தாளமுடியாதவர்களின்  சொல்லமெல்ல முடியாத பதற்றமோ, சங்கடமான சொல்கேட்காமல் லட்சுமிஅம்மாள்  போகும்நேரத்திலும் உறுத்தாமலிருந்தாள்.

ஆட்களின் சந்தடியால் கிணற்றுள் சலனம். கிணற்றின் உள்சுவரில் ஏறஇறங்க வைக்கப்பட்டிருந்த கால்பிடி குழிகளில் கூடு கட்டியிருந்த சிட்டுகள் ‘விருட்’ என எழும்பவும், மேலிருந்து கீழே ‘சர்’ என பாயவுமாக சலசலத்தன.

அடுத்தவீட்டின் முன்திண்ணையில் அமர்ந்திருந்த வீரய்யன்பாட்டா, “இந்தக்கேணி வெட்டுனப்ப எனக்கு ஐஞ்சாறு வயசிருக்கும்.இங்கனயே பழியாக்கெடப்பம். எங்கள மூக்கன் விரட்டிக்கிட்டே இருப்பாரு,”என்றார்.

பாட்டாவிற்கு பக்கத்தில் சேகர்,“மூக்கன்னா?”என்று புருவங்களை உயர்த்தி நெற்றியை சுருக்கினான். வெள்ளைவேட்டியை கொஞ்சம் சுருட்டியபடி திரும்பி அமர்ந்தான்.

“செவப்புகல்லுதோடு ஒட்டர் இருக்காருல்ல அவுக முப்பாட்டனாரு..கல்ஒட்டருங்க,”

“ வம்சந்தொட்டு நம்மளோட தின்னு, தூங்கி, செத்து கூடவே வராங்களோ. அவுங்களும் நம்ம ஊருல பூர்வீகமான ஆளுகளா பாட்டா?”

“ஆமய்யா…அந்தகாலத்தில திருப்பதி வரைக்கு போய் வந்தது அவரு ஒருத்தருதான். இந்தக்கேணி வெட்டறதுக்கு அவரு சாதிசனத்துல சூட்சுமுமான ஆளுகள கூட்டியாந்து வேலைய முடிச்சாரு..”

“முன்னாடி வீட்டுகாரவுங்கதான் இந்த சுத்துசுவரு கட்டி  வருசமெழுதி முடிச்சாரு. நம்ம ஊருக்கு வயசு கம்மி..."

சேகர் புன்னகைத்தான்.

"நெசந்தான்..மத்த ஊருகள விட நம்ம ஊரு சின்னப்பிள்ளை தான். நம்ம இந்த மேட்டுக்காட்டை திருத்தினப்பவே அவுங்களும் கூட இருந்தாங்களாம். எங்க அப்பாரு சொல்வாரு. நம்ம ஊருல இங்கருக்கற ஆளுக எல்லாருக்குமே நம்மஊரு பூர்வீகந்தான். அவங்க பாட்டனுங்க  தொழில்காரவங்க. நம்ம பாட்டனுங்க நிலத்துலக் கெடந்தாங்க. பசி பட்டினியால நம்மள்ளாம் சேந்து தான் இங்கன வந்தோம். அப்பெல்லாம் தாயா பிள்ளையா இருந்தோம்,”

“வாய்க்கு வந்தத உலராத பாட்டா..”என்றவன் கூட்டத்தை உணர்ந்து நிறுத்தினான். பின் அவனே, “எல்லாருட்டயும் சும்மா மேம்பாக்கு பழக்கம். அதுனால என்ன ஆகப்போகுது,”என்று சிரித்தான்.

“இன்னிக்கு நீங்க மட்டும் என்னா?  சொத்தெழுதி தருவீங்களா,”என்ற பாட்டா கேலியாக ஒருசிரிப்புடன் நிறுத்தினார்.

“என்னன்னு சொல்லு பாட்டா..”

“சொன்னா கோவிச்சுக்கப்பிடாது..”

