Skip to main content

நிழற்குடை

     2020 டிசம்பர் 1 பதாகை இணைய  இதழில் வெளியான சிறுகதை.

                                                  நிழற்குடை                              

வழியெங்கும் காய்ந்து கிடந்தது நிலம். மழைக்கான தவக்காலம் என அசையாமல்  உயிரை பிடித்து நின்றன ஓரிரு நுணா மரங்கள். ஈரமில்லாத காற்று சுழன்று சுழன்று புழுதியை பறத்திக்கொண்டிருந்தது. ஒற்றைத்துளிக்கு ஏந்திய கரங்களென குறுசிறுத்த இலைகளை நீட்டி நின்றன புதர்கள்.

கரட்டு நிலம். வரும் ஓரிரு மழைகளை நம்பி வள்ளிக்கிழங்குகள் மட்டுமே பிழைக்கும். காடுகள் காய்ந்து வரப்புகள் சிதைந்து நிலம் விரிந்து கிடந்தது. கண்ணெட்டும் தொலைவு வரை வெற்றுநிலமாய் நீண்டு கிடந்தது.

இவற்றையெல்லாம் நோக்கி கண்களை சுழற்றிவிட்டு வறண்ட தளுகையாற்றை பார்த்தபடி சுவாதி அந்த சிறிய தடுப்பணையின் கரைமேட்டில் அமர்ந்திருந்தாள். நான்குமணிவெயில் கனன்றது. நிலையில்லாமல் தவித்த துப்பட்டாவை எடுத்து இடப்புறம் நின்ற புங்கையின் கிளையில் முடிச்சிட்டாள் . பத்துநிமிட நடை தொலைவில் இருந்த சின்னவர் வீடு பூட்டிக்கிடக்கிறது. 

அவர் மகன் வீட்டிற்கே சென்றுவிட்டார். அவரிடம் உங்கள் நினைவு வந்தது ,பார்க்கவேண்டும் என்று தோன்றியது என்று தயங்காமல் சொல்லலாம். மனுசருக்குள்ள இதெல்லாம் இருக்கனும் தானே என்று சொல்லிவிட்டு  நீ கூட கனவில வந்த என்பார். உன்னைமாதிரியே ஒரு பொண்ணை பஸ்ஸீல பாத்தேன். பாத்ததிலிருந்து நீ ஒரு எட்டு வந்துட்டு போனா பரவாயில்லை என்று நினைத்ததாக சொல்வார்.

“பொழுது எறங்கறதுக்குள்ள வந்திரனுங்கண்ணு…”என்று அம்மாச்சி சொல்லி சொல்லி அனுப்பினார். இங்கிருந்து இருபது நிமிட நடைதூரத்தில் இருக்கும் வயல்வீட்டின் களத்தில் காத்திருப்பார். ஒருபேச்சு ஒருசொல் ஒருசிரிப்பு ஒருபார்வை ஒருசிணுங்கலை கூட கண்களால் அள்ளி வைத்துக்கொள்வதைப்போல பார்ப்பார். துப்பட்டாவுடன் எழுந்து நடந்தாள்.

பாதையை பார்த்திருந்த அம்மாச்சி தொலைவில் இவளைக்கண்டதும் உள்ளே சென்று தேநீருடன் களத்திற்கு வந்தார். சேர்ந்து குடிக்க காத்திருப்பதை உணர்ந்து தாமதித்ததற்காக அவள் மனம் குன்றியது.

“என்ன கண்ணு மூஞ்சே சரியில்ல…”

“ஒண்ணுல்லமாச்சி…”

“பள்ளிக்கூடம் போனுமேன்னா…”

“இல்லம்மாச்சி…நான் என்ன சின்னப்பிள்ளையா…”

இரவு உணவிற்கு பின் களத்தில் கயிற்றுக்கட்டிலில் படுத்துக்கொண்டு வானத்தைப் பார்த்துக்கிடந்தாள். கயிற்றின் அழுத்தத்தை முதுகு உணர்ந்து கொண்டிருந்தது. அருகில் அம்மாச்சி பேசிக்கொண்டிருப்பதை உள்வாங்கி பதில்கள் சொன்னாள்.  நிலா வானத்தில் ஏறி பாதி தொலைவு வரும் வரை உறக்கம் வரவில்லை. மேகங்கள் நகர்வதை நிலா ஔிந்துகொள்வதை, மீண்டும் அசுரர்களின் சிங்கப்பல் என நீட்டிக்கொண்டு வெளிவருவதைப் பார்த்தபடியிருந்தாள்.

