Skip to main content

பிம்பங்கள் அலையும் வெளி

 2019 மே 10 பதாகை இதழில் வெளியான கதை

பிம்பங்கள் அலையும் வெளி

ஒரு சிறு விலக்கம் இத்தனைவிதமாக அர்த்தப்படுமா? என்று சந்தியா மனதை குடைந்தபடி, மிக்சியில் வடைக்கு மசித்த பருப்பை எடுத்து சாந்தாம்மாவிடம், “பெரியம்மா பதம்பாருங்க..”என்று காட்டினாள்.

“போதும் சாமி…வழிச்சிடு…ரொம்ப அரச்சா ருசிக்காது,” என்றார்.வீட்டில் நுழைந்ததும் கதிரின் தோள்களைத் தொட்ட அவள் கைகளிலிருந்து அவன் விலகிக்கொண்டான்.ஏன்? எதாச்சும் இருக்கும்.தணியட்டும் என்று விட்டுவிட்டாள்.என்றாலும் அந்தவிலகல் மனதை சுற்றிசுற்றி வந்து மனதை கலைத்துக்கொண்டிருந்தது.

சுமோவின் சத்தம் வாசலில் கேட்கவும் சாந்தாம்மா, “பத்துநிமிசம் கழிச்சு வரமாட்டான்…இந்த வடையப் போட்டெடுத்துருக்கலாம்.ப்ரிட்ஜில மாவ வச்சுட்டு கையக்கழுவு,”என்றபடி சமையலறையை ஒருநோட்டம்விட்டப்பின்,வெளியே அவசரப்படுத்திக்கொண்டிருந்த சத்தங்களுக்கு விடையாக, “தோ…வந்திட்டோம்,”என்று மருமகளின் தோளைத்தட்டி, “ சீக்கிரம் சுமி,” என்றபடி சிலிண்டர் ரெகுலட்டரை மீண்டும் சரிபார்த்தார்.

கதிர் சந்தியாவிடம்,“துளசி ஏன் வரல?”என்றான்.

“அவனுக்கு இதில நம்பிக்கை இல்ல..”

“எதுலதான் அவனுக்கு நம்பிக்க உண்டு.அம்மாச்சிக்கூடவே ஹாஸ்பிடல்ல இருந்தான்ல..மனசுல இருந்து அதஎடுக்க வேணாம்.சும்மா..டென்சன் டென்சன்னு எல்லாத்தையும் விழுந்து கடிக்கறான்..”

“ஆமா…ஆனா அவனுக்கு நம்பிக்கையில்ல..நீ ஏன் இவ்வளவு கோபமா…”என்று கதிரின் தோளில் கைவைக்கச் சென்றவளை மறுத்து நகர்ந்தான்.இவன்களுக்கு என்னதான் சிக்கல்? என்று அவளுக்கு எரிச்சலாகவந்தது.

மீண்டும்,“சும்மா அதையே சொல்லாத..உனக்கு நம்பிக்க இருக்கா?”என்றான்.

“தெரியல,”என்றவளை உற்றுப்பார்த்து “என்ன பதில் இது?”என்றபடி சுமோவை நோக்கிச்சென்றான்.

நடுஇருக்கையில் பயல்களுடன் அமர்ந்த கதிர் சுமியிடம் “கதவைசாத்து,” என்றான்.பின்னால் நேர்எதிர் இருக்கைகளில் ஒன்றில் சந்தியாஅம்மா,சாந்தாம்மாவும் எதிர் இருக்கையில் சந்தியாவும் நல்லுஅய்யாவும்.

முன்புற இருக்கையிலிருந்தபடி சந்தியாவின் பெரியய்யா, “ஆச்சு..கெளம்புய்யா..”என்று அலைபேசியைப் பார்த்துக்கொண்டிருந்த ஓட்டுநரின்  கவனத்தை அவன் இருக்கைக்கு கொண்டுவந்தார். கைகளை விரித்து வெட்டவளியில் அன்னாந்து பார்க்க வைக்கும்  எல்லைமாரியம்மனைத் தாண்டி துறையூரினுள் மெல்லப்புகுந்து திருச்சி சாலையில் வேகமெடுத்தது வண்டி.

“எல்லயத்தாண்டிருச்சு ஊரு…முன்னெல்லாம் காவாத்தா கோயில்ன்னா ஆறுமணிக்குமேல நடமாட்டமிருக்காது..இன்னிக்கி பக்கத்திலயே குடியிருக்கறோம்…”என்ற பெரிய்யாவிடம் சந்தியா, “காவாத்தாவுக்கு தனியாயிருந்து சலிச்சிருச்சு..அதான் மக்கள பக்கத்துல வச்சிக்கப்பாக்குது..”என்றாள்.