“இல்ல சொல்லு..”

“பொம்பளைக்கு வைக்கிற கெடுபிடிய சாதிசனத்துக்கும் வச்சுப்புட்டீங்களே..”என்றார். சற்று நேர அமைதிக்குப் பிறகு  வாயிலிருந்த புகையிலையை காறித் துப்பினார்.

வெற்றிலைத் துகள்களை துப்பிவிட்டு முற்றிலும் வெண்மையான தாடிமீசையை தோள்துண்டால் துடைத்தார். பின்,“அவங்க குடும்பத்துக்கு அப்ப கஷ்டகாலம். வருஷாந்திரமா ஏகாதேசிக்கு சாமிக்கும்பிட நெல்லு இல்லாம போச்சு. அப்பெல்லாம் வயித்துப்பாட்டுக்கு  கம்பும்,குச்சு வள்ளிக்கெழங்கும் தான்.."

இறுமல் வரவும் நிறுத்திவிட்டு இழவுவீட்டில் கொடுத்த தேநீரை குடித்தார். சேகர் மறுபடி கதை என்னாச்சு என்று தூண்டினான்.

 "கம்மஞ்சோறாக்கியா சாமி கும்படறது?  ன்னு அந்தவீட்டு நாய்க்கரு மனசொடிஞ்சு போனாரு. இந்த பக்கத்திலிருந்தவங்க அரிசி நெல்லு பருப்பு எல்லாத்தையும் கொண்டாந்து அவரு வீட்டு வாசல்ல போட்டம். மொதநாளு அரிசிய திரிச்சி கிண்டிப்போட்டாங்க. வெல்லங்காச்சுவான் பரதன்னு ஒருத்தன். அவன் பேரங்கூட மருந்துகடை வச்சுருக்கனே. அந்த பரதன் ஒரு பித்தாள போகினியில கரும்புப்பால் கொண்டாந்தான். புளி உப்பு கரும்புபாலு ஏலகாயி போட்டு தண்ணிய ஊத்தி கரைச்சு பானகம்ன்னு குடுத்தாங்க. அந்த வூட்டம்மா என்னையத்தான் கூப்புட்டு அகப்பைய குடுத்து கலக்க சொன்னது. சொம்பு சொம்பா குடுச்சோம்," என்று சிரித்தார். சேகர் உதட்டை பிதுக்கினான்.

"வஞ்சம் தெரியாத வயசுய்யா. அன்னிக்கு ராவுக்கு மாவுவெல்லம் குடுத்தாங்க. தின்னுட்டு தண்ணியக் குடிச்சுப்பிட்டு இங்கனதான் ஒக்காந்தோம். நாங்க கணக்குக்கு ஆம்பள பொம்பளை ஐம்பது பேரு இருக்கும். சின்னப்பிள்ளைங்க கணக்குல இல்ல. அவங்க வூட்ல பத்து பேருக்கும் அதிகம்,"

சேகர் சட்டென்று, "இந்த தெருவுல உள்ள  எல்லாருமேவா?" என்றான்.

"ஆமாமா..குந்தானியில நெல்லப்போட்டு ஆம்பளையும் பொம்பளையுமா குத்திப் புடைச்சோம். தெருவே கூடி  வேலசெஞ்சது. நல்லது கெட்டது எல்லாத்துக்கும் இந்தக் கேணி தண்ணிதான்," என்றபடி கேணியை பார்த்துக்கொண்டே பேசினார்.

"நாயக்கரு ராமாயணக் கதைய சொல்லிக்கிட்டு இருந்தாரு. நாங்க பயக கிளம்பிட்டோம். முருங்க மரத்தையே ஒடிச்சு கொண்டாந்தோம்ன்னு தான் கொல்லனும். இருக்குற முருங்க காய்க  மொத்தமும் போட்டு ஒரு குழம்பு. கதைய கேட்டுக்கிட்டே முறுங்கக்கீரைய ஆளாளுக்கு பறிச்சு போட்டாம். அதையும் வதக்கி விடியகாத்தால வெளிச்சம் வார  நேரத்துக்கு சாமியக்கும்பிட்டாச்சு," 

கிழவர் வானத்தை பார்த்துக்கொண்டு அமைதியானார். பின் அவராகவே பேசத்தொடங்கினார்.

