2020 செப்டம்பர் 12 சொல்வனம் இணைய இதழில் வெளியான சிறுகதை
மயில்தோகை
வெற்றி வீட்டின் பக்கவாட்டு தகரத்தாழ்வாரத்திலிருந்த டி.வி.எஸை நகர்த்தி வாசலில் நிறுத்தினாள். துப்பட்டாவை பின்னால் முடிச்சிட்டபடி வண்டியை கிளப்பினாள்.அது முரண்டுபிடித்தது.அதற்குள் சின்னவள் ஓடிவந்து சீட்டிற்கு முன்னால் ஏறி நின்று கொண்டாள்.வாடாமல்லி நிற கவுன் முட்டிக்காலுக்கு மேல் பூப்போல விரிந்து நின்றது.பெரியவள் பின்இருக்கைக்கு அருகில் காத்து நின்றாள்.
வெற்றிக்கு அவள் முகத்தை ஏறிட்டுப்பார்க்க என்னவோ போல இருந்தது.ஆறுமாதங்களுக்கு முன்பு இருந்ததை விட இவளுக்கு விவரம் தெரிந்து விட்டதா? என்ற நினைப்பு.இப்பொழுது எட்டுவயது பிள்ளைகளுக்கு என்னத்தெரியும் ,என்னத் தெரியாது என்பதே குழப்பமாக இருக்கிறது.
வண்டி கிளம்பி அமர்ந்ததும் அலைபேசி அழைத்தது. “நாங்கல்லாம் வந்தாச்சு…சரவணனும் மோகனாவும் எரகுடி தாண்டிட்டாங்களாம்..வந்து சேரு,”என்ற அம்மா பதிலை எதிர்பார்க்காமல் பேச்சை முடித்தாள்.
உச்சிசிண்டை ஆட்டியபடி சின்னவள் திரும்பினாள்.
“சேவ அறுத்து கொழம்பு வச்சு திங்கப்போறமா….”
“எந்நேரமும் கோழிக்கொழம்பு கறினுட்டு..அங்க போய் என்னத்த திங்கப்போறியோ..”
எரிக்கரையிலிருந்து மேற்காக கொல்லிமலை பாதையில் திரும்பி வண்டியை முடுக்கினாள்.
பத்துநிமிடத்தில் பிச்சாயிகரையில் வண்டி நின்றது.ஆலமரத்தை சுற்றி சருகுகளை கூட்டிப்பெருக்கி ஓரத்தில் அம்மா தீயிட்டு தள்ளிக்கொண்டிருந்தாள்.ஆலமரத்தை சுற்றி ஆற்றுகற்களை எடுத்துவைத்து காரை பூசி கட்டிய மேடை.அத்தை ஓடை நீரை கொண்டு வந்து தரையில் சளக் சளக் என்று தெளித்தாள்.
அப்பாவும் மாமாவும் ஆலமரத்தின் தென்பக்க நிழலில் நின்றார்கள்.மாமாவிற்கு மூட்டை தூக்கி தூக்கி சற்று குனிந்த முதுகு.அம்மாயி கல்கட்டில் அமர்ந்து தாம்பாளத்தில் வைத்திருந்த வாழைப்பழம், செவ்வந்திப்பூ,நசுக்கிய வெல்லம், தேங்காய், பத்திகளை மாற்றி மாற்றி வைத்துவிட்டு நிறைகுடத்தின் நீரை எடுத்தபடி எழுந்தாள்.
புங்கையின் அடியில் வண்டியை நிறுத்தியதும் பிள்ளைகள் இரண்டும் தாத்தாவிடம் ஓடின.இவள் அங்கேயே நின்றாள்.ஓடைக்குள்ளிருந்து மேடேறிய இந்திரனின் தலை தெரிந்தது.அவன் வடக்கு ஓரமாக கிடந்த பாறையில் அமர்ந்தான்.ஓடையில் நீர் செல்லும் சத்தம் தெளிவாக கேட்டது.காக்கையின் எதையோ அதட்டிக் கேட்கும் குரலும் ,அக்காண்டிக்குருவியின் ஏக்கக்குரலும் மாறிமாறி எழுந்தன.