காலையில் சட்டென்று ஒரு துணுக்குறலில் விழிப்பு வந்துவிட்டது. கட்டிலில் கிடந்தபடி முகத்திலிருந்த போர்வையை விலக்கினாள். பச்சைமலைக்குன்றின் மேல் ஔி பரவிக்கொண்டிருந்தது. தலைக்குமேல் அசைந்து கொண்டிருந்த தென்னம்கிளைகளில் காக்கைகள் ஊஞ்சலாடி கரைந்து எழுந்து பறந்து கொண்டிருந்தன. படிகளில் அமர்ந்து கிழக்கை பார்த்துக்கொண்டிருந்த அம்மாச்சி எதை? யாரை? நினைத்துக் கொண்டிருக்கிறார். தாத்தாவையா? இல்லை எந்த நினைப்பும் அற்று சிவனே என்று இருத்தலா?

அசுர பொழுதுல ஒத்தையில வெட்டவெளிய இம்புட்டு நேரம் பாக்கக்கூடாது. பொழுது இறங்கறப்ப மனசு மிரண்டு நிக்கும்…இது மனுசரில்லாத மலையடிவாரம். பொம்பளப்பிள்ளை கைக்காலை கழுவிட்டு விளக்கு ஏத்தனும் என்று நேற்று அம்மாச்சி சொன்னது சரிதானா? 

திடுக்கென்று எழுந்து  போர்வையுடன் கட்டிலில் அமர்ந்தாள்.

 “நெதானமா எந்திரி கண்ணு…அதுக்குள்ள என்ன பதஷ்ட்டம்…நாளைக்குதானே பள்ளிக்கூடம் போவனும்…”

அடுத்தநாள் அதிகாலையில் பேருந்துநிறுத்தம் வரை வந்த அம்மாச்சி எவ்வளவு மறைத்தும் அவர் முகம் சோர்வை, கலக்கத்தை காட்டியது. குன்றின் கீழேயே பாதை. திருச்சியிலிருந்து தம்மம்பட்டிக்கு செல்லும் மங்கம்மாள் காலத்து ராஜபாட்டை இது என்று மணிஅய்யா சொல்வார். இங்குதான் எங்காவது குன்று ஏறி இறங்கிக்கொண்டிருப்பார். அது அவரின்  தினப்படி உடற்பயிற்சி. 

ஊருக்குள்ளிலிருந்து நடந்து வந்து நின்ற அந்த அம்மாளின் மூன்றுசிவப்புக்கற்கள் பதித்த மூக்குத்தி புலரியின் முதல் ஔியில் மின்னியது. அவர் மூச்சிறைக்க அம்மாச்சியிடம், “இதுயாரு…உங்க பேத்தியாம்மா,” என்றார்.

அம்மாச்சி கண்களுக்கு மேல் கைகளைவைத்து உற்றுப்பார்த்து,“யாரு? காமாச்சியா…ஆமா எம்பேத்திதான்…படிக்குது…”என்றார்.

“ஊருக்குள்ளருந்து நடந்து வரதுக்கு அரைமணியாவுதும்மா…”

“அப்படி கல்லுல ஒக்காரும்மா,”

குன்றின் மடங்கலில் இருந்து சட்டென்று பேருந்து தெரிந்தது. பக்கவாட்டில் அம்மாச்சியை பிடித்துக்கொண்டு அடுத்த விடுமுறைக்கு வருவதாக கூறி பேருந்தேறினாள்.

கல்லூரியில் நுழைந்ததும் வீட்டிற்கு அழைத்து அம்மாவிடம் சொல்லியப்பின் விடுதிஅறைக்கு சென்றாள். சன்னலை திறந்ததும் காலை வெயில் சட்டென்று உள்ளே இறங்கியது. குறிப்பேடுகளை கைகளில் எடுத்துக்கொண்டு வெளியில் வந்தாள்.

“ஹாய்…சுவாதி..”என்று குதூகளிக்கும் குரலுடன் அனிதா ஓடிவந்தாள். இவள் முகத்தை பார்த்ததும் உதட்டை சுளித்தபடி உள்ளே சென்று புத்தகங்களை எடுத்து வருவதற்குள் இவள் கீழை தரைத்தளத்திற்கு வந்திருந்தாள்.

பொங்கலும் சாம்பாரும் வாயிற்கும் வயிற்றிற்கும் இடையில் சிக்கித்தவித்தது.