"வெளிச்சம் துலங்குற நேரத்துல  நாயக்கரு தெருவுல நின்னு தலைக்கு மேல கையெடுத்து கும்பிட்டு சீரங்கம் இருக்கற திக்கைப்பாத்து, “ ரங்கா.. உங்கதவு எங்க எல்லாத்துக்கும் தெறந்திருச்சுய்யான்னு,” சொல்லிட்டு  எங்களையும் பாத்தாரு. அவரு நின்னக்கோலம் நெஞ்சுக்குள்ள அப்பிடியே இன்னிக்கும் நிக்கிது.  இந்தத் தெருவு அப்பெல்லாம் செம்மண்ணு பாதை. விடியகாத்தால நூலு பிடிச்சமாறி வரிசையா இலையப் போட்டு சீரங்க சாமியோட சோத்தை தின்னோம். ,”என்றபடி கண்கள் வேறுகாலத்திலிருக்க ஆள் இங்கு அமர்ந்திருந்தார்.

“பாட்டா..பாட்டா..”

“அடுத்த ஏகாதேசிக்கு நாங்களும் வீட்ல சாமிகும்பிட தொவங்கி இன்னிக்கு ஐம்பதுவருசமாச்சு. உங்க வீதிக்காரவுங்களுக்கு இந்தப்பழக்கமெல்லாம் இல்ல,”

சேகர்,“என்ன பட்டா என்னிய ‘உங்க’ன்னு சொல்லி பிரிச்சுவிட்டுட்ட,”என்று சிரித்தான்.

அவர்கள் பேசியதைக் கேட்டபடி தங்கம்மா முட்டிகால் வலியோடு எழுந்து அசைந்து நடந்துவந்து கிணற்றுக்கு முன்னாலிருந்த சிமெண்ட் தரையில் அமர்ந்தார். அந்தக்கம்பத்தில் நிறைமாசக்காரியாக தான் கட்டி வைக்கப்பட்டு அடிவாங்கிய வலியோடு கிணற்றைப் பார்த்துக்கிடந்த அந்த ராவை நினைத்துக்கொண்டார். சோலையம்மா யாருக்கும் தெரியாமல் நீச்சுத்தண்ணியில் உப்புப்போட்டு வாயில் ஊற்றியது தங்கம்மாவின்  நெஞ்சிலிருக்கிறது. 'வடக்கால தெருவிலிருந்து அந்தப்பொருளை திருட்டுத்தனமாக எடுக்கனும்ன்னு விதியில இருந்திருக்க' என்று தனக்குள் சொல்லிக்கொண்டார்.

நீர்மாலைக்காக ஆண்கள் செல்லும்போது கிணற்றை சுற்றியிருந்த  ஆண்கள் கலைந்தார்கள். வசந்தா வந்து அமர்ந்தாள். பக்கத்திலிருந்த சந்திரா, “ என்னப்புள்ள பழைய நெனப்பா,” என்று ஆட்களுடன் நடந்து செல்லும் ரகுராமனை பார்த்தபடி கேட்டாள். வசந்தா கால்களை ஆட்டியபடி, “நான் தப்பிச்சேண்டி,”என்று சிரித்தாள்.

“எங்கண்ணனுக்கு என்னவாம்..கொஞ்சம் குண்டாயிருச்சு,”

“ரொம்ப…”

“வசந்தா,”என்றழைத்த சரவணனை பார்த்து தலையாட்டினாள்.