சின்னவள், “அப்பா...வாடீ…”என்று பெரியவளை இழுத்தபடி ஓடினாள்.இறுக்கிக்கட்டப்பட்ட கயிறை அவிழ்த்தைப்போல சின்னவளின் குரல் அனைவரையும் திரும்ப வைத்தது.
குரங்கு குட்டியைப்போல அவன் மேல் தொத்தி ஏறினாள். அவன் பின்புறமாக கையை வளைத்து அவள் தலையில் தட்டி சிரித்தான்.பெரியவளை இடதுகையால் வளைத்துப்பிடித்து அருகில் அமர்த்திக்கொண்டான்.காலையில் ஒருபொழுது பார்க்காததற்கு இந்த ஆட்டம் என்று நினைத்தபடி வாய்க்காலில் இறங்கி கைகால்களை கழுவிக்கொண்டே பிள்ளைகளை அழைத்தாள்.
களத்தில் பைக் வந்து நின்றது.மோகனாவின் கொழுசு வளையல் சத்தங்கள்.ஒடைநீரில் தண்ணீர்பாம்பு ஒன்று துள்ளி ஓடியதை பார்த்தபடி சற்று நேரம் நின்றப்பின் மேட்டில் ஏறினாள்.
“எல்லாரும் வந்தாச்சா…நாந்தான் தாமசமா? வூட்ல நச்சு,”என்றபடி சின்னய்யன் பாட்டா சைக்கிளில் இருந்து இறங்கினார்.வேகமாக வாய்காலில் இறங்கி ஏறி துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டார். கல்கட்டின் முன்னால் மாடத்தை அடைத்திருந்த சிறிய கல்லை எடுத்தார்.உள்ளே எண்ணெய் வழிந்து ஊறி கறுத்த கல்விளக்கு இருட்டுக்குள்ளிருந்து மெதுவாக பார்வைக்கு தெளிந்தது.
“எண்ண ஊத்தி…விளக்கப்பொருத்துங்கம்மா…”என்று சொல்லிவிட்டு படியேறி ஆலமரத்திற்கடியில் சென்றார்.அம்மாயி முன்னமே அந்த இடத்தை விளங்கச்செய்து சந்தனம் குங்குமம் வைத்திருந்தாள்.பாலித்தீன் பையிலிருந்த மாலையை மாமா கீழிருந்து நீட்டினார்.
“மேல வாய்யா…”என்ற சின்னய்யன் பாட்டா கையை குவித்தப்பின் மாலையை பிச்சாயி கழுத்தில் போட்டு அவள் இடையிலிருந்த பிள்ளையை மறைக்காதபடிக்கு மாலையை எடுத்துவிட்டார்.பத்தியை பொருத்தி கல்லிடுக்கில் செருகிவிட்டு அனைவரையும் மேலே அழைத்தார்.சூடத்தை ஏற்றி பிச்சாயிஅம்மனுக்கு காட்டியபிறகு அப்பா அம்மாவை ஒருபக்கமும், மாமாஅத்தையை எதிர்பக்கமும் நிற்க சொன்னார்.
“மானமாற உங்க சின்னபேத்திய தத்து குடுக்க ஒப்புக்குறிங்களாய்யா..”
நால்வரும் தலையாட்டி திருநிறை எடுத்து நெற்றியிலிட்டபடி பின்னால் விலகினார்கள்.வெற்றியும் இந்திரனும்,சரவணன் மோகனாவும் எதிர்நிற்க ஒப்புதல்கேட்டு சின்னவளை கையளித்தார்கள்.மோகனாவும் சரவணனும் சின்னவளுக்கு வெல்லத்தை ஊட்டினார்கள்.பெரியவள் ஆலமரத்தின் ஒருவிழுதின் ஓரமாக அதைப்பிடித்தபடி நின்றாள்.