கதிர் முறைத்தான். “இருக்கும்..இருக்கும்…சாமின்னாலும் நம்மளாட்டம் தானே.எத்தனவருசத்துக்கு தனியா நிக்கும்.அதுக்கையில ஒரு பிள்ளசாமிய வைக்கமாட்டானுங்க..”என்றவரைப் பார்த்து புன்னகைத்து, “ஊரகாப்பத்த போலீஸ் வந்தப்புறம் அதுக்கும் பொழுது போகனுமில்ல..”என்றாள்.

“ய்யா…நீங்க வேற.இவ என்னத்து சொல்றான்று புரியாது.கிண்டல் பண்ணுவா..”

“இல்லல்ல பாப்பா சரியாத்தான் சொல்லுது.வேல வெட்டியில்லாம என்னதுக்கு சாமி.திருவெள்ளரையில பெரியபாறமேல அத்தாம்பெரியக் கோவிலு..என்னத்துக்கு புண்ணியம்..”என்று சலித்துக்கொண்டார்.

தாமரைக்கண்ணனிடம் எதையாச்சும் கேட்டிருப்பாராக இருக்கும் என்று சந்தியா நினைத்துக்கொண்டாள். 

ஓட்டுநர், “அந்தக்கோயிலுக்கு எப்பபோனீங்கய்யா..”என்றான்.

“வெள்ளிகிழம சாயங்காலமா  போனேன்,”

“அதான்…வேண்டுதல்லாம் காலையில வைக்கனும்ன்னு எங்கம்மா சொல்லும்,”என்றான்.

அது சரி… கண்விரிய அந்த கொம்பன் நாச்சியாரை பார்த்தபடி நாழி கேட்டான் வாசலில் சர்வாலங்காரபூஜிதனாய் நின்றுக்கொண்டு, இவரை விட்டுவிட்டான் என்று சந்தியாவின் மனதிற்கு ஓட புன்னகைத்துக் கொண்டாள்.

“அது என்ன? சாமின்னா போற நேரத்துக்கு வழிக்கொடுக்கனுமில்ல…கடங்காரனா காலையில வா, மதியானமா வான்னு…”என்று யதார்த்தத்தை சொன்னார்.ஓட்டுநர், “பின்ன..”என்று வேகமாக தலையாட்டினான்.

சாந்தாம்மா, “எல்லாத்தையும் உங்கக்கட வியாபாரமா பாக்காதீங்க..சாமிட்ட அடங்கிநிக்கனும்..”என்றபடி பெரியய்யாவை முறைத்தார்.

பக்கத்திலிருந்த நல்லுவைப்பார்த்த சந்தியா ,அய்யா…அய்யா என்று நாலுமுறையாவது அழைத்து , அவர்அய்யா என்பதை அவருக்கு நினைவுபடுத்தவேண்டும் என்று நினைத்த சந்தியா  , “அய்யா…நல்லா உக்காருங்க,”என்றாள்.அவள்அம்மாவின் சமவயது மாமாமகன் இவர்.

கதிரிடம் நல்லுஅய்யா,“ஏண்டா ஒருபக்கமா ஒக்காந்திருக்க,”என்றார்.

“காலையில எந்திரிக்கையில் தச பெறடிக்கிச்சுய்யா,”என்று திரும்பாமல் சொன்னான்.

சாந்தாம்மா,“எங்கய்யாவுக்கு இப்படிதான் அடிக்கடி ஆவும்...அய்யாவ குப்புற தரயில படுக்கவச்சி அம்மிகுழவிய முதுகுல உருட்டுவாங்க,”என்று பெருமூச்சுவிட்டார்.கோடைவெப்பத்தில் உடல் நசநசக்க சந்தியா பின்னாலிருந்த கண்ணாடி, கதவா? இல்லையா? என்று திரும்பிப்பார்த்தாள். பயல்கள் உறங்கவும் வண்டியில் பேச்சுநின்றது.

புலிவலம் காட்டை வண்டி கடந்து கொண்டிருந்தது.காடு சுள்ளிகளை அடையாளமாக நிறுத்தியபடிமுதல்மழைத்துளிக்கு தவமிருந்தது.

“காடு காஞ்சு போகவும்..சிறுத்த நடமாட்டம் தெரியுது,”என்றபடி ஓட்டுநர் வண்டியை முடுக்கினார்.

“ இந்தக்காட்டுல சிறுத்த இருக்குதாய்யா....”

“நீங்க வேற.. பாக்கற வரைக்கும் நானும் நம்பல…”என்று சிரித்தான்.

 சுமி, “முதுகுபிடிப்புன்னா.. முதுகுல குத்தனுன்னா சொன்னீங்க…எத்தன தடவ குத்தனும்,”என்று கதிரை பார்த்தபடி கேட்டாள்.

சாந்தாம்மா,“நீ பரவாயில்லயே.. விட்டா குத்தி எடுத்து முறத்துல போட்டு புடச்சிருவியாட்டுக்கே..”என்று சிரித்தார்.

கதிர்,“முதல்ல கோயம்புத்தூர்காரனுக்கு நாலுகுத்துகுத்தி பாத்து தெரிஞ்சுக்கிட்டு இங்க வா,”என்றான்.