“எங்காளு எப்பிடின்னு பாக்கறல்ல. அங்க அவப்படற பாடுகள கேக்கமுடியல. நசநசன்னு பயபுள்ள அவளப் போட்டுப்படுத்தறான். எங்கையில கெடச்சிருக்கனும்,”என்று சிரித்தவள் கிணற்றின் கைப்பிடி சுவரைத் தடவி புன்னகைத்தாள்.

அன்றெல்லாம விடிந்தும் விடியாத மெல்லிருளில் வாளிகள் கிணற்றினுள் அடிவாங்கும் சத்தமும், இறைக்கும் வேகத்தில் தண்ணீர் சிந்தும் ஒலிகளும், குடத்தில் ஊற்றும் சத்தமும் ,கொலுசொலிகளும்,வளையல் ஓசைகளும்,சலங்கை வைத்த குடங்களின் மெல்லிய கலகல ஒலிகளும்,பசங்களின் சைக்கிள்களில் குடங்களை வைத்து நகர்த்தும் சத்தமுமாக இருக்கும் இந்தக்கிணறு பின்மதியத்தில் தான் ஓரிரு ஆட்களுடன் அமைதியாகும். வசந்தாவின் மனதில் நினைவுகள் ஓட கிணற்றை எட்டிப்பார்த்தாள்.  அவள் வாளி எப்போதும் இடிக்கும் அந்தமுடக்கிலிருக்கும் சிறுகல்புடைப்பை பார்த்தாள். ரகுராமன் அதில் இடிக்காமல் லாவகமாக சட்டென்று கையைநீட்டி வாளித் தண்ணீரை காப்பாற்றிவிடுவான்.

கிணற்றை எட்டிப்பர்த்த பார்வதி ,“நாப்பது வருஷத்துக்கு முன்ன சரியா மழயில்ல.ராமுழுக்க வாளி சத்தந்தான்..ஊறஊற எறச்சுக்கிட்டே இருக்கறதுதான் வேல. பெய்யற காலத்துல  ஒருமுழகயித்துல மொள்றதுக்கு தண்ணி வந்துரும். போர் போட்டு போட்டுதான் தண்ணி எறங்கிருச்சு,” என்று சுற்றுசுவரில் அமர்ந்தாள்.




தலையைத்தூக்கி மூக்கணாங்கயிறு அற்ற அழகுமுகத்துடன், நல்லஉயரத்தில், செவலை நிறத்தில், சற்றுசதைப்பிடிப்பான உடலுடன், நிமிர்ந்து பார்த்து நடந்து வந்து சாமிமாடு கிணற்றடியில் நிற்கும்.

யாராவது வாளியைக் கொண்டு வந்து வைக்கும் வரை இறைப்பவர்களை பார்த்துக் கொண்டிருக்கும். யாரையும் துரத்தியதோ முட்டியதோ இல்லையென்றாலும் அது வரும்வழியில் தள்ளியே நடந்தார்கள். பார்வதி இறைக்கும் நேரத்தில் அது வந்ததும் வராததுமாக முதல்ஆளாக,செல்லமாக அதை வைதுகொண்டே, எத்தனை அவசரத்திலும் தண்ணீர் வைப்பாள். மையிட்டதைப் போன்ற அழகிய பெரிய கண்களை விரித்தும் சுருக்கியும் அது நீர்உறிஞ்சுவதை இடுப்பில் கைவைத்து பார்த்தபடி, “ உன்னப்போல ஒருப்பிள்ளை வேணும்,” என்பவளைப் பார்த்து கேலி செய்யாதவர்கள் இல்லை. அன்றைக்கு விரய்யன் பாட்டா கதையை தொடங்கிய நேரம் அந்த கிணற்றை சுற்றியே இழவுக்கு வந்திருந்த அனைவரின் பேச்சு நடந்தது. 