சின்னய்யன்பாட்டாவிடம் சொல்லிக்கொண்டு ஒவ்வொருவராக கிளம்பினார்கள்.சின்னவள் சிரித்தபடி பெரியவளை நீயும் வாரியா.. என்று அழைத்தாள்.அவள் இந்திரனின் வலதுகையை தன்னிரு கைகளாலும் பிடித்தபடி நின்றாள்.இவள் ஹோண்டாவில் சரவணனுக்கு முன்னால் அமர்ந்து கையாட்டினாள்.
பெரியவள் இந்திரனின் சைக்கிளில் முன்கம்பியில் அமர்ந்து சென்றுவிட்டாள்.சற்றுநேரத்தில் வற்றியவாய்க்காலாக அந்த இடம் மாறியது.வெற்றி கல்கட்டில் ஏறி அமர்ந்து சந்தனம்குங்குமம் கொண்டும், மாலையணிந்தும், பூசைகள் ஏற்றும் முகம் சோம்பியிருந்த பிச்சாயியை பார்த்தபடி அமர்ந்தாள்.
மாலையின் செவ்வந்திப்பூக்களின் இடையில் தெரிந்த குழந்தையின் முகத்தில் எண்ணெய் பளபளப்பில் புன்னகை விரிந்தது. ‘அசையாத மனசக்குடு..இப்பெல்லாம் எல்லாரோட கண்ணுக்கும் எத்தனைக்கு எறக்கமா போயிட்டேன்’ என்று முறைக்க முறைக்க பார்த்துவிட்டு வண்டியை நோக்கி நடந்தாள்.
வழியில் இந்திரன் கருப்பய்யாதாத்தா வீட்டில் பூச்சு வேலைக்கான சாரத்தின் மீது கையில் கரணையுடன் நின்றிருந்தான்.வண்டியை வேகமாக்கினாள்.எப்படியும் பார்த்திருப்பான்.
சின்னய்யன் பாட்டாவோட வேலை இதெல்லாம்.பாக்கலாம்.தத்து குடுத்தா புருஷன் பொண்டாட்டி குடும்பசண்டை தீரும்ன்னு சொல்லியிருக்காரு.இன்னும் ஆறுமாசத்துல சின்னக்குட்டி வந்திறப்போறா…
“வெற்றி… பாத்துப் போ…”
கடந்துபோன மனோஜின் குரல் கேட்டது. சுதாரித்து பாதையில் வண்டியை விட்டாள்.இருபக்கமும் நெல்வயல்கள்.ஒருமைலுக்கு ஒருஊரு.விசுவாம்மாள் சமுத்திரத்தின் முதல்தெருவின் முனையிலிருந்து, சிவன் கோவில் முகப்பில், நாவல்பழநிற பருத்திப்புடவையில் சசி நிற்பது தெரிந்தது.வண்டியை இருக்கிற இரண்டுசந்தில் எந்தப்பக்கம் திருப்பலாம் என்று திரும்ப எத்தனித்த நேரம் அவள் கைத்தட்டி அழைத்தாள்.
“ உள்ள வா..உங்கூட பேசதான் இங்கயே நிக்கறேன்..”
“ஆபிஸ் போனும் சசி..அப்பறமா பேசலாம்..”
“மெயில் பேக்கரே..வண்டிய முறுக்குனா இந்தா பத்துநிமிசமாகாது கோட்டப்பாளையம் போறதுக்கு..எறங்குடி,”
வெற்றி அமைதியாக பூவரசமரத்தினடியில் வண்டியை நிறுத்தி ஆலயத்தினுள் நுழைந்தாள்.கருவறையை நோக்கி சென்றவளின் கையைப்பிடித்து இழுத்த சசி சாமில்லாம் அப்பறமே கும்பிடலாம் வாடீ என்று வெளிச்சுற்றின் மண்பாதையிலிருந்த கல்லில் அமர்ந்தாள்.இவள் மரத்தில் சாய்ந்து கொண்டு முகக்கவசத்தை இழுத்துவிட்டாள்.
“மணிவிஷயம்தான் முடிஞ்சு போச்சே..இப்ப என்னத்த புதுசா கெளப்பியிருக்க,”
“நேரம் சரியில்லன்னு குறி கேட்டாங்க…பிள்ளைய தத்துகுடுத்து வாங்கினா சரியாயிடுன்னு பூசாரிபாட்டா சொன்னாரு..”