“எங்கண்ணாவா முதுகு வலிக்குதுன்னு சொன்னுச்சு..எப்படின்னு தெரிஞ்சுகிட்டா அவசரத்துக்கு யூஸ்ஆகுன்னு கேட்டேன்,”என்றாள்.

வண்டி காட்டை உதறிவிட்டது போல வேகத்தைக்குறைத்தது.இவ்வளவு வேகமாக வந்தது அதற்குத்தானே என்று சந்தியாவிற்கு தோன்றியது.சாந்தாம்மா கால்வலியில் முனகியபடி இருந்தார்.

நல்லுஅய்யா, “தினமும் கொஞ்சநேரம் கைகால் பயிற்சி பண்ணனும்..வயசு ஐம்பத்தஞ்ச தாண்டுதுல்ல…நம்ம உடம்பையும் பாக்கனுமில்ல..”என்றார்.

“என்னபண்றது..வேலவேலன்னு வீட்ல கடயவச்சுக்கிட்டு எங்க முடியுது,” 

“வேல இருக்கதான் செய்யும்,”

“உன்னமாதிரி தனியாளா? இல்ல போனமா வந்தமா வேலயா..”என்றதும் சந்தியாவிற்கு சுருக்கென்றது. பக்கவாட்டில் நல்லுஅய்யா புன்னகைத்தபடி, “செய்யனும் …”என்று சொல்லிவிட்டு அமைதியானார்.

தனியாளாக சமைத்து ,பள்ளிவாகனத்தின் ஓட்டுநராக,பள்ளி மைதானத்தின் துப்புரவாளராக, பள்ளியின் தலையாசியராக, ஆசிரியராக இருப்பவர். மெதுவாக, “ய்யா…எல்லா பள்ளிக்கூட வேலயயும் இப்படிதான் நெனக்கிறாங்களா…”என்றாள்.

“எல்லாரும் இந்தமாதிரிதானே..தன்வேலதான் கஷ்ட்டங்கற எண்ணம். சம்பதிக்கமுடியலன்னா வேலய மாத்தலாம்…கனவ மாத்தமுடியுமா?,”என்று சாலையைப்பார்த்தார்.இவர் ஏன் அந்தகாலத்திலேயே கல்யாணத்தை உதறினார் என்று கேட்க நினைத்தவள் தன்மீதே திரும்பும் வம்பெதற்கு என்று விட்டுவிட்டாள்.

வெயிலேறிய பொழுதில் திருவரங்கத்தினுள் வண்டிநுழைந்தது.மேற்குதிசையில் சென்ற வண்டி மெதுவாக தெற்குபக்கம் வளைந்து திரும்புகையில் சந்தியாவின் கழுத்து கீழிருந்து மெல்ல அன்னாந்து நோக்கியது.சட்டென்று யாரோ ஒருஅழகன் பேருரு எடுத்து கைகளை இடையில் ஊன்றி நிமிர்ந்து பார்ப்பதைப்போல ராஜகோபுரம் எழுந்தது.சந்தியா உள்ளே சயனித்திருக்கும் அவன் தான் என்று புன்னகைத்தாள்.

வண்டி தெற்கு நோக்கி மேடான சாலையில் பயணித்தது.கண்கள் காண்கையிலேயே கோபுரம் மெல்லசிறுத்து காரின் பின்கண்ணாடியில் அடங்கியது.

“டக்குன்று இறங்கனும்…ரெண்டுநிமிஷதுக்கு மேல இங்க வண்டிநிக்கக்கூடாது..”என்று பெரியய்யா அவசரப்படுத்தினார்.இறங்கி இரண்டு கைகளில் இரண்டுபயல்களைப்பிடித்தபடி ஓடிவந்து அம்மாமண்டபத்தின் முன் நின்று சந்தியா, “அவங்களுக்கு முன்ன வந்துட்டம்ல..”என்று பயல்களைப்பார்த்து சிரித்தாள்.

பெரியவன்,“அத்த..அவங்கல்லாம் இன்னும் வரல,”என்று வாய்பொத்தி சிரித்தான்.சின்னவன் மொழியால் சொல்லத்தெரியாத உவகையால் கை, கால்களை ஆட்டிக்குதித்தான்.

பெரணி விஸ்வரூபம் எடுத்ததைப் போன்ற முகப்புத்தூண் சிற்பத்தை வெண்சுண்ணத்தால் மெழுகி வைத்திருந்தார்கள்.இதன்சிற்பி  அதிகாலையில் நீராடலில், கிணற்றில் அமர்ந்திருகையில் மனதில் எழுந்ததோ என்று நினைத்துக்கொண்டாள்.அவரின் கண்களில் பட்டு நான் நான் என்று தான் இலைக்கைகளை நீட்டி சொல்லியிருக்குமா? சந்தியாவின்அம்மாச்சி பெரணிச்செடியை, “ இந்தக்கழுத தவங்கெடந்து பிறவியெடுக்கும்,”என்று கிணற்றைப்பார்த்துக்கொண்டிருக்கையில் சொல்வார்.