அன்னம் தெருவிளக்கு கம்பத்தை பிடித்துக்கொண்டு நின்றாள். எதிர்புறம் நின்ற  மாணிக்கம் அருகில் வந்து, “இந்த கெணத்துல வச்சிதான் உங்கள கல்யாணமான புதுசில அண்ணின்னு கூப்டேன்...இன்னிக்கல்லாம் தண்ணி எறக்க முடியாதுங்க அண்ணி..டாக்டர் வெயிட்டான பொருளெல்லாம் எடுக்கக் கூடாதுன்னுட்டார்”என்றார். 

“மாசமா இருக்கயில எனக்கு எவ்வளவு தண்ணி எறச்சி ஊத்தியிருப்பீங்க தமபி,”என்றவளின் கண்கள் மின்னின.

மாணிக்கம்,“அதுக்கூட செய்யாம அண்ணின்னு எதுக்கு கூப்படனும். நீங்களும் உங்க மாமியா திட்டுனாலும் எனக்கு வாளிக்கயிறு குடுப்பீங்கள்ல. இப்பெல்லாம் ஒருகொடம் தண்ணி தூக்க  முடியாதுங்கண்ணி,” என்று சிரித்தார்.

வாளி கிணற்றுக்குள் விழுந்த அன்று தாயம்மா அழுது கிணற்றடியில் உட்கார்ந்துவிட்டாள். ராசு வீட்டில் பாதாளக்கரண்டி இருந்தது. ஓடிப்போய் வாங்கி வந்தார்கள்.

வாழைப்பழத்தாரில் சீப்புகள் உள்ளதைப்போல மேல்நோக்கி வளைந்த கம்பிகளால் ஆனது அந்தக்கரண்டி.நீர் அலையடங்கியதும் மெதுவாக பாதாளக்கரண்டியில் இரண்டு வாளிக்கயிறுகளை முடிந்து கிணற்றில் விட்டார்கள். மெதுவாக சுற்றி வந்து தட்டுப்பட்டவைகளை தேடி எடுக்க பழைய வாளி,மாட்டுமணி,கொடுவாள் எல்லாம் சிக்கிக்கொள்ள தாயம்மா வாளி மாட்டவே இல்லை.



பிரபாவதி,“சுத்துசுவர் மேல நின்னு எறச்சி தவறிவிழுந்துட்டேன். தமிழண்ணா தான் யோசிக்காம குதிச்சு என் பின்னாடியே கயித்தைப்பிடிச்சு ஏறுச்சு. கிணத்துக்குள்ள இருந்து ஏறும்போ ஒவ்வொரு ஓட்டையிலயும் கால் வக்கிறப்பவும் எனக்கு பதறுச்சு. அந்தண்ணன் என்பின்னாடி காலப்பிடிச்சு பிச்சுப் வச்சுது. தண்ணியிர விழுந்த நடுக்கம் வேற. அந்தண்ணன சாவற வரைக்கும் மறக்கமுடியாது,”என்று கிணற்றை பார்த்துக் கொண்டிருந்தாள்.

பார்த்துக் கொண்டிருந்தவள்..“இத்தன மனுச இருக்கயில. அந்த ஊருல கட்டிக்கிட்டு நாதியத்து கெடக்கறேன். உங்களையெல்லாம் இப்படி நல்லதுகெட்டதுல பாக்கறதுதான். என்னிய எட்டாத கையாக்கிட்டீங்க ,”என்றாள்.

அந்தபக்கமாக நின்ற தமிழ்மாறன் சரித்தபடி,“தூரமாயிருகேன்னு நாங்கெல்லாம் கேட்டதுக்கு.. அந்த ஊர்ல விதியிருக்க நம்ம என்னப்பண்றதுன்னு உங்கய்யன் சொன்னாரு.இருக்கற எடத்துல இருக்கவங்கதான் நம்ம மனுசங்க,”என்றார்.

தெற்குபக்கச்சுவரில் சாய்ந்து கால்நீட்டியிருந்த ரெங்காயி அப்பாயி, “இந்தக்கேணிக்குக்கு ஒரு மானக்கதயிருக்குள்ள,”என்றுத் துவங்கி எதிராளிகளின் கவனத்திற்காக நிறுத்தி பின்தொடர்ந்தாள்.