“மணிபிரச்சனைக்கு பிறகு நீயெதாச்சும் திருகல் வேல பண்றியா..”
வெற்றி தன் அகன்ற விழிகளை உருட்டி அவளைப் பார்த்தாள்.
“பண்ணுவடி..உண்மைய சொல்லு…”
“இந்திரன் விஷம் குடுச்சப்பிறவு மணி இந்திரன்ட்ட பேசியாச்சு.விஷம் குடிக்கறளவுக்கு பாசம்ன்னா நான் ஏன் உங்கவாழ்க்கையில குறுக்க வர்றேன்.உன்னால ரொம்ப கஸ்ட்டன்னுதான் என்கிட்ட வெற்றி சொல்லறத..நான் கேட்க போகத்தான் பேசறபழக்கம் உண்டாச்சு.இனிமே பேசலன்னு நம்பர ப்ளாக் பண்ணியாச்சு,”
“ரெண்டுபேர் லஃப் டீ,”என்று தொடங்கியவளை கைகளால் தடுத்து,“யாரும் சொல்லாதத சொல்ல வந்துட்டா…கேட்டு கேட்டு கடுப்பாவுது.நாந்தான் சொல்றனே பேசலன்னு..இனிமே இதுவிஷயமா பேசறதானா என்ட்ட பேச தேவையில்ல,”என்றபடி வெளியே வந்தாள்.
வெறிச்சோடிய சாலையில் வண்டி நகர்ந்தது.ஆக்ஸிலரேட்டரை திருகி பிய்த்துவிடலாம் என்ற எண்ணம் வந்ததும் வயல்பாதையை ஒட்டிய ட்ரான்ஸ்ஃபாரத்தின் அருகில் நின்றாள்.வலதுபக்கம் வயல்களை தாண்டி மக்தலேனாலின் ஆலய கோபுரம் ஊசிபோல தெரிந்தது.கைகள் துப்பட்டாவை முறுக்கி இழுத்துக்கொண்டிருந்தன.எங்காவது போய்விடலாம் என்று தோன்றியது எங்கே போவது என்பதும் தெரியவில்லை.
அஞ்சல்அலுவலகத்தின் வேலைகளை கைப்பழக்கமாக செய்தாள்.போஸ்ட்மாஸ்ட்டர் எதுவும் பேசவில்லை.அவர் மூன்றுமாதங்களாகவே பணிசார்ந்த ஓரிரு வார்த்தைகளுடன் நின்றுவிடுகிறார்.பேருந்து வராததால் உப்பிலியபுரத்திற்கு சென்று கொடுக்க வேண்டும்.நேற்று போல தெரிந்த வண்டி எதாவது வருகிறதா என்று பார்த்தாள்.புகைப்படகடைக்கார மணிக்கம் அண்ணன் ஹோண்டாவில் கடந்து சென்றார்.அவர் அவளை பார்த்ததாகவே தெரியவில்லை. வண்டியை கிளப்பினாள்.
குறுக்கு வயல்பாதையில் சென்றாள்.புனிதலூர்து மேல்நிலைப்பள்ளியை கடக்கும் போது ஜெனட் டீச்சர் நினைவுக்கு வந்தார்.இறந்து ஆறுமாதங்களுக்கு மேலாகிறது.பிள்ளகளா என்ன செஞ்சாலும் அதுக்கு நேர்மையா விசுவாசத்தோட இருக்கனும்.பெயில் ஆனா பரவாயில்ல..நீங்க ஒன்னும் மார்க் வாங்கி கலெக்டராகப்போறதில்ல.. காப்பி அடிக்காத என்ற குரல் பின்தொடர்ந்து வந்தது.வாரத்தேர்வு நடக்கும் நாட்களில் ஒருபாட்டம் இதை ஒப்பிப்பார்.அந்த மதிப்பெண்களின் அடிப்படையில்தான் அஞ்சலக வேலை கிடைத்தது.