“சுவாதி..மாங்கா ஊறுகா வேணுமா?”

“பொங்கலுக்கா?”

“எதாச்சும் ருசிக்கு வேணுமில்ல…”என்றபடி ஊறுகாய் பாட்டிலை திறந்தாள்.

தட்டை கழுவி அடுக்கும் போது, தோளில் கைவைத்த அனிதாவை, சுவாதி பார்த்த பார்வையில் கையை எடுத்துக் கொண்டாள்.

பிள்ளைகள் வந்து சேர்ந்து கொண்டிருந்தார்கள். புல்வெளிக்கு பக்கத்தில் நிற்கும் போது கோமதி, “ என்னாச்சு சுவாதி?” என்று அனிதாவை பார்த்தாள்.

“காலேஜ்க்கு வெளிய இருக்கற ஏழு கன்னிமார்ல எவளோ ஒருத்தி உள்ள வந்துட்டா…” என்ற அனிதா முன்னால் சென்று நின்று கொண்டாள். கோமதி சிரித்தபடி திரும்பிநின்றாள்.

தோழிகள் அனைவரும் வந்தபிறகு கிளம்பினார்கள். வகுப்பறையில் ஒரே கும்மாளமாக இருந்தது. நிஷா பென்சின் மீது ஏறி நின்று கைகளை ஆட்டி சிரித்தாள். ஹபி கீழிருந்து அவளை பிடித்து இழுக்க முயற்சி செய்தாள். வகுப்பறை முழுவதும் அலைஅலையாக பேச்சு சிரிப்பு ஒலிகள். பக்கத்தில் பயோகெமிஸ்ட்ரி இதற்குமேல் அலையடித்துக்கொண்டிருந்தது.

 பிள்ளைகளுடன் பேசிவிட்டு வந்த அனிதா பின் பெஞ்சிலிருந்து சுவாதியின் குதிரைவால் முடியை பிடித்து இழுத்தாள். இவள் திரும்பாமல் இருக்கவும் பின்புறமிருந்து தாவி கழுத்தை பிடித்தபடி சத்தமாக, “மேடம் இன்னிக்கு மௌனவிரதம்…”என்றாள். எப்பவுமே நடக்கறது தானே என்றபடி மொத்த வகுப்பறையும் ஒருகணம் அவளைப்பார்த்து, அடுத்தகணம் அலையென திரும்பி சத்தமிட்டது.

“ முதல்நாள் இந்த கேஸ்லாம் பேசாம இருக்கறது டிபார்ட்மெண்டோட டோட்டல் வைப்க்கு நல்லது,”என்ற ஹபி சுவாதியின் தோளில் கைப்போட்டு இழுத்தாள்.

“காற்று எத்தனை பாடுபட்டாலும் மரங்கள் அசைவதில்லை…”

ராஜீ முதல் வரிசையிலிருந்து திரும்பி,“சூப்பர்டா…எந்த சினிமா...”என்றாள்.

“அசைவெல்லாம் இலைகளுக்கே…” என்ற சுவாதியின் கன்னத்தை பிடித்து இழுத்துவிட்டு,“விரதம் வாப்பஸ். இந்த டைம் கிரெடிட் எனக்குதான்,” என்று பெஞ்சில் தட்டியபடி ஹபி அமர்ந்தாள்.

“சும்மா சீன் போடுதுங்க. மகளீர் தினத்துக்கு எழுதினது தானே. தமிழ் மேம் ‘வேரோட விழுந்திட்டா என்ன பண்ணுவீங்கன்னு’ ஒரு லுக்கு விட்டாங்க. செம இன்சல்ட். ரெண்டும் வாயத்திறக்கல,”என்று நிஷா சொன்னதும் வகுப்பறை சிரிப்புடன் மணி ஒலித்தது.

ஜெனிடிக்ஸ் வகுப்பில் விடுதி பரோட்டாவை வாயில் வைத்ததைப்போல அனைவரும் அமர்ந்திருந்தார்கள். டி.என்.ஏ கோடிங் நீண்டுகொண்டிருந்தது. ஊரில் கோவில்  வேம்பினடியில் கருங்கல்லில் வடிக்கப்பட்ட பின்னலாய் நெளியும் இரட்டை நாகங்களை ஒத்த வடிவம். ஏன் இந்த இழைகள் ஒற்றையாக இருக்கக்கூடாது.