“மேற்காலவூட்லதான் முதல்ல குடிதண்ணிக்கேணி வெட்டுனாங்க. அந்தக் கிழவி தண்ணியெடுக்க வாரவுங்கள ஏசிட்டே இருப்பா.ஒருநா சண்ட முத்திப்போயி தான் பொதுவுல கெணறு வேணுன்னு வெட்டினது. சந்தானம்ஆசாரியார்தான் பொறுப்பெடுத்து நின்னாரு. அப்பெல்லாம் அவுங்க அம்புட்டு சம்பத்துள்ள ஆளுக,”

மாணிக்கம்,“இன்னைக்கும்தான்,”என்று பெருமூச்சுவிட்டார்.பேச்சு கலைந்து பரவத்தொடங்கியது.

“நம்மூருல பொம்பள ஒருத்த விழுந்து செத்தான்னு தண்ணிய எறச்சி காலிபண்ணாத கேணி இதுமட்டுந்தான்,”

“சுத்துசுவரு எடுத்த பின்னாடி இங்கன வச்சிதான் ராமயணமகாபாரத கத சொல்றது.தெய்வங்காக்கற கேணி. பாழடஞ்சிப்போயிடும் போலயே..”

“நம்மளால என்ன பண்ணமுடியும் பொதுசொத்து,”

“ஐஞ்சாறுவருஷத்துக்கு முன்னால  ஊருக்குள்ள தண்ணியில்லாதப்ப பயலுவலா சேந்து மண்ணிழுத்து தூர்வாரி எடுத்தானுங்க. நமக்கு தண்ணி வேணுங்கறப்ப செய்யமுடிஞ்சுதில்ல,”

“அன்னிக்கு தூர்வாரி எறச்சோம். கைவேல செய்யறதுன்னா யாரு செய்யலங்கறா. இன்னிக்கி தண்ணி தெளிஞ்சு நிக்குது. மனுஷருக்கு எறைக்க முடியல. மோட்டாருக்கு காசு போடனுமில்ல,”

பாட்டா சலிப்பான குரலி்ல், “புழக்காரத்துல இல்லாத நகைநட்டை பெட்டியில போட்டு பூட்டி வைக்கனும்ய்யா. திருத்தமா இருக்கான்னு பாத்துக்கிடனும். அத செய்யாம நமக்கு வேணுங்கறன்னிக்கி நகை அதுவா குதிச்சு வருமா?”என்று சொன்னார். மெதுவாக எழுந்து மூச்சுவாங்கியபடி காலெடுத்து வைத்து நடந்தார்.

“விடும்..போதும்,”என்ற குரல் பேச்சின் திசையை மாற்றியது. எண்ணெய் அரப்பு சங்கிற்காக ஆட்கள் கலைந்தார்கள். கிணற்றின் கதைகளுடன் கும்பலும் கலைந்தது. லட்சுமிஅம்மாவின் திடீர் மரணத்துடன் கிணறும் அங்கிருந்தவர்களின் மனதை சுற்றிக்கொண்டு பேசும் பேச்சிலிருந்தது. 

அடுத்த நாள் கார்த்திகை தீபம். பின்வீட்டம்மா கேணியின் வடமேற்கு மூலையில் ஒருஅகலை வைத்துவிட்டு சென்றாள். மோட்டார் சுவரின் சிறுமறைவில் சுடர் அசையாமல் நின்றிருந்தது.

கிணற்றுக்கு எதிரே இருந்த வீட்டிலிருந்து ஒரு பெண் கையில்அகலுடன் வந்தாள். கிணற்றடியில் தான் நின்ற இடத்தை குனிந்து பார்த்தாள். அவளின் ஒருகை சுடருக்கு முன்னால் காற்றுக்கு மறைப்பாக இருந்தது.  சிட்டுக்குருவிகளின் குளம் இருந்த இடம் என்று நினைத்துக்கொண்டாள். காலுன்றி நின்று இறைப்பதற்கான பள்ளங்கள் அவை. அதில் சிட்டுகள் முழுகி தலையை உதறி விருட்டெனப் பறக்கும். தானும் சிட்டாய் பிறந்திருக்கக் கூடாதா என்று தினமும் நினைப்பாள்.