மூன்றுமாதங்களாக இப்படித்தான்.யார்யாரோ எப்பொழுதோ சொல்லியதெல்லாம் நினைவில் வந்து தொலைக்கிறது.இதெல்லாம் அவனுடன் பேசத்தொடங்கிய நாட்களில் எங்கிருந்தன? இன்று பெரிய மொய்ப்பாக இருக்கிறது.நாள் முழுதும் மனதிற்குள்ளே பேசிக்கொண்டே இருக்கிறாள்.
“காலேசில படிக்கறத விட்டுப்புட்டு போய் தானே இந்திரன கட்டிக்கிட்டு வந்து நின்ன? இப்ப என்னடி அவன் கசந்துபோயிட்டான்.நாளெல்லாம் வெயில்ல நிக்கிறான்.வீடுவாச கட்டி குடும்பத்த உண்டாக்கிட்டான்.இப்ப போய் கழுதறுக்கிறிய..”
ஆமா.ஏன் எனக்கு மணிட்ட பேசனுன்னு தோணுது.
“பிள்ளைக ரெண்டு ஆயிருச்சு.வீட்டுக்குள்ள சத்தம் வரத்தான் செய்யும்.முன்னபேசின மாறிய நீ மீறி மீறி பேசுவ.. அவன் கெஞ்சி கெஞ்சி வருவானா..”
ஆமா…யாரு காதலிக்கற நாள்லமாறியே இருக்கறா…பெரியகுடும்பத்தில் கொத்தன்கொழுந்தன், நாத்திநங்கையோட சசி படாதபாடா.வார்த்தையாலேயே ஈகோவ தூண்டி வம்பிழுக்கற விளைஞ்ச ஆளுக மத்தியில கெடக்கறா.எனக்கு இந்த சிக்கல் இல்லையே.
“ஏன் மணியோட பேசற..”
இந்திரன பிடிக்கல..
அரசமரத்தடி பள்ளத்தில் வண்டி சறுக்கியது.வறண்டு பாதையாகிப் போன தழுகையாறு.வண்டியை கவனமாக மேட்டில் ஏற்றினாள்.
“உன்பின்னாடியே வந்தப்பவும் அவன் படிக்காதவன் தாண்டீ…இங்கிதமா பேசத்தெரியாதவன்தான்.அன்னிக்கு பிடிச்சிருந்ததுதானே.ராமாயணயம் பேசறேன்னு நெனக்காத வெற்றி..அங்கபாரு எத்தன மயிலுங்க.அதுங்களுக்கு தோகை அத்தனையும் அழகுதாண்டி. விரிச்சு ஆடதான் செய்யும்...”
இந்த சசி எதையாவது சொல்வா.மெல்லமாத்தான் புரியும்.
“மனுசருக்கு எதுவும் நிச்சயமில்லம்மா..நாப்பதுக்கு மேல நம்ம ஒடம்பே நம்ம பேச்ச கேக்காது.எந்த மனுசாளானாலும் ரொம்ப சாராணமானவா தான்..யாரும் அப்படிஒன்னும் ரொம்ப ஒசந்து போயிடல.கடுகத்தினி வேத்தும தான் அலைபாயறமனசுக்கு மலையத்தினியா ரூபமெடுக்கும்..லகான இழுத்துபிடிம்மா,”
வண்டியை நிறுத்தினாள்.
வாழைத்தோட்டத்தின் குழுமையான காற்று சூழ்ந்தது.சலசல என்று நீர் பாயும் ஓசை.ஆழ்குழாயிலிருந்து குபுக் குபுக்கென்று பொங்கியது.
விஷம் குடித்து மீண்ட இந்திரன் முற்றிலும் வேறொருவன் என்று தெரியாமல் மருத்துவமனையில் நாளெல்லாம் பேசிக்கொண்டேயிருந்தாள்.வீட்டிற்கு திரும்பிய அன்று தட்டில் ரசத்தை ஊற்றி சோற்றை பிசைய எடுத்தகையை விலக்கி வாங்கிக்கொண்டான்.