முன்பெல்லாம் மனமும் உடலும் என்று இரண்டாக தோன்றும். இப்போது அனைத்துமே உடல்தான்.  மனமென்ற ஒன்றைபற்றி வழுத்த ஐயம். உடல் வழுவாக இருந்தால் மனம் என்ற ஒன்றே தேவைப்படாதா? பேசாமல் உண்டு கழித்து வாழ்ந்து செத்துவிடலாம். இயற்கையின் எந்தவிதி மனதை உண்டாக்கியிருக்கும்?

சுவாதி…என்ற குரலோடு சுண்ணக்கட்டி பென்சில் விழுந்தது.

“ஹோம்சிக்கா…”

“சாரி மேம்,”

பின்னால் ஹபி, “மைண்ட்சிக் மேம்,” என்று மெதுவாக வாயில் கைவைத்தபடி சொன்னாள்.

மதியம் உணவுஇடைவேளைக்காக வகுப்பு கலைந்தது.

“அனி…நீ போ..பின்னாடியே வரேன்,”

“லன்ச் ஸ்கிப் பண்ணாத சுவாதி…மரியாதையா வா,”

உணவறையில் ஏகசத்தமாக இருந்தது. ஊர்க்கதைகள் விரிந்துகொண்டிருந்தன.

“எருமமாடு…சாப்பாட்டை எடுத்து வாயில வை. உன்னமாதிரி ஹோம் சிக்கரை நான் பாத்ததே இல்லை. வருசகணக்கா அதே மாதிரியேவா! சர்வைவல் ஆஃப் த ஃபிட்டஸ்ட் மண்ணாங்கட்டியெல்லாம் எழுதி மார்க் வாங்கி என்ன யூஸ்,”

அனிதா பொறுமை இழந்து கொண்டிருந்தாள். 

சாயுங்காலம் விடுதி அறையில் படுத்திருந்தனர். தூரத்து ஊர்களில் இருந்து காலையில் எழுந்து கிளம்பி வந்ததன் களைப்பு. சுவாதி கண்களை விழித்து படுத்துக்கிடந்தாள். 

“தூக்கம் வரலயா?”

“ம்…”

“வீட்டுஞாபகமா…”

“தூங்கவிடாம பண்ணுன கோமதி…செருப்பு பறக்கும்,” என்றபடி சுதா திரும்பிப்படுத்தாள்.

“அவ டிப்ரஸ்ட்டா இருக்கால்ல…உனக்கு தூக்கம்தான் முக்கியமா போச்சா…”என்ற கோமதி இரும்புக்கட்டிலின் முனையில் அமர்ந்து பின்னலை அவிழ்த்துவிட்டாள்.

“ஆமா…ஒழுங்கா சாப்பிட்டா எல்லாம் சரியா நடக்கும்…” என்ற சுதாவின் குரல் கீழிறங்கியிருந்தது.

“அவபாட்டுக்கு இருந்தா...காலையில சரியாகிடுவா. தொல்லைப்பண்ணாதீங்க,” என்ற அன்பு தலையணை மீது அமர்ந்து சுவரில் சாய்ந்தாள்.

“நம்ம இப்பிடி இருந்தா இவ விடுவாளா…இந்நேரம் நை நைன்னு பக்கத்துல ஒக்காந்து உயிர எடுப்பா…”

“ஆமாமா…அவள நிறுத்தச்சொல்லு நாங்க நிறுத்தறோம்…” என்ற அனிதா சுவாதி படுத்திருந்த கட்டில் விளிம்பில் ஓடிவந்து அமர்ந்தாள்.

“ரொம்ப பழசு…புதுசா எதாச்சும்…”

“முன்னப்பின்ன தெரியாத அந்தப்பையனுக்காக கண்ணீர் விடற மனசிருக்கே…அதுல கொஞ்சம் நம்ம ஃப்ரண்டுக்காக…”

“என்ன ஒரு டைமிங்சென்ஸ்…இதோட நிறுத்தினா நல்லாருக்கும்…”

“காலையில ஜெனிடிக்ஸ் கிளாஸ் புரியலையா சுவாதி…”

“யாருக்குதான் புரியுது…பாத்துக்கலாம்…”

“இல்ல…வேறெதாச்சும் இன்ட்ரெட்ஸ்ட்டிங்கா இருக்கும் கேளு...”என்ற சுதா அனிதா அருகில் அமர்ந்து அவள் தோளில் கைப்போட்டாள்.