சட்டென்று இருளில் ஒருஅசைவு தெரியவும் திடுக்கிட்டுப் பார்த்தாள். சுப்பன்ஆசாரி மோட்டார் அறையிலிருந்து நிமிர்ந்து அமர்ந்தார். கலைந்த  தாடிதலைமுடியுடன் கைலியை விடாமல் ஒருகையால் பிடித்துக்கொண்டு அலைபாயும் விழிகளுடன்  அவளைப் பார்த்து சிரித்தார். அவள் அகலை சுற்றுசுவரின் மீது வைத்துவிட்டு வீட்டிற்குள் சென்று பொறிக்கடலையை சிறுபையில் எடுத்து வந்து தந்தாள்.

வாங்கிக்கொண்டவர், “தாத்தன் கேணி..”என்று நெஞ்சில் கைவைத்துக் காட்டினார். முழுநிலவின் ஔியில் காற்றில் பறந்துக்கொண்டிருந்த அவரின் முடிக்கற்றைகளும்,விரிந்த கண்களும்,முகமும் சோபை கொண்டன.

அவளும், “ஆமா மாமா....தாத்தா கிணறு,”என்று தேய்ந்த சுற்றுசுவரை தொட்டுக்காட்டினாள். இரண்டுபேரும் கிணற்றை எட்டிப்பார்த்தார்கள். அவர் தலையை சாய்த்து வாய்விட்டு சிரித்தார். உள்ளே கரியநீர் மினுமினுத்துக் கிடந்தது.






Comments

Popular posts from this blog

அகத்தின் ஆரக்கால்கள்

 [ எழுத்தாளர் மயிலன் ஜி.சின்னப்பனின் முப்போகம் [குறுநாவல்], நூறு ரூபிள்கள் மற்றும் சிருங்காரம் சிறுகதை தொகுப்புகளை முன்வைத்து...] எழுத்தாளர் மயிலன் தண்டவாளத்தின் இருபக்க தண்டுகள் அதை இணைக்கும் குறுக்குப்பட்டைகள், ஜல்லிக்கற்கள் என்று அனைத்தும் சரியாயிருக்க ஓடும் ரயிலில் எங்கோ ஒரு சின்னஞ்சிறு விலகல் அனைத்தையும் குழப்பி தடம் புறளச்செய்கின்றது. புரண்டு கிடக்கும் ரயில் அந்த சின்னஞ்சிறு விலகலின் உண்மையான ரூபம். மறுபடி சரி செய்யப்பட்டு ஓடும் ரயில் பின் எங்கோ அதே போல தக்கி நிற்கும். அதை போன்ற ஒரு உணர்வு சித்திரத்தை மயிலனின் கதைகளை தொகுப்பாக வாசிக்கும் போது உண்டாகிறது. மனதின் அகஅடுக்குகளை கீறிப்பார்க்கும் சவரக்கத்தி என்றும் இவரின் எழுத்துகளை சொல்லலாம். அதில் ஒரு அடுக்கு காயத்தால் அழுகி புறையோடி சீல் கொள்கிறது. அது மற்ற அடுக்குகள் மீது கொள்ளும் செல்வாக்கின் கதைகள் இவை. அந்த வலி நிறைந்த அழுகிய அடுக்கை உருவாக்கும் விசைகளை நோக்கி செல்லும் கதைகள் இவை. மனித இயல்புகள் அல்லது  இயல்புகளை பாதிக்கும் சூழல்கள் என்று இவை இரண்டும் ,அந்த சவரக்கத்தியை தீட்டும் மணலின் நெறுநெறுப்பாகவும் தீட்டிய கத்தியை ...