“அன்னிக்கு நீ சொன்னியே அதான் நெஜம்.என்னய உனக்குப்பிடிக்கல. இனிமே பிடிக்கவும் பிடிக்காது.அது அப்பிடியே இருக்கட்டும்..அன்னிக்கு விவாகரத்து பண்ணிக்கலான்னயே…”
தீர்மானமாக மணி தன்வாழ்வில் குறுக்கிடமாட்டான் எனத் தெரிந்ததும் இந்திரன் போக்கு மாறிவிட்டதா? அன்றிலிருந்து தினமும் அம்மாவிடம் சாப்பிட்டுவிட்டு வந்து மாடியில் இருந்து கொள்வான்.எனக்கு சரியா..அறிவா பேசத்தெரியல இங்கிதமா நடக்கலன்னுதானே அவன்ட்ட பேசின. இனிமே நாம பேச வேண்டியதில்லை என்பதில் தீர்மானமாக இருந்தான்.பிள்ளைகளுக்காக இந்த வீட்டில் இருப்பான் என்பது நிச்சயம்.
அவன் ஆசையாகக் கட்டிய வீடு.வாசலில் நிறைய இடம்விட்டு, வீட்டிற்குநுழைந்ததும் சற்றுபெரிய அறை, அடுத்து சமையலறை,பின்னால் கழிவறை மாடியில் ஒரு சிறுஅறை.இந்தவீட்டுக்கு தூக்கனாம்கருவிகூடு மாதிரியான அம்சம் கூடியிருக்கு என்று கிரஹபிரவேசத்தை நடத்திய சசியின் கணவர்ஹரி சிரித்தபடி சொன்னார்.
எல்லா சிடுக்குகளில் இருந்தும் வெளிவந்த நாட்களில் ஊர் முன்னர் நடந்தவைகளை ஊகங்களாக்கி, இப்போது நடப்பதாக பேசத்தொடங்கியது.அனைத்தும் தெரிந்த இந்திரன் யாரிடமும் எதுவும் சொல்லாமல் கேட்டுக்கொண்டான்.ஒவ்வொரு சுற்றுக்கும் அவன் சுழன்று மேலேறி கீழ நிற்கும் அவளை முற்றிலுமாக வெட்டிவிட்டான்.
இந்த ஏற்றத்தின் பிடி ஒருநாள் கிடைத்தது.பெரியவளின் மதிப்பெண்களை பார்த்து, “என்னடி நெனச்சிட்டு இருக்க..படிக்கிறியா மாடுமேக்க போறியா..”என்றாள்.
வீட்டினுள் நுழைந்தவன், “கோவம் கூட வருமா இனிமே,”என்று பிள்ளையை அரவணைக்கும் சாக்கில் இவளிடம் ஒரு பேயாட்டம் போட்டான்.
முன்பு எவ்வளவு பேசினாலும் தணிந்து சென்றவனை, பற்றி எரியச்செய்ய தன்னின் ஒரேஒரு கோபமான வார்த்தை போதும் என்று தெரிந்ததும் இவள் தன் விளையாட்டை தொடங்கினாள்.அதன் முடிவாக இரண்டு பேருக்கும் நேரம் சரியில்லை பிள்ளையை தத்துகுடுத்து வாங்குங்க என்று முடித்துவிட்டார்கள்.
சின்னவள் , “டாட்டாம்மா சித்திவூட்டு போயிட்டு வரேன்,” என்று கையாட்டியதை நினைத்ததும் மூச்சுக்கட்டி பெருமூச்சு வந்தது.
மோகனா முந்தானையை நீட்டி பிள்ளையை சுற்றி தன்பக்கம் நிறுத்தி, பிச்சையம்மா காலில் விழுந்ததை நினைக்கும் போது படபடவென்று வந்தது.பிள்ளை இல்லாமல் நொந்து கிடப்பவள்.இந்நேரம் வீட்டில் சின்னவளோடு இருப்பாள்.
வேலை முடித்து திரும்பி வரும்போது சசிவீட்டு வாசலில் நின்றாள்.சங்கு வீட்டிற்குள்ளிருந்து ஈச்சரில் சாய்ந்தபடி எட்டிப்பார்த்தான்.