“என்ன நெனப்பில இருப்ப..கையில பிள்ளங்கள பிடிச்சுக்கிட்டு வழியிலயே நிக்கற. உள்ளப்போகவேண்டியது தானே..”என்ற பெரியய்யாவின் குரலால் கலைந்து மண்டபத்தின் உள்ளே சென்றாள்.சட்டென்று மெல்லிய தண்மையான இருள் வந்து அனைத்துப்புலன்களையும் தொட்டு ஆறுதல்படுத்தியது.

சின்னவன், “ஜாலி…ஜாலி..இங்க நல்லாருக்கு,”என்று குதித்தான். “இவன மேய்க்கமுடியாது,”என்றபடி கதிர் சின்னவனின் கையைபிடித்தபடி முன்னே செல்ல ,அவன் கையைவெடுக்கென்று இழுத்து உதறினான்.கதிர் அவன்முதுகில்  ஒன்று வைக்கவும் கத்தியபடி கீழே அமர்ந்து கொண்டான்.

இருபுறமும் நெடுகதூண்கள் .அடுத்த நிறைதூண்களை பலகைகற்களை அடுக்கி சுவராக்கியிருந்தனர்.குகைகளில் வாழ்ந்த நினைப்பில்தான் இந்தமாதிரி கல்லால் ஆன இடங்களை கட்டிக்கொண்டிருக்கிறார்கள். அதனால் தான் நாமும் இன்று இதை இத்தனை விருப்புகிறோமா? என்று சந்தியா நினைத்துமுடிப்பதற்குள் முக்கால்வாசி மண்டபத்தை கடந்திருந்தார்கள்.சட்டென்று ஔி.இருபுறமும் சுவர்அடைப்பில்லாத தூண்கள் .

இடப்பக்கம் இருந்த திறப்பிற்கு அருகில் புரோகிதருக்காக காத்திருக்கையில் தூயவெண்ணிறத்தில் இளம்பசு அல்லது வளர்ந்த கன்று குறைந்த உயரத்தில் கொழுக்கட்டையென அழகுவழிய நின்றிருந்தது.சட்டென்று பெரியவனை கண்கள் தேடியது.அவன் முன்பே கண்களைவிரித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். 

ஒவ்வொருவரிடமாகக் கெஞ்சிக்கொண்டிருந்தான்.

“இவங்கண்ணுல எங்கருந்தாலும் மாடுதப்பமுடியாது..பேசாம இருடா”என்ற சுமி தூணில் சாய்ந்துகொண்டாள். 

சாந்தாம்மா,“தவமா கெடக்கறான்..மாட்டக்கண்டா என்னமா இருக்குமா? நேரம்போறது தெரியாம நின்னுகிட்டிருப்பான்…டேய் அடம்பண்ணாத…அப்பறம் கூட்டிட்டு போறேன்..”என்றார்.

அவன் கைகால்கள் ஓரிடத்தில் நிற்காமல் சுழன்று பார்த்தபடி சந்தியாவை தேர்வுசெய்தான்.

“அத்த..அத்த வாங்க கோமாதா பாக்கப்போலாம்…ப்ளீஸ் அத்த,”

கூம்பிய சிறுமுகமும், இன்னும் கூம்பிய உதடுகளும் ,விரிந்தகண்களையும் மறுக்க அவளால் முடியவில்லை.அவன் கன்னத்தில் வழிந்த வியர்வையை தன்கைக்குட்டையால் துடைத்தபடி , “மாடு பாக்க போலான்னு சொல்லு..போலாம்,”என்றாள்.

“நல்லபிள்ளயையும் கெடுப்ப நீ…”என்ற அம்மாவை கவனிக்காமல் அவனைப்பார்த்தாள்.உதடுகள் விரிய சிணுக்கத்துடன், “மாடும்மா பாக்கப்போலாம்…”என்றான்.சந்தியா வேகமாக சரித்தபடி அவனை தன்னோடு இழுத்துக்கொண்டாள்.

அகத்திஇலைகள் தன்குழம்புகளில் மிதிபட, மைவிழிகளில் புது மனிதரைக்காணும் எந்தபதட்டமும் இன்றி இளம்பசு பார்த்தது.சந்தியா அவனை கையில் பிடித்தபடி, “ இங்கயே நில்லுடா,” என்றாள்.

அவன் அவள்கையை வேகமாக உதறி பசுவை சுற்றிசுற்றி வந்தான்.அப்படிஎன்ன இந்தப்பயலுக்கு? என்று அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

“அத்த ....எங்க மடியவே காணோம்,”என்றாள்.

எப்பவும் கேட்பதுதான் என்பதால், “ இங்க வா,” என்றழைத்து அங்கப்பாரு..”என்றாள்.

“பாப்பாத்த..”