“டி.என்.ஏ வை பாத்தா கோவில்ல ரெட்டநாகம் இருக்குமே அதுமாதிரி தோணுச்சு…”

“அதானே பாத்தேன். எங்க கொண்டுபோய் டி.என்.ஏ வை சேத்திருக்கா பாரு. மண்டைய வலிக்காம என்ன பண்ணும்?  உயிரோட இருந்தா வாட்சனும் க்ரீக்கும் அந்த கல்லுல மோதி செத்திருப்பாங்க,”

“அவங்களும் ரெண்டுபேர்…ஏன் ஒருத்தர் கண்டுபிடிக்கல,”

“ம்கூம்…ஒருத்தர் ஏன் கண்டுபிடிக்கல? எனக்கு வர ஆத்திரத்துக்கு…இது ஒரு கேள்வியா? நீ பண்ற டார்ச்சருக்கு எங்கசாமி உன்ன சும்மா விடாது பாத்துக்கோ,”

“இங்க பாரு சுவாதி…கண்டதை யோசிக்காத. லிங்க் பண்ணினா எல்லாம் லிங்க் ஆகறமாதிரியே இருக்கும். டீ வந்தப்பின்னாடி குடிச்சிட்டு வேலையப்பாரு…”

சுதா எழுந்து கீழே சென்றாள். தேநீர் கோப்பைகளுடன் வந்து சுரபி முன்னால் ஒரு கோப்பையை வைத்தாள். அவள் ஒரு கோப்பையை எடுத்துக்கொண்டு நாள்காட்டி பக்கம் சென்றாள்.

“அதானே பாத்தேன் …உனக்காக எப்படியெல்லாம் பயலாஜிக்கலா யோசிக்க வேண்டியிருக்கு. ஏய்…மரக்கழண்டவளே இன்னிக்கு உன்னோட தேதி...ஓடிப்போய் குளிச்சிட்டு ரெண்டு பாரதி கவிதை படி. கிச்சன்ல எதாச்சும் வாங்கிட்டு வரேன். வேலையமுடிச்சிட்டு தூங்கு. ரெண்டுநாள் முன்னவே உனக்கு மரகழண்டிருக்குமே…”

“ஜீசஸ்…”என்றபடி அன்பு படுத்தாள்.

“ரொம்ப பேசாத. நீயெல்லாம் முன்னாடி இருக்கவங்களை புலி மாதிரி கடிச்சு கொதறுவ. என்மாதிரி ஆளெல்லாம் அழுதே தீத்துடும். இது கொஞ்சம் திருகல்…” என்ற அனிதா தன் கட்டிலை நோக்கி சென்றாள்.

கோமதி,“இன்றைய தத்துவம் அனிதா …”என்றாள்.  தேநீரை குடித்துக்கொண்டிருந்தவர்கள் சிரித்தபடி சுவாதியை பார்த்தார்கள். அவள் புருவங்களை உயர்த்தி புன்னகைத்துவிட்டு வலிகளுடன் பிளாஸ்டிக் வாளியை எடுத்தாள்.






Comments

Popular posts from this blog

அகத்தின் ஆரக்கால்கள்

 [ எழுத்தாளர் மயிலன் ஜி.சின்னப்பனின் முப்போகம் [குறுநாவல்], நூறு ரூபிள்கள் மற்றும் சிருங்காரம் சிறுகதை தொகுப்புகளை முன்வைத்து...] எழுத்தாளர் மயிலன் தண்டவாளத்தின் இருபக்க தண்டுகள் அதை இணைக்கும் குறுக்குப்பட்டைகள், ஜல்லிக்கற்கள் என்று அனைத்தும் சரியாயிருக்க ஓடும் ரயிலில் எங்கோ ஒரு சின்னஞ்சிறு விலகல் அனைத்தையும் குழப்பி தடம் புறளச்செய்கின்றது. புரண்டு கிடக்கும் ரயில் அந்த சின்னஞ்சிறு விலகலின் உண்மையான ரூபம். மறுபடி சரி செய்யப்பட்டு ஓடும் ரயில் பின் எங்கோ அதே போல தக்கி நிற்கும். அதை போன்ற ஒரு உணர்வு சித்திரத்தை மயிலனின் கதைகளை தொகுப்பாக வாசிக்கும் போது உண்டாகிறது. மனதின் அகஅடுக்குகளை கீறிப்பார்க்கும் சவரக்கத்தி என்றும் இவரின் எழுத்துகளை சொல்லலாம். அதில் ஒரு அடுக்கு காயத்தால் அழுகி புறையோடி சீல் கொள்கிறது. அது மற்ற அடுக்குகள் மீது கொள்ளும் செல்வாக்கின் கதைகள் இவை. அந்த வலி நிறைந்த அழுகிய அடுக்கை உருவாக்கும் விசைகளை நோக்கி செல்லும் கதைகள் இவை. மனித இயல்புகள் அல்லது  இயல்புகளை பாதிக்கும் சூழல்கள் என்று இவை இரண்டும் ,அந்த சவரக்கத்தியை தீட்டும் மணலின் நெறுநெறுப்பாகவும் தீட்டிய கத்தியை ...