“ மன்னி..பாலத்து வயலுக்கு போயிக்கா ..”
பாலத்தில் வண்டியை நிறுத்திவிட்டு வரப்பில் நடந்தாள்.கடலைக்காட்டிற்கு தண்ணீர் பாய்ந்து கொண்டிருந்தது.சசி தொட்டியிலிருந்து தண்ணீர் வழியும் இடத்தில் துணிகளை அலசி கருங்கல்லில் போட்டுக்கொண்டிருந்தாள்.முகம் வியர்த்து வழிந்தது.இவள் துணிகளை பிழிந்து அங்கிருந்த கொடிக்கயிற்றில் உலரப்போட்டாள்.அவளும் வந்து முடிக்கும்வரை எதுவும் பேசவில்லை.
“சாரி சசி..”
“இப்பெல்லாம் மனுசாளத்தூக்கிப்போடறதுக்கு நல்லா கத்துக்கிட்டிருக்க...நேத்து அவர்தான் சொன்னார்.பிள்ளய தத்து குடுக்கறதா சொல்றாங்க.உன் ப்ரண்டுக்கிட்ட பேசுன்னார்..”
“எந்தகாலத்துல இருக்கீங்கடீ..ஆறுமாசம் கழிச்சி வரப்போறா..”
“சீதேவிஅக்கா பிடிச்சிருக்கா உன்ன..எந்தகாலத்துல இருந்தா என்னடி..நிம்மதியா இருக்காண்டாமா.நெஞ்சத்தொட்டு சொல்லு எப்பவும் போல இருக்கன்னு..”
“உலகம் போறபோக்கு தெரியல..கிணத்துத்தவளைங்க,”
“நான் என்ன சொல்றன்..நீ என்ன பேசற.வரவர நீ பேசறதே சரியில்ல.அவன் சகவாசத்தில வந்தது,”
“என்னதான் சொல்ற..”
“சரி..நீ இந்தகாலத்து ஆளு தானே…சின்னக்குட்டிய அவளுக்கே குடுத்துடு.உங்களுக்குதான் ‘அம்மா’ ங்றதெல்லாம் பழசு..பொண்ணை அடச்சுவைக்கற தந்தரம்…நெனச்சா ப்ரேக் பண்ணமுடியுந்தானே..”
“ஆமா..என்னால இருக்கமுடியும்..”
“இருடீன்னுதான் சொல்றேனே…”
“…..”
“பிடிக்கல்லேன்னு நேருக்கு நேரா சொல்லிட்டியேடி…உன்பின்னாடியே சுத்தி கல்யாணம் பண்ணினவன்.அந்த ஆத்திரம் இருக்காதா?என் ஹஸ்பெண்ட்டாச்சும் என்னவிட நாலுவருஷம் மூத்தவர்.நம்ம வயசுடி அவனுக்கு.நீ தப்பு செஞ்சாச்சுல்ல.வாதம்பண்ணாத.மன்னிப்ப வேண்டி வேண்டி கைநீட்டிதான் பெறனும்…”
வெற்றி கண்களை மூடி முகத்தை சுருக்கினாள்.நண்பகல் சூரியன் இறங்கிக்கொண்டிருந்தது.சசி அவளையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
“எதாச்சும் சிக்கல்ன்னா ஆதியிலயே என்னோட பேசுடி.ஒன்னாப்பு வாசிக்கையிலருந்து ஒன்னா பழகறோம்.எனக்கு எதும் பிடிபடலன்னா அண்ணா இருக்கார்.. தர்ப்பை கட்டோட தெசவம், விசேசம்ன்னு ஊர்சுத்தி வந்தப்பறம் திண்ணையில ஒக்காந்துண்டு மோர் கேப்பார்.அந்த நேரம்பாத்து மறைக்காயா என்ன கேள்வின்னாலும் கேக்கலாம்…புஸ்தகத்தலந்தோ,தனக்குதோண்றதோ எதானும் சொல்வார்.அத நம்ம சிக்கலோட தொடுத்துக்கலாம்..ஏன் என்னாச்சுன்னு கிண்டிகிண்டி கேக்கற பழக்கம் அந்த சாதுக்கு இல்ல…”
ஒற்றையாய் விரித்திருந்த சேலை வேட்டிகளை திருப்பினார்கள்.