“இதெல்லாம் எங்கடா கத்துக்கற…”என்றவளை கவனிக்காமல் கீழே குவிந்தும், இறைந்தும் கிடந்த அகத்திஇலைகளை எடுத்து நீட்டினான்.பசு அலட்சியமாக திரும்பிக்கொண்டது.இவன் அந்தப்பக்கம் இந்தப்பக்கம் என்று அலைபாய்ந்தான்.

“ஏந்த்த..என்னிய பிடிக்கலாயா இதுக்கு..”

“ஒரே தீனிய நீ திம்பியா..அதுக்கும் அப்படிதானே…இந்த எலப்பிடிக்கல..”

“ஏன் இத குடுக்கறாங்க..அதுக்குப்பிடிச்சத குடுக்கல..”

அதுவிதி என்று நினைத்து சொல்லாமல் அந்தப்பசுவைப் பார்த்தாள்.என்ன மாதிரி உடல்..இதுவரைக்கும் பார்க்காத அழகு..இங்கருக்கற செல மாதிரி.. என்று நினைக்கும்போதே… இந்தஅங்கலட்சணம் தான் இத இங்க கொண்டுவந்து தள்ளியிருக்கு என்று நினைத்து திரும்பிக்கொண்டாள்.சேவல்கள் ,கோழிகள் என்று அவன் அவற்றின் பின்னால் ஓடிக்கொண்டிருந்தான்.

“ந்தா..வரமாட்டிங்க.ஆத்துக்குபோயிட்டுவரனும்..”என்ற குரலால் இருவரும் சுதாரித்து மண்டபத்திற்குள் நுழைந்தார்கள்.புராகிதர் தன் அம்பு சேனையுடன் அமர்ந்திருந்தார்.

“போய்..காவிரியில முழுகிண்டு வாங்கோ..இங்க தாயாரா இருக்கும்..துண்ட விட்டுட்டு வாங்கோ,”என்று பெரியய்யாவைப் பார்த்து சொன்னார்.

முகப்புமண்டபத்தில் திருநங்கைகள் பணம் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.சந்தியா, “அக்கா..அவங்களோட வந்தோம்..”என்றதும் அவள் சிரித்தபடி, “போ,”என்று நடந்தாள்.

முகமண்டபத்திலிருந்து இறங்கி பிள்ளையார் சன்னிதிக்கு அருகிலிருந்த வேம்பைக்கடந்து அரசமர நிழலில் நடந்தார்கள்.வழியெங்கும் சிமெண்ட் பரப்பில் நாற்களங்கள் கோலமாவினால் வரையப்பட்டிருந்தன.நான்குபக்கங்களின் மையத்தில் வாசல்கள்.ஒவ்வொரு மடிப்பிலும் கலயங்கள்.வினைமுடித்தக்கலயங்கள்  மக்களின் கால்களால் இலக்கில்லாமல் உருண்டுகொண்டிருந்தன.நாய் ஒன்று நாற்களத்தின் நடுவில் படுத்து உறங்கிக்கொண்டிருந்தது.

மேட்டிலிருந்து ஆற்றில் இறங்கும்போதே, “காவிரி என்ன சாக்கடையாட்டம் இருக்கு,”என்று சந்தியா முகம் சுளித்தாள்.

பின்னால் வந்தவர், “தண்ணியப்பழிச்சா கடசியில ஒருவா தண்ணிக்கு அலையனும்,”என்றபடி ஆற்றில் கால்வைக்கத்தயங்கிய சிறுமியை கைபிடித்து அழைத்துக்கொண்டிருந்தார்.

கால்களை மணலிலும் நீரிலும் கிடந்த துண்டுகள், வேட்டிகள்  தடுக்க சின்னவன்  கதிரை  தூக்குமாறு அழுது காரியம் சாதித்தான்.

கால்கள் சுடு மணலில் புதைய நடுவில் ஓடிக்கொண்டிருந்த காவிரியின் ஒற்றைவிரலை நோக்கிச்சென்றார்கள்.ஆழமான இடம்..தயங்கி தயங்கி நகரும் காவிரி ‘நான் இருக்கறனில்லே’என்றபடி சூரியக்கதிர்கள் மினுமினுக்கும் குளிர்ந்த சிற்றலைகளால் கால்களைத் தடவினாள்.

காவிரியின் ஆழத்திற்கு நடந்து“அப்பாடா..சொகமா இருக்கு..”என்றபடி பெரியய்யா சட்டையைக்கழட்டினார்.தண்ணீரைக்கண்டது பயல்கள் அவர் பின்னாலேயே ஓடினார்கள். 

காவிரியில் நனைந்து எழுந்து ,எதிரே தும்பிக்கையை மடித்து வாயில் விட்டபடி படுத்திருக்கும் பெரும்யானை என தன்னைக்காட்டிய மலைக்கோட்டையை கும்பிட்டபடி சாந்தாம்மா , “எங்கய்யாவ மாதிரி எங்கம்மாவையும் உங்காலடியில சேத்துக்க பிள்ளையாரப்பா,”என்று வேகமாக சொன்னார்.