கர்ணனின் கவசகுண்டலங்கள்

இந்த ஆண்டு நித்யவனத்தில் நடத்தப்படும் முழுமைஅறிவு [Unified wisdom] வகுப்புகளில் மரபிலக்கிய வகுப்பிற்கு செல்ல வேண்டுமென்று தோன்றிக்கொண்டிருந்தது. மரபின் மைந்தன் முத்தய்யா அவர்கள் நடத்தும் மரபிலக்கிய அறிவிப்பு வந்ததும்  வழக்கம் போல நிறைய யோசனைகள். பொங்கல் விடுமுறை நாட்களில் வருகிறது என்பது வேறு. இருந்தாலும் செல்ல வேண்டும் என்று ஒரு பிடிவாதம். பதினாறாம் தேதி ரம்யா மனோகருடன் ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்திலிருந்து வெள்ளிமலை சென்றேன். சாயுங்காலம் ஐந்து மணி்க்கெல்லாம் மலையேறிவிட்டோம். அங்கு ஈரோடு கிருஷ்ணன் அவர்களை முதலில் பார்த்தோம். அவருடன் எங்கள் வகுப்பு சகாவான ஆனந்த் குமார் அறிமுகமானார். பின்பு அறைக்கு சென்று வந்து மலைச்சூழலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அங்கிருந்த திறந்தவெளி இருக்கைகளில் ரம்யாவும் நானும் கொஞ்சம் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நல்ல நட்பிற்கான அடித்தளம். மேடம்,கமலதேவி,கமலா...கடந்து...ரம்யாவை அக்காவிற்கு வர வைத்ததும் வேலை முடிந்தது. இனி இயல்பாக எல்லாம் நடக்கும். ரம்யாவின் இனிய முகம் மூன்றாவது நாள் ஈரோடு பேருந்து நிலையத்தில் விடைபெறும் வரை உடன் இருந்தது. அதே ப...

பெருகும் காவிரி

 காவிரியை பார்ப்பது எப்போதுமே எனக்கு பரவசமான பொழுது. பள்ளி வயதில் முசிறி காவிரி. கல்லூரி வயதில் திருச்சி காவிரி. கடைசியாக முசிறிக்கு சென்று நான்கு ஆண்டுகளாகிறது. முசிறியிலிருந்து திருச்சிக்கு செல்லும் பேருந்து வழியில் காவிரி உடன் வரும். கொல்லிமலையில் உருவாகி எங்கள் ஊரில் பாயும் அய்யாறு முசிறி காவிரியில் கலக்கிறது. அண்மையில் எழுத்தாளர் சுரேஸ்குமார இந்திரஜித் கருத்தரங்கிற்காக திருச்சி செல்லும் போது இரண்டுஆண்டுகள் கழித்து  அந்தியில் காவிரியை பார்த்தேன். கொள்ளிடம் பாலத்தில் நல்ல காற்று. கொள்ளிடத்தில் ஓரளவு நீர் இருந்தது. கொள்ளிடம் பாலத்தில் பேருந்து செல்லும் போது வலது பக்கம் மலைக்கோட்டை ,திருவரங்க ராஜகோபுரம் இரண்டும் நீருக்கு அப்பால் இணையாக காட்சிக்கு வரும். அதற்கும் அப்பால் மேற்கு வானில் சரியும் ஆரஞ்சு வண்ண சூரியன்.    மங்கம்மாளை, தாயுமானவரை,ஆண்டாளை,வெள்ளையம்மாளை,ஆண்டாளை போலவே அரங்கனை தேடி வந்த முகலாய இளவரசி சுரதானியை மனம் சென்று தொடுகிறது. அன்னிய படையெடுப்பின் போது கோயில் உற்சவரை காப்பதற்காக கிழக்கு கோபுரத்தில் இருந்து உயிர் விட்டாள் தாசி குலத்து வெள்ளையம்மாள். வெள்ளை ...