“நான் பொசுபொசுன்னு இருக்கறப்ப, தோள்ல கைவைச்சு என்னை சகிச்சுண்டுரு கண்ணம்மா..நம்ம சின்னகண்ணம்மாக்காக ங்கும்.என்னப்பண்ணித் தொலையறது.இந்திரன் உன்னிய எப்படி வச்சிருந்தான்!”
மோட்டரை நிறுத்திவிட்டு காய்ந்ததுணிகளை மடித்து பேசனில் வைத்தாள்.
“மூணுதெருவில முக்கால்வாசி பிராமணாள் மெட்ராஸ்,பம்பாய்ன்னு செட்டிலாய்ட்டா.பெருமாளுக்குன்னு ஒன்னு,சிவனுக்குன்னு ஒன்னு, முடியாம ஒன்னுன்னு மூணுகுடும்பம்தான் இங்கயே இருக்கோம்.இவர் அண்ணாக்கூட பெங்களூர் போய் வீடு வாங்கிட்டார்.தம்பியும் கிளம்பிடுவான்..வயசானவா ரெண்டுபேர் இருக்கா.இந்த பிராமணனுக்கு இந்த அக்ரஹாரம்,காசிவிஸ்வநாதர்,இந்த வயல விட்டா மேட்டூர்,பாலகிருஷ்ணம்பட்டின்னு மூணுஊரோட நல்லது கெட்டதும்தான்.நான் மத்தவாளை பாத்துண்டிருதன்னா என்னாகும்?”
இருவரும் கண்கள் பளபளக்க பார்த்துக்கொண்டார்கள்.
“கிலேசம்..ஆத்தாமை..வலி..பொருமல்..ஏக்கம்.. இல்லாத பொண்ணுங்கள காட்டு.பசங்களையாச்சும் காட்டு பாப்பம்.நீசத்தண்ணி பக்கம் போறான்னா ரெண்டு பிள்ளைகளையும் விட்டு பேசு..இந்தகாலத்துகொழந்தைகள் வெடிமணி..”
வெற்றி தொட்டியை பார்த்துக்கொண்டிருந்தாள்.தொட்டிநீர் படிகத்தை சிட்டுக்குருவியின் சிற்றலகு கலைத்தது.சற்றைக்குள் மெதுமெதுவாக அது மீண்டும் படிகமாக நிலைத்தது.
“ மயில்தோகையோட ஒரேஒரு கீத்து போதாதா..நம்ம காயத்துக்கு மருந்து போட..”
வெற்றி நிமிர்ந்தமர்ந்தாள்.முகம் கூம்பியிருந்தது.
“அத்தனப் பெரிய தோகையிலந்து உனக்குன்னு ஒரு பீலிய உருவிக்கமுடியலன்னா நீ என்னடி கரோனாகாலத்து மாடர்ன் பொண்ணு..நாந்தான் பெரியம்மை ஜென்னர் காலத்து பழசு,”
சட்டென்று வெற்றி சிரித்தாள்.தொட்டிநீரில் முகம் கழுவினாள்.சசி சேலை தலைப்பால் முகத்தை, கண்களை துடைத்துக்கொண்டாள்.வெற்றி சசியின் குண்டு கன்னத்தை பிடித்து இழுத்தாள்.பசிக்காக கொய்யப்பழங்களை பறித்து வந்தாள்.
பெரியவள் அப்பாயி வீட்டில் இருப்பதை வரும்வழியில் பார்த்தாள்.வீடு அமைதியாக இருந்தது.கையிலிருந்த அலைபேசியை ஓரமாகப் போட்டுவிட்டு தரையில் படுத்தாள்.சின்னவளின் குரல் கேட்டது.எழுந்து அமர்ந்தாள்.அலைபேசியின் வீடியோவில் அவள் குரல் ஒலித்துக்கொண்டிருந்தது.
Comments
Post a Comment