சந்தியா மலைக்கோட்டையைப் பார்த்தபடி முழங்கால்அளவு தண்ணீரில் நின்றிருந்தாள்.தலைக்குமேலே காயும் சூரியன்..அதற்கும் கீழே கலைந்துவிரிந்த கூந்தலென மேகப்போதி அம்மாச்சியின் சேலைமுந்தானையாகக் கடக்க , நின்ற சந்தியாவின்  முதுகில் அண்ணி தட்டியதை உணர்ந்து திரும்பினாள்.

மணலில் நடக்கும் போது காலில் குத்திய ஊக்கை எடுத்தபடி நிமிர்ந்து கதிரைப்பார்த்தாள்.ஒருகணம் விழிகள் நிலைத்து பின் முன்னே நடந்தான். இருபயல்களின் மீன்கள் பற்றிய  கதைகளை கேட்டபடி நடந்தார்கள்.

“அந்த மீன் என்ட்ட சொன்னிச்சு..”

“இல்ல..நீ பொய் சொல்ற..”என்றபடி இருவரும் முடியைப்பிடித்துக்கொண்டார்கள்.சுமி முதுகில் இரண்டு வைத்து இரண்டையும் பிரித்து விரட்டிவிட்டாள்.

சாந்தாம்மா தன்தங்கையிடம், “அந்த சிவப்பு புடவை கட்டியிருக்கற அம்மா நம்மஅம்மா மாதிரியில்லம்மா..”என்று காட்டியபடி கால்வலியால் தங்கையின் தோளைப்பிடித்துக்கொண்டு நடந்தார்.

சுமி, “அவ்வா நெனப்பு ஒருவருஷமா நம்மள சுத்துது…அதுக்குதான் இதெல்லாம் செய்யறது..”என்றாள்.சூடான மென்மணல்பரப்பில் கால்கள் நன்கு புதைந்தன.வெப்பமான மணல்.சந்தியா குனிந்து மணலை அள்ளி கையில் எடுத்து பாலை என்று தோன்ற, பின்னால் திரும்பி ஆறு தன்உள்ளங்கையில் பிடித்துவைத்து ஒழுகவிட்ட நீரைப்பார்த்தாள்.மாறி மாறி இரண்டையும் பார்த்தபடி நடந்தாள்.

அம்மா மண்டபத்தினுள் புகை மறைத்த வழிகளால் பெரியய்யாவைக்காண அழகாய் இருந்தார். வெள்ளை வேட்டியில் சட்டையில்லாமல் தோய்ந்த தோள்களுடன் சிறுதொப்பையுடன் தளர்ந்து பலகையில் அமர்ந்து சிறுபிள்ளை போல புராகிதரை விழித்துப்பார்த்து அவர் சொல்வதை செய்து கொண்டிருந்தார்.



முன்னோர் வரிசையைக்கேட்கும் போது அம்மா பெரியம்மா பக்கம் திரும்பி பிட்டடித்து சொல்லிக்கொண்டிருந்தார்.அம்மாச்சியின் பாட்டி பெயருக்காக விழிக்கையில் சந்தியா, “காவரியம்மாள்,”என்றாள்.

“சமத்து...தெரியாதுன்னா இவளதான் சொல்லனும்.கங்காதேவின்னு சொல்லலாம்.ஆனா..கொஞ்சம் ஒட்டுதல் வாரது பாருங்கோ..”என்று காவிரியை உரிமை கொண்டாடியபடி தன்மூட்டையைக் கட்டிகொண்டு, “பிண்டத்தைக்கரச்சுட்டு… கரையில இருக்கற காசிவிஸ்வநாதர, காவரித்தாய, பி்ள்ளயாரை சேவிச்சுட்டு நமக்கு முன்னாடி அங்க இருக்கற ஆஞ்சநேயர சேவிச்சிட்டு கிளம்புங்கோ. உங்க சேமத்த பாத்துண்டு குழந்தைகளோட நன்னாருங்கோ,”என்று கைதூக்கி வாழ்த்தி கும்பிட்டு நடந்தார்.

மலர்களுடன் எள்ளுடன் இருந்த மாவுஉருண்டைகள் நீரில் கரைந்து பால் எனமாறி பின் நீரென்றாகியது. வணங்கியப்பின் சந்தியா காவிரியை நோக்கிய முகப்புமண்டபத்தில் நின்றாள்.எதிரே மலைக்கோட்டையில், காவிரியில்,கரையிலிருந்த தென்னந்தோப்புகளில் நிலைத்திருந்தன அவளின் விழிகள்.இதுதான் இருகுடும்பங்களுக்கும் பொதுவான கடைசிசடங்கா ? என்று மனது தேடியது.எத்தனை கண்ணுக்குத்தெரியாத அலைகள் என்று காவிரியைப்பார்த்துக்கொண்டிருக்கும் போது அவளுக்குத்தோன்றியது.