கர்ணனின் கவசகுண்டலங்கள்

இந்த ஆண்டு நித்யவனத்தில் நடத்தப்படும் முழுமைஅறிவு [Unified wisdom] வகுப்புகளில் மரபிலக்கிய வகுப்பிற்கு செல்ல வேண்டுமென்று தோன்றிக்கொண்டிருந்தது. மரபின் மைந்தன் முத்தய்யா அவர்கள் நடத்தும் மரபிலக்கிய அறிவிப்பு வந்ததும்  வழக்கம் போல நிறைய யோசனைகள். பொங்கல் விடுமுறை நாட்களில் வருகிறது என்பது வேறு. இருந்தாலும் செல்ல வேண்டும் என்று ஒரு பிடிவாதம். பதினாறாம் தேதி ரம்யா மனோகருடன் ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்திலிருந்து வெள்ளிமலை சென்றேன். சாயுங்காலம் ஐந்து மணி்க்கெல்லாம் மலையேறிவிட்டோம். அங்கு ஈரோடு கிருஷ்ணன் அவர்களை முதலில் பார்த்தோம். அவருடன் எங்கள் வகுப்பு சகாவான ஆனந்த் குமார் அறிமுகமானார். பின்பு அறைக்கு சென்று வந்து மலைச்சூழலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அங்கிருந்த திறந்தவெளி இருக்கைகளில் ரம்யாவும் நானும் கொஞ்சம் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நல்ல நட்பிற்கான அடித்தளம். மேடம்,கமலதேவி,கமலா...கடந்து...ரம்யாவை அக்காவிற்கு வர வைத்ததும் வேலை முடிந்தது. இனி இயல்பாக எல்லாம் நடக்கும். ரம்யாவின் இனிய முகம் மூன்றாவது நாள் ஈரோடு பேருந்து நிலையத்தில் விடைபெறும் வரை உடன் இருந்தது. அதே ப...

பெருகும் காவிரி

 காவிரியை பார்ப்பது எப்போதுமே எனக்கு பரவசமான பொழுது. பள்ளி வயதில் முசிறி காவிரி. கல்லூரி வயதில் திருச்சி காவிரி. கடைசியாக முசிறிக்கு சென்று நான்கு ஆண்டுகளாகிறது. முசிறியிலிருந்து திருச்சிக்கு செல்லும் பேருந்து வழியில் காவிரி உடன் வரும். கொல்லிமலையில் உருவாகி எங்கள் ஊரில் பாயும் அய்யாறு முசிறி காவிரியில் கலக்கிறது. அண்மையில் எழுத்தாளர் சுரேஸ்குமார இந்திரஜித் கருத்தரங்கிற்காக திருச்சி செல்லும் போது இரண்டுஆண்டுகள் கழித்து  அந்தியில் காவிரியை பார்த்தேன். கொள்ளிடம் பாலத்தில் நல்ல காற்று. கொள்ளிடத்தில் ஓரளவு நீர் இருந்தது. கொள்ளிடம் பாலத்தில் பேருந்து செல்லும் போது வலது பக்கம் மலைக்கோட்டை ,திருவரங்க ராஜகோபுரம் இரண்டும் நீருக்கு அப்பால் இணையாக காட்சிக்கு வரும். அதற்கும் அப்பால் மேற்கு வானில் சரியும் ஆரஞ்சு வண்ண சூரியன்.    மங்கம்மாளை, தாயுமானவரை,ஆண்டாளை,வெள்ளையம்மாளை,ஆண்டாளை போலவே அரங்கனை தேடி வந்த முகலாய இளவரசி சுரதானியை மனம் சென்று தொடுகிறது. அன்னிய படையெடுப்பின் போது கோயில் உற்சவரை காப்பதற்காக கிழக்கு கோபுரத்தில் இருந்து உயிர் விட்டாள் தாசி குலத்து வெள்ளையம்மாள். வெள்ளை ...