அனைவரும் அமைதியாக நிற்க, படிகளில் ஏறி அவள் அருகில் நின்ற பெரியய்யா, “உங்கம்மாவுக்கு செய்யவண்டியதெல்லாம் செஞ்சாச்சு.போதுமாத்தா,”என்று  பெரியம்மாவையும் அம்மாவையும் பார்த்தார்.இருவரும் அமைதியாக தலையாட்டினார்கள்.

சந்தியாஅம்மா முன்னால் நகர பெரியய்யா சாந்தாம்மாவைப்பார்த்து  , “இனிமே புலம்பாம பிள்ளைங்களைப் பாக்கனும்,”என்று நடந்து கொழுந்தியாளிடம், “உனக்குதாஞ் சொல்றேன்.இனிமே நமக்கெந்த பெறந்தஎடன்னு  நெனக்காத…நீ எந்தக்கொறையும் சொல்லி கேக்க நாங்க இருக்கோம்.உனக்கு மாமன் மவந்தானே நான்.ஒங்கம்மா வழிதானே..ம்..”என்று சொல்லிவிட்டு அவர் தம்பியிடம் பேசியபடி நடந்தார்.

சந்தியா கதிரிடம், “அங்கபாரு..தென்னைதோப்புக்கு நடுவுல நிக்கறது ஜோசப்சர்ச்..ஆத்துமேட்டுல ஏறி நேராநடந்தா சர்ச் பக்கமாதான் இருக்கனும்..நம்மதான் ரோடு போட்டு தூரமாக்கிட்டோம் போல, ”என்றாள்.

கதிர் உற்றுபார்த்தபடி, “சர்ச்சா..? தென்னமரம்மாதிரி தெரியுது..”என்றான்.பயல்கள் “அத்த என்ன காட்றாங்க…எனக்கும்.. எனக்கும்,” என்று எம்பினார்கள்.

பெரியய்யா தன்தம்பியுடன்  மண்பத்திற்குள் நடந்தார்.ஏற்றிக்கடிய தூயவெள்ளை வேட்டியின் கீழ் காணுகால்களிலிருந்து  பாதம் தெரிந்தது.மண்டபத்தில் மெல்லிய இருள் பரவிநிற்க  நடுவில் அவர் நடந்து கொண்டிருந்தார்.

சந்தியா சுற்றிலும் பார்த்தாள்.யாரோ யாருடனோ..யார்களோ யார்களுடனோ..பேசியபடி, சிரித்தபடி, பிணங்கியபடி ,கத்தியபடி இருந்தார்கள்.யார் இவர்கள் எல்லாம்? என்ற தோன்ற துணுக்குற்று எண்ணத்தை மாற்றிநடந்தாள்.

மண்டபத்தின் வெளியே வண்டிக்காக காத்துநின்றார்கள்.சந்தியா மேலே அனந்தசயனனின் சிலையைப்பார்த்தாள்.அதற்கு மேல கதிரவன்.அதற்கு மேல வெளி…கண்கள் கூசி கண்ணீர் வழிய கீழே குனிந்தாள்.குடிநீர்குழாய் வழிந்து தேங்கிய பள்ளத்தின் நீர், தன்மீது விழுந்த அகாயத்தை பரதிபலித்த ஔியால் மீண்டும் கண்களை சுருக்கினாள்.வந்து நின்ற வண்டியின் கண்ணாடியில் மீண்டும் அதே ஔியின் கூச்சம்.வண்டிக்குள் அமர்ந்து கண்களை மூடிக்கொண்டாள்.

கதிர் பின்னால் திரும்பி , “ஏறுன சூரியன எதுத்துப்பாக்கக்கூடாதுன்னு சொல்லுவாங்க…வானத்தப்பாக்காத..”என்றபடி அவளின் தலையில் கைவைத்தான்.

அரங்கத்தின் போக்குவரத்து அலைகளில் தானும் ஒருஅலையென நகர்ந்தது அவர்களின் வாகனம்.


Comments

Popular posts from this blog

அகத்தின் ஆரக்கால்கள்

 [ எழுத்தாளர் மயிலன் ஜி.சின்னப்பனின் முப்போகம் [குறுநாவல்], நூறு ரூபிள்கள் மற்றும் சிருங்காரம் சிறுகதை தொகுப்புகளை முன்வைத்து...] எழுத்தாளர் மயிலன் தண்டவாளத்தின் இருபக்க தண்டுகள் அதை இணைக்கும் குறுக்குப்பட்டைகள், ஜல்லிக்கற்கள் என்று அனைத்தும் சரியாயிருக்க ஓடும் ரயிலில் எங்கோ ஒரு சின்னஞ்சிறு விலகல் அனைத்தையும் குழப்பி தடம் புறளச்செய்கின்றது. புரண்டு கிடக்கும் ரயில் அந்த சின்னஞ்சிறு விலகலின் உண்மையான ரூபம். மறுபடி சரி செய்யப்பட்டு ஓடும் ரயில் பின் எங்கோ அதே போல தக்கி நிற்கும். அதை போன்ற ஒரு உணர்வு சித்திரத்தை மயிலனின் கதைகளை தொகுப்பாக வாசிக்கும் போது உண்டாகிறது. மனதின் அகஅடுக்குகளை கீறிப்பார்க்கும் சவரக்கத்தி என்றும் இவரின் எழுத்துகளை சொல்லலாம். அதில் ஒரு அடுக்கு காயத்தால் அழுகி புறையோடி சீல் கொள்கிறது. அது மற்ற அடுக்குகள் மீது கொள்ளும் செல்வாக்கின் கதைகள் இவை. அந்த வலி நிறைந்த அழுகிய அடுக்கை உருவாக்கும் விசைகளை நோக்கி செல்லும் கதைகள் இவை. மனித இயல்புகள் அல்லது  இயல்புகளை பாதிக்கும் சூழல்கள் என்று இவை இரண்டும் ,அந்த சவரக்கத்தியை தீட்டும் மணலின் நெறுநெறுப்பாகவும் தீட்டிய கத்தியை ...

கர்ணனின் கவசகுண்டலங்கள்

இந்த ஆண்டு நித்யவனத்தில் நடத்தப்படும் முழுமைஅறிவு [Unified wisdom] வகுப்புகளில் மரபிலக்கிய வகுப்பிற்கு செல்ல வேண்டுமென்று தோன்றிக்கொண்டிருந்தது. மரபின் மைந்தன் முத்தய்யா அவர்கள் நடத்தும் மரபிலக்கிய அறிவிப்பு வந்ததும்  வழக்கம் போல நிறைய யோசனைகள். பொங்கல் விடுமுறை நாட்களில் வருகிறது என்பது வேறு. இருந்தாலும் செல்ல வேண்டும் என்று ஒரு பிடிவாதம். பதினாறாம் தேதி ரம்யா மனோகருடன் ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்திலிருந்து வெள்ளிமலை சென்றேன். சாயுங்காலம் ஐந்து மணி்க்கெல்லாம் மலையேறிவிட்டோம். அங்கு ஈரோடு கிருஷ்ணன் அவர்களை முதலில் பார்த்தோம். அவருடன் எங்கள் வகுப்பு சகாவான ஆனந்த் குமார் அறிமுகமானார். பின்பு அறைக்கு சென்று வந்து மலைச்சூழலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அங்கிருந்த திறந்தவெளி இருக்கைகளில் ரம்யாவும் நானும் கொஞ்சம் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நல்ல நட்பிற்கான அடித்தளம். மேடம்,கமலதேவி,கமலா...கடந்து...ரம்யாவை அக்காவிற்கு வர வைத்ததும் வேலை முடிந்தது. இனி இயல்பாக எல்லாம் நடக்கும். ரம்யாவின் இனிய முகம் மூன்றாவது நாள் ஈரோடு பேருந்து நிலையத்தில் விடைபெறும் வரை உடன் இருந்தது. அதே ப...

பெருகும் காவிரி

 காவிரியை பார்ப்பது எப்போதுமே எனக்கு பரவசமான பொழுது. பள்ளி வயதில் முசிறி காவிரி. கல்லூரி வயதில் திருச்சி காவிரி. கடைசியாக முசிறிக்கு சென்று நான்கு ஆண்டுகளாகிறது. முசிறியிலிருந்து திருச்சிக்கு செல்லும் பேருந்து வழியில் காவிரி உடன் வரும். கொல்லிமலையில் உருவாகி எங்கள் ஊரில் பாயும் அய்யாறு முசிறி காவிரியில் கலக்கிறது. அண்மையில் எழுத்தாளர் சுரேஸ்குமார இந்திரஜித் கருத்தரங்கிற்காக திருச்சி செல்லும் போது இரண்டுஆண்டுகள் கழித்து  அந்தியில் காவிரியை பார்த்தேன். கொள்ளிடம் பாலத்தில் நல்ல காற்று. கொள்ளிடத்தில் ஓரளவு நீர் இருந்தது. கொள்ளிடம் பாலத்தில் பேருந்து செல்லும் போது வலது பக்கம் மலைக்கோட்டை ,திருவரங்க ராஜகோபுரம் இரண்டும் நீருக்கு அப்பால் இணையாக காட்சிக்கு வரும். அதற்கும் அப்பால் மேற்கு வானில் சரியும் ஆரஞ்சு வண்ண சூரியன்.    மங்கம்மாளை, தாயுமானவரை,ஆண்டாளை,வெள்ளையம்மாளை,ஆண்டாளை போலவே அரங்கனை தேடி வந்த முகலாய இளவரசி சுரதானியை மனம் சென்று தொடுகிறது. அன்னிய படையெடுப்பின் போது கோயில் உற்சவரை காப்பதற்காக கிழக்கு கோபுரத்தில் இருந்து உயிர் விட்டாள் தாசி குலத்து வெள்ளையம்மாள். வெள்ளை ...